சென்னை: எனக்குப் புற்றுநோய் இல்லை. நான் நல்லாதான் இருக்கேன், எந்தப் பிரச்சினையும் இல்லை, என்று நடிகை கனகா நேரில் தெரிவித்தார். நடிகை கனகா பற்றி கடந்த சில தினங்களாக பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் ஆதரவற்றோருக்கான கேரளா மருத்துவமனையில் உருக்குலைந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி பரவியது.
இந்த நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டதாக இன்று சில செய்தி ஏஜென்சிகள், ஆங்கிலப் பத்திரிகைகளின் இணையதளங்கள், தொலைக்காட்சிகள் என அனைத்திலும் செய்தி வெளியாகி பரபரப்பேற்படுத்தியது. இப்படி செய்தி வெளியான சில நிமிடங்களில் கனகா நன்றாக இருப்பதாக அவரது உறவினர்கள் தகவல் வெளியிட்டனர். சென்னை காளியப்பா மருத்துவமனையில் கனகா சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறப்பட்டது. ஆனால் இதுவும் தவறான செய்தி என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கனகா பிரஸ் மீட் தகவல் கிடைத்தது. அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனது வீட்டில் கனகா செய்தியாளர்களைச் சந்தித்தார். கண்ணாடி அணிந்திருந்த கனகா, முன்பு ஆவி அமுதா வழக்கில் நீதிமன்றத்தில் பார்த்ததை விட தெளிவாகவும் ஆரோக்கியத்துடனும் காணப்பட்டார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "என்னைப் பற்றி யாரோ தவறாக சொன்ன தகவல்களை வைத்து இப்படி செய்தி வெளியானது வேதனையைத் தருகிறது.
யாரோ சொன்னதை வைத்து ஏன் செய்தி போடறீங்க.. நான் ஆலப்புழா போனது ப்ரெண்டைப் பார்க்கக்கூட இருக்கலாம்ல. நான் நல்லாதான் இருக்கேன். எனக்கு கேன்சரெல்லாம் கிடையாது. எங்கும் சிகிச்சையும் பெறவில்லை!," என்றார். உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக