
1989ம் ஆண்டு ஜனவரி மாதம் இருபத்தி மூன்றாம் திகதி யோகேஸ்வரன் ராசம்மா தம்பதிகளுக்கு நான்காவது பிள்ளையாகப் பிறந்த சாந்திக்கு நான்கு சகோதரிகளும் இரண்டு சகோதரர்களும் உள்ளனர். இதில் ஒரு சகோதரன் விஷேட தேவையுடையவர். சாந்தியின் அப்பாவினதும் அம்மாவினதும் உழைப்பால் வறுமையிலும் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர் இச் சந்தர்ப்பத்தில் 2008ம் ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் திகதி சாந்தியின் அம்மா இறந்த பின்னர் அப்பா செய்யும் கூலித்தொழில் வருமானத்தைக் கொண்டு குடும்பம் மிகவும் வறுமையால் கஷ்டப்பட்டது. இச் சந்தர்ப்பத்தில் தான் குடும்பத்தின் வறுமையை போக்கவும் தனக்கும் சகோதரிகளுக்கும் இருப்பதற்கு வீடு கட்டுவதற்காகவும் வெளிநாடு செல்லும் முயற்சியில் இறங்கி 2009ம் ஆண்டு பத்தாம் மாதம் ஒன்பதாம் திகதி சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள வீடு ஒன்றுக்கு வீட்டுப் பணிப் பெண்ணாக பயணமானாள் சாந்தி. வெளிநாடு சென்ற மகளிடம் இருந்து டெலிபோன் அல்லது கடிதம் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த தந்தைக்கும் சகோதரிகளுக்கும் எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை இன்று வரும் அல்லது நாளை வரும் என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த வர்களுக்கு ஒரு வருடம் முடிவுற்றதன் பின்னர்தான் டெலிபோன் வந்துள்ளது.
சாந்தியின் சகோதரியுடன் கதைத்த சாந்தி என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம் நான் நன்றாக இருக்கின்றேன். முன்னரிலும் பார்க்க சிவப்பாக இருக்கின்றேன் அப்பாவை நன்றாகப் பார்த்துக்கொள்.
அப்பாவுக்கு மாடு வாங்க காசு அனுப்புகிறேன் என்று கதைத்ததுதான் இறுதியான உரையாடல். சாந்தி வெளிநாட்டுக்குச் சென்றபின்னர் இரண்டு முறை டெலிபோன் கதைத் துள்ளார் என்று சாந்தியின் குடும்ப உறவினர்கள் தெரி வித்தனர்.
சாந்தியின் தந்தையான சீனித்தம்பி யோகேஸ்வரன் வயது (59) தெரிவிக்கையில் தனது மகள் சாந்தி 2009.10.10 இல் பணிப்பெண்ணாக சவூதியரேபியா சென்றார். அங்கு சென்று இரண்டு தடவைகள் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டார் அதன் பின்பு எதுவித தொடர்பும் கிடைக்கவில்லை மகளைப் பற்றி தகவல் அறிய பல்வேறு இடங்களிலும் முகவர்களின் மூலமாகவும் தொடர்பு கொண்டேன்.
பலன் எதுவும் கிடைக்கவில்லை. இறுதியில் மகளின் சடலத்தையே காணமுடிந்தது என்று அழுதார். இந்த நிலையில் சவூதி சென்றது முதல் எதுவிதமான பணமும் எங்களுக்கு அனுப்பவும் இல்லை. எனது மகளை கொடுமைப்படுத்தியே கொன்றிருக்க வேண்டும். காரணம் என்னிடம் சடலத்தை தரும்போது எனது மகள் நஞ்சருந்தி இறந்துள்ளதாகவே சவூதியில் இருந்து தகவல் சொன்னார்கள். ஆனால் இங்கு வந்து சடலத்தை பார்க்கும் போது முகப்பகுதி மார்பு பகுதி, களுத்து பகுதி மற்றும் முழங்கால் பகுதியில் காயத் தழும்புகளும் அடி காயங்களும் காணப்படுகின்றன. எனது மகளை கொடுமைப்படுத்தியே கொன்றிருக்கவேண்டும். எனது மகளின் கொலைக்கு நீதி கிடைக்கவேண்டும்.
அரசாங்கம் இது தொடர்பில் உரிய விசாரணைகளை நடாத்துமாறு சவூதியிலுள்ள இலங்கை தூதரகத்தை பணிக்கவேண்டும். வறுமை காரணமாகவே மகள் எனது அனுமதியின்றி மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றிருந்தார் என அவர் மேலும் தெரிவித்தார்.
ஜூலை மாதம் 29ம் திகதி நஞ்சருந்தி மரணித்து விட்டார் என்று தொலைபேசி மூலம் தகவல் கிடைத்ததும் உறவினர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் உதவியுடன் சடலத்தை நாட்டுக்குக் கொண்டுவரும் முயற்சி மேற்கொண்டனர். சடலம் 31ஆம் திகதியன்று கொழும்புக்கு கொண்டு வரப்பட்டு 01.09.2013அன்று ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த இடமான ஓமடியாமடு இந்து மையானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நஞ்சருந்தி தற்கொலை செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் சடலத்தின் முகம், மார்பகப் பகுதி, கால் போன்றவற்றில் காயங்கள் இருப்பதால் அவர் நஞ்சருந்தி தற்கொலை செய்யவில்லை என்றும் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் சந்தேகம் கொண்ட குடும்பத் தினர் வாகரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் போன்றவற்றுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
தாயின் மரணத்தின் பின் தனது குடும்பத்தின் வறுமைகாரணமாக குடும்பச் சுமையினை தாங்கிக் கொண்டுதனது இருபது வயதில் சவூதி சென்ற யோகேஸ்வரன் சாந்தி நான்கு வருடத்தின் பின் சடலமாக நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
அரசாங்கம் இது தொடர்பாக சவூதியில் உள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்பு கொண்டு உரிய விசாரணைகளை மேற்கொண்டு உரிய தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்பது மரணமடைந்த சாந்தியின் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாகும்.
எஸ். எம். எம். முர்ஷித்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக