சுவிஸில் தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கை தமிழர்களை நாடு கடத்தும் திட்டத்தை, சுவிஸ் அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக சுவிஸ் சமஷ்டி குடியேற்ற திணைக்கள பேச்சாளர் ஹபி ஸ்லோசி வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
செங்களான் மாநிலத்தை சேர்ந்த ஒரு குடும்பமும் தனிநபர் ஒருவரும் நாடு கடத்தப்பட்டிருந்தனர். அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஒருவரும் அவரின் மனைவி மற்றும் சிறிய பிள்ளைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் நாடு கடத்தப்பட்டிருந்தனர். நாடு கடத்தப்பட்டவர்களில் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, சுவிஸ் சமஸ்டி குடியேற்ற திணைக்கள பேச்சாளர் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டுக்குப் பின்னர், சுவிஸ் அரசாங்கம் இதுவரை 24 பேரை பலவந்தமாக இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளது, 120 பேர் சொந்த விருப்பத்தின் பேரில் சுவிஸில் இருந்து இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.
கடந்த மாதம் கைது செய்யப்பட்டவர் யாழ். அராலியைச் சேர்ந்த திருமணமாகிய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.
அகதி தஞ்சம் கோரிய இலங்கையர்களில் கடத்த வருடத்தில் 14 வீதத்தினரை அகதிகளாக ஏற்றுக்கொண்டதாகவும் ஏனையவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் சமஷ்டி குடியேற்ற திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் யூலை மாதம் வரை 3274 பேர் சுவிஸில் அகதிகளாக தஞ்சம் கோரியுள்ளனர். இவர்களில் 1831பேரின் விசாரணைகள் முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் சமஷ்டி குடியேற்ற திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக