திங்கள், 14 அக்டோபர், 2013

ஐயா, தீவிரவாதிகள் அனைவருமே முஸ்லிம்களாக இருப்பது ஏன்?

கட்டுரையாளர் ஃபிரோஸ் பக்த் அஹமது விடுதலைப் போராட்ட வீரர் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் ஒன்றுவிட்ட பேரனாவார். சமீபத்தில் வெளியான அவரது பேட்டியிலிருந்து...

நாட்டு நடப்பைப் பற்றி 11ஆம் வகுப்பின் 52 மாணவர்களடங்கிய ஒரு கலந்துரையாடலின்போது, ப்ரஜ்வி மல்ஹோத்ரா என்ற மாணவன் மேற்காணும் (இத்தலைப்பின்) கேள்வியை என்னிடம் கேட்டான். சரியான தருணத்தில் கேட்கப்பட்ட நியாயமானதொரு கேள்வி. ப்ரஜ்விக்கும் அவனைப் போன்ற மற்ற மாணவர்களுக்கும் மனதில் தோன்றிய இக்கேள்விக்கு ஒரு முஸ்லிம் என்ற முறையில் பதிலளிக்க வேண்டியது என்மீது கடமையானது.



"எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளல்லர். ஆனால் எல்லாத் தீவிரவாதிகளும் முஸ்லிம்கள்தாம்!" என்ற கருத்துருவாக்கம் மேற்கத்திய ஊடகங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு, 'அது உண்மையாக இருக்குமோ!' என நம்ப வைக்கப்பட்ட ஏராளமானோரில் ப்ரஜ்வியும் ஒருவன்.

'இஸ்லாம் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறது' எனப் பல்வேறு குரல்களில் தொடர்ந்துப் பிரச்சாரம் செய்யப் படுவதால், இன்று இஸ்லாம் என்பது கண்காணிப்பு வளையத்தினுள் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கிறது. இந்தப் பொய்க் கருத்துருவாக்கத்தைப் பொதுமக்கள் நம்புகிறார்கள் என்றால் அதற்கும் சில காரணங்கள் இல்லாமலில்லை. சில சமயங்களில் அவர்கள் கண்ணால் காண்பவற்றைக் கொண்டே முடிவு செய்கிறார்கள். தீவிரவாதிகள் சிலர் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு வன்முறைகளில் ஈடுபடுவதை மக்கள் காண்பதால் அவ்வாறு முடிவுக்கு வருகின்றனர்.

நான் ப்ரஜ்வியிடம் சொன்னேன்: "எல்லா மதங்களின் நல்லொழுக்க வழிகாட்டுதல்களும் ஒன்றேதான். இஸ்லாமும் அதுபோன்ற நல்ல வழிகாட்டல்களையும் கொள்கைகளையுமே போதிக்கிறது. ஆனால் சிலர் இறைவனின் பெயரைச் சொல்லி மற்ற சிலரை தவறான பாதையில் வழிநடத்துகின்றனர்.'

மும்பை, டெல்லி, காஷ்மீர் குண்டு வெடிப்புகள், அல்-காயிதா அமைப்பின் உலகளாவிய நடவடிக்கைகள் ஆகியன என்னைத் தலை குனியச் செய்கின்றன. மனிதத் தன்மையற்ற பயங்கரவாதச் செயல்களில் ஒரு முஸ்லிமின் பெயர் சம்பந்தப்படும் போதெல்லாம் மனம் குமைந்து போகிறது!

ஜிஹாத் பற்றி முஸ்லிமல்லாத சகோதரர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்கள் பலருமே தவறாகப் புரிந்து வைத்திருப்பதைப் பரவலாகக் காண முடிகிறது. ஜிஹாத் என்பதன் உண்மையான கருத்து பிற மதங்கள் மற்றும் சமூகங்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களல்ல; மாறாக, ஒருவர் தனது உள்மனதில் புதைந்திருக்கும் சுயநலச் சிந்தனைகள், இஸ்லாமிய சமுதாயத்தில் புரையோடியிருக்கும் ஒழுக்கக்கேடுகள் மற்றும் குறைபாடுகள், தீயசக்திகள், அநீதி, சமத்துவமின்மை, கல்லாமை, அறியாமை ஆகியற்றை எதிர்த்துப் போராடுவதே ஜிஹாதாகும். முதலில் அவர் தன் உள்மனதுடன் ஜிஹாத் செய்து (போராடி) அதைச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் அவர் தம் மனைவி, குடும்பத்தினர், அண்டை அயலார் மற்றும் முழு சமுதாயத்தினரிடையேயும் தமது முயற்சிகளைத் தொடர வேண்டும். இதுவே 'ஜிஹாதே அக்பர்' (மாபெரும் போராட்டம்) எனப்படும் மிகச் சிறந்த ஜிஹாத் ஆகும். ஜிஹாத் என்பதன் சரியான விளக்கமும் இதுதான்.

தீவிரவாதம் என்பது ஓர் அரசியல் நடவடிக்கையே தவிர, மதங்களுக்கும் மதங்கள் சார்ந்த சமூகங்களுக்கும் இவற்றுடன் எந்தத் தொடர்புமில்லை. எந்த மதமும் அப்பாவிகளைக் கொல்லும்படி போதிக்கவில்லை. ஆனால் தீவிரவாதிகள் அதைத்தான் செய்கிறார்கள். எந்த மதம் சார்ந்தச் சமூகமும் தங்கள் சார்பாக பயங்கரவாதச் செயல்களைச் செய்யும்படி தீவிரவாதிகளைத் தேர்ந்தெடுத்து பணியிலமர்த்துவதில்லை.

இருந்தபோதிலும், இத்தகைய பயங்கரவாதச் செயல்களின் பின்விளைவாக, அவற்றுடன் எந்தச் சம்பந்தமுமில்லாத ஒரு சராசரி இந்திய முஸ்லிம் பலவிதப் பிரச்னைகளைச் சந்திக்க நேர்கிறது. முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வில் நிகழ்த்தப்படும் குற்றச்செயல்கள், பணியிடங்களிலும் கல்வி நிலையங்களிலும் காட்டப்படும் பாரபட்சம், வாடகைக்கு வீடு கிடைப்பதில் பிரச்னைகள், நம்பிக்கையின்மை போன்றவையே அவை. 1984இல் சீக்கிய சமுதாயத்தினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரங்களைப்போல இன்னுமொன்று நடந்துவிடக் கூடாதே என்பதும் முஸ்லிம்களின் அச்சமாக இருக்கிறது.

சமுதாயங்களுக்கிடையே பிரிவினை உண்டாக்க முயலும் தீவிரவாதிகளுக்கு எவ்வகையிலும் உதவி சென்றடையக் கூடாது. மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே பிளவினை உண்டாக்க முயன்றனர். ஆனால், அதற்கு மாறாக, இந்த பயங்கரவாத நிகழ்வினால் தோன்றிய அதிர்ச்சி அலைகள் இந்திய மக்களை ஒருங்கிணைத்ததைக் காண முடிந்தது.

பாகிஸ்தான் மீதான கண்டனங்களை இந்திய முஸ்லிம்கள் விரும்ப மாட்டார்கள் என சில அரசியல் தலைவர்கள் தப்புக் கணக்குப் போடுகின்றனர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது; சென்ற பொதுத் தேர்தலின்போது இந்திய முஸ்லிம்களின் வாக்குகளைக் கவருவதற்காக, பாரதிய ஜனதா கட்சி தங்கள் ஆட்சியின்போது லாகூருக்குப் பேருந்து சேவை தொடங்கியதையும் பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தியதையும் மாபெரும் சாதனை போல விளம்பரப் படுத்திக் கொண்டிருந்தனர். இந்திய முஸ்லிம்களை பாகிஸ்தானின் கைப்பொம்மைகள் போல இன்னும் இவர்கள் கருதுவது உண்மையில் வருந்தத் தக்கது!.

ஒரு சில தீவிரவாதிகளின் செயல்பாடுகள் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தையே பிரதிநிதிக்காது என்பது இந்தியர்கள் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இருந்தும் 'முஸ்லிம் வாக்குகளை இழந்து விடுவோமோ' என்ற பயத்தாலோ என்னவோ நமது அரசு பாகிஸ்தானுடன் சீரியஸான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடாது வெறும் வாய்ச் சவடால்களில் காலம் கழித்துக் கொண்டிருக்கிறது.

'தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக எடுக்கப்படும் கடும் நடவடிக்கைகள் இந்திய முஸ்லிம்களைத் தனிமைப் படுத்துவதாக ஆகிவிடும்' என்ற ஒரு தவறான கண்ணோட்டம் இந்திய அரசியல்வாதிகள் அனைவரிடமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அப்படிக் கருதுவது இந்திய முஸ்லிம்கள் அனைவரையும் பாகிஸ்தானின் ஆதரவாளர்கள் எனத் தவறாக முத்திரை குத்துவதற்கு ஒப்பாகும் என்பதை இவர்கள் எப்போது உணர்வார்கள்? இந்திய முஸ்லிம்களை இதைவிட மோசமாக வேறு யாராலும் கேவலப் படுத்த முடியாது.

தீவிரவாதத்தை ஒடுக்குவதில் மென்மையான அணுகுமுறையை மேற்கொள்வது முஸ்லிம்களை மகிழ்ச்சியடையச் செய்யாது. ஏனெனில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தங்கள் இலக்குகளை மதரீதியில் பிரித்துப் பார்ப்பதில்லை. "தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் முஸ்லிம்கள் நம்மைப் பாராட்டுவார்கள்" என்று நம் நாட்டு அரசியல்வாதிகள் நினைத்தார்களென்றால் அவர்கள் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மத உணர்வுகளைத் தூண்டி விடுவதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற முயல்வோரை மக்கள் அடையாளம் கண்டு வருகிறார்கள். சமீபத்திய டெல்லித் தேர்தல் முடிவுகள் இதைத்தான் சுட்டிக் காட்டுகிறது.

மத நம்பிக்கைகள் ஒருவரின் தனிப்பட்ட உணர்வுகளுடன் தொடர்புடையது. மதங்களுக்குச் சொந்தம் கொண்டாடும் சில தனிநபர்கள் மற்றும் குழுவினரின் கட்டுப்பாட்டிலிருந்து அவை விடுவிக்கப்பட வேண்டும். அடிப்படையில் மனிதர்களாகிய நாம் அனைவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்தாம் என்பதை மறந்து விடலாகாது.


-ஃபிரோஸ் பக்த் அஹமது
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல