சனி, 30 நவம்பர், 2013

ரியூசன் வகுப்பு மோகம்

உறவுக்கார வீடொன்றுக்கு சென்றிருந்தேன். அந்த வீட்டில் படிக்கும் வயதில் நிறைய பிள்ளைகள் இருந்தனர். ஆனால் அன்று யாரையும் காணக் கிடைக்கவில்லை. எல்லோரும் மாலைநேர ரியூசன் வகுப்பிற்குச் சென்றிருப்பதாக எனக்கு சொல்லப்பட்டது. அப்போது 7 வயதான ஒரு பிள்ளை திரும்பி வந்தான். அவனது தாயார் காரணத்தை வினவினார். வகுப்பிற்கான மாதாந்த கட்டணத்தை கொண்டு செல்ல மறந்ததால் திரும்பி வரவேண்டி ஏற்பட்டதாக அவன் அழாக் குறையாக சொன்னான்.

உடனே பணத்தை தேடி எடுத்து மகனிடம் கொடுத்தனுப்பி விட்டு, ஒரு பெருமூச்சை விட்டுக்கொண்டு என்னிடம் பேச்சுக் கொடுத்தார். “ரியூசன் வகுப்புக் காரனுகள் படுத்துறபாடு இருக்கே…. சொல்லிமாளாது.

படிப்பிக்கானுகளோ இல்லையோ ஆனா காசு கொடுக்காட்டி திருப்பி அனுப்பி விடுவானுகள். என்ன செய்ய ! இப்ப இருக்கின்ற நிலையில் எப்படியாவது ரியூசனுக்கு அனுப்ப வேண்டி இருக்கின்றதே….” என்று தொடங்கி பேசிக்கொண்டே போனார்.

அந்தச் சிறுவன் திருப்பி அனுப்பப்பட்டானா அல்லது தானாவே வெட்கத்தில் திரும்பி வந்தானா என்று தெரியாது. ஆயினும், நூட்டில் வாழும் எல்லாச் சிறுவர்களுக்கும் பாரபட்சமின்றி கல்வி வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்ற சமூக சிந்தனையால் சி.டபள்யு.டபள்யு. கன்னங்கரவினால் அறிமுகப்படுத்தப்பபட்ட இந்த இலவசக் கல்வி எப்படி காசாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதும் இதுவரைக்கும் பேவ்மண்ட் (நடைபாதையோர) கடைகளில் கூவி விற்கப்படாது ஒன்றுதான் மிச்சம் என்ற நிதர்சனமும் நன்றாகவே புரிந்தது.

எல்லாமுமாக ரியூசன்

ரியூசன் வகுப்பு அல்லது மாலைநேர பிரத்தியேக வகுப்பு என்பது இன்று நேற்று உருவான ஒன்றல்ல. மாறாக, இலவசக் கல்விக்கு முன்னரும் பின்னரும் இருந்ததுதான். ஆனால், இது ஒரு கலாசாரமாக தோற்றம்பெறத் தொடங்கியது 90களில் எனவும் புது நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து மோகமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது என்றும் குறிப்பிட்டலாம்.

இன்று ரியூசன் வகுப்புத்தான் எல்லாமுமாக மாறியுள்ளது. ஒவ்வொரு ஊரின் தெருக்கோடியிலும் புதுசுபுதுசாய் முளைத்துக் கொண்டிருக்கின்ற ரியூசன் கடைகளை நோக்கி சிறார்களும் வளர்ந்த மாணவர்களும் சென்று கொண்டிருக்கின்றார்கள். தங்களுக்கு அன்றைய தினம் சாப்பாடு இல்லாவிட்டால் கூட பரவாயில்லை தமது பிள்ளைகளின் ரியூசனுக்கு காசு கொடுத்தாக வேண்டும். அதுவே நமக்கும் பெருமையையும் கௌரவத்தையும் கொண்டுவரும் என்று 99 வீதமான பெற்றோர் திடமாக நம்புகின்றனர்.

ரியூசன் வகுப்பிற்கு செல்லாத சிறுவன் வடிகட்டிய ‘மக்கு’ என்றும் அவனது குடும்பம் பிச்சைக்காரத் தனமானது என்றும் இச்சமூகம் ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்கின்றது.

இது இவ்வாறிருக்க, ரிய+சன் வகுப்பு வாத்திகள் இந்த இளைஞர் சமூதாயத்தை மீட்பதற்காக சகல வரப்பிரசாதங்களோடும் அனுப்பப்பட்ட தேவ தூதர்கள் போல ஒரு பிரக்ஞையை ஏற்படுத்தி விட்டிருக்கின்றார்கள். தாங்கள் இல்லாவிட்டால் இம் மாணவர்கள் அனைவரும் ‘பெயிலாகி’ விடுவார்கள் என்று அவர்களுக்கு ஒரு நினைப்பு.

மறுபுறத்தில், பாடசாலைக் கல்வி என்பது இன்று வெகுவாக வரையறுக்கப்பட்டுள்ளது. எப்படியாவது பாடசாலையூடாகவே பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்பதால் அதற்கு அவசியமான வரவை பதிவு செய்து கொள்வதற்காகவே (குறிப்பாக சாஃத, உஃத) மாணவர்களில் அதிகமானோர் பாடசாலைக்குச் செல்வதாக நினைக்கின்றேன். மாணவர்கள் ரியூசனில் கற்கின்றார்கள்தானே என்ற நினைப்பில் பாடசாலை ஆசிரியர்கள் மந்தமான கற்பித்தலை மேற்கொண்டமையாலும், ரியூசனில் கற்பிப்பவர் போல பாடசாலை ஆசிரியர் கற்பிப்பதில்லை என்ற எண்ணத்தில் மாணவர்கள் பாடசாலை கற்றலில் அக்கறை இழந்தமையாலும்… இன்று நிலைமை படு மோசமாக போய்க் கொண்டிருக்கின்றது.

விளைவு – பாடசாலைகளுக்கென வழங்கப்படுகின்ற மனித, பௌதீக வளங்கள் செயற்றிறன் அற்ற முறையில் பயன்படுத்தப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரியூசன் வகுப்புக் காரர்கள் மாலைநேர உழைப்பில் காசு தேடுகின்றனர். பாடசாலையில் இருந்து பணி முடிந்து வந்து மாலை நேரத்தில் கடை ஒன்றை திறந்து வியாபாரம் செய்கின்ற ஆசிரியர்களுக்கும், அதே மாலைப் பொழுதில் பணம் உழைப்பதற்காக ரியூசன் வகுப்புக்களை திறக்கும் வாத்திகளுக்கும் அடிப்படையில் பெரிதாக என்ன வேறுபாடு இருக்கின்றது என்று எனக்குப் புரியவில்லை….!

காசுக்கு விற்கப்படும் கல்வி

ரியூசன் வகுப்பு என்பது அடிப்படையில் மேலதிக கற்றலுக்கானது. பாடசாலையில் கற்கின்ற விடயதானங்களில் தெளிவில்லாத விடயங்களை தெளிவுபடுத்தவதற்கான ஒரு ஒன்றுகூடலே பிரத்தியேக வகுப்புக்களாக இருக்க வேண்டும். ஆனால், நிஜத்தில் குறிப்பிட்ட தரத்திற்கு பிறகு கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களின் கல்வியும் பிந்நேர வகுப்புக்களை மையப்படுத்தியதாகவே சுழன்று கொண்டிருக்கின்றதை காண்கின்றோம்.

அந்தவகையில், கொழும்பில் மட்டுமன்றி ஒவ்வொரு ஊரிலும் ஏகப்பட்ட ‘ரியூட்டரிகள்’ நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான்போல உருவாகிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான இடங்களில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் விளம்பர அடைமொழிகள் பார்த்தால் ஏதோ அவரே கல்வியை கண்டுபிடித்தவர் மாதிரித்தான் தோன்றும். ஆனால் நாகரிகத்தின் பெயரால், சைனா போனையும் ஒரிஜினல் என்று நம்புகின்ற சமூகமாக நாம் இருப்பதால் மேற்சொன்ன ரியூசன் நடாத்துனர்களின் ‘ரேட்டிங்’ கூடிக் கொண்டே போகின்றது.

ரியூசன் வகுப்புக்கள் ஏதோ ஒரு அடிப்படையில் ஆரம்பிக்கப்படுகின்றன. அநேகமானவை கல்வி அமைச்சின் கீழ் முறையாக பதிவு செய்யப்பட்டிருப்பதில்லை. நானறிந்த வகையில் கல்வி அதிகாரிகளாலோ வலயக் கல்வி அலுவலகங்களாலோ உத்தியோகபூர்வமாக கண்காணிக்கப்படுவதும் கிடையாது. அதேவேளை இங்கு போதிக்கும் ஆசிரியர்களுள் பலர் அடிப்படை தகுதி இல்லாதவர்கள் என்றே சொல்ல வேண்டியுள்ளது. கற்பித்தல் என்பது ஒரு கலை அதற்காகவே ஆசிரியர்கள் முன் - பின் பயிற்சிகளை பெற்றுக்; கொள்கின்றார்கள். ஆனால் ரிய+சன்களை பொறுத்தமட்டில் பாடசாலைக் கற்பித்தலில் முன் அனுபவம் இல்லாத பலர் அழைத்து வரப்படுகின்றார்கள். அவர்களின் திறமை பெருப்பித்துக் காண்பிக்கப்பட்டு காசாக்கப்படுகின்றது.

ஆனால் உண்மையிலேயே வேறு சிலர் இருக்கின்றார்கள் அவர்கள் திறமைசாலிகள். மாணவர்களுக்கு போதுமான பாடக்குறிப்புக்களையும் வினாப்பத்திரங்களையும் வழங்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைப்பவர்கள். அவர்கள் ஒழுக்கத்தையும் கல்வியையும் வாழ்வியலையும் கற்றுக் கொடுக்கின்றார்கள்.

உண்மைதான், இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் கடைசியில் எல்லாவற்றையும் தமக்கு ஏற்பட்ட செலவுக்கு அதிகமான தொகைக்கு விற்கின்றபோதுதான் வியாபாரி போல ஆகிவிடுகின்றார்கள்.

க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர மாணவர்கள் மட்டுமன்றி ஐந்தாறு வயது சிறார்களும் கூட பாடசாலை முடிந்து வந்து சாப்பிட்ட மறுகணமே கொப்பியை தூக்கிக் கொண்டு ரியூசனுக்கு ஒடுகின்றார்கள்.

அந்தப் பிள்ளைகளுக்கு மார்க்கக் கல்வியும் மண் விளையாட்டும் கிடைப்பது – தொலைக்காட்சி தொடர் நாடகங்களின் விளம்பர இடைவேளைகளில்தான்.

முறைதவறிய கற்பித்தல்

ரியூசன் வகுப்புக்களை நீங்களும் பார்த்திருப்பீர்கள். சில வகுப்புக்களில் ஆண்களும் பெண்களுமாக நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் இருப்பார்கள். பல ஆசிரியர்கள் ஓரளவுக்கு முறையாக கற்பித்தலை மேற்கொண்டாலும் சிலர் தாம் ஏற்கனவே மனப்பாடம் செய்து வந்ததை ஒப்பிவிப்பது போல விடயங்களை அடுக்கிக் கொண்டே போவார்கள். கடைசி வரிசையில் இருக்கின்ற மாணவனுக்கும் இது விளங்கியதா என்று அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. இப்படியானவர்களிடம் மாணவர்கள் குறிக்கிட்டு ஏதாவது கேள்வி கேட்டால் சீறிப்பாய்வார்கள். எப்படியாவது குறிப்பிட்ட சிலருக்கு நல்ல பெறுபேறுகளைப் பெற்றுக் கொடுத்து, அடுத்த வருடம் அதைவைத்து அதிக மாணவர்களை தம்வசம் கவர்ந்திழுக்கவே அவ்வாறானவர்கள் மணக்கணக்கு போட்டிருப்பார்கள்.

ஆனால், ஒரு ரியூசனில் தனது கற்பித்தலை காசுக்கு விற்பனை செய்கின்ற ஒரு நபர் குறித்த சில மாணவர்கள் உயர் பெறுபேறுகளைப் பெறும்போது, அதற்கு தானே முழுமுதற் காரணம் என்று மார்தட்ட முடியாது. ஏனென்றால், வீடு ஒன்று உறுதியாக கம்பீரமாக காட்சியளிக்கின்றது என்பதற்காக சீமெந்துக் கடைக்காரர் உரிமை கோர முடியாது என்பது போலத்தான் இதுவும்.

இன்னும் சொல்லப்போனால், இவ்வாறான வாத்தியார்கள் முன்வரிசையில் அமர்ந்துள்ள கெட்டிக்கார மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை காணக் கூடியதாக இருக்கும். எல்லா மாணவர்களும் சமமான கண்கொண்டு பார்க்கப்படுவது அரிதிலும் அரிது. ஒருவித கிளுகிளுப்பை கொடுக்கும் ஆண் -பெண் மாணவர்களைக் கொண்ட வகுப்பபுச் சூழல் ஒரு சில நேரங்களில் மாணவர்கள் தமது சந்தேகங்களை கேட்டறிந்து கொள்ள வெட்கப்படச் செய்து விடுகின்றது. தம்மிடம் ரியூசன் வகுப்புக்கு வரும் மாணவர்களுக்கு யாரும் கொடுக்காத முன்மாதிரி வினாக்களை கொடுக்க வேண்டும் என்று நினைத்து ஆசிரியர்கள் எப்பாடுபட்டாவது பல வினாப்பத்திரங்களை எடுத்து வருகின்றனர்.

இது பாராட்டப்பட வேண்டியது. ஆனபோதும், ரியூசன் கலாசாரம் மீதான ஒருவித அளவுகடந்த வேட்கையே அநேக சந்தர்ப்பங்களில் பரீட்சைக்கு முன்கூட்டியே வினாத்தாள்கள் வெளியாவதற்கு மறைமுக காரணமாகி விடுகின்றன என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

அதேபோன்று பரீட்சை நெருங்கி வருகின்ற போது கருத்தரங்குகளை ரியூசன் வகுப்புக் காரர்கள் ஏற்பாடு செய்வார்கள்.

பல இடங்களில் கற்பிக்கும் ரியூசன் ஆசிரியர்கள் இதில் வளவாளர்களாக கலந்து கொள்வதால் கடைசி நேரத்திலேயே சில ஊர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும். இவ்வாறான கருத்தரங்கிற்கு நுழைவுக் கட்டணம் முதலில் அறவிடப்படும். பின்னர் பாடக்குறிப்பு அல்லது மேலதிக வினாப்பத்திரக் கட்டணம் என்று இன்னும் பெருந்தொகை கறக்கப்பட்டு விடும். ஆனால் எல்லா சந்தர்ப்பங்களிலும் இந்த ரெடிமேட் கருத்தரங்குகள் பயனளிப்பதில்லை.

சம்பவங்கள் - உதாரணங்கள்

அண்மையில் கொழும்பு பெரும்பாகத்தில் அமைந்துள்ள ஒரு ரியூசனில் நடைபெற்ற முன்னோடி கருத்தரங்கிற்கு நண்பர் ஒருவர் தனது பிள்ளையை அனுப்பியுள்ளார். கருத்தரங்கை நடாத்தியவர் பிரபல ஆசிரியர். கருத்தரங்கிற்காக பெருந்தொகை நுழைவுக் கட்டணம் பெறப்பட்டது. கருத்தரங்கு முடிவில் சில வினாத்தாள்கள் அடங்கிய பொதி ஒன்றை வழங்கிவிட்டு அதற்கும் 165ரூபா அறவிட்டுள்ளனர். சரி, போனால் போகட்டும் என்று நினைத்து பிள்ளை வீட்டுக்கு வந்து பையை உடைத்துப் பார்த்தால் அதில் ஒன்று 7ஆம் தரத்திற்குரிய கேள்விகளை கொண்டது. அதுவும் ஆங்கில பாட வினாப்பத்திரம்.
9ஆம் தரம் கற்கும் மாணவரின் பொதிக்குள் 7ஆம் தர ஆங்கிலப் பாட விதானத்திற்குரிய வினாப்பத்திரத்தை வைத்தனுப்பிய விஞ்ஞான ஆசிரியரை என்ன வென்று புகழ்வது! நாம் எதை வைத்தாலும் பிள்ளைகள் படிப்பார்கள் என்ற எகத்தாளத்திலா ரியூசன் வாத்தியார்கள் சிலர் நடந்து கொள்கின்றார்கள் என்று நண்பர் கேட்கிறார். இதுபோல இன்னும் நிறைய சம்பவங்களும் ஏகப்பட்ட கேள்விகளும் கையிலிருக்கின்றன.

இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட்டாக வேண்டும். அதாகப்பட்டது – நாகரிக மோகமே கலாசாராமாக ஆகிக் கொண்டிருக்கின்ற இன்றைய காலகட்டத்தில், இருபாலாரும் இரண்டறக் கலந்து பயிலும் ரியூசன் வகுப்பு சூழல் என்பது பல்வேறு சிறிய பெரிய சமூகச் சீரழிவுகளுக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. கல்விக்கு ரியூசன் வகுப்புக்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது என்பது உண்மையே. என்றபோதிலும் இவ்வாறான எதிர்விளைவுகள் அலட்சிப்படுத்தக் கூடியனவல்ல. இதற்கு பதச்சோறாக ஒரு சம்பவத்தை மட்டும் கூறலாம்.

சில மாதங்களுக்கு முன்னர், மட்டக்களப்பு மாவட்டத்தில் ரியூசன் நடாத்தும் ஒருவர் அங்கு கற்கும் மாணவியை ஊர்கடந்து தனது வாகனத்தில் ஏற்றிச் சென்ற நிலையில் அம்மாணவி கூச்சலிட்டுக் கத்தி வாகனத்தை விட்டு வெளியில் பாய்ந்ததில் தப்பிப் பிழைத்தார். தாம் அப்படியான நோக்கம் எதற்காகவும் அவரை அழைத்துச் செல்லவில்லை என்று முதலில் குறிப்பிட்ட இந்நபர் அண்மையில் தவறான நோக்கத்தின் அடிப்படையிலேயே கடத்திச் சென்றதாக சட்டத்தின் முன்னால் ஒப்புக் கொண்டுள்ளார்.

படிக்கப்போகும் பிள்ளைகளுக்கு கல்வியைப் புகட்டாமல் காசு கறக்கும் ஆசிரியர்களை விடவும் இவ்வாறான பேர்வழிகள் அபத்தமானவர்கள். இதுபோன்ற நபர்கள் பாடசாலையில் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் அவர்களை நாற்சந்தியில் நிற்பாட்டி “நலம்” அடிக்க வேண்டும் என்கிறார் சமூக ஆர்வலர் ஒருத்தர்.

பாடசாலைகளின் வகிபாகம்

மறுபுறத்தில் நமது பாடசாலைகளும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களும் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்?.......... “ஏன் உங்கள் பிள்ளையை வீணாக செலவழித்து ரியூசனுக்கு அனுப்புகின்றீர்கள்?” என்று எந்த பெற்றோரிடமாவது கேட்டால் அவர்கள் முதலில் சொல்கின்ற பதில் “அங்கு படிப்பிறானுகள் இல்லையே…” என்பதாகத்தான் இருக்கும். அந்த வகையில் ரியூசன் கள் பெருகிப் போவதற்கும் பாடசாலைக் கற்பித்தலில் இளைய தலைமுறை நம்பிக்கை அற்றுப் போனதற்கும் பாடசாலை சமூகமும் ஒரு வகையில் மறைமுக காரணம் என்பதை மனச்சாட்சியுடன் ஏற்றுக் கொள்வார்களா?

பாடசாலைகளில் பணியாற்றும் நல்ல பல ஆசிரியர்களிடையே களைகள் போல சில ஆசிரியர்களும்(?) இருக்கின்றனர். அவர்கள்; மாணவர்களுக்கு முழு ஈடுபாட்டுடன் படிப்பிப்பது மிகக் குறைவு. டியூசன் வகுப்பில் கற்றுக் கொள்ளுமாறு கூறிவிடுவார்கள். இன்னும் சிலர் இருக்கின்றார்கள் அவர்கள் ரியூசன் வகுப்பு நடாத்துகின்றவர்களாக இருந்தால் தமது ரியூசனுக்கு வந்தால்தான் பாடம் புரியும் என்று கூறுவார்கள், சில நேரங்களில் ரியூசன் வினாக்களுக்கான சந்தேகங்களை பாடசாலையில் விளக்கிக் கொண்டிருப்பார்கள். வகுப்புக்கு செல்லாத மாணவர்கள் விழிபிதுங்க பார்த்துக் கொண்டிருப்பர்.

நன்றாக சிந்தித்துப் பாருங்கள். அரசாங்கம் வருடாந்தம் பல பில்லியன் ரூபாவை கல்விக்காக ஒதுக்குகின்றது. ஒவ்வொரு ஊருக்கும் நான்கைந்து பாடசாலைகள் இருக்கின்றன. கற்பித்தலுக்காகவே விஷேடமாக பயிற்றப்பட்ட இலட்சக்கணக்கான ஆசிரியர்கள் சேவையில் இருக்கின்றனர். மாதந்தோறும் சம்பளம் பெறுகின்றனர். கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட பாடவிதானங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.

அதே கல்வியமைச்சே எல்லா வினாப்பத்திரங்களையும் தயாரித்து பரீட்சை நடாத்துகின்றது. ஆனால், ரியூசன் வகுப்பில் கற்றுக் கொண்டாலேயே கல்வியமைச்சினால் நடாத்தப்படும் இப் பரீட்சைகளில் திறமையாக சித்தியடைய முடியும் என்றால்…. இந்த ஒட்டுமொத்த கல்விக் கட்டமைப்பும் எதற்காக? என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாததாகின்றது. சில மாதங்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்ட கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இக் கருத்துநிலையுடன் ஒத்துப்போகும் சில விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தார்.

“பாடசாலையில் பாடவிதானங்கள் முறையாக கற்பிக்கப்பட்டால் அதற்கமைய பரீட்சை வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டால், இயல்பாகவே மாணவர்கள் சித்தியடைவது மட்டுமன்றி பிரத்தியேக ரிய+சன் வகுப்புக்களின் தேவையும் இருக்காது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் “தனியார் கல்வியகங்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்பட வேண்டும்”

என்றும் அமைச்சர் அடிக்கோடிட்டு சொல்லியிருந்தார். இதுதான் நிதர்சனமும் எமது நிலைப்பாடும். ஆனால், அமைச்சர் சொன்ன விடயம் காற்றில் கரைந்துவிட்டதாகவே தெரிகின்றது. இது தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக இதுவரை எந்த செய்தியும் இல்லை.

ஒழுங்குபடுத்தலின் அவசியம்

பாடசாலைகள் வீண் என்றோ அல்லது ஆசிரியர்கள் அறவே கற்பிப்பதில்லை என்றோ இங்கு கூறவரவில்லை. ஆனால் நடைமுறையில் அதைக் காணமுடியாதுள்ளது என்பதே எமது ஆதங்கமாகும்.

உண்மையில் மாணவர்கள் பெருமளவுக்கு பாடசாலைக் கல்வியிலேயே தங்கி இருக்க வேண்டும். அந்தளவுக்கு செயற்றிறன் மிக்கதாகவும் காத்திரமானதாகவும் பாடசாலைகளில் கற்பித்தல் இடம்பெற வேண்டும்.

ஒவ்வாரு ஆசிரியரும் எதனைப் போதிக்கின்றார் என்பதை முன்னேற்ற அறிக்கை ஒன்றின் மூலம் கல்வியமைச்சு உறுதிப் படுத்த வேண்டும். பாடசாலையில் போக்குக் காட்டிவிட்டு ரியூசனில் சிறப்பாக கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ஆவன செய்யப்பட வேண்டும். இவற்றையெல்லாம் கடந்தும் மாணவர்கள் மேலதிக சந்தேகங்கள் இருக்குமாயின் அதனை தெளிவுபடுத்துகின்ற இடமாக வேண்டுமென்றால் ரியூசன் வகுப்புக்களை பயன்படுத்தலாம்.

அதேவேளை, ரிய+சன் வகுப்புக்களின் செயற்பாடுகளும் ஒழுங்குமுறைப்படுத்தப்படுதல் அதைவிட அவசியமானது. தனியார் கல்வியகங்கள், ரிய+சன் வகுப்புக்கள் ஏதோ ஒரு அடிப்படையில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுடன் அதன்போது அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் தகுதி, தராதரமும் அனுபவமும் பரீசீலிக்கப்படுதல் வேண்டும். ஒரு கிரமமான அடிப்படையில் ரிய+சன் வகுப்புக்களின் செயற்பாடுகளை கண்காணிக்க வேண்டும். மேலும், இங்கு கற்கும் மாணவர்களுக்கான கட்டணங்கள் ஒரு சட்டகத்திற்குள் கொண்டு வரப்பட்டு வரையறை செய்யப்பட்டு நிர்ணயிக்கப்படுதல் முக்கியமானது. இப்பணிகள் அனைத்தையும் காலகெதியில் செய்து முடிக்க வேண்டியது அரசாங்கத்தினதும் கல்வியியலாளர்களதும்

தார்மீக கடமை

ஆசிரியத் தொழில் என்பது மிக மிக புனிதமானது. ஒரு பிள்ளைக்கு இரண்டாவது பெற்றோராக ஆசிரியர்கள் திகழ்கின்றனர். அடுத்த தலைமுறை ஒன்றை உருவாக்கும் பாரிய பொறுப்பு அவர்களின் கையில் ஒப்படைக்கப்படுகின்றது. இது வேறெந்த தொழிலுக்கும் இல்லாத மகத்துவமாகும். இந்த மகத்துவத்தை தமது கடைசி மூச்சுவரையும் காப்பாற்றிய, காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களையும் நாமறிவோம். தம்மிடம் கற்க வருகின்ற பிள்ளைகளுக்கு முழு மனதுடன் போதிக்கின்ற, பாடசாலைக்குவராவிட்டால் அவனது வீடு தேடிச் சென்று கற்பதற்காக இழுத்துவருகின்ற, வீட்டிற்கு அழைத்து இலவசமாக பாடம் சொல்லிக் கொடுக்கின்ற, தமது மனச்சாட்சிக்கு உண்மைக்குண்மையாக நடந்து கொள்கின்ற எண்ணிலடங்கா ஆசியர்களை நாம் ஒவ்வொருவரும் மானசீகமாக நேசிக்கின்றோம்.

இன்றைய கல்வி இப்படி வணிகமயமாகிக் கொண்டிருக்கின்றதே என்று உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கும் நமது நெஞ்சைத்தொட்ட ஆசிரியர்கள் அனைவரும் தலைமுறைகள் கடந்த மதிப்பிற்குரியவர்கள். அதேபோன்று, சேவை மனப்பான்மையுடன் கல்வி புகட்டும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில ரியூசன் வகுப்புக்களும் ஆசிரியர்களும்; என்றென்றைக்கும் நன்றியுடன் நினைவுகூரப்படுவர். நேர்மையுடன் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமலும் தமது தொழிலை செய்கின்ற இவ்விரு தரப்பினரும் இக்கட்டுரைக்கு விதி விலக்கானவர்கள்.

ஆக, அளவு பொருத்தமானவர்கள் மட்டும் ‘தொப்பியை’ போட்டுக் கொள்ளட்டும். இதனை வாசிக்கின்றபோது கோபமடைந்தவர்களுக்கு ‘இந்த தொப்பி’ கனகச்சிதமாக பொருந்தும்.

- ஏ.எல். நிப்றாஸ்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல