கோவையில் போலீஸ் சில மீட்டர் தூரத்தில் நிற்க விடுதலை புலிகள் அழித்த ஆவணங்கள்!
அத்தியாயம் 48
கோவையில், விக்கி, ரகு என்ற இரு விடுதலைப் புலிகளும் ட்ராஃபிக் போலீஸிடம் சிக்கி, அவர்களுடன் முனுசாமி நகரில் உள்ள வீட்டில் டிக்சன் தங்கியிருந்த விபரம் விசாரணையில் தெரியவந்தது என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
இந்த விபரம் உடனே சி.பி.ஐ. டீமுக்கு போய்ச் சேரவில்லை. விசாரித்த போலீஸ்காரர் தமது மேலதிகாரிக்கு தெரிவித்து, அவர் தமது சுப்பீரியருக்கு தகவல் கொடுத்து, அங்கிருந்து சி.பி.ஐ. டீமுக்கு போய் சேர, இரவு ஆகிவிட்டது என்று அந்த அத்தியாயத்தை முடித்திருந்தோம்.
மறுநாள் காலையில் முனுசாமி நகரில் உள்ள வீட்டை கோயம்புத்தூர் பொலீசார் சுற்றி வளைத்தனர்.
ஆனால், முதல் நாள் மாலையில் வெளியே சென்ற விக்கியும், ரகுவும் வீடு திரும்பாததை அடுத்து டிக்சனும், குணாவும் உஷாராகி இருந்தனர். ஏதாவது சிக்கல் ஏற்பட்டிருக்கலாம் என ஊகித்ததால், அவர்களும் தயாராகவே இருந்தனர்.
தாம் சுற்றி வளைக்கப்பட்டால் தம்மிடமுள்ள சயனைடு குப்பியைக் கடித்து உயிரை விட்டுவிட வேண்டும் என்பது, விடுதலைப்புலிகளின் கொள்கை என்பதை சி.பி.ஐ. டீம் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தது.
அதனால், விக்கி, ரகு ஆகிய இருவரும் முதல்நாள் மாலையே சிக்கிய நிலையில், மறுநாள்தான் அவர்களது மறைவிடம் சுற்றிவளைக்கப்பட்டால், அங்கிருப்பவர்கள் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்யலாம் என்பதை சுலபமாக ஊகித்திருக்க முடியும்.
அப்படியான நிலையில், அதிரடியாக கமாண்டோ பாணியில் அந்த வீட்டுக்குள் புகுந்து, டிக்சனும், குணாவும் சயனைட் குப்பியை கடிப்பதற்குமுன் பிடிப்பதற்கு ஏன் முயற்சி செய்யாமல், வழமையான முறையில், பட்டப்பகலில், கோவை போலீஸை வைத்து அந்த வீட்டை சுற்றி வளைத்தார்கள்?
இந்தக் கேள்விக்கு பதில் இல்லை. ஆனால், அப்படித்தான் சுற்றிவளைத்தார்கள்.
முனுசாமி நகரில் இருந்த புலிகளின் மறைவிட வீட்டை முற்றுகையிட்ட கோயம்புத்தூர் பொலீஸ் அதிகாரிகள், உள்ளேயிருந்த டிக்சன் மற்றும் குணாவிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றுகொண்டிருந்தனர். இருவருக்கும் எந்தத் தீங்கும் ஏற்படாது என உறுதியளிப்பதாக, போலீஸ் அதிகாரி ஒருவர் உத்தரவாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இதெல்லாம் நடக்கிற காரியமா?
இவர்களுடன் பேச்சு கொடுத்துக்கொண்டே டிக்சனும், குணாவும் அந்த நேரத்தைப் பயன்படுத்தி தம்மிடம் இருந்த முக்கிய ஆவணங்களை அழித்துக் கொண்டு இருந்தனர்.
வீட்டை முற்றுகையிட்டு நின்று கொண்டிருந்த கோவை போலீஸால், வீட்டுக்கு உள்ளே பொருட்கள் தீயில் பொசுங்கும் மணத்தை உணர முடிந்தது. ஆனால், முற்றுகையை நீடித்து, பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.
விடுதலைப் புலிகள் உபயோகிக்கும் உயர் அலைவரிசை ஒயர்லெஸ் ரிசீவர் ஒன்று அந்த வீட்டில் இருந்தது (அதன் சிக்னலை வைத்துதான், இந்த ஏரியாவில் விடுதலை புலிகள் நடமாட்டம் இருப்பதை சி.பி.ஐ. தெரிந்து கொண்டது என கடந்த அத்தியாயத்தில் எழுதியிருந்தோம்).
அந்த உயர் அலைவரிசை ஒயர்லெஸ் ரிசீவர், டிக்சன் மற்றும் குணாவால் வீட்டின் சமையலறையில் இருந்த ஸ்டவ் மீது வைத்து கொளுத்தப்பட்டது.
ஏராளமான இந்திய ரூபா நோட்டுகளும் வீட்டுக்கு உள்ளே வைத்து தீக்கிரையாக்கப்பட்டன. முக்கிய ஆவணங்களும், தடயங்களும் எரிக்கப்பட்டன.
அப்போதும், வீட்டுக்கு வெளியே நின்று போலீஸ் அதிகாரி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். அவருடன் பேசியபடியே, அழிக்கப்பட வேண்டிய அனைத்தும் சாம்பலாகி விட்டதை டிக்சனும், குணாவும் உறுதி செய்து கொண்டார்கள்.
அதன்பின்-
தம்மிடம் இருந்த சயனைடு குப்பியைக் கடித்தார்கள்.
ஒருவேளை சயனைடுக்கு விஷ முறிவு மருந்து சகிதம் கோவை போலீஸ் வந்திருக்கலாம் என்ற முன்ஜாக்கிரதை நினைப்பும் இருவருக்கும் இருந்துள்ளது. அதனால், தம்மிடம் இருந்த சயனைடு குப்பியைக் கடித்த டிக்சனும், குணாவும், உடனடியாக தம்மிடம் இருந்த பிஸ்டலால், தம்மை தாமே சுட்டு தங்களை மாய்த்துகொண்டனர்.
துப்பாக்கி சத்தம் கேட்டபின்னர்தான் விபரீதம் புரிந்து, அந்த வீட்டுக்குள் கோவை பொலீசார் நுழைந்தபோது, இருவரும் பிணமாகக் கிடந்தனர்.
ராஜிவ் காந்தி படுகொலை புலனாய்வில், சி.பி.ஐ. தம்மை நெருங்குகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, சில மீட்டர் தொலைவில் போலீஸ் நிற்கும்போதே விடுதலைப்புலிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், தமிழகத்தில் முதல் தடவையாக கோவை, முனுசாமி நகரில்தான் நடந்தது.
போலீஸ் உள்ளே சென்று பார்த்தபோது, சயனைடு குப்பியின் உடைந்த துண்டுகளும், பிஸ்டலும்தான் இருந்தது.
தற்கொலை செய்துகொண்ட டிக்சன், ராஜிவ் கொலை புலனாய்வு டீம் பற்றி நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார். சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழு, கார்த்திகேயன் தலைமையில் இயங்குவதும் அவருக்கு தெரிந்திருந்தது. சயனைடு குப்பியைக் கடிப்பதற்கு முன், நிதானமாக ஒரு துண்டுக் காகிதத்தில் ஒரு குறிப்பு எழுதிவிட்டுதான், உயிரை மாய்த்துக் கொண்டார்.
போலீஸ் உள்ளே சென்றபோது, டிக்சனின் உயிரற்ற உடல் அருகே அந்த துண்டுக் காகிதம் கிடைத்தது. அதில் என்ன எழுதப்பட்டிருந்தது?
“அன்புள்ள கார்த்திகேயன், உங்கள் திறமையை நாங்கள் பாராட்டுகிறோம்” என்று எழுதி, அதன் கீழே டிக்சன் கைச்சாத்திட்டிருந்தார்.
இது தொடர்பாக பின்னாட்களில் கார்த்திகேயனிடம் கேட்டபோது, “டிக்சனை பற்றியும் திருச்சி முனுசாமி நகர் மறைவிட வீட்டைப்பற்றியும் அறிந்த உடனே கோயமுத்தூர் பொலீசார் எங்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும். எங்களிடம் என்.எஸ்.ஜி. கமாண்டோக்களும், சயனைடு எதிர்ப்பு மருந்தும், ஹெலிக்கொப்டரும் இருந்தன.
தகவல் கிடைத்த 90 நிமிடங்களில் சென்னையிலிருந்து கோவைக்கு கமாண்டோ குழுவுடன் எம்மால் சென்றடைந்திருக்க முடியும். அதிகாலை நேரத்தில் அதிரடியாக அந்த வீட்டுக்குள் புகுந்து இருவரையும் உயிருடன் கைப்பற்ற முயற்சி செய்திருக்கலாம். ஆனால், கோவை போலீஸ் காரியத்தை கெடுத்தது” என்றார்.
ஆனால், மற்றொரு விஷயம். இந்த சம்பவம் நடந்தபோது சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு டீமின் இரு அதிகாரிகள் கோவையில்தான் இருந்தார்கள் என்பதை கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தோம். அவர்களுக்கு தெரிந்தே இந்த சுற்றிவளைப்பு நடந்தது என்பதை கோவை போலீஸை கேட்டால் தெரிந்து கொள்ளலாம்.
நிஜம் என்னவென்றால், ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பிறகு நடந்த முதலாவது சயனைட் சாவு இதுதான் என்பதால், சி.பி.ஐ. புலனாய்வு டீம் உட்பட யாருமே இப்படி நடக்கும் என எதிர்பார்த்திருக்கவில்லை.
அதேபோல, இதுபோல மேலும் பலர் தற்கொலை செய்து உயிரை விட போகிறார்கள் என்பதையும் அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.
டிக்சன், குணா ஆகிய இருவரும் தற்கொலை செய்துகொண்ட விஷயம் தெரியவந்ததும், சென்னையில் இருந்து சி.பி.ஐ. சிறப்புப் புலனாய்வு குழு அதிகாரிகள் கோயமுத்தூர் விரைந்தார்கள். அங்கே ட்ராபிக் போலீஸால் கைது செய்யப்பட்டிருந்த விக்கி, ரகு ஆகியோரை விசாரித்தனர்.
அந்த இருவருக்கும் சிவராசனின் இருப்பிடம் தெரியவில்லை.
ஆனால், அவர்களுக்கு விடுதலைப் புலிகளின் தமிழக ஆபரேஷன் பற்றிய பல விபரங்கள் தெரிந்திருந்தன. சென்னைக்கு விக்கி, ரகு ஆகியோரை அழைத்துச் சென்று விசாரித்தபோது கிடைத்த முக்கிய தகவல், கோவை புறநகர பகுதியில் உள்ள கார் மெக்கானிக் கராஜ் ஒன்றுதான், விடுதலைப் புலிகளுக்கு கையெறி குண்டுகளை தயாரித்து கொடுக்கும் தொடர்பு அலுவலகமாக இயங்கியது.
கோவையின் வேறு இரு பகுதிகளில் தயாரான கையெறி குண்டுகள், இந்த கராஜ் மூலமே வேதாரண்யம் அனுப்பப்பட்டு, இலங்கை சென்றன. ராஜிவ் கொலை சம்பவத்தின் பின், உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தது.
விசாரணையில் விக்கி, ரகு இருவரும் கூறிய மற்றைய தகவல்கள்:
இவர்கள் இருவரும், டிக்சன், குணா, ஆகியோருடன் கோயமுத்தூரில் தங்கி இருந்தனர். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்த அரசியல் பிரவை சேர்ந்த விடுதலைப் புலிகள் இலங்கைக்கு அனுப்ப வேண்டிய தகவல்கள், கோவை முனுசாமி நகர் வீட்டுக்குதான் முதலில் வரும். டிக்சன், இலங்கையில் இருந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைமையகத்துக்கு அந்த தகவல்களை ஒயர்லெஸ் மூலம் அனுப்பிக் கொண்டிருந்தார்.
இதனால், கோவை முனுசாமி நகர் வீட்டில் இருந்தவர்களுக்கு, தமிழகத்தில் அரசியல் பிரிவு விடுதலைப் புலிகள் எங்கெங்கு இருந்தார்கள் என்ற விபரம் தெரிந்திருந்தது.
அதன்படி, திருச்சி ராமலிங்கம் நகர் விரிவாக்கப்பகுதியில் (எக்ஸ்டென்ஷன்) உள்ள ஒரு வீட்டில்தான் திருச்சி சாந்தன் பெரும்பாலும் தங்கியிருந்தார் என்பதை சி.பி.ஐ. தெரிந்து கொண்டது. அந்த வீட்டின் கீழ்த்தளத்தில் விடுதலைப்புலிகள் ஆதரவாளர் குடும்பம் குடியிருந்தது.
சேலம் நெடுஞ்சாலை அருகேயுள்ள மற்றொரு வீட்டில், விடுதலைப் புலிகளின் தொடர்பு மையம் ஒன்று இருந்தது. அரசியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு பணம் கொடுப்பது அங்கிருந்துதான் நடந்தது. திருச்சி சாந்தனின் உதவியாளர் சிவதாணு அங்கு இருந்தார்.
திருச்சி அருகே முத்தரசநல்லூரில் ஒரு வீட்டையும், பண்ணையையும் வாங்குவதற்கு நச்சலூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு டாக்டருக்கு பணம் கொடுத்திருந்தார் திருச்சி சாந்தன். இந்த டாக்டர் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்.
இந்த முத்தரசநல்லூர் பண்ணைதான், விடுதலைப் புலிகளின் ஸ்டோரேஜ் இடமாக இருந்தது.
பண்ணைக்குள் இருந்த வீட்டில், ஏராளமான அளவில் மருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இலங்கையில் காயமடைந்த விடுதலைப் புலிகளுக்கு தேவையான மருந்துகள், அனுப்பி வைக்கப்படும் மையம் அதுதான்.
அந்த வீட்டுக்கு அருகே பண்ணைக்குள் மற்றொரு ஷெட் இருந்தது. கையெறிகுண்டுகள், ஆயுதங்கள், வெடிபொருட்கள், ஒயர்லெஸ் சாதனம் போன்றவை சேமித்து வைக்கப்படும் இடம் அதுதான். இலங்கையில் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கு தேவையான போல் பேரிங்குகள் பல அளவுகளில் வாங்கப்பட்டு அங்கே வைக்கப்பட்டன.
கோயமுத்தூரில் லேத் மெஷினை பயன்படுத்தி கையெறி குண்டுகள் தயாரிக்கும் ஆலை ஒன்று இருந்தது. இந்த ஆலை, இந்தியர் ஒருவரின் வீட்டில் இருந்தது. இலங்கையில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ‘அருள் 90’ குண்டுகள் இந்த ஆலையில் தயாராகி, முத்தரசநல்லூர் பண்ணைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவை அங்கிருந்துதான் இலங்கை சென்றன.
ஆனால், கோயமுத்தூரில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டுகள், நேரே இலங்கை சென்றன. கோவை கையெறி குண்டுகளை இலங்கைக்கு அனுப்பவதற்கான ஏற்பாடுகளை விக்கி பார்த்து கொண்டார். இந்தக் குண்டுகள் வேன்களிலும், மாருதி ஜிப்ஸி ஜீப்களிலும் வேதாரண்யம் கடற்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து படகுகள் மூலம் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டன.
சுரேஷ் மாஸ்டர் சென்னையில் இருந்தார். அவரும் அவரது உதவியாளர் மூர்த்தியும் அங்கு காயமடைந்த விடுதலைப்புலிகளைக் கவனித்து வந்தனர். காயமடைந்த புலிகளை வைத்து பராமரிக்க சென்னையில் வெவ்வேறு பகுதிகளில் ஆறு வீடுகள் இருந்தன.
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து விபரங்களும், சி.பி.ஐ. விசாரணையின்போது, விக்கி, ரகு ஆகிய இருவரிடமும் இருந்து கிடைத்தன. தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் ஆபரேஷன் பற்றிய பல தகவல்கள் சி.பி.ஐ.க்கு ஒரே இடத்தில் கிடைத்தது, இதுதான் முதல் தடவை.
இவ்வளவு தகவல்களையும் தெரிந்து வைத்திருந்த விக்கி, ரகு ஆகிய இருவரையும், கோவை ட்ராபிக் கான்ஸ்டபிள் ஒருவர், வீதியில் வெறும் சந்தேக கேஸில்தான் பிடித்தார்.
விக்கி, ரகு ஆகிய இருவரும், ஜூலை 27-ம் தேதி கோவை, கவுண்டர்பாளையத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தபோதே, வீதியில் வைத்து தடுத்து நிறுத்தியிருந்தார் அந்த ட்ராஃபிக் பொலீஸ்காரர். அன்று வீதியில் சென்ற பலரை தடுத்து விசாரித்துக்கொண்டிருந்த இந்த ட்ராபிக் போலீஸ்காரர், இவர்களை மட்டும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற ஒரே காரணம்-
இவர்கள் இருவரும் பேசிய இலங்கை தமிழ்!
இலங்கை தமிழர் அதிகம் வசிக்கும் திருச்சி போன்ற இடத்தில் இவர்கள் ட்ராபிக் போலீஸால் மறிக்கப்பட்டிருந்தால், இவர்களது இலங்கை தமிழ் உச்சரிப்பு பெரிய விஷயமே கிடையாது. பேசாமல் விட்டிருப்பார்கள். ஆனால், கோவையில் கவுண்டர்பாளையம் போன்ற இடத்தில் பேசிய, இலங்கை தமிழ், பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது!
போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட விக்கியும், ரகுவும் அங்கே கூறிய மற்றொரு விஷயமே, அவர்கள் வசித்த முனுசாமி நகர் வீடுவரை போலீஸை கொண்டு போனது. தம்முடன் தங்கியிருக்கும் வேறு இருவரில் ஒருவரது பெயர் டிக்சன் என்று போலீஸ் ஸ்டேஷனில் சொன்னார்கள் இவர்கள்.
ராஜிவ் காந்தி படுகொலை புலனாய்வில் தேடப்படும் நபராக டிக்சனின் பெயர் அறிவிக்கப்பட்டு, பத்திரிகைகளுக்கு அவரது போட்டோவை சி.பி.ஐ. கொடுத்து வெளியிட்டிருந்தது. அப்படியிருக்கையில், ட்ராபிக் போலீஸால் அழைத்துச் செல்லப்பட்ட இவர்கள், போலீஸ் ஸ்டேஷனில் டிக்சனின் பெயரை ஏன் சொன்னார்கள்?
(தொடரும்… )
விறுவிறுப்பு.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக