அரபு நாட்டினர் எவரையும் உறுப்பினராகக் கொள்ளாத "பலஸ்தீனத்திற்கான சிறப்பு ஆணைக்குழுவின்" (UNSCOP) பரிந்துரையின் படி ஐ.நா. தீர்மானம் 181 நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தின் மூலம் பலஸ்தீனம் இரு நாடுகளாகப் பிரிப்பதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி யூதர்கள் இஸ்ரேலை தனி நாடாகப் பிரகடனப்படுத்தினர். அப்போது பலஸ்தீனத்தின் 85 சதவீத நிலம் அரபு பலஸ்தீனியர்களிடமும் 7 சதவீத நிலம் யூதர்களிடமும் இருந்தது.
அப்போது சியோனிசவாதிகள் யூதர்களுக்கென ஒரு சிறு நிலப்பரப்பில் ஓர் அரசு உருவானால் தம்மால் முழுப் பலஸ்தீனத்தையும் ஆள முடியும் என உறுதியாக நம்பினர். தீர்மானம் 181ஐ அரபு நாடுகள் கடுமையாக எதிர்த்தன. தமது எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் என்னும் நாடு ஒருதலைப்பட்சமாக யூதர்களால் பிரகடனப் படுத்தப்பட்டது என்றனர் அரபு மக்கள்.
இஸ்ரேலியர்களை அவர்களின் இன அடையாளத்தை வைத்து 'யூதர்கள்' என்றும் மொழியை வைத்து "ஹீப்ருக்கள்" என்றும் அழைப்பர். இஸ்ரேலியர்கள் தாம் உரோமர்களிடம் இழந்த அரசை மீள அமைக்க வேண்டும் என்ற நீண்டகனவை உண்மையாக்கும் யூததேசியவாதத்தை "சியோனிசம்" என்பர். சியோனிசவாதிகள் ஐ.நாவின் தீர்மானத்தை ஒட்டி தமக்கென ஒரு நாட்டை பலஸ்தீனத்தில் உருவாக்கினார்கள். இதை அரபுக்கள் ஏற்கவில்லை. சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்தான் ஆகிய நாடுகளும் பலஸ்தீன தேசியவாத அமைப்புக்களான புனிதப் போர்ப்படையும் அரபு விடுதலைப் படையும் இணைந்து பலஸ்தீனப் பிரதேசத்தின் மீது படை எடுத்தன. இதனால் பலஸ்தீனப் பிரதேசம் இஸ்ரேல், மேற்குக்கரை, காஸா என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. பலஸ்தீனத் தேசியவாதம் பின்னர் தீவிரமடைந்தது. 1964ஆம் ஆண்டு பலஸ்தீனிய விடுதலை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
எல்லை இல்லா எல்லை தாண்டுதல்
பலஸ்தீனியத் தேசியவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல், தேசிய எல்லைகளைத் தாண்டி பல தாக்குதல்களை தொடர்ச்சியாக செய்து வருகின்றது. முதலாவது எல்லை தாண்டிய தாக்குதல் பலஸ்தீனிய விடுதலை இயக்கத்திற்கு எதிராக ஜோர்தானில் 1968ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. 1978, 1982, 1992, 1993, 2006 ஆகிய ஆண்டுகளில் இஸ்ரேலியப் படைகள் எல்லை தாண்டி லெபனானிற்குள் சென்று பலஸ்தீன விடுதலை இயக்கம், ஹிஸ்புல்லா இயக்கம் ஆகியவற்றிற்கு எதிராகத் தாக்குதல் மேற்கொண்டது. அது மட்டுமல்ல ஈரான், எகிப்து, சிரியா ஆகிய நாடுகள் யூரேனியப் பதப்படுத்தல் செய்ய ஆரம்பிக்கும் போதெல்லாம் இஸ்ரேலிய விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று தாக்குதல் நடத்தின. சிரிய உள் நாட்டுப் போர் 2011ஆம் ஆண்டு ஆரம்பித்த பின்னர் இரு தடவைகளுக்கு மேல் இஸ்ரேலிய விமானங்கள் சிரியாவிற்குள் அத்து மீறிப் புகுந்து ஹிஸ்புல்லா அமைப்பினர் லெபனானிற்குள் படைக்கலன்களை எடுத்துச் செல்வதைத் தடுத்தனர்.
கார்ட்டூம் தீர்மானமும் காம்டேவிட் ஒப்பந்த துரோகமும்.
இஸ்ரேலுடன் 1967ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரில் பலத்த தோல்வியை அரபு நாடுகள் சந்தித்தன. 1967 ஆகஸ்ட் மாத இறுதியில் சூடானியத் தலைநகர் கார்ட்டூமில் கூடிய அரபு லீக் நாடுகள் செப்ெடம்பர் முதலாம் திகதி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றின. அதில் மூன்று "இல்லை"கள் இருந்தன. 1. இஸ்ரேலுடன் சமாதானம் இல்லை. 2. இஸ்ரேலை அங்கீகரிப்பதில்லை. 3. இஸ்ரேலுடன் பேச்சு வார்த்தை இல்லை. ஆனால் எகிப்தின் முன்னாள் அதிபர் அன்வர் சதாத் இந்தத் தீர்மானத்தை மீறி 1979ஆம் ஆண்டு அமெரிக்க அனுசரணையுடன் அமெரிக்க நகர் காம்ப் டேவிட்டில் இஸ்ரேலுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்து கொண்டார். இதற்கான கையூட்டாக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது என்ற குற்றச் சாட்டு முன்வைக்கப்படுகின்றது. இது அவர் பலஸ்தீனிய மக்களுக்குச் செய்த பெரும் துரோகமாகும். இந்த உடன்படிக்கையின் பின்னர் எகிப்திய படைத்துறைக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த உடன்படிக்கையின் பின்னர் எகிப்து, அரபு - – இஸ்ரேலிய மோதல், பலஸ்தீனிய – இஸ்ரேல் மோதலாக மட்டுப்படுத்தப்பட்டது. எகிப்து இந்த மோதலில் ஒரு நடு நிலை நாடாகியது.
ஹமாஸின் தோற்றம்
பலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் தீவிரத் தன்மை குறையத் தொடங்கிய சூழ்நிலையில், இஸ்ரேல் மேற்குக் கரையில் தொடர்ச்சியாக நில அபகரிப்பும் யூதக் குடியேற்றமும் செய்து கொண்டிருக்கும் சூழலில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதி ராக பலஸ்தீனியர் இண்டிஃபாடா என்னும் மக்கள் பேரெழுச்சியை நடத்தத் தொடங்கிய வேளையில் ஹமாஸ் அமைப்பு 1987ஆம் ஆண்டு உருவானது. வன்முறை கூடாது படைக்கலன் ஏந்தக் கூடாது என்ற கொள்கைகளையுடையது இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பு. அதன் அரசியல் பிரிவு இஸ்லாமிய நிலையம் என்னும் பெயரில் இருந்து காஸாவிலும் மேற்குக் கரையிலும் 1973ஆம் ஆண்டிலிருந்து சமூக நலப்பணி செய்து கொண்டிருந்தது. பலஸ்தீன விடுதலை இயக்கத்தை வலுவிழக்கச் செய்ய சகோதரத்துவ அமைப்பின் இஸ்லாமிய நிலையத்திற்கு இஸ்ரேல் சாதகமாக நடந்து கொண்டது. இதில் முக்கிய மாகச் செயற்பட்டவர் ஷேக் அஹ்மட் யாஸீன். அவரே 1987இல் ஹமாஸ் என்னும் தீவிரவாத அமைப்பை ஆரம்பித்தார். பலஸ்தீன தேசியவாதம், இஸ்லாமிய அடிப்படைவாதம், தீவிரவாதம் ஆகியவை ஹமாஸ் அமைப்பின் கொள்கைகளாகின. ஒரு புறம் இஸ்ரேலியப் படையினருக்கும் பலஸ்தீனியர்களின் நிலங்களை அபகரித்துக் குடியேறிய யூதர்களுக்கு எதிரான தீவிரவாதத் தாக்குதலும் மறுபுறம் சமூக நலப்பணிகள் பலவற்றைச் சிறப்பாகச் செய்வதும் ஹமாஸ் அமைப்பின் தலையாய பணிகளாக இன்றுவரை இருக்கின்றன. ஹமாஸ் ஒரு ஸுன்னி முஸ்லிம் அமைப்பு எனப்படுகின்றது. 1983ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் தமது முதலாவது தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டனர்.
ஹமாஸின் தலைமை
ஹமாஸ் அமைப்பிற்கு ஒரு தலைவர் இல்லை எனச் சொல்லப்படுகின்றது. அது ஷூரா சபை என்னும் கூட்டுத் தலைமையால் இயக்கப்படுகின்றது. 2004ஆம் ஆண்டிலிருந்து ஹமாஸில் முன்னணித் தலைவராக இருப்பவர் கட்டார் நாட்டில் இருந்து செயற்படும் கலீட் மேஷால் என்பவராகும். ஹமாஸின் படைத் துறைக்குப் பொறுப்பாக அஹமட் ஜபாரி இருக்கின்றார். ஹமாஸ் காஸா நிலப்பரப்பில் நடத்தும் அரசின் தலைமை அமைச்சராக இஸ்மயில் ஹனியா செயற்படுகின்றார்.
ஹமாஸின் படைவலுவும் பொருளாதாரமும்
ஹமாஸ் அமைப்பினரிடம் குறுகிய மற்றும் நீண்ட தூரம் பாயக் கூடிய எறிகணைகள் பல இருக்கின்றன. ஈரானிடம் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இந்த எறிகணைகளைப் பெற்றனர். அத்துடன் காஸா நிலப்பரப்பில் நிலத்தின் கீழ் மிக நீண்ட சுரங்கப் பாதை வலைப்பின்னல்கள் இருக்கின்றன. இதனால் அவர்கள் தமது படைக்கலன்களையும் வியாபாரப் பொருட்களையும் பாதுகாப்பாக நகர்த்தக் கூடிய நிலையில் இருக்கின்றனர். இந்தச் சுரங்கப் பாதை இருக்கும் வரை ஹமாஸ் பலமாக இருக்கும். இதனால் இஸ்ரேலியர் இச் சுரங்கப் பாதைகள் தமக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை என நினைக்கின்றனர். இவற்றை அழிக்கும் நோக்குடன் இஸ்ரேலியப் படையினர் டாங்கிகளுடனும் புல்டோசர்களுடனும் பார ஊர்திகளுடனும் காஸா நிலப்பரப்பினுள் தரை நகர்வை தற்போது மேற் கொள்கின்றனர். நிலக் கீழ் சுரங்கப் பாதையூடாகக் கடத்தும் பெருட்கள் மூலம் ஹமாஸ் அமைப்பினர் ஆண்டு ஒன்றிற்கு 750 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெறுகின்றனர். 2005ஆம் ஆண்டு பலஸ்தீன அதிகார சபைக்கான தேர்தலில் வென்றதன் மூலம் அந்த சபைக்கான நிதியும் ஹமாஸின் கைக்கு வந்தது. ஆனால் ஐக்கிய அமெரிக்கா. ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதியுதவிகள் ஹமாஸின் கைகளுக்குப் போவதில்லை. பல வெளிநாடுகளில் வாழும் பலஸ் தீனியர்கள், அரபு நாடுகளில் வாழும் செல்வந்தர்கள் ஹமாஸிற்கு நிதியுதவி செய்கின்றனர். ஈரானிய அரசும் ஹமாஸிற்கு பெரும் நிதி உதவி செய்து வந்தது. 2011ஆம் ஆண்டு உருவான சிரிய உள்நாட்டுப் போரில் ஹமாஸ் ஸுன்னி முஸ்லிம் கிளர்ச்சிக்காரர்களுக்கும், ஈரான் ஷியா முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் ஆதரவாகச் செயற்பட்ட படியால் ஈரான் ஹமாஸிற்கான தனது நிதியுதவியை நிறுத்திக் கொண்டது. ஹமாஸ் அமைப்பு அது உருவான நாளில் இருந்து 400 இஸ்ரேலியர்களையும் 25 அமெரிக்கர்களையும் கொன்றுள்ளது. இது வரை இஸ்ரேல் மீது 8,000 எறி கணைகளை வீசியுள்ளது.
வேல் தர்மா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக