சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத் வேதியியல் (இரசாயன) படைகலன்களைப் பாவித்தால் அது செங்கோட்டைத் தாண்டியது போலாகும். அஸாத்திற்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சூளுரைத்திருந்தார். ஆனால் சிரியாவிற்கு எதிராக அமெரிக்கா படை நடவடிக்கை எடுப்பதை ரஷ்ய அதிபர் விளாடிமீர் புட்டின் தடுத்துவிட்டார். சிரியா மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக சவூதி அரேபியாவின் மீது ரஷ்யா குண்டுகளை வீசும் என புட்டின் இரகசியமாக எச்சரித்திருந்தார் எனச் சொல்லப்படுகின்றது. ரஷ்யாவின் ஆசிர்வாதமின்றி அஸாத் வேதியியல் குண்டுகளைப் பாவித்திருந்திருக்க மாட்டார் என விவாதிப்போரும் உண்டு. ஈரானின் அணுகுண்டு உற்பத்திக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கும் புட்டின் முட்டுக்கட்டையாக இருந்தார். இவற்றிற்கான பின் விளைவுகளை இப்போது ரஷ்யப் பொருளாதாரம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது
ரஷ்யாவின் இருண்ட செவ்வாய்
ரஷ்யாவின் ரூபிள் நாணயம் மசகு எண் ணெய் விலையுடன் இணைந்து விழுந்து கொண்டிருக்கின்றது. ரூபிளின் வீழ்ச்சியால் ரஷ்யாவில் பொருட்களின் விலைகள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. ரஷ்ய மக்கள், பொருட்கள் மேலும் விலை அதிகரிக்க முன்னர் விழுந்தடித்துப் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர். செல்வந்தர்கள் தம்மிடமுள்ள ரூபிளை விற்று டொலர்களையும் யூரோக்களையும் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். 2014 டிசம்பர் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ரஷ்ய மைய வங்கி தனது வட்டி விழுக்காட்டை 10.5இலிருந்து 17 ஆக அதிகரித்தது. அடுத்த நாள் புதன்கிழமை ரஷ்ய வங்கி தனது தொடர் நடவடிக்கைகளால் ரூபிளின் பெறுமதியைச் சற்று நிமிர்த்தியது. புதன்கிழமை ரூபிளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ரஷ்ய மைய வங்கியுடன் ரஷ்ய நிதி அமைச்சும் இணைந்து கொண்டது. நிதியமைச்சும் தன்னிடமுள்ள வெளிநாட்டு நாணயக் கையிருப்புக்களை விற்று ரூபிளை வாங்கியது. இந்த ரூபிள் பாதுகாப்பு நடவடிக்கைக்கு தான் ஏழு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நாணயங்களைச் செலவிடத் தயாராக இருப்பதாக ரஷ்ய நிதி அமைச்சு அறிவித்தது. 2014ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு டொலருக்கு 33 ரூபிள்கள் என்றிருந்த பெறுமதி தற்போது 66 ரூபிளாக மாறியுள்ளது. ரஷ்யாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் விற்பனை நிலையங்களை டிசம்பர் 16ஆம் திகதி மூடவேண்டிய நிலை ஏற்பட்டது. என்ன விலைக்கு தமது பொருட்களை விற்பது என்ற குழப்ப நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது பல கடைகளில்.
ரஷ்யாவின் இருண்ட 2014
2014ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து டிசம்பர் 16ஆம் திகதி வரை ரஷ்யாவின் நாணயமான ரூபிள் அமெரிக்காவின் டொலருக்கு எதிராக 52.8 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்குக் காரணம், மசகு எண்ணெய் விலை அதே காலப்பகுதியில் 46.1 விழுக்காடு வீழ்ச்சியடைந்ததே. ரஷ்யப் பொருளாதாரத்தில் சிறப்பம்சம் அதனிடம் உள்ள வெளிநாட்டுச் செலவாணிக் கையிருப்பு. ரூபிளின் பெறுமதியைப் பாதுகாக்க ரஷ்யா தனது வெளிநாட்டுச் செலவாணியில் 20 விழுக்காட்டை இழந்துள்ளது. ரஷ்யா வெளிநாட்டு நாணயங்களை விற்று ரூபிளை வாங்கி அதன் ரூபிளின் பெறுமதியை அதல பாதாளத்திற்கு செல்லாமல் தடுத்துக் கொண்டிருக்கின்றது. 2014ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ரஷ்யாவின் வெளிநாட்டுச் செலாவணிக் கையிருப்பு 499 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. தற்போது அது 400 பில்லியன் டொலர்களாகக் குறைந்துவிட்டது. அமெரிக்க மைய வங்கியின் ஆளுநர் 2015ஆம் ஆண்டு அமெரிக்காவில் வட்டி விழுக்காடு அதிகரிக்கப்படும் என்று சொன்னது ரஷ்யாவின் நாணயத்தைப் பொறுத்தவரை எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலானது. ரஷ்ய நிறுவனங்களின் பங்குகளின் விலைகளிலும் பெரும் சரிவேற்பட்டது.
திருப்பெருந்துறையில் உதை
ரஷ்யாவில் ஒரு நகைச்சுவை ஒன்று இப்போது பிரபலமாகியுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளடிமீர் புட்டின், ரூபிள், மசகு எண்ணெய் விலை ஆகிய மூன்றிற்கும் உள்ள ஒற்றுமை என்ன? மூன்றும் 2015ஆம் ஆண்டு 63ஐ அடையும். அதாவது 2015இல் புட்டினின் வயது 63 ஆகும், டொலருக்கு எதிரான ரூபிளின் மதிப்பு 63 ஆகும், உலகச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை 63 டொலர்களாகும். எண்ணெய் ஏற்றுமதியில் அதிகம் தங்கியிருக்கும், 2015ஆம் ஆண்டு ரஷ்யாப் பொருளாதாரம் தாக்குப் பிடிப்பதற்கு மசகு எண்ணெயின் விலை தொண்ணூற்றி ஒன்பது டொலர்களுக்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் நிலைமை தற்போது அந்த நகைச்சுவையிலும் மோசமாகிவிட்டது. டிசம்பர் 16ஆம் திகதி மசகு எண்ணெய் விலை அறுபது டொலர்களுக்குக் கீழ் வீழ்ச்சியடைந்தது. ஒரு கட்டத்தில் டொலருக்கு எதிரான ரூபிளின் பெறுமதி எண்பதையும் தாண்டி இருந்தது. ரஷ்யப் பொருளாதாரம் எரிபொருள் உற்பத்தித் துறையில் பெரிதும் தங்கி இருக்கின்றது. இந்த எரிபொருள் பெரும் துறையின் மீது அடித்தால் ரஷ்யாவை பெரும் பாதிப்புக்குள்ளாக்கலாம் என அமெரிக்கா நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ரஷ்ய அரசும் அதன் பெரு நிறுவனங்களும் வாங்கிய வெளிநாட்டுக் கடன்களுக்கான மீளளிப்புச் சுமை தற்போது இரு மடங்காகிவிட்டது எனச் சொல்லலாம்.
ரஷ்யப் பொருளாதார வீழ்ச்சியும் பணவீக்கமும்
எரிபொருள் விலை வீழ்ச்சியை ரூபிளின் பெறுமதி வீழ்ச்சி சமாளிக்கும் என முதலில் விளாடிமீர் புட்டின் நம்பினார். தனது நாட்டு மக்களையும் நம்ப வைத்தார். ரூபிளின் பெறுமதி வீழ்ச்சி ரஷ்யாவில் பொருட்களின் விலையில் அதிகரிப்பை ஏற்படுத்தியது. உலகெங்கும் பல நாடுகள் தமது நாட்டில் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைகின்றன எனக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில் ரஷ்யாவில் நிலைமை தலை கீழாக மாறியுள்ளது. ரஷ்யாவில் பணவீக்கம் 9 விழுக்காட்டிலும் அதிகமாக உள்ளது. 2014ஆம் ஆண்டு ரஷ்யப் பொருளாதாரம் 4.5 விழுக்காடு வீழ்ச்சியடையும் என்றும் 2015ஆம் ஆண்டு 5 விழுக்காடு வீழ்ச்சியடையும் என்றும் ரஷ்ய மைய வங்கி எதிர்வு கூறியுள்ளது.
ரஷ்யாவின் அடுத்த நடவடிக்கை
ரஷ்யா தனது அடுத்த நடவடிக்கையாக நாட்டிலிருந்து மூலதனம் வெளியேறுவதைத் தடை செய்யலாம். ஆனால், பொருளாதார நிபுணர்கள் இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கின்றார்கள். அப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற செய்தி கசியும் முன்னரே நாட்டிலிருந்து பெருமளவு மூலதனம் வெளியேறிவிடும் என்கின்றனர். இதற்கு மலேசியாவில் நடந்தவற்றை உதாரணத்திற்குக் காட்டுகின்றனர். ஆனால் ரஷ்யர்கள் தமது நாணயம் உலகச் சந்தையில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது என்கின்றனர்.
முன்னை இட்ட தீ உக்ரேனிலே
ரஷ்யா மத்தியகிழக்கில் செய்யும் மிரட்டல்களுக்கு பதிலடியாக முதலில் உக்ரேனை ரஷ்யப் பிடியிலிருந்து விடுவிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டது. உக்ரேனின் பாராளுமன்ற உறுப்பினர்களை ரஷ்யாவிற்கு எதிராகத் திருப்ப அமெரிக்கா பத்து பில்லியன் டொலர்களைப் பாவித்ததாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் உலகின் தற்போதுள்ள அரச தலைவர்களில் மிகவும் திறமை மிக்கவராகக் கருதப்படும் விளாடிமீர் புட்டின், தனது காய்களை துரிதமாகவும் தீவிரமாகவும் நகர்த்தினார். இதனால் உக்ரேனின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிறிமியா 2014 மார்ச் மாதம் 18ஆம் திகதி ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது. அத்துடன் உக்ரேனின் ரஷ்யர்கள் பெரும்பான்மையினராக வாழும் கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் பிரிவினைவாதக் கிளர்ச்சி உருவானது. உக்ரேனில் புட்டீனின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் மார்ச் மாதம் 6ஆம் திகதி ரஷ்யாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்தன.
அமெரிக்காவுடன் கை கோர்த்த சவூதி அரேபியா
ரஷ்யாவை வீழ்த்த உலக எரிபொருள் விலையை விழச்செய்யும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு சவூதி அரேபியாவும் கைகொடுத்தது. ஸுன்னி முஸ்லிம் நாடான சவூதி அரேபியா, எரிபொருள் விலையை விழச் செய்வதால் ஷியா முஸ்லிம் நாடான ஈரானை வலுவிழக்கச் செய்யலாம் என உறுதியாக நம்பியது. சவூதி அரேபியாவைப் போலவே மற்ற ஸுன்னி இஸ்லாமிய நாடுகளும் தமக்கு மூக்குப் போனாலும் ஈரானுக்கு சகுனம் சரியில்லாமல் போனால் சரி என்ற நிலையில் இருக்கின்றன. சிரிய உள்நாட்டுப் போர், லிபியாவில் தொடரும் மோதல்கள், ஈராக்கில் உள்நாட்டுப் போர், ஈரானிற்கு எதிரான பொருளாதாரத் தடை ஆகியவற்றையும் தாண்டி அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் உலக எரிபொருள் விலையைத் தொடர்ந்து விழ வைத்துக் கொண்டிருக்கின்றன. வட அமெரிக்காவில் கண்டறியப்பட்ட பெருமளவு ஷெல் எரிபொருள் இருப்பும் ஒபெக் நாடுகளின் எரிபொருள் உற்பத்தி அதிகரிப்பும், பக்கவாட்டில் துளையிடும் தொழில்நுட்ப வளர்ச்சியும், எரிபொருள் உற்பத்தித் துறையில் மேற்கொண்ட அதிகரித்த முதலீடுகளும் உலக எரிபொருள் வழங்களை அதிகரித்துக் கொண்டே போகின்றன. சீனா, இந்தியா உட்படப் பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி வேகங்கள் குறைந்தமை உலக எரிபொருள் தேவையைக் குறைத்தன.
வட துருவத்திற்கு உரிமை கொண்டாடும் டென்மார்க்
வட துருவத்தில் உள்ள பனிப்பாறைகளுக்கு அடியில் எரிபொருள் வளம் இருக்கலாமென நம்பப்படுகின்றது. இதனால் வட துருவத்தைக் கொண்ட ஆட்டிக் பனிக்கடலில் ரஷ்யாவிற்குப் போட்டியாக டென்மார்க்கும் கனடாவும் உரிமை கொண்டாட்டப் போட்டியில் இறங்கிவிட்டன. 56 இலட்சம மக்களைக் கொண்ட டென்மார்க் மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மூன்றாவது பெரிய நாடான ரஷ்யாவிற்குப் போட்டியாக இறங்கியுள்ளது. இதற்கு அமெரிக்கா உட்பட்ட நேட்டோ நாடுகளின் ஆதரவு நிச்சயம் பின்புலமாக இருக்க வேண்டும். ஒன்பது இலட்சம் சதுர கிலோ மீற்றர் பனிக்கடற்பரப்பு தன்னுடையது என டென்மார்க் ஐக்கிய நாடுகள் சபையில் உரிமை கோரியுள்ளது. இது இன்னும் ஒரு முனையில் ரஷ்யாவிற்குப் பிரச்சினை கொடுக்கும் முயற்சியாகக் கருதலாம். இதே வேளை, ரஷ்யாவின் செய்மதி நாடான கியூபாவுடன் அமெரிக்கா தனது முரண்பாடுகளை நீக்கி நட்பை வளர்க்கவும் முயற்சி செய்கின்றது.
ஜேர்மனியைப் பாதிக்கும் ரஷ்யப் பொருளாதார வீழ்ச்சி
ரஷ்யப் பொருளாதாரம் உலகின் எட்டாவது பெரிய பொருளாதாரமாகும். ரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் போது அதனுடன் இணைந்து பல நாடுகளின் பொருளாதாரங்களும் பாதிப்படையும். ரஷ்யாவிற்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யும் ஜெர்மனியின் பொருளாதாரம் முதலில் பாதிப்படையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெர்மனியப் பொருளாதாரம் பாதிப்படையும்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பொருளாதாரமும் பாதிப்படையும். ரஷ்யாவின் ஏற்றுமதியில் 70 விழுக்காடு எரிபொருளாகும். உலக மொத்த உற்பத்தியில் ரஷ்யாவின் உற்பத்தி மூன்று விழுக்காட்டிலும் குறைவானதே.
அசையாத புட்டினின் செல்வாக்கும் நாடுகடந்த அரசும்
1999ஆம் ஆண்டு ரஷ்யா பெரும் நிதி நெருக்கடியைச் சந்தித்ததால் அப்போதைய ஜனாதிபதி பொறிஸ் யெல்ஸ்ரின் பதவி விலக வேண்டி ஏற்பட்டது. அதன் பின்னர் பதவிக்கு வந்த புட்டின் ரஷ்யாவின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்றார். இதை வைத்து உலக அரங்கில் ரஷ்யாவின் ஆதிக்கத்தையும் மீளக் கட்டியெழுப்ப புட்டின் முயல்கையில், ஐக்கிய அமெரிக்காவுடனும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனும் ரஷ்யாவில் ஒரு மோதல் நிலை உருவானது. உக்ரேனின் கிறிமியாவை ரஷ்யாவுடன் இணைத்ததிலிருந்து ரஷ்யாவில் புட்டினுக்கான மக்கள் ஆதரவு 85 விழுக்காட்டிலும் மேலாக அதிகரித்தது. ரஷ்யாவிற்குப் பொருளாதார நெருக்கடிகள் கொடுப்பதன் மூலம் புட்டினின் செல்வாக்கை சரிக்கலாம் என அவரது எதிரிகள் நம்புகின்றனர். புட்டின் மீது அதிருப்தி கொண்டவர்கள் உக்ரேன், ஜேர்ஜியா, மோல்டோவா ஆகிய நாடுகளிற்குத் தப்பிச் சென்று கொண்டிருக்கின்றனர். உக்ரேனில் ஒரு நாடு கடந்த அரசை இவர்கள் நிறுவலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த பதினைந்து வருடங்களாக புட்டினை எதிர்த்து வரும் ஒல்கா குர்னொசொவா என்னும் பெண் இதற்கான முன்னெடுப்புக்களைச் செய்வதாக நம்பப்படுகின்றது. இவர் உலகெங்குமுள்ள புட்டின் எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைப்பதாக நம்பப்படுகின்றது. இவர்களை அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் தம் வசமாக்கலாம் அல்லது ஏற்கனவே இவர்கள் அவர்கள் வசம் இருந்து செயற்படலாம். ஆனால் புட்டினால் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தாக்குப் பிடிக்க முடியும் எனப் பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர். ஒல்கா குர்னொசொவா புட்டினைப் பதவி இறக்கும் வாய்ப்பு 5 விழுக்காடு மட்டுமே என்கின்றார். புட்டினின் காலை ஒடிக்கும் நிலை அண்மையில் இல்லை.
வேல் தர்மா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக