செவ்வாய், 13 ஜனவரி, 2015

தூரிகையும் துப்பாக்கியும்!

 image source: google

பாரீஸ் நகரில் பிரெஞ்சு பத்திரிகை சார்லி ஹெப்டோ அலுவலகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் 12 பேர் இறந்த, கண்டனத்துக்குரிய துயரச்சம்பவம் கடந்த சில நாள்களாக உலகம் முழுவதிலும் கொந்தளிப்புடன் பேசப்படும் விவகாரமாக இருக்கிறது. கருத்துச் சுதந்திரத்தின் மீதான கோரத் தாக்குதலாகத்தான் இதை நாம் கருத வேண்டும்.



உலகம் முழுவதிலும், அரசியல்வாதிகளை கேலிச்சித்திரக்கார்கள் நையாண்டி செய்வதும், அவர்களது தவறுகளை நகைச்சுவை ததும்ப வெளிப்படுத்துவதும் புதிதல்ல. தாங்கள் விமர்சிக்கப்படுவதை சகித்துக்கொள்பவர்களும், ரசித்துச் சிரிப்பவர்களும்தான் ஜனநாயகவாதிகள். அதைப் பொறுத்துக்கொள்ளாதவர்கள் இருந்தாலும்கூட பெரும்பான்மையானவர்கள் கண்ணியமாக மௌனம் காப்பதுதான் வழக்கம்.

மிக அரிதான நேர்வுகளில் கேலிச்சித்திரக்காரர் தாக்கப்படுவதும், பத்திரிகை அலுவலகம் தாக்கப்படுவதும் தமிழகத்திலேயேகூட நடந்திருக்கிறது. ஆனால், இதுவரை யாரும் கொல்லப்பட்டதில்லை. சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகத்தில் இறந்தவர்களில் நான்கு பேர் கேலிச்சித்திரக்காரர்கள்.

ஏற்கெனவே நபிகள் நாயகம் தொடர்பான ஒரு கார்ட்டூனை வெளியிட்டு, பிரச்னைக்கு இலக்கானது சார்லி ஹெப்டோ பத்திரிகை. இந்தப் பத்திரிகை இஸ்லாத்தை மட்டுமே கேலிக்கும் விமர்சனத்திற்கும் உள்படுத்தும் பத்திரிகை அல்ல. எல்லா மதங்களிலும் காணப்படும் கருத்துகளை நகைச்சுவையும் கிண்டலுமாக விமர்சிக்கும் பத்திரிகை இது. அங்கதச் சுவையுடன் கார்ட்டூன்கள் வரைந்து வரும் சார்லி ஹெப்டோ பத்திரிகையின் கார்டூனிஸ்டுகள் இறை மறுப்பாளர்களும் அல்லர். அதனால், அந்தப் பத்திரிகையின் கார்ட்டூன்கள் யாருக்கும் எந்த மதத்துக்கும் எதிரானவை என்று கருதத் தக்கவை அல்ல.

லண்டன், பாரீஸ் நகர நாடாளுமன்ற வளாகத்திலும் உலகம் முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்களும் பத்திரிகை ஊடகங்களும் je suis charli என்ற வாசகத்துடன் குழுமி நின்று ஒன்றுபட்ட எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்கள். "வாஷிங்டன் போஸ்ட்', விமர்சனத்திற்கு உள்பட்ட அதே கேலிச்சித்திரங்களை துணிந்து மறுபிரசுரம் செய்திருக்கிறது. ஏனைய உலக நாளிதழ்கள் சில அதைப் பின்பற்ற முனைந்திருக்கின்றன.

"சார்லி ஹெப்டோ வெளியிட்ட கார்ட்டூன்களில் பலவற்றையும், நபிகள் நாயகம் மீது வரைந்தது உள்பட, உலகப் பத்திரிகைகள் அனைத்தும் வெளியிட வேண்டும் என்றும், அந்தச் சித்திரங்கள் வெறும் கேலி மட்டுமே என்பதை உலக மக்கள் புரிந்துகொள்ளவும், ஒரு பத்திரிகையை முடக்க நினைத்தால் உலகப் பத்திரிகைகள் அனைத்திலும் அந்த கார்ட்டூன் வரும், சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் என்பதை பயங்கரவாதிகளுக்குப் புரிய வைக்கவும் அதுதான் வழி' என்கிற கருத்து சரியாகத் தோன்றவில்லை. இதன்மூலம் பிரச்னை முடிந்துவிடாது.

சந்தைப் பொருளாதாரத்தில் முதல் பலி மத நம்பிக்கையாகத்தான் இருக்கிறது. மத நம்பிக்கையற்ற இளைய தலைமுறையினர் இறை நம்பிக்கை அற்றவர்களாக மட்டுமல்ல, கலாசாரம், பாரம்பரிய பழக்க வழக்கங்கள் போன்ற அனைத்தையுமே கைவிட்டுவிட்ட நிலைமை மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தலைமுறையினருக்கு கடவுள் கூட விவாதப் பொருள்தான். அவர்களை துப்பாக்கியால் மிரட்டி மாற்ற முயல்வது இயலாத விஷயம் என்பதை பயங்கரவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதுபோன்ற தாக்குதல்கள் இஸ்லாத்தை நிறுவுவதற்காகவோ, மதப்பற்று காரணமாகவோ செய்யப்படுவதாகக் கருதிவிட முடியாது. இவர்களின் நோக்கம், பொதுமக்களை இஸ்லாமியருக்கு எதிராகத் திரும்பச் செய்யவும், வெறுப்பு கொள்ளவும் செய்ய வேண்டும் என்பதாகக்கூட இருக்கும். இந்தப் படுகொலைக்கு எதிர்வினையாக பாரீஸ் நகரிலும்கூட, சில மசூதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதிகள் இத்தகைய எதிர்வினைகளைதான் விரும்புகிறார்கள். அப்போதுதான் இஸ்லாமிய சமூகத்தின் படித்த இளைஞர்களை "ஸ்லீப்பர் செல்'களாக மாற்ற முடியும் என்பதுதான் அவர்களது நோக்கம். சிறுபான்மையினராக இருக்கும் நாடுகளில் இஸ்லாமியர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாகக்கூட இதுபோன்ற தாக்குதல்கள் இருக்கக்கூடும்.

சாத்தானின் கவிதைகள் எழுதியதால் பத்ஃவா அறிவிக்கப்பட்ட எழுத்தாளர் சல்மான் ருஷ்டி எழுதிய கதை அங்கதச் சுவை மட்டுமே. அதேபோன்று, நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஓரான் பாமுக் எழுதிய, "என் பெயர் சிவப்பு' என்ற நாவல், "ஓவியக் கலை இறைவனின் படைப்பை மட்டுமே புகழ வேண்டும், அது கேளிக்கையாக மாறக்கூடாது' என்கின்ற வெறியால் நிகழும் கொலை பற்றியதுதான். நாவல் முன்வைக்கும் விமர்சனம் மதத்துக்கு எதிரானது அல்ல. அப்படியே இருந்தாலும் அதை எழுதியவரின் கருத்து என்று கருதி ஒதுக்கிவிடுவது கண்ணியமே தவிர, அதை விமர்சனமாக்குவதோ, மத உணர்வு பாதிக்கப்பட்டதாக போராட்டத்தில் இறங்குவதோ துப்பாக்கி முனையில் பதிலளிக்க முற்படுவதோ பிரச்னைக்கு விடையாகாது.

பாரீஸ் பத்திரிகை அலுவலகத்தின் மீதான கொலைவெறித் தாக்குதலும், இஸ்லாத்தை புரிந்துகொள்ளாத மதப்பற்றாளர்களால் நேரிட்டதுதான். இத்தகைய தாக்குதலால் விமர்சனங்களும், அங்கதங்களும் நின்றுவிடாது. இத்தகைய தாக்குதல்களால் பேனா முனையை முறித்துப்போட்டுவிட முடியாது. பயங்கரவாதிகளுக்கு மட்டும்தான் "ஸ்லீப்பர் செல்' கிடைக்கும் என்பதல்ல. கருத்துச் சுதந்திரம் முடக்கப்படும் எந்த மண்ணிலும், மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் "நாக்குமரம்" முளைத்துக்கொண்டேதான் இருக்கும்.

தினமணி தலையங்கம்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல