சனி, 28 பிப்ரவரி, 2015

ஒரு திருநங்கையின் திறந்த மடல்

 - லிவிங் ஸ்மைல் வித்யா

தங்களின் ஐ(ய்யே) காவியம் கண்டேன். விக்ரம் போன்ற வித்தியாச நடிப்பு வெறி கொண்டவர்களும், ஆஸ்கர் ரவிச்சந்திரன் போன்ற தயாரிப்பாளர்களின் பணவெறிக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களின், ரசிக மனோபாவத்திற்குப் பின்னுள்ள பெண்களின் மீதான பாலியல் வெறிகளுக்கும், ஹீரோயிசம் எனும் பொறுக்கித்தனங்களுக்கும், நாயக வழிபாட்டிற்கெல்லாம் தஞ்சம் தரும் ஆலயம், “a shankar film” தான் என்பதை அறியாதார் யார்?!



நியாயமான ஒரு படைப்பைப் புரிதலின்றி மததுவேசமாகச் சித்தரித்து அப்படைப்பையும், படைப்பாளியையும் பின்வாங்கச் செய்யும் அதேவேளையில்தான் உங்களின் படைப்புச் சுதந்திரத்தின் வெற்றியையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இதே மதத் துவேசத்தைக் காரணம் காட்டி டாவின்சி கோட் தடை செய்யப்பட்ட நாட்டில், இதே மத துவேசத்தைக் காரணம் காட்டி தற்காலிகத் தடை செய்யப்பட்டு, அதுவே பெரும் விளம்பர முமாகி வணிக வெற்றியும் அடைந்த விஸ்வ ரூபம் படம் வெளியானதும் இங்கேதானே.

ஆனால், தாய்நாட்டு அகதிகளான, பாலியல் வெறியர்களான, அருவெருப்பான சமூக விரோதி களான எங்களை எப்படியும் சித்தரிக்ககூடிய அருகதை கொண்ட தங்களைப் போன்ற மகா கலைஞர்களை மட்டும் யாரும் எதுவும் கூறப்போவதில்லை.

சமீபகாலமாக வலைத்தளங்களில் திரைப் படங்களைத் துவைத்துக் கிழித்துத் தொங்கப் போடும் வலைத்தள விமர்சகர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்களுக்குகூட இந்த ‘ஐ’ படம் அவர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றவில்லை என்ற ஆதங்கம்தான்.

இம்மொக்கைக் கதை, திரைக்கதையைக் கலாய்த்த அளவிற்கு திருநங்கைகளைக் காயப் படுத்தியதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை. இன்னும் கூடுதலாக ஒரு விமர்சகர் இதில் ஒரு நயன்தாரா வேறு வில்லன்..!! என்று எழுதி யிருக்கிறார்.

குறைந்தபட்சம் இந்த ஆபத்தான ரசனையை வளப்படுத்திய விதத்தில் நீங்கள் உள்ளம் குளிர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பிரம்மாண்டம், பிரம்மாண்டமான செட், பிரம்மாண்டமான கலைஞர்கள், அதிபிரம்மாண்ட மான பட்ஜெட் தாண்டி அதற்கும் மேலயும் சில விசயங்கள் இருப்பதைத் தங்களின் பிரம்மாண்ட மூளைக்கு முன் பகிர்ந்து கொள்ள இச்சிறுமதியாள் விரும்புகிறேன்.

சிவாஜி படத்தில் போகிற போக்கில் திருநங்கைகள் மீது காறி உமிழ்ந்ததை நினைத்துப் பார்க்கிறேன். சின்னக் கலைவாணர் அவர்கள் இப்பத்தான் ஆப்பரேசன் பண்ணிட்டு வந்திருக்கு என்று ஏளனமாகக் கூறியதும் சீ..சீ என்று அருவெறுப்புடன் எங்கள் சூப்பர் ஸ்டார் விலகிச் சென்றதைத் தூசி தட்டி தற்போது அதற்கும் மேல ப்ரம்மாண்டமாய் காறித் துப்பியதைத்தான் பேச விரும்புகிறேன்.

வழக்கமான நாயகன் போலவே இதிலும் விக்ரம் அவர்கள் மிக ஆண்மையுடன் வில்ல னைப் பார்த்து, முதல் பத்து நிமிடங்களிலேயே டே பொட்ட.. என்கிறார். நான் அதிர்ச்சி யடையவில்லை, நானும் என்னைப் போன்ற பொட்டைப் பிறவிகளும் தமிழ் சினிமாவின் இத்தகைய தொடர் பதிவுகளால் நன்கு பழகி யிருக்கிறோம். விக்ரம் அவர்களுக்கும்கூட இந்த வசனம் ஒன்றும் புதிதல்ல, தனக்கு மிகப்பெரிய ப்ரேக் கொடுத்த பாலா அவர்களின் சேது படத்தில்கூட டே.. இப்பிடிப் பண்ணிப் பண்ணியே ஒருநாள் நீ அஜக்காவே மாறப் போற என்று சொன்னவர்தான். அதற்குப் பிறகு இச்சொல்லாடலை அவர் பயன்படுத்தாத படங்களின் எண்ணிக்கைதான் குறைவாக இருக்கக்கூடும்.

சதுரங்க வேட்டை என்னும் சமூக அக்கறை கொண்ட படமியக்கிய திரு.வினோத் அவர்களே பொட்ட என்று சொல்லாடலை எளிதாகப் பயன்படுத்துகையில், அதனைப் பிரபல திரை விமர்சகர்களான கேபிள் சங்கர்கள் சப்பைக் கட்டுக் கட்டும்போது, உங்களிடம் மட்டும் அந்தக் கரிசனத்தை நாங்கள் எதிர்பார்க்கவா முடியும்.

அதுசரி உங்களால் பொட்டை என்று அறியப்படும் நாங்கள் உங்கள் ஆண்மைப் பராக் கிரமத்திற்கு முன் அப்படி என்னதான் குறைந்து விட்டோம்?! உள்ளம் முழுதும் பெண்மை குடி யிருப்பதை அறிந்து எம் பாலினத்திற்கு நேர்மை யாக இருக்கிறோமே அதற்கும் மேலவா உங்கள் பராக்கிரமம் சிறந்தது?

திருநங்கையாக குடும்பத் தையும், அது தரும் அரவணைப்பையும், பாதுகாப்பையும் விட்டு வெளிவர துணிச்சல் இருக்கிறதே அதற்கும் மேலவா உங்கள் பராக்கிரமம் சிறந்தது? இந்திய பிரஜைக்குரிய சகல உரிமைகளும் மறுக்கப்பட்டு தாய்நாட்டு அகதிகளாவோம் என்பதை அறிந்தும் திருநங்கை யாக குடும்பத்தை விட்டு வெளியேறுகிறோமே அதற்கும் மேலவா உங்கள் பராக்கிரமம் சிறந்தது?

பெற்றோர்களின் சொத்துசுகம் எதுவுமில்லாமல் சூன்யத்திலிருந்து எங்கள் வாழ்க்கையை நிர்கதியாகத் தொடங்கி அடுத்த வர்களைச் சாராமல் வாழ்கிறோமே அதற்கும் மேலவா உங்கள் பராக்கிரமம் சிறந்தது?

தெருவி லும், வெள்ளித்திரையிலும் உங்கள் ஆண் பராக்கிரமசாலிகள் சொல்லாலும், செயலாலும் எங்கள் மீது நிகழ்த்தும் வன்முறைகளைத் துணிவோடு எதிர்கொண்டு தொடர்ந்து செல்கிறோமே அதற்கும் மேலவா உங்கள் ஆண்மை பராக்கிரமம் வாய்ந்தது? அல்லது பொட்டைகள் சோத்தில் உப்புப் போட்டுத் தின்பதில்லை என்பது உங்களின் திண்ணமான எண்ணமா??

ஐ என்ற தலைப்பிற்கேற்ப அய்ந்து வில்லன்கள் வேண்டுமென்று யோசித்தது சரி. அதற்கும் மேலே, கதைக்களத்திற்கேற்ப அதே துறைசார்ந்த வில்லன்களாக வைத்த உங்களின் மெனக்கெடலைப் பாராட்டுகிறேன்.. அதற்கும் மேல, பிரம்மாண்டமாக, ரிச் லுக்குடன், அதேசமயத்தில் வித்தியாசமான, காமெடியான, வில்லன் வேண்டுமென, ஒரு ஸ்டைலிஸ்டாக திருநங்கையை வைத்ததையும், அதுவும் ஆதண்டிக்காக இருக்க வேண்டுமென்பதற்காக உலக அழகியையே, அழகாகக் காட்டிய நிஜ ஸ்டைலிஸ்ட் ஓஜாஸ் ரஜனியையே (எந்திரன் படத்தில் அய்ஸ்வர்யா ராயை அழகாய் காட்டி யவர் இவர்தான்.. மொழி தெரியாத அவருக்கு என்ன கதை சொல்லி நடிக்க வைத்தீர்கள் என்பது தங்களுக்கே வெளிச்சம்.) நடிக்க வைத்த தில் நிஜமாகவே நான் மெரசலாகிட்டேன்.

ஆனால், அந்தக் கீழ்த்தரமான பாத்திரத்திற்கும் அவரது நிஜப் பேரான ஓஜாஸ்யையே வைத்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் இயக்குநரே?

தான் வியக்கும், விரும்பும் அழகியாலயே இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்டைலிஸ்ட் என்று அறிமுகப்படுத்தப்பட்ட போதும், ஓஜாஸ் மீது நாயகனுக்கும், நண்பனுக்கும் அவ்வளவு கீழ்த் தரமான பார்வையேன் வருகிறது. எல்லா இன்னல்களையும் கடந்து பல திருநங்கைகள் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள்தான். ஆனாலும், அவர்கள் ஏளனத்திற்குரியவர்கள், என்பதைப் பார்க்கும் ரசிகர்கள் மனதில் உறுதியாக விதைக்கத்தானே?!. தமிழ் ரசிகர்களே திருநங்கைகளைக் கலாய்க்க, காஞ்சனா (திருநங்கைகளைச் சற்று கண்ணியமாக்கிய படம் என்றாலும், இறுதியில் அதையும் கலாய்க்கப் பயன்படுத்தும் ரசிகர்களை எண்ணி வியக்கேன்..!!) என்று அழைக்க அப்டேட் ஆகி யிருக்கும் நிலையில் ஊரோரம் புளியமரம்.. என்று பாடுவது எதனால்?

நீங்கள் எதிர்பார்த்ததைப் போலவே அந்தக் காட்சியில் ரசிகசிகாமணிகள் அரங்கம் அதிரச் சிரித்தார்கள்தான். என்ன அந்த அருவெறுப்பான சிரிப்பை மீறி, முதல்வன் படத்தில் வரும் புகழின் அம்மாவைப் போல என்னைப் போன்ற பொட்டைகளைப் பெற்ற அம்மாக்களின் கேவல்கள் உங்கள் காதை எட்டியிருக்காது.

அதெப்படி, வெறும் திரையிலும், போஸ்டர் களிலும் மட்டுமே கண்ட ஓர் அழகியை, அவள் அழகி என்பதால் மட்டுமே ஓர் ஆணழகன் காதலித்துவிட முடியும், அதுவும் உண்மையான, நியாயமான, சில்மிஷம் இல்லாத காதலாகிறது.

குற்றவுணர்வாலும், பரிதாபத்தாலும் ஒரு அழகியால், ஆணழகனைப் பரிசுத்தமாக காதலிக்க முடிகிறது. ஆனால், ஒரு திருநங்கை யின் காதல் உணர்வு மட்டும் எப்படித் தங்களுக்கு அவ்வளவு நாராசமானதாகிறது. அவள் காதல், நாயகனால் மட்டுமல்ல, நண்ப னாலும், நாயகியாலும், படத்தில் வரும் விளம்பரப் பட இயக்குநராலும் அருவெறுப்பா கவே பார்க்கப்படுகிறது.

அதாவது இப்படத்தின் இயக்குநராகிய நீங்கள் வெறுப்பதைத்தான் சூசகமாகக் கூறுகிறீர்கள் இல்லையா?

அவரை ரிச் _ -திருநங்கையாகக் காட்ட ஆரம் பத்தில் அழகான கேமரா ஆங்கிளைப் பயன் படுத்திய நீங்கள், அவரது காதல் புறக்கணிக்கப் படும் கணம் முதல் அவரை அசிங்கமாக மட்டுமே காட்டப் பயன்படுத்திய காமிரா ஆங் கிளில் அசிங்கமாகத் தெரிந்தது ஓஜாஸ் மட்டும் இல்லை, நீங்களும்தான் என்பதை உணர்ந் தீர்களா?

இவ்வளவு வரைக்குமே உங்களிடம் நாகரிக மாகத்தான் கோபம் கொள்ள நினைத்திருந்தேன். ஆனால், 9 என்ற அறையெண்ணைக் காட்டி பின் ஓஜாஸைக் காட்டிய உங்கள் அரதப்பழசான, அருவெறுப்பான விளையாட்டை எண்ணி என்னால் கெட்ட வார்த்தைகளால் வசை பாடாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில், இதே 9 என்ற சொல்தான், என் பள்ளிக்காலம் முழுதும் முள்ளாகக் குத்தி, கண்ணீர் சூழ சக மாணவர்களிடமிருந்து என்னைத் தனிமைப் படுத்தியது.

இதே 9 என்ற சொல்தான், இப்போது வரையிலும் எல்லா அற்பனும் என்னைச் சிறுமைப்படுத்தப் பேராயுதமாகப் பயன்படுத்து கிறான். அவற்றோடு கூடுதலாக சமூகம் கற்றுக்கொடுத்த கெட்ட வார்த்தைகள்தான் இப்போது என் கைவசம் இருப்பவை.

இருந்தாலும், கேபிள்சங்கர் போன்ற விமர்சன சிகாமணிகள் எனக்கு நாகரிக வகுப்பு எடுப்பார்களே என்று அஞ்சி நானாக நாகரிகமாகவே தொடர்கிறேன்.

இப்படத்தில் எந்த மிருகங்களும் துன்புறுத்தப்படவில்லை என்ற டிஸ்க்லைம ருடன் தொடங்கும் இப்படத்தில்தான், கிடைக்கும் ஒரு வாய்ப்பைக்கூட விடாமல் பாலியல் சிறுபான்மையினர் முதல், மாற்றுத் திறனாளிகள் வரை காயப்படுத்த தங்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் அளித்திருக்கிறது நமது சென்சார் போர்ட்.

அதன் தாராள மனதைக் கண்டிக்காமல் உங்களை மட்டும் கேள்வி கேட்டு என்ன பயன்?

ஒரேயொரு படத்திற்காக இத்தனை மெனக்கெடலையும், கடின உழைப்பையும், தனது நேரத்தையும் கொடுத்து மகாகலைஞனாக உயர்ந்து நிற்கும் விக்ரமிடம் இதுபோன்ற அற்பக் காட்சிகளில் நடிக்க வேண்டாமென என்னால் வேண்டுகோள்கூட வைக்கமுடியவில்லை.

ஏனெனில், அடுத்த உலகநாயகனாக வேண்டு மெனத் துடிக்கும் அவரது ஆதர்ச நாயகனான கமலும்கூட, வாசிப்பும், பகுத்தறிவும் கொண்ட நடிகரென நவீன இலக்கியவாதிகள் ஈசிக் கொள்ளும் அதே கமல்ஹாசன் அவர்களும்தான் பொட்டை என்னும் சொல்லாடலைத் தொடர்ந்து தமது படங்களிலும், அதற்கும் மேல வேட்டையாடு, விளையாடு படத்தில் திருநங்கைகளையும், சமபால் ஈர்ப்பினரையும் தனது பங்கிற்குச் சிறப்பாக மலினப்படுத்தி யிருக்கிறாரே…

உங்கள் இருவருக்கும் மட்டுமன்றி, அனைத்து நடிகர்கள், காமெடியன்கள், இயக்குநர்களுக்கும், ஒரேயொரு தகவல்.. நீங்கள் கொண்டாடும் ஆண் பராக்கிரமசாலிகள் மட்டுமே உங்கள் ரசிகர்கள் அல்ல.

உங்களால் ஏலியனாகக் கருதப்பட்டு, மலினப்படுத்தப்படும் நாங்களும் உங்களின் ரசிகர்கள்தான்.

எங்கள் வீட்டிலும் டி.வி. பெட்டி உண்டு. நாங்களும் படங்கள் பார்க்கிறோம்.

ரசிக்கிறோம், சிரிக்கிறோம், அதுமட்டுமல்ல தவறாமல் சோற்றிலும் உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறோம் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல