Minor planet 4538 Vishyanand was discovered in Toyota, Aichi Prefecture, Japan, on 10 October 1988, but has remained unnamed for almost 10 years, until now. Photo: HT
செவ்வாய், வியாழன் கிரகங்களுக்கிடையே புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறிய கிரகத்திற்கு “விஷ்யானந்த்” என பெயரிடப்பட்டுள்ளது.யார் அந்த “விஷ்யானந்த்”?
ஜப்பானை சேர்ந்த கென்சோ சுசுகி என்பவர் 1988 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி சிறிய கிரகம் ஒன்றை செவ்வாய், வியாழன் கிரகங்களுக்கு இடையில் கண்டுபிடித்தார்.
எண்களை வைத்து மட்டும் அழைக்கப்பட்டு வந்த அந்தக் கிரகத்திற்கு தற்போது “விஷ்யானந்த் -4538” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயரை தேர்ந்தெடுத்த சிறிய கிரகங்கள் ஆய்வு மையத்தின் விஞ்ஞானி மைக்கேல் ருடேன்கோ, பலரின் பெயர்களை கவனமாகப் பரிசீலித்த பின்பு தமிழ்நாட்டின் சிறந்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் அவரின் பெயரைத் தேர்ந்தெடுத்தார்.
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மயிலாடுதுறை என்ற ஊரில் விஸ்வநாதன் ஐயர் – சுசீலா ஆகிய தம்பதியினருக்கு ஆனந்த் 1969 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதி மகனாகப் பிறந்தார். விஸ்வநாதன் ஆனந்திற்கு சிவக்குமார் என்ற சகோதரனும் அனுராதா என்ற சகோதரியும் உள்ளனர். விஸ்வநாதன் ஆனந்தின் தகப்பனார் புகையிரத நிலையத்தில் பொது முகாமையாளராக பணியாற்றினார்.
விஸ்வநாதன் ஆனந்த் தனது ஆரம்பக் கல்வியை எழும்பூரிலுள்ள டொன் பொஸ்கோ பாடசாலையில் கற்றார். பின்னர் உயர் கல்வி கற்பதற்காக லயோலா கல்லூரியில் சேர்ந்தார். இவர் இளங்கலைப் படிப்பில் Bcom பட்டம் பெற்றார்.
ஒரு சதுரங்க சங்கத்தின் உறுப்பினராக இருந்த தாயார் சுசீலா, தனது மகன் ஆனந்திற்கு சிறுவயதிலிருந்தே சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொடுத்தார். ஆனந்த், டொல் என்ற சதுரங்க கிளப்பில் சேர்ந்து மேலும் பயிற்சி பெற்றார். ஆனந்த் தனது பதினான்கு வயதிலேயே 1983 ஆம் ஆண்டு தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் கலந்து சாம்பியன் பட்டம் பெற்றார்.
ஆனந்த் தனது பதினைந்தாம் வயதில் 1984 ஆம் ஆண்டில் International Master விருதினைப் பெற்றார். ஆனந்த் தனது பதினாறாம் வயதில் 1985 இல் தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் கலந்து மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றார். ஆனந்த் சிறுவயதிலேயே அதிவேகமாக சதுரங்க காய்களை நகர்த்துவதால் “மின்னல் சிறுவன்” என்று புகழப்பட்டார்.
விஸ்வநாதன் ஆனந்த் உலக சதுரங்கப் போட்டியில் உலக சாம்பியன் பட்டத்தை ஐந்து தடவைகள் (2000, 2007, 2008, 2010, 2012) வெற்றி பெற்று உலக சாதனை படைத்தார். “உலகின் அதிவேக சதுரங்க வீரர்” என்ற சிறப்பு பெயரும் பெற்றார்.
விஸ்வநாதன் ஆனந்த் 1996ஆம் ஆண்டு அருணா என்பவரை திருமணம் புரிந்தார். ஆனந்த் - அருணா தம்பதியினருக்கு 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்ப தாம் திகதி அகில் என்ற ஆண் குழந்தை பிறந்தது.
விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு 1985இல் “அர்ஜுனா விருது”, 1987 இல் “பத்மஸ்ரீ விருது”, “தேசிய குடிமகன்”, “சோவியத் லேண்ட்," "நேரு விருது”, 1991இல் “ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது”, 1992 இல் மீண்டும் “ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது”, 1998 இல் பிரித்தானிய சதுரங்க கூட்ட மைப்பின் “Book of The Year விருது”, 2000இல் “பத்மபூஷன் விருது”, 2007இல் “பத்மவிபூஷன் விருது”,
”சதுரங்க ஒஸ்கார் விருது” ஆறு முறை (1997, 1998, 2003, 2004, 2007, 2008) கிடைத்தது.
விஸ்வநாதன் ஆனந்த் சிறந்த சதுரங்க வீரர் மட்டுமல்ல வானியல் மீது அதிக ஆர்வம் கொண்ட மனிதர் என்பதனாலேயே விஞ்ஞானி மைக்கேல் ருடேன்கோ இவரது பெயரை செவ்வாய், வியாழன் கிரகங்களுக்கு இடையே புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அந்த சிறிய கிரகத்திற்கு பெயரிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சிறிய கிரகங்களுக்கு கிரிக்கெட் வீரர் டொனால்ட் பிரேட்மன், டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், அமெரிக்க தடகள வீரர் ஜெஸ்ஸி ஓவன் ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
சதுரங்க வரலாற்றில் இந்தியாவின் புகழை இறுதிக் காலம் வரை நிலைநிறுத்திய பெருமை நிச்சயம் விஸ்வநாதன் ஆனந்தையே சேரும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக