பிரான்ஸ் தலைநகர் பரிசில் தமிழர்கள் பெரும்தொகையாக கூடும் லாச்சப்பலில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.
என்ன ஐரோப்பாவிலும் தேர்தல் நடக்கிறதா என்ற கேள்வி உங்களில் பலருக்கு எழலாம். இலங்கையில் நடந்த தேர்தல் ஆரவாரங்களின் ஒரு பகுதியாகவே இவற்றை இங்கு காணமுடிந்தது. புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் அமைப்புக்கள் அனைத்தும் கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியை ஆதரிக்குமாறு அறிக்கை விட்டதுடன் பிரசாரங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.
கஜேந்திரகுமார் அணியை வெல்ல வைப்பதற்காக மாற்றத்திற்கான குரல் என்ற அமைப்பை உருவாக்கி அதற்காக பெருந்தொகை பணத்தை திரட்டி இந்த பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. கனடா, இலண்டன், ஜேர்மனி என தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
மேற்குலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழ் ஊடகங்களும் கஜேந்திரகுமார் அணிக்கே மிகத்தீவிரமாக பிரசாரங்களில் ஈடுபட்டன. லண்டனில் உள்ள தமிழ் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலி நிலையங்களின் பொறுப்பாளர்களை அழைத்த விடுதலைப்புலிகள் கஜேந்திரகுமார் அணிக்கே முழமையான ஆதரவை வழங்கமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுபவர்களை துரோகிகளாக காட்டுமாறும் உத்தரவிட்டனர்.
லண்டன், கனடா, ஒஸ்ரேலியா ஆகிய நாடுகளில் உள்ள தமிழ் தொலைக்காட்சிகள் வானொலிகள் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் உத்தரவை தலைமேல் கொண்டு தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகும் வரை செயற்பட்டன.
இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள உங்கள் உறவினர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் சின்னமான சைக்கிளுக்கு வாக்களிக்குமாறு கூறுமாறு விடுதலைப்புலிகளும் தமிழ் ஊடகங்களும் மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் மக்களை வலியுறுத்தி வந்தன.
இவர்களின் வலியுறுத்தலை சிலர் ஏற்றுக்கொண்டு தாயகத்தில் இருந்த மக்களுக்கு கஜேந்திரகுமார் தரப்புக்கு வாக்களிக்குமாறு கூறியிருந்தனர்.
தேர்தல் தினத்தன்று லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சியில் பேசிய ஒருவர் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்களுக்கு அரசியல் தெளிவு இல்லை, தாங்கள் கூறும் கருத்துக்கள் அங்கு dineshஉள்ள மக்களை சென்றடையவில்லை. அங்குள்ள ஊடகங்கள் அதனை மூடிமறைக்கின்றன. கஜேந்திரகுமார் தரப்புக்கு இலங்கையில் உள்ள ஊடகங்கள் போதிய ஆதரவை வழங்கவில்லை என குறிப்பிட்டார். அந்நபர் கஜேந்திரகுமார் தரப்பிற்காக தீவிரமான பிரசாரம் செய்பவர் என்பதை அவரின் பேச்சில் அறியமுடிந்தது.
ஓட்டுமொத்தத்தில் இலங்கையில் இருக்கும் தமிழர்கள் அரசியல் அறிவற்ற முட்டாள்கள், இதனால்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கின்றனர். அறிவாளிகளான நாங்கள் கூறும் கருத்துக்களையும் இலங்கையில் உள்ள தமிழ் ஊடகங்கள் மூடிமறைப்பதால் அரசியல் அறிவு இல்லாத முட்டாள்களாக இருக்கும் வடக்கு கிழக்கு தமிழர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரிக்கின்றனர் என்ற கருத்துப்பட பேசிக்கொண்டிருந்தார்.
இவரைப்போன்றவர்களுக்கும் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளுக்கும் அவர்களுக்காக பிரசாரத்தில் ஈடுபட்ட மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களுக்கும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தக்க பதிலை வழங்கியுள்ளனர். பதில் என்பதை விட தலையில் ஓங்கி பலமான அடி ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்.
மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் அவர்களின் ஊதுகுழல்களாக இருக்கும் மேற்குலக நாடுகளில் உள்ள தமிழ் ஊடகங்களும் தாங்கள் சொல்வதை தான் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் கேட்கவேண்டும், தங்களின் தாளத்திற்கு தான் ஆடவேண்டும் என நினைக்கிறார்கள். அப்படி ஆடாதவர்களை வரிசையில் நிறுத்தி துரோகி பட்டம் வழங்குதையே நோக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
கஜேந்திரகுமார் தரப்பு மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் தாளத்திற்கு ஆடுவதால் அவர்களை இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக காட்டுவதற்காகவே இந்த பொதுத்தேர்தலில் கடும் பிராயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர்.
2010ஆம் ஆண்டும் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பினர் கஜேந்திரகுமார் தரப்பிற்காக பிரசாரம் செய்திருந்தனர்.
அதை விட இம்முறை நடைபெற்ற தேர்தலில் பெரும் எடுப்பில் பெரும் பணச்செலவில் கஜேந்திரகுமார் தரப்பிற்காக பிரசாரங்களை செய்ததுடன் இலங்கையில் தேர்தல் பிரசாரங்களுக்காக பெருந்தொகை பணமும் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் இவை எல்லாவற்றிற்கும் தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தக்க பதிலை வழங்கியிருக்கிறார்கள். எங்கள் அரசியல் தீர்மானங்களை எடுப்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். உங்கள் தலையீடு எமக்கு தேவையில்லை என்பதை அவர்கள் மிகத்தெளிவாக கூறியிருக்கின்றனர்.
தேர்தலுக்கு சில தினங்களுக்கு முதல் யாழ்ப்பாணத்தில் உள்ள நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவர் இதனை மிகத்தெளிவாக சொன்னார். லண்டனில் இருக்கும் தனது உறவினர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சொன்னார், வெளிநாட்டிற்கு சென்ற காலம் தொடக்கம் இன்றுவரை தொலைபேசி எடுக்காதவர் இப்போது எங்களுக்கு அரசியல் சொல்லித்தருகிறார் என கூறினார்.
முடிவுகளை எடுப்பதற்கு எங்களுக்கு தெரியும், வெளிநாட்டில் உள்ளவர்கள் இதில் தலையிட தேவையில்லை என்பதே வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பாலான தமிழ் மக்களின் நிலையாகும். இதனையே அவர்கள் தேர்தலில் பிரதிபலித்துள்ளனர்.
வடக்கு கிழக்கில் யாழ்ப்பாணத்தை தவிர ஏனைய மாவட்டங்களான வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு போட்டியாக புலம்பெயர் புலிகளின் ஆதரவை பெற்ற கஜேந்திரகுமார் அணி இருக்கவில்லை, அந்த மாவட்டங்களில் போட்டியிட்ட சுயேச்சைக்குழுக்களில் ஒன்றாக ஒரு உதிரிக்கட்சியாகத்தான் கஜேந்திரகுமார் அணியை பார்த்தனர்.
ஆனால் யாழ்ப்பாணத்தில் தமிழ் சிவில் சமூகம், பல்கலைக்கழக சமூகம், வடமாகாண முதலமைச்சர் ஆகியோரின் ஆதரவு தமக்கு இருப்பதாக காட்டிக்கொண்ட கஜேந்திரகுமார் தரப்பு அம்மாவட்டத்தில் ஆகக்கூடிய ஆசனங்களை பெறுவோம், அல்லது ஆகக்குறைந்தது 3 ஆசனங்களை பெறுவோம் என்றும் சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றவர்களை தோற்கடிப்பதே தமது இலக்கு என்றும் பிரசாரம் செய்தனர். இதற்காக அவர்கள் சுமந்திரனுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் வடமராட்சி பகுதி உட்பட யாழ் மாவட்டம் எங்கும் துண்டுபிரசுரங்களையும் விநியோகித்தனர்.
தலைவர் பிரபாகரன் பிறந்த வடமராட்சி மண்ணில் துரோகி சுமந்திரனுக்கு இடம் கொடுப்பதா என துண்டு பிரசுரத்தில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
சுமந்திரனை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே பருத்தித்துறை உடுப்பிட்டி தொகுதிகளில் மிகத்தீவிரமான பிரசாரங்களை கஜேந்திரகுமார் தரப்பு மேற்கொண்டிருந்தது. வடமராட்சிகிழக்கு பகுதியில் கோழி, ஆடு, மீன்பிடி வலை போன்றவற்றை விநியோகித்து சலுகைகளை காட்டி வாக்கை பெறலாம் என்றும் எண்ணினர்.
இது தவிர சுமந்திரன், மாவை போன்றவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் மீது புதுப்புது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தார்களே ஒழிய தமது இரு தேசம் ஒரு நாடு என்ற கொள்கையை அடைவது எவ்வாறு, தமது இலக்கு என்ன என்பதை மக்களுக்கு விளக்கவே இல்லை,
விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியாக நாங்கள் வந்திருக்கிறோம், விடுதலைப்புலிகளால் நியமிக்கப்பட்டவர்கள், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கிறோம் என்றே மக்கள் மத்தியில் அவர்கள் பிரசாரம் செய்தனர்.
தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையிலேயே வெளியிட்டு வைத்தனர். அந்த கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் உண்மையான பிரதிநிதிகள் நாங்கள் தான், மற்றவர்கள் எல்லோரும் போலிகள் என்றும் கஜேந்திரகுமார் தரப்பு அறிவித்தது.
நாங்கள் தோற்றால் விடுதலைப்புலிகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தமாகிவிடும், எனவே எங்களை வெற்றிபெற செய்யுங்கள் என அவர்கள் கோரிநின்றனர்.
ஆனால் அவர்களின் கோரிக்கைகளையோ கொள்கைகளையோ மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, யாழ். மாவட்டத்தில் வெறும் 15ஆயிரத்து 22 வாக்குகளை மட்டுமே அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் பெற்றுக்கொண்டது. டக்ளஸ், தேவானந்தா, அங்கஜன், விஜயகலா போன்றவர்கள் பெற்ற வாக்குகளை கூட இவர்களால் பெற முடியாமல் போய்விட்டது. யாரை தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி நின்றார்களோ அவர்கள் அதிகப்படியான விரும்புவாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் கஜேந்திரகுமார் தரப்பால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆயிரம் வாக்குகளை கூட பெற முடியாமல் போய்விட்டது.
திருகோணமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிப்போம் என கஜேந்திரகுமார் தரப்பு பிரசாரங்களை மேற்கொண்டது. தமிழரசுக்கட்சியில் போட்டியிடுவதற்கு தனக்கு இடம்தருமாறு கோரிய முன்னாள் விடுதலைப்புலிகளின் மாவட்ட பொறுப்பாளர் ரூபன் அது கிடைக்காததை அடுத்து அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சிக்கே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். ரூபன் பிரசாரம் செய்தால் திருகோணமலையில் பெரும்பாலான தமிழர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சிக்குதான் வாக்களிப்பார்கள் என சொல்லப்பட்டது. கிராமம் கிராமமாக ரூபனும் அவரது மனைவியும் வீடு வீடாக சென்று பிரசாரத்திலும் ஈடுபட்டனர்.
ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் 1144 வாக்குகளை மட்டுமே அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியால் பெற முடிந்திருக்கிறது.
அதேபோன்றுதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் 865 வாக்குகளையும் அம்பாறை மாவட்டத்தில் 439 வாக்குகளையும் மட்டுமே அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியால் பெற முடிந்தது.
தாங்கள் விடுதலைப்புலிகளின் நீட்சியாக அல்லது அவர்களின் பிரதிநிதிகளாக வந்திருக்கிறோம், அவர்களின் கோரிக்கைகளை இலக்குகளை நோக்கியே செல்கிறோம் என்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் நாங்களே, இரு தேசம் ஒரு நாடு என்ற இலக்கை அடைய எங்களுக்கு வாக்களியுங்கள் என கோரிய கஜேந்திரகுமார் தரப்பை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்திருக்கிறார்கள்.
இதன் மூலம் இலங்கையில் உள்ள கஜேந்திரகுமார் தரப்புக்கு மட்டுமல்ல, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் பலமான செய்தியை சொல்லியிருக்கிறார்கள்.
எங்கள் தலைவிதியை நாங்களே தீர்மானிப்போம், அதில் தலையிட உங்களுக்கு உரிமை கிடையாது.
இனிமேலாவது தாயகத்தில் உள்ள தமிழ் மக்களின் இச்செய்தியை புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்களும் கஜேந்திரகுமார் தரப்பும் புரிந்து கொள்ள வேண்டும்.
( இரா.துரைரத்தினம்)
thurair@hotmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக