யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன், வியாழக்கிழமை (12) அமைதியான முறையில் காணாமல் போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதே, அவர் இவ்வாறு தெரவித்தார்.
தும்பளை ஜே - 407 கிராம அலுவலர் பிரிவில் வசிக்கின்றேன். எனது மகன் இராணுவத்தினரால் பிடித்துச் செல்லப்பட்ட பின்னர் காணாமல் போனார். அதன் பின்னர் கடந்த 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், தான் திரும்பி வருவதாக அவர் எனக்குக் கடிதம் போட்டார். ஆனால், அதன் பிறகு அவர் தொடர்பான எவ்வித தகவலும் இல்லை. பயம் காரணமாக மனித உரிமை ஆணைக்குழுவில் நாங்கள் பதிவு செய்யவில்லை என்ற அந்த தாய் கூறினார்.
மேலும், கிராம அலுவலரிடம் மாத்திரம் பதிவு செய்தோம். அவர் உடனடியாக எமது குடும்ப அட்டையிலிருந்து மகனுடைய பெயரை நீக்கிவிட்டு தந்தார். பின்னர் எனது மகன் காணாமல் போயுள்ளார் என உறுதிப்படுத்திய கடிதத்தை, கிராம அலுவலரிடம் கோரிய போது, அவர் மனித உரிமை ஆணைக்குழுவில் பதிவு செய்யவில்லையென்பதற்காக கடிதம் தர மறுத்துவிட்டார். பிரதேச செயலகமும் எவ்வித பதிவுகளையும் மேற்கொள்ளாது என்னைத் துரத்திவிட்டனர். மாவட்டச் செயலகத்திலும் மாவட்டச் செயலாளரிடம் அனைத்து விடயங்களையும் கொடுத்து வந்தேன். ஆனால் அது தொடர்பில் நடவடிக்கை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனது மகன் காணாமல் போயுள்ளமை தொடர்பில் இன்றுவரையில் எவ்வித பதிவும் இல்லை. கணவனை 22 வயதில் இழந்து மூன்று பிள்ளைகளையும் வளர்த்தேன். மூத்த மகன் ஷெல் பீஸ் தலையில் இருந்தமையால், நோய்வாய்ப்பட்டு இறந்தார். மூன்றாவது மகனே தற்போது காணாமற்போயுள்ளார் என்று அந்த தாய் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச அலுவலகங்களுக்கு இது தொடர்பில் பதிவுகள் செய்யச் சென்றால், உங்களுக்கு மட்டுமா இப்படி நடந்தது, எல்லாருக்கும் தான் இப்படி நடந்தது என்று ஏளனமாகச் சொல்வதாகவும் தன்னைப் பார்த்துச் சிரிப்பதாகவும் அந்த தாய் குற்றஞ்சாட்டியுள்ளார்.
NewTamils
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக