செவ்வாய், 17 நவம்பர், 2015

அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் யாரிடத்தில்…?- முருகபூபதி -(நேற்றைய தொடர்ச்சி)

” ஊருக்குத்தான் உபதேசமடி பெண்ணே அது உனக்கில்லையடி கண்ணே “ என்ற பாணியில் சட்டங்களும் அரசியல்கைதிகள் விவகாரமும் சமூகச்சிந்தனைகளும்

“நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்தில், நல்லவரின் தயக்கமும் தாமதமுமே தீமையாய் முடிகிறது “ என்று தமது ஹெம்லெட் நாடகத்தில் ஒரு செய்தியாகச் சொன்னவர் உலகநாடகமேதை வில்லியம் சேக்ஷ்பியர்.


இன்று இலங்கை அரசியல் கைதிகள் விவகாரமும் ஒரு நாடகத்திற்கு ஒப்பானதாக மாறியிருக்கிறது. ” வெளியே இருப்பவர்கள் அனைவரும் நல்லவரகள் அல்ல. சிறையினுள்ளே இருப்பவர்கள் அனைவரும் கெட்டவர்கள் அல்ல ” என்று சிறிதுகாலம் சிறைவாசம் அனுபவித்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் அதிகார வர்க்கமும் அரசியல்வாதிகளும் துரத்தி துரத்தி வேட்டையாட முனைந்தபோதிலும், மனம் தளராமல் துணிந்து நின்று இந்தியா திகார் சிறைக்கைதிகளை இரட்சித்த தேவதையாக திகழ்ந்த கிரண்பேடியும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் சொல்லியிருக்கிறார்கள்.

இன்று இலங்கைச் சிறைகளில் ஏற்கனவே வாடிய நிலையில் உளரீதியாகவும் உடல் ரீதியாகவும் அடைபட்டுள்ள அரசியல் கைதிகளின் வாழ்வும் நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டத்தில் இரண்டறக் கலந்துவிட்டது. அவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கினால் நன்மையா…? தீமையா…? என்று ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் பட்டிமன்றம் நடத்துகிறார்கள்.

இந்த அரசியல் கைதிகளில் எத்தனைபேர் நேரடியாக பயங்கரவாதச்செயல்களில் ஈடுபட்டவர்கள், எத்தனைபேர் சந்தேகத்தின்பேரில் கைதாகி சித்திரவதைகளின் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டவர்கள், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தெரியாத்தனமாக உணவும் உறையுளும் வழங்கியவர்கள், எத்தனைபேரிடம் சந்தேகத்திற்கிடமான தகவல்கள் இருந்தன என்பது பற்றியும் அவரவர் மனச்சாட்சிக்குத்தான் தெரியும்.

சட்டம் ஒரு இருட்டறை. அங்கு நீதிதான் ஒரு வெளிச்சவிளக்கு என்பார்கள்.

இந்தப்பின்னணியுடன் முன்னர் சிறையிலிருந்த சில முக்கிய அரசியல்வாதிகள் பற்றியும் கொலைக் குற்றச்சம்பவங்களுக்கு துணைசென்று சாதுரியமாக தப்பியவர்களையும் – வன்முறைகளில் ஈடுபட்டு பின்னாளில் அமைச்சர்களாகி போதி பூசைகளில் கலந்துகொண்ட புனிதர்களையும் எண்ணிப் பார்க்கத்தோன்றியது.

இன்று இரண்டாக மூன்றாக பிளவுபட்டிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியை ஸ்தாபித்த தலைவர்கள் ரோகண விஜேவீரா, லயனல் போப்பகே, உபதிஸ்ஸ கமநாயக்க, பொடி அத்துல லொக்கு அத்துல, மகிந்த விஜேசேகர, டி.ஐ.ஜீ. தர்மசேகர உட்பட பலர் அரசியல் கைதிகளாக வெலிக்கடை, மகஸின், கண்டி போகம்பர, யாழ்ப்பாணம், அநுரதபுரம் சிறைகளில் அடைபட்டிருந்தவர்கள்தான்.

விடுதலையானதும் மீண்டும் அரசியலில் ஈடுபட்டு தம்மை ஜனநாயக நீரோட்டத்தில் ஈடுபடுத்தினர்.

ரோகண விஜேவீரா, முதலாவது ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட்டு, சமசமாஜக்கட்சியின் வேட்பாளர் கொல்வின். ஆர். டி. சில்வாவை விட கூடுதல் வாக்குகள் பெற்றார்.

அதன்பின்னர் நடந்த மாவட்டசபைத் தேர்தலில் காலிமாவட்டத்தில் போட்டியிட்டு, காலியில் தெரிவானவர் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் லயனல் போப்பகே. இவர் காலியில் நடந்த இடைத்தேர்லிலும் போட்டியிட்டவர். ஆனைமடுவ இடைத்தேர்தலில் உபதிஸ்ஸ கமநாயக்க போட்டியிட்டார்.

பின்னாளில் மகிந்த விஜேசேகர சந்திரிகாவின் அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்தார்.

இந்தச்சம்பவங்களுக்கு முன்னோடியாக பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் கலாநிதிகள் என்.எம்.பெரேரா, கொல்வின். ஆர். டி. சில்வா முதலானோரும் அரசியல்கைதிகளாக சிறைவைக்கப்பட்டு இந்தியாவுக்கு தப்பி ஓடி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்கள்தான்.

தோழர் சண்முகதாசன், ஸ்ரீமாவின் பதவிக்காலத்தில் 1971 ஏப்ரில் கிளர்ச்சி சந்தேக நபராக சிறையில் இருந்தவர்தான்.

1959 செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி ஒரு சதிமுயற்சியால் சுடப்பட்டு, மறுநாள் 26 ஆம் திகதி உயிரிழந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் கொலைச் சந்தேகநபர்களில் ஒருவரான சமூகநலத்துறை அமைச்சர் திருமதி விமலா விஜயவர்தனா, பின்னர் சட்டத்தின் ஓட்டைகளினால் சாதுரியமாகத்தப்பி வெளிநாடு சென்று அஞ்சாதவாசம் தொடர்ந்தார்.

அவர் செல்வாக்கு மிக்க லேக்ஹவுஸ் ஸ்தாபகர் விஜயவர்தனாவின் சகோதரி.

அரசியல் காரணங்களினாலும் ஆயுதப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரிலும் முன்னர் சிறையில் இருந்தவர்கள்தான் தற்போதைய தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராஜா, பின்னாளில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் வடக்கு – கிழக்கு முதல்வர் வரதராஜப்பெருமாள் ஆகியோர்.

1983 இல் வெலிக்கடையில் சிறையிலிருந்தபோது ஆவணி அமளியில் உயிர்தப்பிய டக்ளஸ் தேவானந்தாவும் வரதராஜப்பெருமாளும் பின்னர் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டு , அங்கு சிறையுடைப்பு நடந்ததும் இந்தியாவுக்கு தப்பி ஓடியவர்கள்தான்.

இவர்கள் மீண்டும் வந்து இலங்கை அரசியல் அரங்கில் தோன்றினார்கள்.

புலிகள் இயக்கத்திலிருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் பின்னாளில் கிழக்கு மாகாண முதல்வரானார்.

புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதி கருணா அம்மான் மகிந்தரின் அரசில் நியமன அங்கத்தவராகி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் துணைத்தலைவராகவும் விளங்கினார்.

லலித் அத்துலத் முதலி என்பவர் தமது முன்னாள் மனைவிக்கு அசிட்வீசிய குற்றச்சாட்டில் சிறைவைக்கப்பட்ட ஒரு ஐக்கிய தேசியக்கட்சி பிரமுகர்.

ஆனால், இவரும் சாதுரியமாக வெளியே வந்து 1977 இல் நடந்த பொதுத்தேர்தலில் இரத்மலானை தொகுதியில் போட்டியிட்டு வென்று ஜே.ஆரின் அமைச்சரவையில் முதலில் வர்த்தக அமைச்சராகவும் பின்னர் பிரதிபாதுகாப்பு அமைச்சராகவும் பதவிவகித்தவர். ( ஜே.ஆர். தம்வசம் அந்த அமைச்சை வைத்திருந்தார்)

லலித் அத்துலத் முதலி தமது முன்னாள் மனைவிக்கு அசிட் வீசி தாக்கியதனால், அன்று தேர்தல் மேடைகளில் எதிரணியினர் அவரை அசிட் முதலி என்றும் கேலிசெய்தனர்.

ஆனால், அவர் அமைச்சரானதும் விஹாரைகளில் அரசமரங்களுக்கு போதிபூசைசெய்து பாவங்களை கழுவிக்கொண்டார்.

பின்னாளில் இவர் பிரேமதாஸவுடன் முரண்பட்டார். இருவரும் ஒரு வார காலத்தில் வேறு வேறு இடங்களில் கொல்லப்பட்டனர். பண்டாரநாயக்கா கொலைச் சந்தேக நபர்கள் இருவருக்கு தண்டனை கிடைத்தது. ஆனால், லலித் — பிரேமதாஸ கொலைக்குற்றவாளிகள் பிடிபடவேயில்லை.

லலித் அத்துலத் முதலி அஸிட்வீச்சு சம்பவத்தில் சிறையிலிருந்த காலப்பகுதியில் அவரைச்சென்று பார்த்த ஒரு தமிழ்த்தினசரியின் ஊடகவியலாளர், அவர் வெளியே வந்தபின்னரும் அவருடன் நட்புறவு பேணிக்கொண்டிருந்தார்.

லலித் அத்துலத் முதலி பிரதிப்பாதுகாப்பு அமைச்சரான பின்னரும் அவர்களுக்கிடையிலான நட்புறவு தொடர்ந்தது. இருவரும் ரூபவாஹினி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டனர்.

எனினும் அந்த நட்பின் அடையாளமாக சலுகைகள் பெற்று, அந்த ஊடவியலாளர் இலங்கையில் அரச மட்டத்தில் எங்காவது உயர்ந்திருக்கலாம். ஆனால், அவர் அவ்வாறு செய்யாமல் லலித்தின் தனிப்பட்ட தொலைபேசி எண்களை மாத்திரம் பெற்றுவைத்திருந்தார்.

என்றைக்காவது அந்த எண்கள் ஆபத்துக்கு உதவும் என்ற தீர்க்கதரிசனம் அந்த ஊடகவியலாளருக்கு இருந்தது.

பிறிதொரு சந்தர்ப்பத்தில் அந்த ஊடகவியலாளரின் நெருங்கிய உறவினர் ஒருவர் பயங்கரவாத சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் கைதாகி சிறைவைக்ககப்பட்டார்.

இவ்வேளையில் லலித் அத்துலத் முதலியின் அந்த தனிப்பட்ட தொலைபேசி எண்கள் அவருக்கு பெரிதும் உதவின.

” தனது உறவினரை எப்படியும் விடுதலை செய்து தரவேண்டும் ” என்று பிரதிபாதுகாப்பு அமைச்சர் லலித்திடம் கோரியதும், அவர் ஒரு நிபந்தனை விதித்தார். எந்தப்பிரச்சினையும் இன்றி விடுவித்து தருகின்றேன். அந்த சந்தேக நபரான அரசியல் கைதியை தாமதமின்றி ஏதாவது ஒரு வெளிநாட்டுக்கு அனுப்பிவிடவேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.

அந்த ஊடகவியலாளரும் அதற்கு சம்மதித்து, அதற்கான வேலைகளை துரிதமாக மேற்கொண்டார்.

ஒரு குற்றச்செயலுக்காக சிறையிலிருந்த வேளையில் தன்னைத் தேடிவந்து பார்த்தவருக்கு நன்றிதெரிவிக்கும் முகமாக லலித்தும் அந்த ஊடகவியலாளரின் உறவினரை தமது அரசியல் அதிகார சாமர்த்தியத்தினால் விடுவித்தார்.

அந்நபரும் ஏற்கனவே திட்டமிட்டவாறு நாட்டைவிட்டு வெளியேறி தற்பொழுது ஒரு ஐரோப்பிய நாடொன்றில் குடும்பத்தலைவனாகிவிட்டார். தற்பொழுது அவருக்கும் அவர் முன்னர் இருந்த இயக்கத்திற்கும் இடையே எந்தத்தொடர்பும் இல்லை.

பின்னர் குறிப்பிட்ட அந்த தமிழ் ஊடகவியலாளரும் இலங்கையில் எதிர்நோக்கிய அரசியல் அழுத்தங்கள் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். வடக்கில் 1987 இல் வடமராட்சியில் லிபரேஷன் ஒப்பரேஷனுக்கு உத்தரவிட்டு பல இன்னுயிர்கள் பலியாவதற்கு காரணமாக இருந்த லலித் அத்துலத் முதலியும் தென்னிலங்கையில் இன்றும் மர்மமாக இருக்கும் ஒரு அரசியல் ஒப்பரேஷனில் பரலோகம் சென்றுவிட்டார்.

2009 இறுதியுத்தத்தின் பின்னர் அதனை வெற்றிவிழாவாக கொண்டாடிய மகிந்தரும் அவருடைய தம்பி கோத்தபாய ராஜபக்ஷவும் இராணுவத்தளபதி சரத் பொன்சேக்காவும் கேக்வெட்டியும் பாற்சோறு உண்டும் மகிழ்ந்தார்கள். பின்னர் தோன்றிய முறுகளினால் வெள்ளைக்கொடி விவகாரத்தில் சரத்பொன்சேக்கா சிறைவைக்கப்பட்டார்.

விடுதலையாகியதும் மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி நன்றிக்கடனாக சரத்பொன்சேக்காவுக்கு ஃபீல்ட் மார்ஷல் பதவி உயர்வும் வழங்கியதுடன் அனைத்து வேதனக் கொடுப்பனவுளையும் (இலட்சக்கணக்கில்) வழங்கியது. மக்களின் தேவைக்களுக்கு முன்னர், முன்னாள் சிறைக்கைதி சரத்பொன்சேக்காவுக்குத்தான் நல்லாட்சி நல்லது செய்தது. இன்று சரத்பொன்சேக்காவும் ஒரு அரசியல் கட்சியின் தலைவர்.

அதேவேளையில், அரசியல்கைதியாக தொடர்ந்து சிறைவைக்கப்பட்டிருக்கும் ரகுபதி சர்மாவின் மனைவி திருமதி வசந்தி ரகுபதி சர்மாவும் சுமார் 15 வருட காலம் சிறைவைக்கப்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டார். ரகுபதி சர்மாவுக்கு நீதிமன்றம் சுமார் 30 வருட காலத்திற்கு ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது.

அப்படியானால் — சுமார் 15 வருடகாலம் அநாவசியமாக சிறைவைக்கப்பட்ட திருமதி வசந்தி ரகுபதிசர்மா குற்றமற்றவர் என்றால், அவர் சிறைவைக்கப்பட்டதற்கான நட்ட ஈடு எங்கே…?

சிறையிலிருந்து வெளியேவந்தவருக்கு ஃபீல்ட் மார்ஷல் பதவியுயர்வு. இலட்சக்கணக்கான ரூபாய்கள் வேதனம். ஆனால், அரசியலே தெரியாமல் – தனது குழந்தைகளையும் குடும்பத்தையும் பராமரித்து, கணவரின் கோயில் திருப்பணியிலும் ஈடுபட்டு வந்திருந்த நிலையில் சந்தர்ப்பவசமாக சிறைக்கூண்டில் அடைபட்ட அந்தக் குடும்பத்தலைவிக்கு 15 வருடங்களின் பின்னர் கிடைத்த நீதி என்ன…?

இதுதான் நல்லாட்சியின் அரசியல் ஜனநாயகம்.

இதனைத் தட்டிக்கேட்கக்கூடிய வழக்கறிஞர்களின் கூடாரமாகத் திகழ்வதுதானே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு. கேட்டார்களா…?

கேட்கமாட்டார்கள். இவர்களும்தானே முள்ளிவாய்க்கால் அழிவின் சுவடுகள் மறையும் முன்னர் 2010 ஜனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேக்காவை ஆதரித்தவர்கள்.

சமீப காலத்து உண்மைச் சம்பவம் ஒன்றை திரும்பிப்பார்ப்போம்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் புதல்வியும் தற்பொழுது வீடமைப்பு அமைச்சராக இருக்கும் சஜித் பிரேமதாஸவின் சகோதரியுமான துலாஞ்சலி பிரேமதாஸ மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் ஒரு வங்கியில் பல போலி வெளிநாட்டு நாணயத் தாள்களை தமது வங்கிக்கணக்கில் வைப்பிலிடச்சென்றபொழுது அங்கு தடுத்துவைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இது ஒரு குற்றச்செயல். ஆனால், அவரை சட்டத்தின் பிடியில் சிக்கவிடமல் காப்பாற்றினார் மகிந்த ராஜபக்ஷ. அதற்கு அவர் சொன்ன காரணம் துலாஞ்சலியின் தாய் ஹேமா பிரேமசதாஸவும் சஜித் பிரேமதாஸவும் தன்னிடம் கெஞ்சிக்கேட்டதனால் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டு விடுவித்தாராம்.

எப்படி இருக்கிறது கதை…?

அந்தக்குற்றச்செயல் நிரூபிக்கப்பட்டிருந்தால் இன்று துலாஞ்சலியும் சிறையில்தான்.

இன்று சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு இப்படி யாராவது தேவ தூதுவர்களாக தோன்றி உதவ மாட்டார்களா…?

யாழ்.மாவட்டத்தில் ஒரு நிதிசேமிப்பு நிறுவனத்தை நடத்தி பலரையும் மோசடி செய்த ஒரு பிரமுகர் சட்டத்தின் பிடியில் சிக்காமல் எம்.பி.யாக வலம் வருகிறார். அவருடைய குற்றச்செயலும் நிரூபிக்கப்பட்டிருந்தால் அவரும் தற்பொழுது சிறையில்தான்.

இந்ததத்தகவல்களின் பின்னணிகளுடன் இன்று சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை நாம் பார்க்கவேண்டும்.

பொதுமன்னிப்பா, பிணைவழங்கிவிட்டு வாரம் தோறும் பொலிஸ்நிலையம் முன்னால் அவர்களைத் தோன்றவைப்பதா, அல்லது தமிழினி சிவகாமிக்கு செய்ததுபோன்று புனர்வாழ்வு அளித்து நிரந்த ர விடுதலை தருவதா…? என்று அரசும் அமைச்சர்களும் சிறைச்சாலைகளின் நிருவாகத்தினரும் ஆழ்ந்து யோசிக்கிறார்கள்.

இந்த யோசனைகளில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு மற்றும் ஒரு தகவல்:

உலகில் ஆயுத உற்பத்தி

ஆயுத உற்பத்தி செய்பவர்களுக்கு தண்டணை இல்லை. அது ஒரு சர்வதேச வர்த்தகம்.

அமெரிக்காவின் ஜோர்ஜ்புஷ் குடும்பமும் அவருடைய நெருங்கிய நண்பர்கள் சிலரும் ஆயுத வியாபாரத்தில் கைதேர்ந்தவர்கள். அவர்களின் கனரக ஆயுத தொழிற்சாலைகளில் உற்பத்திசெய்யப்பட்ட ஆயுதங்களுக்கு உலக சந்தை தேவைப்படின் பல வறிய வளர்முகநாடுகளிலும் மூன்றாம் உலக நாடுகளிலும் ஏதாவது ஒரு கிளர்ச்சி தேவை. அது மத ரீதியாகவோ மொழி அடிப்படையிலோ இன ரீதியாகவோ இருந்தாலும் சரி.

அரசுக்கும் அதனை எதிர்க்கும் இயக்கங்களுக்கும் ஒரே நேரத்தில் ஆயுதங்களை விநியோகிக்கும் வர்த்தகர்கள்தான் உள்நாட்டுப்போர்களின் சூத்திரதாரிகள். இலங்கை உட்பட பல கீழைத்தேய நாடுகள் பாதுகாப்புக்கென கோடிக்கணக்கான டொலர் நிதியை வருடம்தோறும் ஒதுக்கிக்கொண்டுதான் இருக்கின்றன. அவ்வாறு நிதி ஒதுக்கினால்தான் சர்வதேச ஆயுத வர்த்தகர்களின் பிழைப்பு நடக்கும்.

இலங்கையில் போர்க்காலத்தில் இரண்டு தரப்பிலும் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் உள்நாட்டு தயாரிப்புகளா…?

உகண்டா, சோமாலியா, எதியோப்பியா முதலான வளர்முக – வறிய ஆபிரிக்க நாடுகளில் நடந்த உள்நாட்டுப் போர்களிலும் சிரியா மற்றும் பல நாடுகளிலும் தொடரும் போர்களிலும் பயன்படுத்தப்படும் ஆயுதங்களை அங்கெல்லாம் அனுப்பிக்கொண்டிருப்பவர்கள் யார்…?

இவ்வாறு ஒரு சர்வதேசக் குற்றம் பகிரங்கமாக உலகில் அரங்கேறிக்கொண்டிருக்கையில், பயங்கரவாத தடைச்சட்டத்தின்பேரில் இவர்களுக்கு எந்தத் தண்டனையும் இல்லை. சிறைவாசம் இல்லை.

நீதியே நீதான் கேட்கவேண்டும்.

நீதிமன்றங்களில் நீதி தேவதை தனது கண்களை கறுப்புத்துணியால் முடிக்கொண்டிருப்பது இதற்காகத்தானா…?

இலங்கை அரசியல் அரங்கில் இன்றைய நல்லாட்சியில் (?) நல்லவர்கள் இருப்பார்கள் என நாம் நம்பினால், ” அவர்களின் தயக்கமும் தாமதமுமே தீமையாய் முடிந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது “ என்ற சேக்ஷ்பியரின் கூற்றையே அவர்களுக்கும் பொருத்தமானதாக அழுத்திச் சொல்கின்றோம்.

ezhanaadu

அரசியல்கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் யாரிடத்தில்….?- முருகபூபதி (Part1)
—0—
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல