ஜனநாயகம் என்ற விடயதானத்திற்குள் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் உள்வருகின்ற போது அதற்கு சார்பாகவும் கருத்து வெளியிட்டார் என்பதே மிகைப்படுத்தப்படாத மதிப்பீடாகும். இவர் போல எல்லோருக்கும் உண்மையான ஞானம் கிடைத்திருந்தால் இந்நாட்டில் பிரச்சினைகள் என்றோ தீர்க்கப்பட்டிருக்கும். ***
இனவாதிகள் உறைநிலையில் இருக்கின்ற பின்னணியில், ஜனநாயக விரும்பி ஒருவரின் வெற்றிடம் தமது எதிர்காலம் எவ்வாறிருக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆளுமையையும் வரலாறு ஒவ்வொரு விதமாக பதிவு செய்து வைக்கின்றது. ஹிட்லரையும், முசோலினியையும், இடி அமீனையும், சேகுவேராவையும், அன்னை தெரேசாவையும், இளவரசி டயானாவையும், மாவீரன் நெப்போலியனையும், பிடல் கஸ்ரோவையும், மைக்கல் ஜக்சனையும். சரித்திரக் குறிப்புக்கள் ஒரே மாதிரியாக நினைவில் வைத்துக் கொள்வதில்லை.
ஒவ்வொரு நபரும் இந்த உலக வாழ்வின் எச்சங்களாக எவற்றையெல்லாம் விட்டுச் செல்கின்றார்களோ அதைக் கொண்டுதான் அவர்கள் பற்றிய தோற்றப்பாடும் சரிதமும் இனிவரும் தலைமுறைகளுக்கு கடத்தப்படுகின்றது. அந்த வகையில், உள்நாட்டு ஆளுமைகள் பற்றிய குறிப்புக்களில் இறுதியாக சோபித தேரரின் மரணமும் எழுதப்பட்டிருக்கின்றது.
சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவரும் கோட்டே நாக விகாரையின் விகாராதிபதியுமான சங்கைக்குரிய மாதுலுவாவே சோபித தேரர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் மரணமானார். பின்னர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட அவரது பூதவுடல் இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது. எத்தனையோ அரசியல்வாதிகள் இறந்திருக்கின்றார்கள், எத்தனையோ பௌத்த துறவிகள் மறைந்திருந்திருக்கின்றார்கள், எத்தனையோ சமூக சீர்திருத்தவாதிகள் காலமாகி இருக்கின்றார்கள். ஆனால் அண்மைக்காலத்தில் யாருக்குமில்லாத துக்கத்தை சோபித தேரரின் மறைவுக்கு இலங்கை மக்கள் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
மக்களின் அனுதாபம்
சோபித தேரர் மரணித்த செய்தியை வெறும் செய்தியாக இந்நாட்டு மக்கள் எடுத்துக் கொள்ளவில்லை. நமக்குத் தெரிந்த ஒருவர் மரணித்துவிட்டதாக குறிப்பிட்டு அவசரமாக அனுப்பப்பட்ட ஒரு தந்திபோல கருதினர். அரசாங்கம் பூரண அரச மரியாதையுடன் தேரரின் இறுதிக் கிரியைகளை நடத்த ஏற்பாடு செய்தது. இறுதிக் கிரியைகள் நடைபெறும் தினம் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இவரது மரணம் குறிப்பாக சிறுபான்மை மக்களை வெகுவாக பாதித்திருக்கின்றது என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் வெள்ளைக் கொடிகளும் கபில நிறக் கொடிகளும் பறக்க விடப்பட்டன. சுவரொட்டிகள் பதாகைகள் தொங்கவிடப்பட்டன. முன்னொருபோதும் இல்லாதவாறு, எந்தவொரு முஸ்லிமோ அல்லது தமிழனோ இதை எதற்காக செய்கின்றீர்கள் என்று விதண்டாவாதம் பேசவில்லை. மாறாக, ஆயிரக்கணக்கான முஸ்லிம்களும் தமிழர்களும் தேரரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். தேரரிற்கு இந்த அளவிற்கு சிறுபான்மை சமூகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதையும் அன்னாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வருகின்றவர்களுக்காக முஸ்லிம்கள் தானம் வழங்குவதையும் சிங்கள ஊடகங்கள் வெகுவாக படம் பிடித்துக் காட்டியுள்ளன. சமூக நல்லிணக்கத்திற்கு இது நல்லதொரு எடுத்துக்காட்டு என்று சிலாகித்து செய்தி வெளியிட்டுள்ளன.
ஆனால் ஒரு அரச தலைவனுக்கு இல்லாத மதிப்பும் மரியாதையும் துக்கம் அனுஷ்டித்தலையும் சோபித தேரருக்கு வழங்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? என்று எழுகின்ற கேள்விக்கு அவர் ஒரு ஜனநாயக விரும்பி என்று சுருக்கமாக பதிலளித்து விட முடியும். அதாவது, இலங்கையின் கடந்த 40 வருட அரசியலில் ஜனநாயகம் என்று தான் கருதியதை செய்வதற்காக மிக சாதுர்யமாகப் போராடிய ஒரு பௌத்த துறவி. இதில் கடைசிப் பத்து வருடங்களில் பொதுவாக நாட்டு மக்கள் விடயத்தில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டவர். குறிப்பாக கடந்த 5 வருடங்களில் சிறுபான்மை சமூகங்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்க வேண்டுமென்பதற்காக முற்போக்கு அடிப்படையில் செயற்பட்டவர் என்பதே அவருடைய வகிபாகத்தை விளக்குவதற்கு போதுமானது.
மாதுலுவாவே சோபித தேரர் அல்லது இவர் போன்ற ஒரு பௌத்த துறவியின், ஜனநாயக விரும்பி ஒருவரின் செயற்பாடுகள், சமகாலத்தில் வாழ்ந்த சிறுபான்மை மக்களின் இருப்பிலும் வாழ்விலும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றது என்பது வெள்ளிடைமலை. அந்த வகையில், இவர் போன்ற ஒரு முற்போக்கு சிந்தனையாளனின் வெற்றிடம் என்பது எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம்களின் ஜனநாயக ரீதியிலான அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் எவ்விதமான தேக்க நிலையை ஏற்படுத்தப் போகின்றது என்பது பற்றியே சிந்திக்க வேண்டியுள்ளது.
1942 இல் பாதுக்க பிரதேசத்தில் பிறந்த இவருடைய இயற்பெயர் பத்திரகே டொன் ரத்னசேகர. 11 வயதில் துறவு வாழ்க்கைக்கு நுழைந்த பிற்பாடுதான் அவர் மாதுலுவாவே சோபித்த தேரர் ஆகின்றார். ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 25 வருடங்களாக பௌத்த சமயப் பணிகளிலேயே இவர் ஈடுபட்டிருந்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி 1956 இல் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட போதே அரசியல் மீதான ஈடுபாடு தனக்கு ஏற்பட்டு விட்டதாக அவர் பின்னர் ஒரு தடவை சொல்லியிருந்தார். சிங்கள பெரும்பான்மையைக் கொண்ட ஒரு நாட்டில், ஆட்சிச் சூழல் ஒன்றின் முன்னகர்வு எவ்வாறிருக்கின்றது என்பதை ஒரு பௌத்த மதகுரு உன்னிப்பாக அவதானிப்பது சாதாரணமானது. ஆயினும் அவர் பின்வந்த காலத்தில் அதையும் தாண்டி செயற்பட்டார் என்பதே உண்மை.
தொடர்ச்சியான வகிபாகம்
தேசிய அரசியலில் பல தசாப்தங்களாக சோபித தேரர் ஏதாவது ஒரு அடிப்படையில் செல்வாக்குச் செலுத்தி வந்தார் என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பிட்டுச் சொல்வது என்றால், 1977 இல் ஜே.ஆர். ஜயவர்தன ஜனாதிபதியாக வருவதற்கு திரைமறையில் உழைத்த சோபித தேரர், ஜே.ஆரின் ஆட்சியில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சிவில் உரிமைகள், சட்டம் மற்றும் ஒழுங்கு நடைமுறைப்படுத்தல் என்பவற்றை வலியுறுத்தி குரல் எழுப்பி வந்தார். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை தேரர் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. அயல்நாடான இந்தியாவின் ஆதிக்கம் சிங்களத் தீவில் அதிகரித்துவிடும் என்று பயந்தார். எனவே அதற்கெதிராக வீதிப் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்களுள் இவர் முக்கியமானவர்.
இவ்வாறான பின்னணியில் ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சியில் அதிருப்தி அடைந்திருந்த சோபித தேரர் அவரது ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து, ரணசிங்க பிரேமதாசாவை ஜனாதிபதியாக்குவதற்கு முன்னின்று செயற்பட்டார். உண்மையில் பிரேமதாச குடும்பத்துடன் மிக நெருக்கமான உறவை இவர் கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது. பிரேமதாச குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட பிற்பாடு அவரது துணைவியாரான ஹேமா பிரேமதாசவை ஜனாதிபதியாக்குவதற்கு ஒரு தரப்பினர் முயற்சி செய்தனர். இவ்வணியில் சோபித்த தேரரும் உள்ளடங்கியிருந்ததாக அப்போது பேச்சடிபட்டது.
ஆனால், இத்திட்டங்களை உய்த்தறிந்து கொண்ட அப்போதைய ஓய்வுநிலை ஜனாதிபதியான ஜே.ஆர். ஜயவர்தன, சபாநாயகர் எம்.எச்.முகம்மதுவுக்கு சில ஆலோசனைகளை வழங்கியதுடன் சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு கயிற்றைக் கொடுத்தார். இதன்படி மேலும் காலதாமதமின்றி பாராளுமன்றம் கூட்டப்பட்ட வேளையில். டீ.பி. விஜயதுங்க ஜனாதிபதியாக பிரேரிக்கப்பட்டு நியமிக்கப்பட்டதாக ஒரு தனிக்கதை உள்ளது.
அதன் பிறகு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சியமைப்பதற்கும் சிங்கள தேசத்தின் முக்கியமான பௌத்த மதகுரு என்ற அடிப்படையில் சோபித தேரரும் பங்களிப்புச் செய்திருந்தார். சந்திரிகா அம்மையாரின் ஆட்சியில் பிரதமராக யாரை நியமிப்பது என்ற சிக்கல் வந்த போது மஹிந்த ராஜபக் ஷவை சிபாரிசு செய்தவர்களுள் இவரும் ஒருவர் என்று கூறப்படுகின்றது. இது உண்மையாக இருந்தாலும், மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி ஆட்சிக்காலம் முடிவடைவதற்கும், அவரது ராஜ கனவுகளை சிதறடிப்பதற்கும் முக்கிய காரணியாக இருந்தவரும் அதே சோபிததேரரே என்பது அடிக்கோடிட்ட வார்த்தைகளால் எழுதப்பட வேண்டியது.
அதாவது இன்று நாம் எல்லோரும் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற நல்லாட்சியின் காரணகர்த்தாக்களுள் ஒருவரே மாதுலுவாவே சோபித்த தேரர். கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் - பின்னான சில வருடங்களில் அவர் மேற்கொண்ட ஜனநாயக ரீதியான முயற்சிகளே, இன்றைய சமூதாயம் இவரை சிலாகித்துப் பேசுவதற்கும் இவரது மறைவுக்காக இத்தனை தூரம் துக்கம் கொண்டாடுவதற்கும் காரணம் என்று குறிப்பிட முடியும்.
மஹிந்த ஆட்சிக்கு முடிவு
மஹிந்த ராஜபக் ஷவின் இரண்டாவது ஆட்சிக்காலம் எப்படி இருந்தது என்பதை இன்னும் யாரும் மறந்துவிடவில்லை. பல்லாண்டு காலமாக ஒரு மகாராஜாவைப் போல ஆட்சியில் நிலைத்திருக்க வேண்டும் என்ற கனவை அவர் கொண்டிருந்தார் என்பதற்கு பின்னாளில் பல அத்தாட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவ்வாறு நீடித்து நிலைத்திருப்பதற்கு மஹிந்தவும் அவருடைய சகாக்களும் சில கருவிகளை ஏற்பாடு செய்திருந்தன என்று சொல்லலாம். அது இல்லாவிட்டால் இதனைக் கொண்டு ஆட்சியை நிலை நிறுத்தலாம் என்ற அடிப்படையில் ஒரு சில மாற்று ஏற்பாடுகளை மஹிந்த கூட்டணி செய்திருந்தது. இனவாதமும் அதில் ஒன்று என்பது. அதற்கு ராஜபக் ஷாக்கள் வழங்கிய மறைமுக ஆசீர்வாதத்தில் இருந்து புலப்படுகின்றது.
இனவாதமும் கடும்போக்கு சக்திகளும் சிறுபான்மை இனங்களின் மத அடையாளங்கள் மீதும் தனியுரிமை மீதும் கைவைத்தன. இதற்கு பெரிதும் இலக்காகியது முஸ்லிம் மக்களே. ஹலால் சான்றிதழ் ஒழிப்பு, அபாயா கட்டுப்பாடு என ஆரம்பித்த இனவாதத்தின் ஒடுக்குமுறை அளுத்கம கலவரத்தில் தன்னுடைய ஒட்டுமொத்த கோர முகத்தையும் காட்டி நின்றது. அது போதாது என்று இந்து மற்றும் கிறிஸ்தவ மக்களின் வழிபாட்டுத் தலங்களும் இலக்குவைக்கப்பட்டன. சிங்கள இனவாதத்தின் அபத்தங்களைக் கண்டு உண்மையான பௌத்த மக்களே வெட்கித் தலைகுனிந்தனர். சிலர் முகம் சுழித்தனர், சிலர் குரல் எழுப்பினர்.
அவ்வாறு குரல் எழுப்பியவர்களுள் வட்டரக்க தேரர் போலவே சோபித தேரரும் முக்கியமானவர். பௌத்தத்தை அவர் ஆதரித்தாலும், கடும்போக்குவாதத்தை கடைசி கட்டத்தில் வெறுத்தொதுக்கினார். முஸ்லிம்களுக்கு நடக்கின்ற அநியாயங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்று ஒரு சமயம் குறிப்பிட்டார். முன்னைய அரசாங்கத்துடன் நெருக்கத்தை கொண்டிருந்த பொது பலசேனா, ராவண பலய போன்ற அமைப்புக்களும் பௌத்த துறவிகளில் ஒரு பிரிவினரும் கடும்போக்கு பௌத்தர்களும் இந்நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கும் போது, அதற்கெதிராக காவியுடை தரித்த ஒருவர் நிற்பது என்பது லேசுபட்ட காரியமல்ல. இதுவே வேறு யாராக இருந்தாலும் அவரது விதி வேறுமாதிரி முடிந்திருக்கும். ஆனால் சோபித தேரர் விடயத்தில் அவர் உடுத்தியிருந்த காவியுடையும் அவரது சமூக அந்தஸ்தும் இவ்வாறான நிலைமையிலும் அவரை காப்பாற்றியது.
ஆட்சியை கையிலெடுப்பதற்காக பண்டாரநாயக்க இனவாதத்தை கையிலெடுத்தார் என்பது வரலாறு. ஆனால் அவர் அதிலிருந்து சற்று விலகிச் செல்வதாக இனவாதிகள் எப்போது கருதினார்களோ அப்போதே அவர் இலக்கு வைக்கப்பட்டுவிட்டார். உண்மையாகச் சொன்னால் அவர் வளர்த்த இனவாத சிந்தனைதான் பிக்கு ஒருவரின் வடிவில் துப்பாக்கி ஏந்தி அவரைச் சுடுவதற்காக வந்திருந்தது. அதுவே மஹிந்த ஆட்சிக்கும் நடந்தது. இனவாதமே அவரது ஆட்சிக்கும் உலை வைத்தது என்பதை உலகறியும்.
மாற்றத்தை நிகழ்த்தியவர்கள் மக்கள் என்றாலும், மாற்றம் ஒன்று நிகழவேண்டும் என்பதற்கு வித்திட்டவர்களுள் முக்கியமானவர் இந்த சோபித்த தேரர். ஆட்சியாளர்கள் ஆட்சி பீடம் ஏற்றுவதற்கு பங்களிப்புச் செய்து விட்டு பின்னர் அவர்கள் சரியில்லை என்று கருதும் போது ஆட்சியை மாற்றுவதற்கான வேலைகளில் ஈடுபடுபவர் என்று கருதப்படக் கூடிய இவர், மஹிந்த விடயத்திலும் அதனைச் செய்தார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமனம் உள்ளடங்கலாக 19ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கும் அதேபோல் நல்லாட்சி சூழலை கட்டியெழுப்புவதற்கும் ஆட்சிமாற்றம் ஒன்று தேவை என்று ஆரம்பத்தில் சொன்னவர் சோபித்த தேரர் ஆவார்.
ஒரு கட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளராக சோபித்த தேரர் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர், அமெரிக்கா, பாகிஸ்தான், இந்தியா போன்ற சில நாடுகளின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் முடிவின்படி பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படக் கூடிய இரண்டு மூன்றுபேரில் சோபித்த தேரரும் உள்ளடங்கியிருந்தார். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் காய்நகர்த்தலில் சுதந்திரக் கட்சிக்காரரான மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது, தேரர் அதனை நேரிய மனதுடன் ஏற்றுக் கொண்டார்.
பல வருடங்களாக ஆட்சி உருவாக்கத்திலும் ஆட்சியை மாற்றுவதிலும் ஈடுபாடுகொண்ட சோபித தேரர் விரும்பியிருந்தால், மைத்திரிபால சிறிசேனவை நிராகரித்திருக்கலாம். பௌத்த இனவாதத்தை கையிலெடுத்து வேறு விதத்தில் ஆட்சியைப் புரட்டிப்போடும் முயற்சியில் இறங்கியிருக்கலாம். ஆனால், அவர் அதைச் செய்யவில்லை. தான் எதிர்பார்க்கும் ஜனநாயக நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு பொருத்தமான எவரையும் ஆட்சியில் ஏற்றுவதற்கு அவர் தயாராக இருந்தார். ஆனால் ஐக்கிய தேசிய முன்னணியுடன் ஒப்பந்தம் செய்தே தேர்தலில் ஆதரவளித்தார். நாட்டில் நல்லாட்சி உருவானது. 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கும் இன்னபிற வாக்குறுதிகளை செய்து முடிப்பதற்கும் அழுத்தம் கொடுத்தார். இவ்வாறான விடயங்களுக்காகவே மாதுலுவாவே சோபித தேரர் சிறுபான்மை மக்களால் நன்றியுணர்வோடு நோக்கப்படுகின்றார். இது நல்லதொரு சமிக்ஞையே. அதுமட்டுமன்றி நல்லவர்களை மதித்தால்தான், இனவாதிகளை விமர்சிக்க முடியும்.
நமது எதிர்காலம்?
ஆனால், அடிப்படையில் அவர் சிறுபான்மை மக்களின் நலன்களில் அக்கறை கொண்டவர் என்றோ அல்லது தமிழ், முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் என்றோ குறிப்பிடுவது மிகைப்படுத்தப்பட்ட புகழ்ச்சியாகவே இருக்கும். ஏனென்றால், இது சிங்கள பௌத்த நாடு. அவர் ஒரு பௌத்த துறவி. எனவே இயல்பாகவே சில பண்புகள் தவிர்க்க இயலாதவை. அந்தவகையில் பெரும்பான்மை இனத்தை முதன்மைப் படுத்திய போக்கையே சோபித தேரர் ஆரம்பத்தில் கொண்டிருந்ததாக ஒரு மாற்றுக் கருத்தும் இருப்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்..
எவ்வாறிருப்பினும், அவரது வயது முதிர்ச்சியும் அரசியல் பற்றிய அனுபவமும் அவரை சில விடயங்களில் பக்குவப்பட வைத்திருந்தன என்று சொல்லலாம். அதாவது சிறுபான்மை மக்களை புறக்கணித்து விட்டு இந்த நாட்டில் ஜனநாயகத்தையே நல்லதொரு ஆட்சிச் சூழலையோ ஏற்படுத்த முடியாது என்ற நிலைப்பாட்டிற்கு அவர் வந்திருக்க வேண்டும். கடைசிக் காலத்தில் சிறுபான்மை மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக அவர் குரல் கொடுத்ததில் இருந்து இதனை அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. இன்னும் அழுத்தமாகச் சொன்னால், ஜனநாயகத்திற்காக போராடுபவராக அவர் இருந்தார். ஜனநாயகம் என்ற விடயதானத்திற்குள் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் உள்வருகின்ற போது அதற்கு சார்பாகவும் அவர் கருத்து வெளியிட்டார் என்பதே மிகைப்படுத்தப்படாத மதிப்பீடாகும். அதேபோல் இவர் போல ஞானம் எல்லோருக்கும் கிடைத்திருந்தால் இந்நாட்டில் பிரச்சினைகள் என்றோ தீர்க்கப்பட்டிருக்கும்.
சரி, இனி மாதுலுவாவே சோபித தேரர் இல்லை. அவரது இடைவெளியை யாராலும் நிரப்பிவிட முடியாது என்று அனுதாபப்படுகின்ற சிறுபான்மை மக்கள், இதற்குப் பிறகு தம்முடைய எதிர்காலம் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை சிந்திக்க வேண்டியிருக்கின்றது.
இவரது மரணத்தால் முழு நாடுமே அழுவது போல ஒரு தோற்றப்பாடு இருந்தாலும், ஜனநாயக விரோதிகளும், கடும்போக்குவாதிகளும் இவரது வெற்றிடத்தை எவ்வாறு நோக்குகின்றார்கள் என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களின் அபிலாஷைகள் என்ன? எந்தெந்த விடயத்தில் நீதியும் ஜனநாயகமும் நிலை நாட்டப்பட வேண்டும் என்பதை பெருமளவிலான சிங்கள மக்களும் பௌத்த மதகுருமாரும் அறிவார்கள் என்பது உண்மையே. ஆனால், கொதித்தெழக்கூடிய இனவாத செயற்பாட்டாளர்கள் உறைநிலையில் இருக்கின்ற ஒரு நாட்டில் மாதுலுவாவே சோபித தேரர், வட்டரக்க தேரர் போன்று எத்தனை சிங்கள ஆளுமைகள் இனிமேல் சிறுபான்மை மக்களுக்காக குரல் கொடுக்கப் போகின்றன என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.
தமிழர்களும் முஸ்லிம்களும் தங்கள் தங்கள் இனங்களுக்குள்ளேயே பல பிரிவுகளாக ஆக்கப்பட்டுள்ளதுடன், இரு இனங்களுக்கும் இடையில் இன்னும் நல்லிணக்கம் முழுமையாக ஏற்படவில்லை என்பதே நிதர்சனமாகும். இவ்வாறு இரு சிறுபான்மை இனங்களும் தங்களுக்கு இடையில் ஒற்றுமையை பலப்படுத்தாதிருக்கின்ற ஒரு சூழலில், பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை மக்களுடன் இணைந்து செயற்படும் என்றும் சிங்கள தேசியவாதிகள் சிறுபான்மையினருக்காக குரல்கொடுப்பார்கள் என்றும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடியாது. சோபித தேரர் அல்லது அவர் போன்ற ஆளுமைகள் மரணிக்கின்ற போது இந்த வெற்றிடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது என்று கண்ணீர்விட்டு அழுகின்றவர்கள், இந்த வெற்றிடம் எவ்வாறு உருவானது? அதனை எவ்வாறு நிரப்பலாம்? என்று இனிவரும் காலங்களிலாவது சிந்திக்க வேண்டும்.
ஜனாதிபதியும் பிரதமரும் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்கள் என்று சிறுபான்மை சனங்கள் இருப்பது, பொறுப்பற்ற தனமாகும்.
ஏ.எல்.நிப்ஹாஸ்
வீரகேசரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக