அதனைக் காதலின் நகரம் என்றும் கூறுவார்கள். அழகியலின் உச்சத்தைத் தொட்ட புராதனக் கட்டடங்கள். செவிக்கினிமை தரும் பிரெஞ்சு மொழி. நடுத்தெருவில் தயக்க மின்றி முத்தமிட்டு அன்பை வெளிப்படுத்தும் காதல் சிட்டுக்கள்.
பிரான்சின் தலைநகர் பாரிஸ். அதில் வெள்ளிக்கிழமை இரவு என்றாலே கொண்டாட்டம். ஆடல், பாடல், நாடகம், சினிமா என்று கலைகளின் கொண்டாட்டம் ஒருபுறம். ஒருவார கால உழைப்பின் சலிப்பை ஓரங்கட்டச் செய்யும் விளையாட்டுப் போட்டிகள் மறுபுறம்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவும் அவ்வாறு தானிருந்தது. நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்து, துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படும் வரை. அதற்குள் எல்லாம் மாறியிருந்தது. காதல் நகரம் மரணங்களின் நகரமாக மாறியது.
இசை நடன நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்காக பற்றக்லான் அரங்கில் திரண்டிருந்த பார்வையாளர்கள். பிரான்ஸ், ஜேர்மனி அணிகளுக்கு இடையிலான நட்புறவு காற்பந்தாட்ட போட்டியைப் பார்வையிட Stade de France மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள்.
பற்றக்லான் அரங்கிற்குள் பிரவேசித்த ஆயுதபாணிகள் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தார்கள். புகழ்பெற்ற மைதானத்திற்கு வெளியே குண்டுகள் வெடித்தன. இவை தவிர, நகரின் சிற்றுண்டிச்சாலைகள் சிலவற்றிலும் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.
அழகியலுக்கும், அன்புக்கும் பேர் போன காதல் நகரம். அதற்கு போதாத காலம் போலும். 2015ஆம் ஆண்டை ஆயுத வன்முறைகளுடன் வரவேற்ற பாரிஸ் நகரம், கடந்த வெள்ளிக்கிழமை மிகவும் மோசமான தாக்குதலை சந்தித்தது.
ஜனவரியில் சார்ளி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் உள்ளிட்ட மூன்று ஸ்தலங்கள் தாக்குதலுக்கு இலக்காகின. இந்த வன்முறைகள் மூன்று நாட்கள் நீடித்தன. இவற்றில் மொத்தமாக 16 பேர் வரை கொல்லப்பட்டார்கள்.
கடந்த வெள்ளியன்றும் நூற்றுக்கணக்கான மரணங்கள். இந்தக் கட்டுரை எழுதப்படும் சமயம் வரை 150 பேர் வரை மரணித்திருந்தார்கள். இருந்தபோதிலும், பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென சர்வதேச ஊடகங்கள் ஹேஷ்யம் வெளியிட்டன.
நபி பெருமானாரின் உருவப் படத்தை கேலிச் சித்திரமாக வரைந்து, இஸ்லாத்தை இழிவுபடுத்தியமைக்காக சார்ளி ஹெப்டோ அலுவலகத்தைத் தாக்கியதாக அல்கொய்தாவுடன் தொடர்புடைய அமைப்பொன்று கூறியிருந்தது.
பற்றக்லான் அரங்கு உள்ளிட்ட ஸ்தலங்கள் மீதான தாக்குதல்களின் நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது சிரியாவில் செய்த கொடுஞ்செயலுக்கு பதிலடி என ஆயுதபாணிகள் உரத்துக் கூறியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தீர விசாரிக்காமல் தாக்குதலை நடத்தியவர்கள் யாரென ஹேஷ்யம் கூறுவது பொருத்தம் அற்றது. எனினும், இதில் இஸ்லாமிய கடும்போக்கு அமைப்புக்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பரவலாக நீடிக்கிறது.
இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் பிரதமர் பிரன்சுவா ஹொல்லந்தே பேசியுள்ளார். தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர், பயங்கரவாதிகள் பற்றி பிரஸ்தாபித்தார். இவர்கள் யார் என்பதை அறிவோம் என்றும் கூறினார்.
பிரான்ஸின் சமீபத்திய வன்முறைகளை ஆராயும் பட்சத்தில், இவ்வாண்டு நிகழ்ந்த தாக்குதல்களுடன் 2005ஆம் ஆண்டு பாரிஸ் புறநகர்ப் பகுதியில் நிகழ்ந்த கலவரத்தையும் மறந்து விட முடியாது.
பிரான்ஸிற்கு புலம் பெயர்ந்த முஸ்லிம்களின் இரண்டாம் தலைமுறையச் சேர்ந்த இளைஞர்களும், பிரெஞ்சுப் பொலிஸா ருக்கும் இடையிலான கலவரம் பாரிஸ் நகரைக் கொழுந்து விட்டெரியச் செய்தது.
இந்த சம்பவம், பாரிஸ் நகரிலுள்ள புலம்பெயர் சிறுபான்மை சமூகத்தவர்கள் மீது தீவிர வலதுசாரிகள் கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியை கிளர்ந்தெழச் செய்தது. சார்ளி ஹெப்டோ தாக்குதல் அதனை தீவிரப்படுத்தியது. இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்லாமிய கடும்போக்குக் குழுக்கள் நாசகாரச் செயல்களில் ஈடுபடக் கூடுமென புலனாய்வு அமைப்புக்கள் எச்சரித்திருந்தன. எனினும், இந்தளவு மோசமான தாக்குதலை எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
பிரெஞ்சுப் படைகள் வெளிநாடுகளில் ஜிஹாத் குழுக்களுக்கு எதிராக முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கை புதியது அல்ல. ஆபிரிக்காவின் வட பிராந்தியம் தொடங்கி, அரேபிய வளைகுடா வரையிலான பிராந்தியங்களில் பிரெஞ்சுப் படைகள் உள்ளன.
2013ஆம் ஆண்டு மாலியை மையமாகக் கொண்டு பிரெஞ்சு விமானங்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வந்தன. இந்தத் தாக்குதல்களில் இஸ்லாமிய அமைப்புக்களைச் சேர்ந்த பலர் பலியாகியிருந்தார்கள்.
ஈராக்கில் இஸ்லாமிய இராச்சிய இயக்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் இராணுவ நடவடிக்கையிலும் கடந்தாண்டு பிரெஞ்சுப் படைகள் இணைந்தன. இவ்வாண்டு சிரியாவில் நடத்தப்படும் தாக்குதல்களிலும் பிரான்ஸ் இணைந்து கொண்டது.
இஸ்லாமிய இராச்சிய இயக்கம் இலக்கு வைக்கும் ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸும் ஒன்றாகும். இந்த இயக்கத்துடன் இணைந்து போரிடுவதற்காக பிரான்ஸைச் சேர்ந்த பலரும் சிரியாவிற்கு சென்றிருக்கிறார்கள்.
ஐ.எஸ். உடன் இணைந்து கொண்டவர்களில் பிரான்ஸில் பிறந்தவர்கள் மாத்திரமன்றி, அங்கு கல்வி கற்றவர்களும் உள்ளனர். இஸ்லாத்தைத் தழுவியவர்களும் இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இணையத்தைப் பயன்படுத்தி பிரெஞ்சு முஸ்லிம்கள் மத்தியில் கடும்போக்குவாதத்தை தூண்டும் தந்திரோபாயங்களையும் காணலாம். முன்னைய வன்முறைகளில் சம்பந்தப்பட்ட சில இளைஞர்கள், இத்தகைய கடும்போக்குமயவாத வலையில் சிக்கியவர்கள் தான்.
ஒரு புறத்தில் இஸ்லாமிய கடும்போக்குவாதிகளின் ஊடுருவல். மறுபுறத்தில் வரும் தீவிர வலதுசாரிகளின் செல்வாக்கு. இவையிரண்டும் எதிரெதிர்த் திசையில் வேகமாக வளர்ந்து வருவதால் இன்று பிரெஞ்சு சமூகம் பாதுகாப்பற்றதாக மாறியிருக்கிறது.
வலதுசாரிகளின் அரசியல் ஆதிக்கத்தில் தாம் உரிமைகளை இழக்க நேரிடும் என பிரான்சில் வாழும் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தவர்கள் கருதுகிறார்கள். தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும் அவர்கள் எண்ணுகிறார்கள். மறுபுறத்தில், இன்று பிரான்ஸின் சகல பிரச்சினைகளுக்கும் இஸ்லாமிய குடியேறிகளின் ஆதிக்கம் தான் காரணமென வலதுசாரிகள் பிரசாரம் செய்து வருகிறார்கள். இஸ்லாமிய சமூகத்தால் பிரான்ஸ் பாதுகாப்பற்றதாக மாறியிருக்கிறது என அவர்கள் கூறுகிறார்கள்.
சார்ளி ஹெப்டோ தாக்குதலைத் தொடர்ந்து பாடசாலைகள், ரயில் நிலையங்கள் முதலான பொது இடங்களிலும் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டார்களாயின், அதற்குக் காரணம் கடும்போக்கு சக்திகள் குறித்த அச்சம் தான்.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதல்கள் நன்றாகத் திட்டமிடப்பட்டவை எனத் தெரிகிறது. இந்தத் தாக்குதல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன என்பதைக் கவனிக்கலாம். தெரிவு செய்யப்பட்ட இலக்குகளையும் அவதானிப்பது அவசியமாகிறது.
காற்பந்தாட்ட மைதான தாக்குதலை உதாரணமாகக் கூறலாம். இதற்கு அருகில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட சமயம், ஜனாதிபதி பிரான்சுவா ஹொல்லந்தே மைதானத்தின் பார்வையாளர் அரங்கில் இருந்திருக்கிறார்.
தமது தாக்குதல்கள் பிரெஞ்சு மக்களை பீதியில் உறையச் செய்து, அவர்களை இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிராக கிளெர்ந்தெழ நிர்ப்பந்திப்பது தாக்குதலை நடத்தியவர்களின் நோக்கமாக இருந்திருக்கலாம்.
பிரெஞ்சு சமூகத்தில் தாம் ஓரங்கட்டப்படுகிறோம் என்ற உணர்வலை தோன்றும் சமயத்தில், இங்கு வாழும் இஸ்லாமியர்களை இலகுவாக தமது வலைக்குள் சிக்க வைத்து விடலாம் என்பதை கடும்போக்குக் குழுக்கள் நன்கறியும். இதன்மூலம் பிரான்ஸில் வாழும் இஸ்லாமியர்களை பிரெஞ்சு அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் இறங்கச் செய்யலாம். இவர்களைக் கூடுதலாக சிரியாவிற்குள் கவர்ந்திழுக்கவும் முடியும் என்பதை கடும்போக்கு குழுக்கள் அறிந்து வைத்துள்ளன.
தற்போதைய தருணத்தில் பிரெஞ்சு சமூகத்தின் கட்டுக்கோப்பான தன்மையைப் பாதுகாக்க வேண்டுமானால், பிரான்ஸின் அரசியல்வாதிகள் இரண்டு விடயங்களை செய்வது அவசியமாகிறது.
வெள்ளிக்கிழமை தாக்குதலால் பிரெஞ்சு சமூகத்தில் விளைந்த ஆவேச உணர்வலைகள் இஸ்லாமிய சிறுபான்மை மக்களுக்கு எதிராக திரும்பி விடாமல் பாதுகாப்பது முதலாவது தேவையாகும்.
இந்தத் தாக்குதலை நடத்திய சக்திகளின் நோக்கம், பிரெஞ்சு சமூகத்தை சீர்குலைத்து, அதன் மூலம் அரசியல் இலாபம் பெறுவது தான் என்பதை முறையான விதத்தில் நாட்டு மக்கள் மத்தியில் விளக்கிக் கூறுவது இரண்டாவது விடயமாகும்.
சதீஸ் கிருஷ்ணபிள்ளை
வீரகேசரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக