திங்கள், 21 டிசம்பர், 2015

குழந்தைகளின் நிர்வாணம்

அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் வசிக்கும் நிக்கோல் எல்லிஸூக்கு நாற்பது வயதாகிறது. சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறாள். அவள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அக்கம்பக்கத்தவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. பதறியவர்கள் இணையத்தில் துழாவு துழாவென துழாவியிருக்கிறார்கள். அப்படியென்ன குற்றச்சாட்டு அது?



ஆயிரக்கணக்கான குழந்தைகளின் ஆபாசப் படங்களை எல்லிஸ் சேகரித்து வைத்திருந்ததாக கைது செய்திருக்கிறார்கள். சுற்றுவட்டாரக் குழந்தைகளில் ஆரம்பித்து வெளிநாட்டுக் குழந்தைகள் வரை ஏகப்பட்ட தராதரங்களில் பிரித்து அடுக்கி வைத்திருக்கிறாள். அவற்றை இணையத்திலும் பகிர்ந்திருக்கிறாள். ‘அவளிடம் நம்முடைய குழந்தையின் படமும் இருக்கிறதோ என்னவோ’ என்ற பதற்றத்தில்தான் அக்கம்பக்கத்தவர்கள் தேடியிருக்கிறார்கள். எல்லிஸ் செய்து கொண்டிருந்தது குழந்தைகளுக்கு எதிரானதொரு மிகப்பெரிய பாலியல் வன்முறை. உலகம் முழுக்கவும் தம்மைப் போலவே குழந்தைகள் மீதாக காம உணர்வு கொண்டவர்களுடன் இணையவழித் தொடர்பில் இருப்பது, அவர்களுக்கு தம்மிடமிருக்கும் படங்களை அனுப்பி வைப்பது, அவர்களிடமிருந்து படங்களைப் பெற்றுக் கொள்வது, தெரிந்த குழந்தைகளை வைத்து ஆபாசப்படங்களை எடுப்பது என்று மிகப்பெரிய நெட்வொர்க்கை நடத்திக் கொண்டிருந்தவள் அவள். தன்னோடு தொடர்பில் இருப்பவர்களிடம் குழந்தைகளை எப்படியெல்லாம் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று வகுப்பெடுத்து அதை வீடியோவாக்கித் தரச் சொல்லி அதையும் சேகரித்து வைத்திருக்கிறாள்.

நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. மனித மனம் சிக்கலாகிக் கொண்டேயிருக்கிறது. குழந்தையை வெறும் குழந்தையாக மட்டும் பார்க்கிறார்கள் என்று எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாத சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இங்கு எல்லாமே வெறும் சதையாக மாறிக் கொண்டிருக்கிறது. அது குழந்தையின் சதையாக இருந்தாலும் சரி; வயது வந்தவர்களின் சதையாக இருந்தாலும் சரி. தமக்கென எந்த வரையறையுமில்லாமல் அந்தச் சதைகளை ருசிக்க விரும்புபவர்கள் பெருகிக் கொண்டேயிருக்கிறார்கள். பெங்களூரில் சில மாதங்களுக்கு முன்பாக விப்ஜியார் என்ற பிரபல பள்ளியில் ஆறு வயது பெண் குழந்தையை ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான். அதே பள்ளியில் வேலை செய்யும் ஒருவன்தான் இதைச் செய்திருக்கிறான். வழக்கம்போலவே ஊடகங்கள் பரபரபாக்கின. ஒரு வாரம் பத்து நாட்களுக்கு போராட்டங்களை நடத்தினார்கள். பள்ளிக்கு சீல் வைக்கச் சொன்னார்கள். அதையெல்லாம் இந்தியாவில் எதிர்பார்க்க முடியுமா? கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க வேண்டியதைக் கொடுத்திருப்பார்கள் போலிருக்கிறது. பள்ளி வழக்கம்போலவேதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்தச் சமயத்தில் பலாத்காரத்தைச் செய்தவன் அளித்திருந்த வாக்குமூலம்தான் அதிர்ச்சியடைச் செய்தது. ‘இணையத்தில் இருக்கும் வீடியோவைப் பார்த்துவிட்டு இதைச் செய்தேன்’ என்றிருக்கிறான். இணையம் இப்பொழுது எல்லோருக்கும் எல்லாத் துறைகளிலும் ஆசிரியர் ஆகிவிட்டது. வெடிகுண்டு தயாரித்தவனிலிருந்து வன்புணர்வு செய்பவன் வரை அத்தனை பேரும் இணையத்திலிருந்துதான் கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.

அமெரிக்காவிலும் பெங்களூரிலும்தான் குழந்தைகளுக்கு எதிரான சம்பவங்கள் நடைபெறுகின்றன என்று சொல்ல முடியாது. பொள்ளாச்சியிலிருந்தும் கூடத்தான் செய்கிறார்கள். சமீபத்தில் பத்தொன்பது வயது பொள்ளாச்சிப் பையன் ஒருவனைக் கைது செய்திருக்கிறார்கள். டிப்ளமோ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் முடித்துவிட்டு கையையும் கண்ணையும் வைத்துக் கொண்டு சும்மா இல்லாமல் சிறுவர் சிறுமிகளின் படங்களை- நிர்வாணப்படங்களை- இணையத்தில் மேய்ந்திருக்கிறான். மேய்ந்த படங்களை செல்போனில் சேகரித்திருக்கிறான். அதோடு நிறுத்தினால் தப்பியிருப்பான். ‘இதெல்லாம் நான் பார்த்த படங்கள்...நீங்களும் பாருங்க’ என்று ஃபேஸ்புக்கில் குழந்தைகளின் நிர்வாணப்படங்களுக்கென ஒரு பக்கத்தைத் தனியாக உருவாக்கி அந்தப் பக்கத்தில் இவற்றை வெளியிட்டுவிட்டான். இதை பார்த்து பதறியவர்கள் ஒரு தொண்டு நிறுவனத்தின் வழியாக புகார் அளிக்க, சிபிசிஐடி காவலர்கள் விசாரணையை நடத்திவிட்டு புழல் சிறையில் அமர வைத்திருக்கிறார்கள்.

இந்தக் கோயமுத்தூர் பையன் முதல் போணி இல்லை. இவன் சிக்குவதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பாக இதே போன்றதொரு வழக்கில் திருப்பதியில் ஒருவனை வளைத்தார்கள். அதற்கு சில நாட்களுக்கு முன்பாக வடக்கத்திக்காரன் ஒருவன். இப்படி குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்தவர்கள் வரிசையாக உள்ளே செல்வதைப் பார்க்கும் போது பயமாக இருக்கிறது. சிக்கியவர்களின் எண்ணிக்கையே வாயைப் பிளக்கச் செய்கிறது என்றால் இன்னமும் திருட்டுத்தனமாக ஒளிந்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்? அவர்கள் சேகரித்து வைத்திருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும்? இப்படிச் சிக்குகிற ஒவ்வொருவரும் தங்களது கணினியிலும் மொபைலிலும் பென் டிரைவிலும் நூற்றுக்கணக்கான படங்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். அத்தனையும் குழந்தைகளின் படங்கள். நம் தெருவிலும், ஊரிலும் விளையாடிக் கொண்டிருக்கிற குழந்தைகளின் படங்கள். நம் வீட்டுக் குழந்தைகளின் படங்களும் அவற்றில் அடக்கமா என்று தெரியாது. ‘இருக்காது’ என்கிற நம்பிக்கையுடன் இருப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.

வயது வந்த மனிதனுக்கு எதிர்பாலின ஈர்ப்பு உண்டாவதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆணுக்கு ஆண் மீதும் பெண்ணுக்கு பெண் மீதும் உண்டாகும் சுயபால் ஈர்ப்பு என்பதையும் கூட புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறோம். ஆனால் குழந்தைகள் மீது ஏன் பாலியல் உணர்வு உண்டாகிறது? உளவியல் ரீதியாக பலவித விளக்கங்களைச் சொல்கிறார்கள். ஒரு குழந்தையின் எதிர்காலத்தையே புரட்டிவிடக் கூடிய இந்த பாலியல் அத்து மீறல்களுக்கு இந்தச் சமூகமும் ஒருவிதத்தில் துணைபோகிறது என்பதுதான் கசப்பான உண்மை. இங்கு தனிமனிதனின் உணர்ச்சிகளைத் தூண்டும்விதமாகத்தான் புற உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. சாலைகளில் வைக்கப்படும் மிகப்பெரிய பதாகைகளிலிருந்து திரைப்படம் தொலைக்காட்சிகள் அச்சு ஊடகங்கள் என திரும்பிய பக்கமெல்லாம் கசமுசா படங்களாக நிரப்பி ஒருவனது அக உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றன. தூண்டப்படும் அத்தனைவிதமான உணர்வுகளுக்கும் மனிதமனம் வடிகால்களைத் தேடத் தொடங்குகிறது. அதில் காம உணர்வு மட்டும் விதிவிலக்கன்று. கோபத்தை எதிர்படுபவர்களிடம் காட்டுகிறோம். சந்தோஷத்தை வெளிப்படுத்திவிடுகிறோம். துக்கத்தையும் யாரிடமாவது கொட்டி விடுகிறோம். ஆனால் காமத்தை? பெரிய ரிஸ்க் இல்லாத ஆட்களை மனம் நாடுகிறது. வெளிப்படுத்தினால் எதிர்ப்பு காட்டாத இலக்குகளை நாடுகிறார்கள். அப்பேற்பட்டவர்களுக்கு குழந்தைகள் எப்பொழுதுமே soft target. தங்கள் மீது அத்துமீறல்கள் நடக்கின்றன என்பதே அவர்களுக்கு முழுமையாகத் தெரியாது என்பது முதற்காரணம். அப்படியே தெரிந்தாலும் வெளியில் சொல்லுமளவுக்கு அவர்களிடம் தைரியமில்லை. சொல்ல எத்தனிக்கும் போது ‘வெளியில் சொல்லக் கூடாது’ என்று குழந்தைகளை மிரட்டி விட முடியும்.

இப்படி குழந்தைகள் மீதான ஈர்ப்பை வளர்க்கத் தொடங்குபவர்கள் அதன் நீட்சியாக குழந்தைகளின் படங்களை பார்க்கத் தொடங்குகிறார்கள். அவற்றைச் சேகரிக்க ஆரம்பிக்கிறார்கள். இணையம் அவர்களுக்கு மிகப்பெரிய சந்தையாக மாறியிருக்கிறது. ஒரே விநாடியில் பல லட்சக்கணக்கான படங்களை திரட்டிக் கொண்டு வந்து கொட்டுகிறது. ‘இது பார்த்தாச்சு..அடுத்தது என்ன?’ என்று மனம் ஆர்பரிக்கிறது. அவர்களிடம் வசமாக செல்போன் மாட்டியிருக்கிறது. அதுவும் அட்டகாசமான கேமிரா பொருத்திய செல்போன்கள். யாருக்குமே தெரியாமல் குழந்தையின் படங்களை எடுத்துவிட முடிகிறது. அப்படியே யாராவது பார்த்தாலும் குழந்தைகளைத்தான் படம் எடுக்கிறான் என்று விட்டுவிடுவார்கள். இப்படி செல்போன்கள் வழியாக எடுக்கப்படும் நிழற்படங்கள்தான் முதல் ஆபத்து. இது வெறும் பாலியல் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமில்லை. பணமும் விளையாடுகிறது. குழந்தைகளின் மீதான காம உணர்வு கொண்டவர்கள் விதவிதமான படங்களாக இணையத்தில் தேடுகிறார்கள். அவர்களின் பசிக்கு சோளப்பொறி போடும் விதமாக குழந்தைகளின் ஆபாச படங்களை விற்கும் ஆட்களும் இணையத்தில் உலவுகிறார்கள். குழந்தைகளின் நிர்வாணப்படங்களை விற்பனை செய்வது, குழந்தையின் முகத்தை மட்டும் கத்தரித்து வேறொரு ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ இணைத்து இணையத்தில் விற்பது என்று விதவிதமாகக் காசு கொழிக்கிறார்கள்.

ஒரு பக்கம் கொந்தளிக்கும் உணர்வுகள், இன்னொரு பக்கம் செல்போன் கேமிரா, இணையம் என்ற கைகளில் இருக்கும் சகலவசதிகள். இந்த காம்பினேஷனால் எதைச் செய்கிறோம் என்கிற முழுமையான புரிதல் இல்லாத விடலைகள் கூட இத்தகைய செயல்களைச் செய்கிறார்கள். தாங்கள் எடுத்த நிழற்படங்களை முகம் தெரியாத மனிதர்களிடம் பகிரத் தொடங்குகிறார்கள். அவன் இன்னொருவனுக்கும் இன்னொருவன் அடுத்தவனுக்கும் என்று அனுப்பத் தொடங்க சில மணி நேரங்களில் கணக்கிலடங்காதவர்கள் பார்த்துவிடுகிறார்கள்.. இப்படி ஆளாளுக்கு பகிரத் தொடங்கும் போது மிகப்பெரிய நெட்வொர்க் ஒன்று உருவாகிறது. லட்சக்கணக்கான குழந்தைகளின் கோடிக்கணக்கான நிழற்படங்கள் இணையத்தில் தவறான கண்களால் பார்க்கப்படுகின்றன. தவறான மனங்களால் ரசிக்கப்படுகின்றன. தவறான உணர்வுகளால் சிதைக்கப்படுகின்றன. உலகம் முழுவதிலும் லட்சக்கணக்கானவர் இப்படி வெறியெடுத்துத் திரியும் காலத்தில் சான்பிரான்ஸிஸ்கோவிலும் திருப்பதியிலும் பொள்ளாச்சியிலும் அங்குமிங்குமாக செய்யப்படும் கைதுகளால் எந்த மாற்றத்தையும் உருவாக்கிவிட முடியாது. வக்கிர மனங்களிலிருந்து நம் குழந்தைகளைக் காக்கும் மிகப்பெரிய பொறுப்புணர்வு நமக்கு இருக்கிறது. குழந்தைகளின் களங்கமில்லாத புன்னகையைக் காக்கும் கடமை நமக்கிருக்கிறது. வாட்ஸப்தானே, ஃபேஸ்புக்தானே என்று எதைப் பற்றியும் யோசிக்காமல் நாம் பகிரும் நம்முடைய குழந்தைகளின் படங்கள் நமக்கே தெரியாமல் களவாடப்பட்டிருக்கலாம். நமக்கே தெரியாமல் உருமாற்றப்பட்டிருக்கலாம். நமக்கே தெரியாமல் யாரிடமெல்லாமோ பகிரப்பட்டிருக்கலாம். இந்த இணைய உலகம் பெரியவர்களுக்கு மட்டும் ஆபத்தானதில்லை. குழந்தைகளுக்கும்தான்.

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய தொடர்)
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல