செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

நாலாம் மாடிக்கு அழைத்துச்செல்லப்பட்டேன்…எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப்ப… (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -30)

சாதாரண உடையணிந்த இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பலர் குழுமியிருந்த ஒரு பெரிய அலுவலக அறையொன்றினுள் அழைக்கப்பட்டேன். பெரிய சுவரொட்டி போன்ற பேப்பர் ஒன்றை அதிகாரி ஒருவர் என்னிடம் காண்பித்தார்.



அதில் இயக்கத் தலைவர் உட்பட அனைத்துத் தளபதிகள், துறைசார்ப் பொறுப்பாளர்களின் புகைப்படங்களும் அச்சுப் பதிக்கப்பட்டிருந்தன.

அவற்றின் மீது பல அடையாளங்கள் இடப்பட்டிருந்தன. அதிலே இருந்த எனது புகைப்படத்தை அவர் குறிப்பிட்டுக் காட்டினார்.

வரிச் சீருடையும் தொப்பியும் அணிந்திருந்த என் புகைப்படத்தின் மீது கேள்விக்குறி போடப்பட்டிருந்தது. அதிகாரிகள் பலர் என்னிடம் தமிழிலும் சிங்களத்திலும் பல கேள்விகளைக் கேட்டனர்.

எனக்குச் சிங்கள மொழி கொஞ்சமும் புரியவில்லை. நான் எதுவும் பேசாமல் நின்றேன். அதன்பின்பு தமிழ்த் தெரிந்த ஒரு அதிகாரி என்னிடம் கதைத்தார்.

உங்கட தலைவர் பிரபாகரனுக்கு என்ன நடந்தது?”, “நீங்க அவரை கடைசியாக எப்போ சந்திச்சது?”, “தளபதிகளில சிலபேர் செத்துப் போய்ட்டாங்க மத்தாக்களுக்கு என்ன நடந்ததெண்டு தெரியுமா? நீங்க எப்படி உள்ளுக்கு வந்தது?”

எனப் பலதரப்பட்ட கேள்விகளை என்னிடம் வினவினார்கள். அவர்களுடைய எந்தக் கேள்விக்கும் என்னால் தெளிவான பதில் கூற முடியவில்லை.

ஏனென்றால் கடைசி நாட்களில் எவருடைய தொடர்புகளும் எனக்குக் கிடைத்திருக்கவில்லை. தங்களுக்கிடையே சிங்களத்தில் என்னவோ பேசிக்கொண்டார்கள்.

பின்பு என்னை அழைத்துச் செல்லும்படி கூறப்பட்டது. இரவு உணவு பார்சல் ஒன்றும் சிறிய தண்ணீர்ப் போத்தல் ஒன்றையும் எனக்குத் தந்தார்கள். அங்கிருந்த கதிரையில் அமர்ந்து அந்த உணவை உண்ணும்படி கூறினார்கள்.

அப்போது ஒரு பிடி உணவைக்கூட உண்ணக்கூடிய மனநிலை எனக்கு இருக்கவில்லை. பின்பு சாப்பிடுவதாகக் கூறி அந்த உணவுப் பொதியைப் பெற்றுக்கொண்டேன்.

எம்மை ஏற்றிக்கொண்டு வந்த அதே பஸ்ஸில் மீண்டும் ஏற்றப்பட்டு வவுனியா பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டேன். அங்கு போலிஸார் எனது விபரங்களை எழுதிக்கொண்டனர்.

அதன்பின் பெண் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த மிகச் சிறிதான ஒரு கம்பிக் கூட்டுக்குள் நானும் அடைக்கப்பட்டேன். அங்கு ஏற்கனவே மூன்று பெண்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.

ஒரு வயோதிப சிங்களப் பெண் வார்டன் அங்கிருந்த சிமெண்ட் பெஞ்சில் படுத்திருந்தார்.

எனது வாழ்வில் முதல் தடவையாக ஒரு சிறைக் கூட்டினுள் அடைக்கப்பட்டிருந்தேன். படுப்பதற்குத் தயாராக இருந்த அந்த மூன்று பெண்கள் எனக்கும் இடம் ஒதுக்கித் தந்தார்கள்.

நான் என்ன வழக்குக்காக வந்திருக்கிறேன் என விசாரித்தார்கள். எல்.டி.டி.ஈ எனக் கூறினேன். “எங்க வைச்சு பிடிச்சவங்கள்” எனக் கேட்டார்கள்.

“எப்பிடியெண்டாலும் உங்கள கொழும்புக்குத்தான் கொண்டுபோய் விசாரிப்பாங்கள். நான் போனமுறை இங்க இருக்கேக்க இப்பிடித்தான் ஒரு பிள்ளையைக் கொண்டுவந்து அடுத்த நாளே கொழும்புக்குக் கொண்டு போட்டாங்கள்.

நீங்கள் நல்ல லோயரைப் பிடிச்சு வழக்காடி வெளியில வரலாம்” என எனக்கு ஆலோசனையும் தரத் தொடங்கினார்கள்.

சாதாரண கிராமப் பெண்களான இவர்கள் இப்படியான சட்ட நடைமுறைகளையெல்லாம் இலகுவாக அறிந்து வைத்திருந்தது மட்டுமல்லாமல் அடிக்கடி போலிஸ் சிறைக்கு வந்து போவதையும் வழக்கமாகவும் கொண்டிருந்தார்கள் என்பதை நினைத்துப் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

வன்னியில் சண்டை நடக்கிறது என அறிந்து வைத்திருந்தார்களே தவிர, தற்போதைய நிலவரம் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. தாங்கள் விடுதலையானவுடன் தமது எதிராளிகளை எப்படியெல்லாம் பழிவாங்க வேண்டுமென ஆக்ரோஷமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களின் உரையாடலிலிருந்து அடிபிடி வழக்கிற்காகவும் மற்றும் கள்ளச் சாராயம் காய்ச்சிய வழக்கிலும் வந்திருப்பது புரிந்தது. அந்த இரவு நேரத்திலும் வாய் நிறைய வெற்றிலையைக் குதப்பிக் கொண்டிருந்தார்கள்.

உடலும், மனதும் களைத்துப் போயிருந்த அந்த நிலைமையில் நான் சுவரோரமாக முடங்கிக்கொண்டிருந்தேன். கண்கள் தூங்கி விழுந்தபோதும் பதற்றமான விழிப்பு ஏற்பட்டது.

மனம் படபடவென அடித்துக்கொண்டது. நள்ளிரவு கடந்த நிலையில் திடீர் பரபரப்புடன் கதவு திறக்கப்பட்டு மேலும் மூன்று பெண்கள் உள்ளே தள்ளப்பட்டனர்.

கதவு மீண்டும் அடைக்கப்பட்டது. அங்கு கொண்டுவரப் பட்டிருந்தவர்களைக் கண்டதும் நான் அதிர்ந்து போனேன். அவர்கள் எனக்கு நன்கு பரிச்சயமானவர்கள்.

சோதியா படைப்பிரிவின் நிர்வாகப் பணிகளில் செயற்பட்டவர்கள். “நீங்கள் புனர்வாழ்வு நிலையத்திற்கு அல்லவா அனுப்பப்பட்டீர்கள், பின்பு என்னவாயிற்று?” என ஆதங்கத்துடன் கேட்டேன்.

அங்கே ஆயிரக்கணக்கில் ஆட்கள் வந்துகொண்டிருக்கின்ற காரணத்தால், சரியான சத்தமும் நெருக்கடியுமாக இருந்ததாகவும் சில பிள்ளைகள் மத்தியில் வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட்டதாகவும் தாங்கள் பிரச்சனையைச் சமாளிப்பதற்காகக் கதைக்கப்போனபோது கட்டாய ஆட்சேர்ப்பில் இணைக்கப்பட்ட ஒரு இளம் பெண் சத்தமாகப் பேசித் தம்மை அடிக்க வந்ததாகவும் பிரச்சனை பெரிதாகிவிட்டதை, அறிந்த இராணுவத்தினர் தங்களை இங்கே அனுப்பிவிட்டதாகவும் கூறினார்கள்.

இனித் தங்களுக்கு என்ன நடக்கப் போகிறதோ என மிகுந்த குழப்பம் அடைந்திருந்தார்கள். காலை விடிந்ததும் குளிப்பதற்காக இரண்டு பேராக வார்டன் கூட்டிச் சென்றார்.

அவரால் நியமிக்கப்பட்ட நேரத்திற்குள் அங்கிருந்த ஒரேயொரு நீர்க்குழாயில் வடிந்துகொண்டிருந்த குறைவான நீரில் குளித்து மாற்றி உடுப்பதற்காக என்னிடம் இருந்த ஒரேயொரு சட்டையை அணிந்துகொண்டேன்.

காலை உணவாகச் சோறும் சம்பலும் பார்சலாகத் தரப்பட்டது.

என்னிடமிருந்த நேற்றைய உணவுப் பார்சலை எவருக்கும் தெரியாது குப்பை வாளியினுள் வீசியபோது, மனம் வருந்தியது. முள்ளிவாய்க்காலில் மக்கள் கஞ்சிக்காக நீண்ட வரிசையில் நின்ற நினைவுகள் மனதை எரித்தன.

வயிற்றுப் பசி சாப்பிடத் தூண்டினாலும் மன இறுக்கம் தொண்டைக் குழியினை அடைத்துக்கொண்டிருந்ததால் ஒருபிடி உணவுகூட உள்ளே இறங்க மறுத்தது.

சற்று நேரத்தில் சோதியா படைப்பிரிவுப் பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டார்கள். தம்மை வேறு ஒரு புனர்வாழ்வு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்போவதாகக் கூறினார்கள்.

2009 மே இருபதாம் திகதி மதியநேரம் கடந்தபோது என்னை வெளியே வரும்படி கூப்பிட்டார்கள். நேற்றிரவு என்னை இங்கே விட்டுச்சென்ற சி.ஐ.டி அதிகாரிகளில் ஒருவர் வந்திருந்தார்.

எனது சுயவிபரங்களை ஒரு படிவத்தில் எழுதினார். மிகவும் கண்ணியமானதாக அவரது அணுகுமுறைகள் அமைந்திருந்தன.

இன்னும் சற்று நேரத்தில் கொழும்புக்கு என்னைக் கொண்டு செல்லவிருப்பதாகவும், அதற்குத் தயாராகும்படியும் கூறிவிட்டுச் சென்றார்.

அங்கிருந்தவர்களிடம் ஒரு பிளாஸ்டிக் போத்திலைக் கேட்டு வாங்கி அதில் தண்ணீர் நிறைத்துவைத்துக்கொண்டேன். மாலையானதும் ஒரு பஜரோ வாகனத்தில் ஏற்றப்பட்டேன்.

அதில் ஏற்கனவே இரண்டு பெண் பொலிஸார் அமர்ந்திருந்தனர். அந்த வாகனம் நேற்றிரவு சென்ற அந்த இடத்திற்குள் மீண்டும் பிரவேசித்தது.

சற்றுநேரத்தில் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. கனகரத்தினம் ஐயாவும் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டார்.

அவரது முகமும் வாடி வதங்கிக் களைத்துப் போயிருந்தது. அந்தச் சூழ்நிலையில் எதுவும் கதைக்கத் தோன்றாத காரணத்தால் இருவரும் மௌனமாகவே இருந்துகொண்டோம்.

அந்த வாகனம் கொழும்பு நோக்கிச் செல்லத் தொடங்கியது.

அடுத்து நடக்கப்போகும் விசாரணைகளை நினைத்துப் பார்க்கவே மனம் நடுங்கத் தொடங்கியது.

தேவையில்லாமல் குழம்புவதை விடுத்து மனதை ஒருநிலைப்படுத்திக் கொள்வதில் முழுக் கவனத்தையும் செலுத்தவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

பாடசாலை நாட்களிலிருந்தே தியானம் செய்வதில் எனக்கிருந்த ஆர்வம் உண்மையில் அந்த மனநெருக்கடியான காலகட்டத்தில் எவ்வளவு உதவியாக இருந்தது என்பதை இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்.

வெடியோசைகள் கேட்காத வேறு ஒரு நெருக்கடி நிலைமையினை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறேன் என்பதைத் திடமாகப் புரிந்துகொண்டேன்.

நள்ளிரவு நெருங்கிய நேரத்தில், எங்களைக் கொண்டுசென்ற வாகனம் கொழும்பு சி.ஐ.டியின் பிரம்மாண்டமான நாலாம் மாடிக் கட்டடத்தை அடைந்திருந்தது.

‘சிறப்பு விசாரணைப் பிரிவு’ என்ற பெயர்ப் பலகையைக் கண்டதுமே எனக்கு உள்ளங்கை காலெல்லாம் விறைத்துக் குளிரத் தொடங்கியது.

நாலாம் மாடியைப் பற்றிய பல பயங்கரமான கதைகளை நான் இயக்கத்திலிருந்தபோது கேள்விப்பட்டிருந்தேன்.

எனது கை, கால் நகங்களையெல்லாம் பிடுங்கப் போகிறார்களோ, தலைகீழாகக் கட்டித் தொங்க விடுவார்களோ என நினைக்கும்போதே தலைச்சுற்றி மயக்கம் வருவதுபோல இருந்தது.

என்னைக் கூட்டிச்சென்ற அதிகாரிகள் சி.ஐ.டி உயர் பதவியிலிருப்பவர்கள் போலத் தென்பட்டார்கள். அலுவலகத்தில் பதிவுகளை முடித்துப் பெண் கைதிகளை அடைத்து வைத்திருக்கும் ஆறாம் மாடிக்கு என்னைக் கொண்டு சென்றனர்.

அங்கே இரவுக் கடமையில் இருந்த பெண் சி.ஐ.டியினரிடம் ஒப்படைக்கப்பட்டேன்.

அவர்கள் என்னை முழுமையாக உடற் பரிசோதனை செய்தபின் அங்கிருந்த சிறிய கம்பிக் கூட்டினுள் தனியாக அடைத்து வெளிப் பக்கமாகப் பூட்டினார்கள்.

பக்கத்தில் வேறு சில கூடுகளும் இருந்தன. அவற்றிலே படுத்திருந்த பெண்கள் தூக்கம் கலைந்து விழித்துப் பார்ப்பது தெரிந்தது.

என்னுடன் எவரும் கதைக்கக்கூடாது என அவர்களுக்குக் கண்டிப்பாகச் சொல்லப்பட்டது.

மறுநாள் காலை அங்கிருந்த பிள்ளைகள் குளித்து முழுகித் தங்களைச் சுத்தப்படுத்திக்கொண்டார்கள்.

நீண்ட நாட்களின் பின் நானும் தலைக்கு முழுகினேன். எனது கூந்தலிலிருந்து முள்ளிவாய்க்கால் மண்ணும் புழுதியும் கறுப்பு நிறமாக வெளியேறியது. குளியலறைக் கதவருகே பெண் சி.ஐ.டியினர் நின்றுகொண்டிருந்தார்கள்.

அன்று காலை ஒன்பது மணியளவில் என்னை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று என்னை முதலில் விசாரணைக்கு உட்படுத்தியது.

எனக்கு ஒரு வார்த்தையேனும் சிங்களமொழி தெரியாத நிலையில் ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

எனது பிறப்பு தொடக்கம் முதல் இயக்கத்தில் இணைந்து இறுதியாக வெளியேறியது வரை அந்த விசாரணையறிக்கையில் பதிவுசெய்யப்பட்டது.

என்னை அடைத்து வைத்திருந்த பகுதியிலே பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த வேறு பல பெண்களும் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் அவர்களைப் பூஸா தடுப்பு முகாமுக்குக் கொண்டு சென்றனர். பூஸா தடுப்பு முகாமிலிருந்தும் பல பெண்களைக் கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்குக் கொண்டுவந்து அவர்கள் வெலிக்கடை விளக்கமறியல் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

இயக்கத்திலிருந்த பல நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் மேலதிக விசாரணைகளுக்காகப் பூஸா தடுப்பு முகாமிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினார்கள்.

தினசரி ஏதாவது ஒரு தலைப்பில் எனக்கான விசாரணைகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. விசாரணைகளின் போது தமக்கு அடிகள் விழுந்ததாக வேறு சில பெண்கள் கூறியிருந்தார்கள்.

ஆனால் அவ்வாறான உடல்ரீதியான தாக்குதல்கள் எவையும் விசாரணை இறுதிவரை என் மீது மேற்கொள்ளப்படவில்லை.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் மாதமொரு தடவை அங்கு வந்து கைதிகளைச் சந்தித்ததுடன், அத்தியாவசியப் பாவனைப் பொருட்களையும் விநியோகித்தார்கள்.

வீட்டுத் தொடர்புகளே இல்லாதிருந்த என் போன்றவர்களுக்கு அந்த உதவி மிகப்பெரும் வரமாக இருந்தது.

அவர்கள் எமக்கு ஒரு பதிவு அட்டையைத் தந்து சிறையிலிருந்து வெளியேறும்வரை அதனை எம்முடன் வைத்திருக்கும்படி கூறியிருந்தார்கள்.

சி.ஐ.டியினரால் நான் சட்ட வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டேன். என்னைப் பரிசோதனைக்குட்படுத்திய இளம் பெண் மருத்துவர் தனக்குத் தெரிந்த தமிழில் என்னுடன் கதைத்தார்.

“உயிர்களைக் கொல்லுறது பாவம். இந்த உலகம் எவ்வளவு அழகானது. நீ ஏன் இவ்வளவு நாளும் ஒரு பயங்கரவாதியாக இருந்தாய். இனியெண்டாலும் உயிர்களை நேசித்து வாழப் பழகு” என்ற அவரது அறிவுரை எனது உள்ளத்தை மிகவும் பாதித்தது.

நான் போராளியா? பயங்கரவாதியா? என்னைப் போராளியாக்கியதும், பயங்கரவாதியாக்கியதும் அடிப்படையில் எது என யோசித்தேன். அரசியல்தான்.

ஆயுதமே விடுதலையைப் பெற்றுத் தரும் என எமக்குப் பாடம் புகட்டியதும் அரசியல்தான்.

ஆயுதமேந்தியதால் நீ ஒரு பயங்கரவாதி என முத்திரை குத்துவதும் அரசியல்தான். எனக்கும் இளவயதில் எத்தனை கனவுகள், கற்பனைகள், ஆசைகள் இருந்தன? இன்னொரு உயிரை நேசிப்பவளாகவே சிறு வயதிலிருந்து நானும் வளர்க்கப்பட்டேன்.

எனது உயிரைக் கொடுத்து மக்களது எதிர்காலத்தைக் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கைதானே என்னைப் போராட்டத்தில் இணையச் செய்தது?

ஆனால் விடுதலையின் பேரால் ஏற்பட்ட அழிவுகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் நானும் ஒரு காரணமாகவே இருந்திருக்கிறேன். அதனை மறுப்பதோ மறைப்பதோ எனது மனச்சாட்சிக்கே நான் இழைக்கும் துரோகமாக இருக்கும் என எண்ணிக்கொண்டேன்.

விசாரணைக் கைதியாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் மாதமொரு தடவை நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டேன். வாரந்தோறும் குடும்பத்தவர்களில் ஓரிருவரைப் பார்க்கும் அனுமதியிருந்தது.

வவுனியா இடம்பெயர் முகாமில் அம்மா எந்த முகாமில் இருக்கிறார் என்ற விபரம் எனக்குத் தெரியாத காரணத்தால் என்னால் எந்தத் தகவலையும் அனுப்பி அம்மாவுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை.

அதனால் கொழும்பு சி.ஐ.டி விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு மாத காலமும் எனது குடும்பத்தவர்களுடன் எனக்கு எந்தத் தொடர்பையும் ஏற்படுத்த முடியவில்லை.

அவர்களுக்கும் நான் எங்கே இருக்கிறேன் எனக்கு என்ன ஆனது என்ற விபரம் தெரியவில்லை.

நான் இதுபற்றி அங்கு வரும் செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் தெரிவித்தபோது தமக்கு வவுனியா நலன்புரி முகாம்களுக்குச் செல்வதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்திருந்தனர்.

எனது சரணடைவானது விடுதலைப் புலி இயக்க ஆதரவாளர்கள் எனத் தம்மைக் காட்டிக்கொண்ட சிலருக்கு உடன்பாடில்லாத விடயமாக இருந்திருக்க வேண்டும்.

என்னுடனிருந்த சக விடுதலைப் புலிக் கைதிகளைப் பார்க்க வரும் பெற்றோர் மூலம் என்னைப் பற்றிய பல விஷமத்தனமான பொய்கள் அதீத கற்பனை கலந்து வெளியே பரப்பப்பட்டிருந்ததையும் அறியக்கூடியதாக இருந்தது.

கோடிக்கணக்கான பணத்துடன் நான் சரணடைந்ததாகவும், வவுனியா மக்கள் நலன்புரி முகாம்களுக்கு இராணுவத்தினருடன் சென்று பலரையும் காட்டிக் கொடுத்ததாகவும் பரப்பப்பட்ட அவதூறான செய்திகளை அறிந்தபோது, நான் மிகுந்த மனப் பாதிப்படைந்தேன்.

யுத்தத்தின் இறுதி நேரத்தில் இறந்து போகாமல் உயிருடன் வந்த ஒரே காரணத்திற்காக எனது உறவுகளே என்னைப் பழி தீர்த்துக்கொள்வதைத் தாங்கிக்கொள்வது ஆரம்பத்தில் மிகவும் கடினமாகவே இருந்தது.

எனது மனச்சாட்சிக்கு விரோதமான எந்தக் காரியத்திலும் நான் ஈடுபட்டிருக்கவில்லை என்பதுடன், இன்னொரு போராளியைக் காட்டிக்கொடுத்து நான் என்னைப் பாதுகாத்துக்கொள்ள முயற்சி செய்யவுமில்லை என்பதை இயக்க நடவடிக்கைகளில் என்னுடன் ஈடுபட்டிருந்த பலரது உள் மனது அறியும்.

ஆனாலும் இப்படியான அவதூறுகளும் அவமானங்களும் நான் கடக்கவேண்டிய ஒரு கட்டம்தான் என்பதை எனது புத்தியில் எடுத்துக்கொண்டு மௌனமாக இருந்தேன்.

அடுத்தவரின் இரத்தச் சூட்டில் குளிர்காய்ந்து வாழத் துடிக்கும் ஒருகூட்டம் எப்படியான பட்டத்தை என்னைப்போல உயிர் மீண்டுவந்த போராளிகளுக்குச் சூட்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தேன் என்ற உண்மையை மறைத்து, வவுனியா நலன்புரி முகாமில் எனது தாயாருடன் மறைந்திருந்ததாகவும், அங்கே வைத்து சி.ஐ.டியினர் என்னைக் கைது செய்ததாகவும் ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்திகளைக் காலம் தாழ்த்தியே என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.

அதற்காக நான் கவலைப்படவில்லை.

ஓமந்தையில் நான் சரணடைந்தமைக்கான பதிவுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

ஆகவே சரணடைந்த ஒருவருக்கு மேற்கொள்ளப்படும் சட்டரீதியான நடவடிக்கை எதுவோ அதுவே எனக்கும் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.

கொழும்பு சி.ஐ.டி.இல் 20.05.2009 தொடக்கம் 29.09.2009வரை நான் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் பல்வேறுபட்ட விசாரணைகளுக்காகக் கொண்டுவரப்பட்டிருந்தவர்களோடும் தங்கியிருந்தேன். போலி வெளிநாட்டு முகவர்கள், பணமோசடி புரிந்தோர், புலிச் சந்தேக நபர்கள் என இலங்கையின் பல்வேறு இடங்களிலிருந்தும் பல ஆண் பெண்கள் அங்கிருந்தனர்.

தொடரும்…
தமிழினி

 (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… முன்னைய தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும்)
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல