வெள்ளி, 7 அக்டோபர், 2016

32 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் சென்னை அப்பல்லோவில் எம்.ஜி.ஆர்!

1984 அக்டோபர் 6 தமிழகமே பரபரத்தது. அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு இதே நாளில்தான் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வீட்டில் இருந்த எம்.ஜி.ஆருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.



உடனே அவரை அழைத்துக் கொண்டு அப்போலோ மருத்துவமனை வந்தார் ஜானகி அம்மாள். அவருடன் எம்.ஜி.ஆரின் மருத்துவர் பி.ஆர். சுப்ரமணியமும் உடன் வந்தார்.

உடனே எம்.ஜி.ஆர் மூன்றாவது மாடியில் இருந்த அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்த சூப்பர் டீலக்ஸ் அறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அந்த அறையின் ஒரு நாள் வாடகை ரூ.525-தான்.
எம்.ஜி.ஆர் கூறியபடி யாரிடமும் இந்த தகவல் சொல்லப்படவில்லை. ஆனால், எம்.ஜி.ஆரின் நீல நிற அம்பாசிட்டர் கார் அந்த காலத்தில் பிரபலமாக இருந்தது. அவரது கார் ஏன் அப்போலோ பக்கம் வந்தது என்று பரபரப்பு எழுந்தது. இந்த பரபரப்பு அடுத்த சில நிமிடங்களில் அப்போலோ மருத்துவமனை முன்பு ஆட்களைக் குவித்தது . ஆஸ்துமா தொந்தரவு காரணமாக எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அடுத்த தகவலும் வெளியானது.

மருத்துவர்கள் குழு 
எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதை அறிந்து அ.தி.மு.க அமைச்சர்கள் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்டே ஆகியோரும் மருத்துவமனையில் குவிந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அப்போலோ மருத்துவமனையின் தலைமை டாக்டர் பிரதாப் சி.ரெட்டி, "எம்.ஜி.ஆருக்கு ஒரு வார காலமாக சளி இருந்தது. காய்ச்சல் இருந்தது. ஆஸ்துமா தொந்தரவு ஏற்பட்டதால் அவர் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் குணம் அடைந்து வருகிறார்," என்று கூறினார்.

பொது மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் திருவேங்கடம், சேஷய்யா, அப்போலோ மருத்துவமனையின் டாக்டர் சி.ரெட்டி, ராமலிங்கம், எம்.ஜி.ஆரின் தனி மருத்துவர் பி.ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

அக்டோபர் 7
அப்போது, தமிழக சட்டசபை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கு மறுநாள் அக்டோபர் 7-ம் தேதி சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ சித்தன் பேசும்போது, "எம்.ஜி.ஆர். உடல் நிலை பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவேண்டும்," என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் நெடுஞ்செழியன், "அக்டோபர் 6ம் தேதி வெள்ளிக்கிழமை, முதல் அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு 'ஆஸ்துமா' போன்று அறிகுறிகள் இருந்தன. இதனால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் . முதல்வரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மூச்சு விடுவதில் இருந்த சிரமம் நீங்கிவிட்டது. நல்ல உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் இருக்கிறார்," என்று கூறினார்.

இன்னொரு புறம் அப்போலோவில் தலைமை டாக்டர் பிரதாப் சி.ரெட்டி அளித்த பேட்டியில், "நுரையீரலில் ஒரு வகை திரவம் சேர்ந்ததால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அந்தத் திரவத்தை 'பெரிடோனியல் டயாலிசிஸ்' முறை மூலம் முழுவதுமாக வெளியே எடுத்துவிட்டோம். சிறுநீரகத்தில் மிகச்சிறிய அளவில் கோளாறு ஏற்பட்டது. எனவே சிறுநீரகத்துக்கு அதிக வேலை கொடுக்க வேண்டாம் என்பதற்காக 'டயாலிசீஸ்' மூலம் திரவத்தை வெளியேற்றினோம். அவருக்கு இனி சிகிச்சை தேவை இல்லை. எம்.ஜி.ஆருக்கு முழு ஓய்வு தேவை. எனவே ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்கவேண்டும். ஓய்வுக்காகத்தான் எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் தங்கி இருப்பாரே தவிர சிகிச்சைக்காக அல்ல," என்று கூறினார்.

அக்டோபர் 14
தொடர்ந்து சில நாட்கள் உடல் நிலை முன்னேற்றம் அடைவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் 14-ம் தேதி அதிர்ச்சி தரும் ஒரு தகவலை டாக்டர்கள் வெளியிட்டனர். அன்று மாலை டாக்டர்கள் வெளியிட்ட அறிக்கையில், "13-தேதி இரவு எம்.ஜி.ஆர். தூங்கச் செல்லும்போது சிரமம் இல்லாமலும், நல்ல உணர்வுடனும் இருந்தார். இரவில் அவரது வலது பக்க கை, கால் அசைவில் பாதிப்பு ஏற்பட்டதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். உடனே நரம்பியல் பேராசிரியர் டாக்டர் ஜெகநாதன் வரவழைக்கப்பட்டு எம்.ஜி.ஆர் உடல் நிலையை ஆராய்ந்தார். தலைப் பகுதியில்`எக்ஸ்ரே' எடுத்துப் பார்த்ததில் மூளையில் ஒரு இடத்தில் ரத்த உறைவு இருப்பது தெரிய வந்தது. ஆனால் ரத்த கசிவு எதுவும் இல்லை. எம்.ஜி.ஆரின் உடலில் உள்ள நரம்புகள் இயங்குவது சீராக உள்ளது. ரத்தச் சுத்திகரிப்பு சிகிச்சை காரணமாக சிறுநீர் பிரிவதில் அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது," எனக் கூறப்பட்டது.

சிகிச்சைக்காக முதல்வர் எம்.ஜி.ஆர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று தகவல் வெளியானது. சென்னை விமான நிலையத்தில், தனி விமானம் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். உடல் நிலையைப் பரிசோதிக்க பம்பாயில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப் பட்டார்கள். எம்.ஜி.ஆர் சிகிச்சைப் பெற வெளிநாட்டுக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ அனுப்பப்பட்டால் அதற்கு உதவிகள் செய்யப்படும் என்று கவர்னருக்கு பிரதமர் இந்திரா காந்தி தகவல் அனுப்பினார்.

அமைச்சர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிக்கு வந்து எம்.ஜி.ஆர். உடல் நிலை பற்றி டாக்டர்களிடம் விசாரித்தவண்ணம் இருந்தனர்.

திரை உலக பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் அப்போலோவுக்கு படைஎடுத்தனர். கோவில்களில் எம்.ஜி.ஆர் நலம் பெற வேண்டி பூஜைகள் நடத்தப்பட்டன.

அக்டோபர் 16
ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ், கர்நாடக முதல்வர் ஹெக்டே, மத்திய அமைச்சர்கள் பலர் எம்.ஜி.ஆர் உடல் நிலைபற்றி விசாரித்தபடி இருந்தார்கள். ஜெயலலிதா, மூப்பனார் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், திரை உலகத்தினர் மருத்துவமனைக்குச் சென்று எம்.ஜி.ஆர். உடல் நலம் பற்றி கேட்டறிந்தனர். அக்டோபர் 16-ம் தேதி மாலை 4 மணிக்கு பிரதமர் இந்திரா காந்தி தனி விமானம் மூலம் சென்னை வந்தார்.

அப்போலோ மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் சிகிச்சை பெறும் அறைக்குச் சென்று உடல் நலம் விசாரித்தார். பிறகு டாக்டர்களுடன் இந்திராகாந்தி 15 நிமிடங்கள் கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கி இருந்த பிரதமர் இந்திரா காந்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, "அவர் இருக்கிற அறைக்குப் போனோம். படுக்கையில் இருந்து எழுந்து உட்கார முயற்சி செய்தார். ஆனால் அவரை படுக்கையில் இருந்து எழவேண்டாம் என்று டாக்டர்கள் சொல்லி மீண்டும் படுக்க வைத்தார்கள். எங்கள் எல்லோரையும் எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு கொண்டார். நான் அவரிடம் சில வார்த்தைகள் பேசினேன். 'நீங்கள் ஒரு தைரியசாலி. கஷ்டமான சந்தர்ப்பங்களிலும் தைரியமாக இருந்து அவற்றைச் சமாளித்து இருக்கிறீர்கள். அதுபோல இப்போதும் மன தைரியத்துடனும், ஊக்கத்துடனும் இருங்கள். தமிழ்நாட்டிலுள்ள மக்கள் மட்டும் அல்லாமல் இந்தியாவில் உள்ள மக்கள் எல்லோரும் நீங்கள் பூரண குணம் அடைய விரும்புகிறார்கள்' என்று நான் சொன்னதும் எம்.ஜி.ஆர். புன்னகை செய்தார். எம்.ஜி.ஆரின் சிகிச்சைக்காக எல்லா உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக இருக்கிறது," என்று கூறினார்.

அக்டோபர் 17
அக்டோபர் 17-ம் தேதி காலையில் எம்.ஜி.ஆர் உடல் நிலையைப் பரிசோதிக்க அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரூக்லீனில் உள்ள டவுன் ஸ்டேட் மருத்துவமனையின் சிறுநீரகச் சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் பிரீட்மேன், டயாலிசீஸ் பிரிவு டைரக்டர் டாக்டர் ஜான் ஸ்டிரிலிங்மேயர், வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பேராசிரியர் டாக்டர் கிறிஸ்டோபர் பிளாக் ,டெக்சாஸ் நகர மருத்துவ கல்லூரி நரம்பியல் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீபரதராவ் ஆகியோர் வந்தனர். அவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்டே தனி விமானத்தில் சென்னைக்கு அழைத்து வந்தார். அப்போலோ மருத்துவமனையில் எம்.ஜி.ஆரை பரிசோதித்தனர். பின்னர், அமெரிக்க மருத்துவர் டாக்டர் பிரீட்மேன் அளித்த பேட்டியில், "எம்.ஜி.ஆரின் இரு சிறுநீரகங்களுமே பாதிக்கப்பட்டு இருக்கின்றன. மாற்று சிறுநீரகம் பொருத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எல்லாம் நல்லபடியாக நடந்தால் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர் பழைய நிலையை அடைந்து வழக்கமான வாழ்க்கையைத் தொடர முடியும். அவர் 67 வயதிலும் இளமையுடன் இருக்கிறார். அவர் குணம் அடைய சிறிது காலம் பிடிக்கலாம். இன்னும் 3 மாதத்தில் அவரால் நடக்கமுடியும்," என்று கூறினார்.
டாக்டர் ஸ்டிரிலிங் மேயர் சென்னையிலேயே தங்கி எம்.ஜி.ஆருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தார். மறுநாள் மீண்டும் எம்.ஜி.ஆரை பரிசோதனை நடத்திவிட்டு மற்ற 3 டாக்டர்களும் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்கள். தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

நவம்பர் 5-ம் தேதி எம்.ஜி.ஆர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரூக்லீனில் உள்ள டவுன் ஸ்டேட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது.

இப்படி பட்ட சூழலில் 1984 டிசம்பர் 24,27 தேதிகளில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அமெரிக்க மருத்துவ மனையில் இருந்தே ஆண்டிப்பட்டி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் எம்ஜிஆர்.

தமிழக எதிர்க்கட்சிகள் வேறு மாதிரியான பிரசாரத்தில் ஈடுபட்டன. அதையும் ஒரு வீடியோ பதிவு மூலம் எம்ஜிஆர் நிர்மூலமாக்கி தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றார்.

அதேபோல போராடி எமனையும் தோற்கடித்து 2.2.1985 அன்று அமெரிக்க சிகிச்சை முடித்து நல்ல உடல் நலத்தோடு சென்னை புறப்பட்டார். 4.2.1985 சென்னை திரும்பினார்.

ஊரே விழாக்கோலம் பூண்டது..!

- கோடங்கி
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல