திங்கள், 17 அக்டோபர், 2016

ஜெ உடல் நிலையும், வதந்திகளும் ….. யார் பொறுப்பு?

படம் பிரிதொரு இணையத்திலிருந்து பெறப்பட்டது

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 ம் தேதி உடல் நலக் குறைவால் அனுமதிக்கப் பட்டார். முதலில் அவரது உடல்நலக் குறைவுக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு மட்டுமே காரணம் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அவர் தன்னுடைய தினசரி உணவை சீராக எடுத்துக் கொள்ளுவதாகவும் அப்பல்லோ மருத்துவமனையின் அறிக்கைகள் கூறிக் கொண்டிருந்தன.


படம் பிரிதொரு இணையத்திலிருந்து பெறப்பட்டது

இந்தச் சூழ்நிலையில்தான் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜெ வின் உடல்நிலை பற்றிய அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று ஒரு பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை முதலில் விசாரித்த டிவிஷன் பெஞ்ச் இதற்கு விளக்கம் அளிக்குமாறு அரசுக்கு உத்திரவிட்டது. முதலமைச்சரின் உடல் நிலை என்பது அவரது அந்தரங்கம் சம்மந்தப்பட்ட தனிப்பட்ட விவகாரம், இது 'பிரைவசி' சம்மந்தப்பட்டது என்று அரசு வழக்கறிஞர் கூறிய விளக்கத்தை புறந்தள்ளிய நீதிமன்றம், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சரின் உடல் நலம் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு இருக்கிறது என்றும் கூறியது. ஆனால் இரண்டு நாட்கள் கழித்து இந்த மனுவை விசாரித்த வேறு இரு நீதிபதிகளைக் கொண்ட டிவிஷன் பெஞ்ச், 'இது மலிவான விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப் பட்ட மனு' என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது.

செப்டம்பர் 22 ம் தேதி ஜெ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து 'காய்ச்சல், நீர்ச்சத்து குறைவு, காலை உணவை எடுத்துக் கொண்டார்' என்று மட்டுமே சொல்லி வந்த அப்பல்லோ மருத்துவமனையின் செய்திக் குறிப்பில் முக்கியமான மாற்றம் அக்டோபர் 3 ம் தேதி வந்தது. அன்றைய தினம் வந்த செய்திக் குறிப்பில்தான் முதலமைச்சருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப் பட்டிருக்கிறது, என்று கூறப்பட்டது.

அக்டோபர் 5 ம் த்தி வந்த செய்திக் குறிப்பு இதுவரையில் வந்த செய்திக் குறிப்புகளில் நீளமானது. அதில்தான் நீண்ட காலம் முதலமைச்சர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அக்டோபர் 8 ம் தேதி வந்த செய்திக் குறிப்பில் பாசிவ் ஃபிசியோதெரபி, அதாவது மற்றவர்களின் உதவியுடன் கை, கால்களை அசைக்கும் பயிற்சி கொடுக்கப்படுகிறது போன்ற வார்த்தைகள் இடம்பெற்றன. அக்டோபர் 10 ம் தேதி வந்த செய்திக் குறிப்பில் வந்த அறிக்கையில் 8ம் தேதி குறிப்பிலிருந்த அதே வாசகங்களே இடம் பெற்றிருந்தன.

8 மற்றும் 10 ம் தேதிகளில் வந்த செய்திக் குறிப்புகளில் இடம்பெறாத முக்கியமான இரண்டு வாசகங்கள் - உடல் நிலையில் முன்னேற்றம் மற்றும் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு தருகிறார் (improvement & responding well) - இந்த இரண்டு வார்த்தைகளும் இல்லை.

அக்டோபர் 10 ம் தேதிக்குப் பிறகு இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் 17 ம் தேதி மதியம் வரையில் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து ஜெ உடல் நிலை பற்றி எந்த அறிக்கைகளும் இல்லை. இதற்கு இரு வேறு விதமான காரணங்கள் கூறப்படுகின்றன.

ஒன்று 10 ம் தேதிக்குப் பிறகு குறிப்பிடும்படியான எந்த முன்னேற்றமும் இல்லை.

இரண்டாவது, ஜெ வின் உடல் நிலையில் குறிப்பிடும்படியான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் அந்த முன்னேற்றத்தை தக்க வைத்து மேலும் அதிகப்படியான ஆரோக்கியத்தை நோக்கி நகர்த்துவதுதான் தற்போதய பணி என்பதாலும், இது போன்ற நேரங்களில் ஏற்ற இறக்கங்கள் சகஜமானவை என்பதாலும் தற்போதே எந்த தகவலையும் தெரிவிக்க அப்பல்லோ மருத்துவமனை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. செப்டம்பர் 22-ம் தேதி ஜெ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து ஒரு வார காலத்துக்கு எந்த மருத்துவ அறிக்கைகளும் இல்லாமல் இருப்பது இதுதான் முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கட்டத்தில்தான் ஜெ வின் உடல்நலம் பற்றி தவறான தகவல்களை பதிவிட்டதாக, அவதூறு பரப்பியதாக ஏழுபேர் கைது செய்யப் பட்டனர். இதில் கோவையில் வங்கி ஊழியர் ஒருவரும், நகைகளை மதிப்பிடும் ஒருவரும் கைது செய்யப் பட்டிருப்பது உச்சகட்ட அதிகார துஷ்பிரயோகமாக கருதப்படுகிறது. இந்த இருவரும் தங்களுக்குள் ஜெ வின் உடல்நிலை பற்றி பேசியதை அங்கு அப்போதிருந்து கேட்ட அஇஅதிமுக பெண் பிரமுகர் போலீசில் புகார் தெரிவித்திருக்கிறார். இருவரும் கைது செய்யப் பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப பட்டிருக்கின்றனர். 'மற்றவர்கள் விவகாரத்திலாவது அவர்கள் தங்களது முகநூல் பக்கத்திலோ அல்லது ட்வீட்டரிலோ பதிவு செய்த பின்னர் கைதாகியிருக்கின்றனர். அவர்களது பதிவின் ஸ்கிரீன் ஷாட் ஆதரமாக கொடுக்கப் பட்டிருக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் இரண்டு தனி நபர்கள் இடையே நடைபெற்ற உரையாடல் அடிப்படையிலான புகார் மற்றும் கைது நடவடிக்கைகள் அசாதரணமானது. வழக்கமாக இப்படியெல்லாம் நடப்பதில்லை' என்கிறார் ஓய்வு பெற்ற ஏடிஜிபி ஒருவர். தேசிய அளவிலும் இவை எல்லாமே அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் என்றே பரவலான கண்டனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் இது திட்டமிட்ட திமுக வின் ஐடி பிரிவுக்கு எதிரான நடவடிக்கை என்று குற்றஞ்சாட்டுகிறார். டிஜபி யிடம் இது பற்றி திமுக முறையான புகாரையும் தந்திருக்கிறது. ஆனால் தவறு செய்பவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறுகிறார் அஇஅதிமுக வின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.பொன்னையன். இந்த விவகாரத்தில் திமுக ஐடி விங்குக்கும், அஇஅதிமுக ஐடி விங்குக்கும் மல்லுக்கட்டு யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகவே தெரிகிறது.

நாளோர் மேனியும், பொழுதோர் வண்ணமுமாய் பரவிக் கொண்டிருக்கும் இந்த வதந்திகளுக்கு யார் காரணம்? 90 சதவிகிதத்திற்கும் மேல் மாநில அரசும், ஆளுங் கட்சியும்தான் இதற்கு காரணம் என்பது தெளிவாகவே தெறிகிறது. ஆரம்பம் முதலே இந்த விவகாரத்தை அரசும், ஆளுங் கட்சியும், அப்பல்லோவும் கையாண்ட விதம்தான் இந்தளவுக்கு வதந்திகள் இறக்கை கட்டி பறக்கவும், விஷமிகள் விளையாடவும் காரணமாக அமைந்திருக்கிறது.
ஜெயலலிதா அதிகப்படியான செல்வாக்கு மிக்க தலைவர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர். ஒரு முதலமைச்சரின் உடல் நிலை பற்றி, அதுவும் பெண் முதலமைச்சரின் உடல் நிலை பற்றி எந்தளவுக்கு மக்களுக்கு முறையான தகவல்கள் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது மிகப் பெரிய விவாதம்தான். ஒரு தனி நபரின், அதுவும் சிகிச்சை பெற்று வரும் ஒரு பெண்மணியின் 'பிரைவசி' எந்தளவுக்கு பாதுகாக்கப்பட வேண்டுமோ அந்தளவுக்கு ஒரு முதலமைச்சருடைய உடல் நிலை பற்றிய முக்கியமான தகவல்களும் மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். இந்த இரண்டுக்கும் இடையிலான சம நிலையை அதாவது 'Delicate balance' ஐ எப்படி பராமரிப்பது என்பதுதான் அரசும், ஆளுங் கட்சியும், அப்பல்லோவும் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களாகும். .

இதில் ஜெ வின் புகைப் படங்களை வெளியிட வேண்டும், அவரது உடல் நிலை மற்றும் சிகிச்சைப் பற்றிய முழு விவரங்களையும் துல்லியமாக வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எந்தளவுக்கு அபத்தமானதோ, அதே அளவுக்கு அபத்தமானதுதான் ஜெ மிகவும், நன்றாக இருக்கிறார், அவர் செய்தித் தாள்களை படிக்கிறார், காவிரி பிரச்சனை பற்றி ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார் என்பதும். சிசியூ வில் சிகிச்சை பெற்று வரும் ஒருவர் எப்படி இதைச் செய்ய முடியும் என்ற அடிப்படை கேள்வியைப் பற்றிக் கூட கவலைப் படாமல் இது போன்ற செய்திகள் ஊடகங்களில் திட்டமிட்டு பரப்ப பட்டன. நோய் மற்றும் சிகிச்சை பற்றிய மொத்த முழு விவரங்கள் வேண்டாம். ஆனால் பொதுப்படியான உண்மைத் தகவல்கள் அதாவது broad picture என்பார்கள், அது மக்கள் மன்றத்தில் வைக்கப்பட வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடைசியாக சொல்லப்பட்டது இல்லாதுதான் வதந்திகள் இன்று இறக்கை கட்டிப் பறக்கக் காரணமாக இருந்து கொண்டிருக்கிறது.

மற்றோர் முக்கியமான விஷயம், முதலமைச்சரின் உடல் நிலை பற்றி தமிழக அரசு அதிகாரபூர்வமாக எந்த தகவல்களையும் இதுவரையில் சொல்லாதது. அப்பல்லோ மருத்துவமனை ஒரு தனியார் மருத்துவமனை. ஒரு தனியார் மருத்துவமனையின் செய்திக் குறிப்புகள்தான் இந்த விவகாரத்தில் இதுவரையில் வந்த தகவல்கள் என்றால் இது மாநில அரசின் பணி என்ன என்பது பற்றிய கேள்வியை எழுப்புகிறது. இந்த விஷயத்தில் மாநில அரசு ஏன் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி. அரசு அதிகாரப்பூர்வமாக தகவல்களை வெளியிட்டால் வதந்திகள் பரவுவது குறையுமா என்று கேட்கலாம். கட்டாயம் அப்போதும் வதந்திகள் இருக்கும். ஆனால் பல கேள்விகள் எழ வாய்ப்பிருக்காது. வதந்திகளின் intensity இந்தளவுக்கு இருக்காது.

எம்ஜிஆர் 1984 ல் அப்பல்லோவில் இருந்த போது அங்கு வந்த இரண்டு வெளிநாட்டு மருத்துவர்கள் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக முதலமைச்சர் வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறினார்கள். அப்பல்லோவில் பிரஸ் மீட் நடந்தது. அவர்கள் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதில் சொன்னார்கள். எம்ஜிஆரி ன் உடல் நிலை பற்றிய அறிக்கைகளை மாநில அரசுதான் வெளியிட்டது.

இன்று நிலைமை முற்றிலும் வேறாகவே இருக்கிறது. இன்னொன்று 1984 ல் சமூக வலைதளங்கள் இல்லை. இன்று ஒரு செய்தியை யாரும், யாரிடமிருந்தும் மறைத்து விட முடியாது. பாரம்பரிய ஊடகங்களான, செய்தித் தாள்கள் மற்றும் தொலைக் காட்சிகள் போன்றவை மக்களிடம் செய்தியை கொண்டு போய் சேர்ப்பதற்கு முன்பே மக்களுக்கு செய்திகள் தெரிந்து விடுகின்றன - ட்வீட்டர், முகநூல்கள் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் - செய்திகள் பரவி விடுகின்றன.

மனித மனதின் வக்கிரங்களில் ஒன்று அது எப்போதுமே நல்லதை விட கெட்டதையே அதிகம் நம்புவது, பரப்புவது என்பதாகும். இது ஏதோ விஷமிகளின் வேலை மட்டுமில்லை. நன்கு படித்தவர்களிடமும் கூட அவர்களது மனதின் ஏதோ ஒரு மூலையில் இந்த வக்கிரம் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்றைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மனித உளவியலை பற்றியும் தெரியவில்லை, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியைப் பற்றிய புரிதலும் இல்லை. அதன் விளைவு, முதலமைச்சரின் உடல் நிலை போன்ற சென்சிட்டிவான விஷயம் கூட இன்று ஆளுங் கட்சி, எதிர்கட்சி அரசியலாக மாறிப் போயிருப்பதுதான்.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலங் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு வரும் 22 ம் தேதியுடன் ஒரு மாதகாலம் முடிவடைய இருக்கிறது. தலைமைச் செயலகத்தில் ஆயிரக்கணக்கில் கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன. அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துக் கிடக்கிறது. முதலமைச்சரின் இலாக்காக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம்

ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. ஓபிஎஸ் தான் அமைச்சரவைக் கூட்டங்களை நடத்துவார் என்று ஆளுநர் கூறியிருக்கிறார். ஆனால் இந்த அறிவிப்பு வந்து ஒரு வார காலமாகியும் இதுவரையில் ஒரு அமைச்சரவை கூட்டம் கூட நடத்தப்படவில்லை.

ஆகவே எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும், சிவில் சமூகமும் கவலைப்பட வேண்டியது முற்றிலும் முடங்கிக் கிடக்கும் தமிழக அரசு நிர்வாகத்தைப் பற்றித்தான். முதலமைச்சரின் உடல் நிலையைப் பற்றியல்ல. தற்போதய நிர்வாக தேக்க நிலை எவ்வளவு காலம் தொடரும் என்றும் தெரியவில்லை. இந்த தேக்க நிலையின் பின் விளைவுகள் மிகவும் அபாயகரமானவை.
ஸ்தம்பித்துப் போயுள்ள அரசு நிர்வாகத்தின் பெருங்கேடு பற்றி பிரதான எதிர்கட்சியான திமுக பெரியளவில் அலட்டிக் கொள்ளவில்லை. மாறாக தங்களது ஐடி விங் செயல் வீரர்கள் மீதான நடவடிக்கைப் பற்றி மட்டுமே பேசுகிறது. ஒரு விதத்தில் ஆளும் அஇஅதிமுக இதனை ரசிக்கலாம். காரணம் உண்மையான மக்கள் பிரச்சனைகளை பிரதான எதிர்கட்சி பேசாமல் இவ்வாறாக திசை மாறி போவது இன்றைய நிலையில் அஇஅதிமுக வுக்கு சாதகமானதுதான்.

அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் தமிழகம் மிகவும் இக்கட்டானதோர் காலகட்டத்துக்குள் நுழைந்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் ஒரே உண்மை!

- ஆர்.மணி
Thatstamil

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல