புதன், 7 டிசம்பர், 2016

மறக்க முடியுமா அந்த துக்ளக்கை!!

 "திர்காலம்பற்றி நான் என்றைக்குமே யோசித்தது இல்லை. வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்துகொண்டு இருக்கிறேன். அதன் ஓட்டம் முடிந்தால், ஆட்டம் காலி. அவ்வளவுதான்!'' -

''வழக்கறிஞர், கலைஞர், பத்திரிகையாளர்... சோ அவ்வளவுதானா, இல்லை வேறு ஏதேனும் ரகசியக் கணக்கு வைத்திருக்கிறீர்களா?'' என்ற கேள்விக்குத்தான் இப்படி பதில் சொன்னார் சோ.



 ஶ்ரீநிவாச ஐயருக்கும், ராஜாம்மாள் தம்பதிக்கும் அக்டோபர் 5-ம் தேதி 1934-ல் மகனாகப் பிறந்தவர். மயிலாப்பூரில் பி.எஸ்.உயர்நிலைப்பள்ளியிலும், லயோலா கல்லூரியிலும் படித்தவர். 1955-ம் ஆண்டில் சென்னை சட்டக்கல்லூரிக்குள் நுழைந்து சட்டத்தைப் பயின்று வழக்கறிஞர் ஆனார்.

சட்ட ஆலோசகர் பணிக்கு டி.டி.கே நிறுவனத்துக்கு வழக்கறிஞர்கள் தேர்வு செய்கிறார்கள் என்றதும். அவர் அந்த நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டார். "தொழில் துறைகள் சட்டங்கள் பற்றி தெரியுமா?" என்ற கேள்விக்கு, "சுத்தமாகத் தெரியாது. எல்லா சட்டங்களையும் மனப்பாடம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அது தேவைப்படும்போது சட்ட புத்தகங்களில் இருந்து படித்துக்கொள்ளலாம்." என்ற உண்மையான பதிலே அவர்களுக்கு போதுமானதாக இருந்தது. தங்கள் நிறுவனத்துக்கு சட்ட ஆலோசகராக நியமித்தார்கள். ஐந்து ஆண்டுகாலம் பேர் சொல்லும் அளவுக்கு வழக்கறிஞராக பணியாற்றினார். இங்குதான் அவருக்கு நாடகத்தின் மீது, கவனம் திரும்பியது. நேர்முகத் தேர்விலே நையாண்டி கலந்து பேசி ரசிக்க வைத்தவருக்கு, மேடையில் காமெடி செய்து ரசிகர்களை கவர்செய்ய சொல்லித்தரவா வேண்டும்? உடல்மொழி, உச்சரிப்பு, கண் பார்வை என அசத்தித் தள்ளிவிட்டார். இந்த மேடை நாடகங்களின் மூலம்தான் மறைந்த ஜெயலலிதாவுக்கும், சோவுக்கும் அறிமுகம் ஏற்பட்டது.



'துக்ளக்' பத்திரிகை தொடங்கப்பட்டபோது 'சோ' கொடுத்த சில கேள்வி பதில்களை படித்து பாருங்கள். 

நிருபர்: உங்களுக்கு இந்த ஆசை எப்படி வந்தது?

சோ: அது தமிழ்நாட்டின் தலை விதி!

நிருபர்: உங்கள் பத்திரிகையின் ஆசிரியர் யார்?

சோ: ஒரு சகலகலா வல்லவர்!

நிருபர்: யார் அது?

சோ: நான்தான்.

நிருபர்: பத்திரிகை ஆரம்பிக்கும் நோக்கம்... லட்சியம் என்ன?

சோ: மக்களுக்கு நல்வழி காட்டி ஒரு புதிய பாரதத்தை உண்டாக்க வேண்டும்; நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக எல்லா மக்களும் தோள் கொடுத்துச் செயலாற்றவேண்டும்; ஒவ்வொரு தமிழனும் தன் கடமையை உணர்ந்து தன்னைப் பெற்ற தாய்க்கும், தான் பிறந்த மண்ணிற்கும் பெருமை தேடித் தர வேண்டும்; இலக்கியம், பண்பாடு, இந்தியக் கலாசாரம் இவை ஓங்கி வளரவேண்டும்... இந்த லட்சியங்களுக்காகத்தான் நான் பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறேன் என்று நீங்கள் எதிர்பார்த்தால், அது என் தவறல்ல! பத்திரிகை ஆரம்பிக்க வேண்டும் என்று தோன்றியது; ஆரம்பிக்கப் போகிறேன். அவ்வளவுதான்!" என்றார்.

'துக்ளக்' பத்திரிக்கையின் முதல் அட்டைப்படம், இரண்டு கழுதைகள் பேசிக்கொள்வது போல இருக்கும். ஒரு கழுதை " 'சோ'வின் பத்திரிகை வெளிவந்து விட்டதாமே!' " என்ற கேள்விக்கு இன்னோரு கழுதை "அப்படியா? இனிமேல் நமக்கு நல்ல விருந்துதான்!" என்று சொல்லும். இதுதான் சோ. 

 மூத்த பத்திரிகையாளர், அரசியல் ஆலோசகர், சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி மிகச் சிறந்த எதார்த்தவாதி என்ற வார்த்தைதான் சோவுக்கு மிக மிகப் பொருத்தமாக இருக்க முடியும். எந்தத் துறையாக இருந்தாலும், அதில் எந்தக் கேள்வி கேட்டாலும் டக்கென தனது ஸ்டைலில் நக்கல், நையாண்டி மிளிர சோ அளிக்கும் பதிலே தனிதான்.

தமிழகத்தின் பெரும் ஆளுமைகளான எம்ஜிஆர், ஜெயலலிதா, மூப்பனார், ரஜினிகாந்த் ஆகியோரின் அரசியல் ஆலோசகராகத் திகழ்ந்தார் சோ ராமசாமி.
 
 எழுபதுகளில் எம்ஜிஆர் படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் சோ. அந்த காலகட்டத்திலேயே துக்ளக் எனும் அரசியல் நய்யாண்டி பத்திரிகையைத் தொடங்கினார். எம்ஜிஆரின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்த சோ, பின்னாளில் எம்ஜிஆர் அரசியலில் நுழைந்த போது அவருக்கு ஆலோசகராகவும் திகழ்ந்தார். எம்ஜிஆர் முதல்வர் ஆனபிறகு அவரையே விமர்சித்து துக்ளக்கில் எழுதினார். ஆனால் எம்ஜிஆர் கோபம் கொள்ளவில்லை. முக்கிய அரசியல் நடவடிக்கைகளின் போது, சோவிடமும் ஆலோசனை கேட்டுக் கொண்டுதான் இருந்தார். குறிப்பாக நெருக்கடி நிலை காலத்தில்!
 
சோ மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை உட்பட 9 கம்பெனிகளின் எம்டியாகவும் இருந்து செயல்பட்டவர். பல முக்கிய தலைவர்களுக்கு ராஜகுருவாகவும் இருந்தார். குறிப்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசகராகவும் நண்பராகவும் இருந்தார் சோ. ஜெயலலிதாவைப் பொறுத்தவரை தொடக்க காலங்களில் சோதான் ஆலோசகர் நண்பர் எல்லாம்.... பின்னாளில்தான் சசிகலா மெல்ல மெல்ல அந்த இடத்தை கைப்பற்றுகிறார்.

ஆனாலும் சசிகலாவை ஜெயலலிதா வேண்டாம் என முடிவு செய்து போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றிய காலங்களில் மீண்டும் சோதான் போயஸ் கார்டனில் கோலோச்சுவது வாடிக்கையான ஒன்று. அத்துடன் தமக்கு சொந்தமான நிறுவனங்களில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் நீக்கப்பட்டு அவற்றின் முழு பொறுப்பையும் சோ ராமசாமியிடம் கொடுத்திருந்தவர் ஜெயலலிதா.

(கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவடைந்த போது ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரை அதிமுகவில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அனைவரும் துரோகம் செய்ததாக தமக்கு எதிராக சதி செய்ததாக ஜெயலலிதா குற்றம்சாட்டியிருந்தார் ஜெயலலிதா. இதனால் போயஸ் தோட்டத்தை சசிகலா வெளியேற நேரிட்டது.

அப்போது ஒரே நாளில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் வசம் இருந்த 9 நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராக சோ ராமசாமி நியமிக்கப்பட்டார். இதில் 3 மதுபான ஆலைகளாகும். பின்னர் சசிகலா மீண்டும் போயஸ் தோட்டத்துக்குள் நுழைந்த உடன் ஒரே நாளில் மிடாஸ் உட்பட 9 நிறுவனங்களில் இருந்தும் சோ ராமசாமி விலகினார்.

பிரசாந்த் பூஷன் 

இந்த விவரங்களை கடந்த 2014-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் இருந்த பிரசாந்த் பூஷன், சென்னையில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பிலேயே பகிரங்கப்படுத்தியிருந்தார்.)


சோ ராமசாமி பெயர் எப்படி வந்தது?

வெறும் ராமசாமி என்றால் யாருக்கும் அவரைத் தெரியாது. சோ என்றாலோ சோ ராமசாமி என்றாலோதான் அனைவருக்கும் தெரியும். அப்படி தன் பெயரோடு ஒட்டிக் கொண்ட சோ என்ற பெயர் எப்படி அவரோடு தொடர்ந்தது என்பது சுவாரஸ்யமான விஷயம்.

1950களில் நாடகங்களை எழுதி நடிக்க தொடங்கிய சோ, சுமார் 20 நாடகங்களை எழுதி இயக்கியுள்ளளார் `சோ` ராமசாமி. நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கும் சோவிற்கு நாடாகத்தில் ஈடுபாடு மிக மிக அதிகம்.

சோ மொத்தம், 2,518 முறை நாடகங்கள் போட்டிருக்கிறார். ஒரே நாள்ல நாலு ஷோ போட்ட நாடகங்களும் உண்டு. 28 நாட்களில் 32 நாடகங்கள் போட்டிருக்கிறார். அதில், ஐந்துதான் அரசியல் பற்றியது. 'முகமது பின் துக்ளக்', 'என்று தணியும் இந்த சுதந்திர தாகம்', 'இன்பக் கனா ஒன்று கண்டேன்', 'சட்டம் தலை குனியட்டும்' 'நேர்மை உறங்கும் நேரம்'. இந்த ஐந்தைத் தவிர, மற்றதெல்லாம் அரசியல் பேசா நாடகங்கள்.

சோ தனது 20 வயதில் ஒரு நாடகம் பார்த்தபோது நடிப்பில் ஆர்வம் பிறந்தது. அந்த ஆர்வத்தின் காரணமாக முதன்முதலாக ‘கல்யாணி' என்ற நாடகத்தில் ராமசாமி நடித்தார். அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு நாடகங்களில் நடித்து பெயர் பெற்றார். இவருடைய நாடகத்தில் மிக முக்கியமானது முகமது பின் துக்ளக் நாடகம்தான். அது பின்னர் திரைப்பட மாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து துக்ளக் என்ற அந்தப் பெயரைதான் தனது பத்திரிகைக்கும் பெயராக வைத்துக் கொண்டார்.

பகீரதன் என்பவர் எழுதிய `தேன்மொழியாள்` என்ற மேடை நாடகத்தில்தான் சோவிற்கு `சோ` என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த நாடகத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயரையே தன் புனைப்பெயராக பின்னர் மாற்றிக் கொண்டார். அந்தப் பெயர் அவருடைய இயற்பெயரையே மறக்கச் செய்துவிட்டது. இப்போது யாருக்கும் ராமசாமி என்றால் தெரியாது. `சோ` என்றால் உடனே அனைவருக்கும் தெரிந்துவிடும்.

சட்டம் படித்து, நாடகம், சினிமா என்று தான் இயங்கும் தளத்தை வேறு திசைக்கு மாற்றிக் கொண்ட சோ, பத்திரிகையாளராகவும், அதில் எழுதிய கட்டுரைகளின் மூலம் அரசியல் விமர்சகராகவும் அறியப்பட்டார். பத்திரிக்கைத் துறையில் அவர் ஆற்றிய பணிக்களுக்காக 1986ம் ஆண்டு வீரகேசரி விருது வழங்கப்பட்டது. 1994ல் கொயங்கா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன.

திரைத் துறையில் சோவின் பங்களிப்பு மேம்போக்காகப் பார்த்தால் பெரிதாகத் தெரியாது. எம்ஜிஆரின் திரைப்படங்களில் ஏதோ காமெடி வேடங்கள் செய்தவர், ரஜினியுடன் சில படங்களில் நடித்தவர் என்பதுதான் அவரைப் பற்றிய பாமரப் பார்வை. ஆனால் சோவின் பங்களிப்பு திரைத்துறையில் குறிப்பிடத்தக்கது.

சோ நடித்துள்ள படங்கள் மட்டும் 200. இவற்றைத் தாண்டி 20 படங்களுக்கு அவர் கதை எழுதியிருக்கிறார். முகமது பின் துக்ளக் என்ற தனது பிரபலமான நாடகத்தை அதே பெயரில் சோ படமாக்க, அது அந்நாட்களில் மிகச் சிறந்த அரசியல் எள்ளல் படமாகத் திகழ்ந்தது. இன்று பார்த்தாலும் ரசிக்கும்படியான ஒரு படம் அது.

1963-ல் பார் மகளே பார் என்ற படத்தில்தான் ஒரு நடிகராக சோ அறிமுகமானார். தொடர்ந்து நிறைய வாய்ப்புகள், பல படங்களில் நடித்தார்.

அவற்றில் தேன்மழை, நினைவில் நின்றவள், மனம் ஒரு குரங்கு, அந்தரங்கம், நிறைகுடம், யாத்திரை, தேரோட்டம், காசி யாத்திரை, தங்கப் பதக்கம், நீலகிரி எக்ஸ்பிரஸ், புகுந்த வீடு, வேலும் மயிலும் துணை, மறக்க முடியுமா என ஏகப்பட்ட படங்கள்.

எம்ஜிஆர் - ஜெயலலிதாவுடன் எம்ஜிஆருடன் நிறையப் படங்களில் நடித்திருக்கிறார் சோ. எல்லாமே நகைச்சுவை வேடங்கள்தான்.

ஒளி விளக்கும், கணவன், குமரிக் கோட்டம், மாட்டுக்கார வேலன், எங்கள் தங்கம். தேடி வந்த மாப்பிள்ளை, என் அண்ணன், நீரும் நெருப்பும், பெற்றால்தான் பிள்ளையா, சங்கே முழங்கு, ரிக்ஷாக்காரன், தலைவன் போன்ற படங்களில் எம்ஜிஆருடன் இணைந்து நடித்தார் சோ. இவற்றில் பெரும்பாலானவை எம்ஜிஆர் - ஜெயலலிதா ஜோடியாக நடித்தவை.

ஜெயலலிதா நடித்த 19 படங்களில் சோ நகைச்சுவை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்துள்ளார்.

தேன் மழை, நினைவில் நின்றவள், பொம்மலாட்டம், ஆயிரம் பொய், பணம் பத்தும் செய்யும் போன்ற படங்கள் சோ கதை எழுதியவை. இவை அனைத்துமே பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்தவை.

சிவாஜி கணேசனுடன் பார் மகளே பார், கலாட்டா கல்யாணம், அன்பைத் தேடி, தங்கப் பதக்கம், நிறைகுடம் போன்ற படங்களில் நடித்துள்ளா சோ.

மக்கள் கலைஞர் ஜெய்சங்கருடன் பல படங்களில் நடித்துள்ளார் சோ. சொல்லப்போனால் ஜெய்சங்கருடன்தான் அதிகப் படங்கள்.

நான் யார் தெரியுமா, நீலகிரி எக்ஸ்பிரஸ், ஆயிரம் பொய், ஆசீர்வாதம், உனக்கும் எனக்கும், வாக்குறுதி, வாயாடி, வந்தாளே மகராசி, பொன்வண்டு, கல்யாணமாம் கல்யாணம், இதயம் பார்க்கிறது, உங்க வீட்டுக் கல்யாணம், பிஞ்சு மனம், சினிமா பைத்தியம், தாய்வீட்டு சீதனம், சொந்தங்கள் வாழ்க, மேயர் மீனாட்சி, அவள் ஒரு அதிசயம், ராசி நல்ல ராசி, சக்க போடு போடு ராஜா, ஜானகி தேடிய ராமன் போன்றவை.

ரஜினிக்கும் சோவுக்கும் உள்ள நெருக்கமான நட்பு உலகறிந்தது. ரஜினியின் அரசியல் வருகையை அறிவித்தவர் சோதான். ரஜினியின் பல படங்களில் சோவுக்கும் ஒரு ரோல் இருக்கும். குறிப்பாக ரஜினிக்கு பெரும் பெயர் பெற்றுத் தந்த ஆறிலிருந்து அறுபது வரை, அடுத்த வாரிசு, மனிதன்,கழுகு, குரு சிஷ்யன்... இன்று வரை ரஜினியும் சோவும் மாறாத நண்பர்கள்.

ரஜினி நடிக்க வந்த ஆரம்ப காலத்திலிருந்தே சோவுடன் நல்ல நட்பு. அந்த நட்பு இருவரின் திரைப்பயணத்திலும் தொடர்ந்தது.

கமல் ஹாஸனுடன் காதலா காதலா படத்தில் நடித்தார் சோ. மனோரமாவுக்கு ஜோடியாகவே 20 படங்களில் நடித்துள்ளார் சோ.
இயக்குநராக...
சோ 5 படங்களை இயக்கியுள்ளார். அவை
முகமது பின் துக்ளக்
உண்மையே உன் விலை என்ன
மிஸ்டர் சம்பத்
யாருக்கும் வெட்கமில்லை
சம்போ சிவ சம்போ

முகமது பின் துக்ளக்
சோ உருவாக்கி, பல மேடைகளில் புகழ்ப் பெற்ற இந்த நாடகம் பின்னர் திரைப்படமாக உருவானது. படத்தை இயக்கியதோடு துக்ளக் வேடத்திலும் நடித்தார் சோ. இந்தப் படம் சோவின் வாழ்நாள் சாதனைப் படமாக அமைந்தது. படத்தின் வசனங்களில் தெரிந்த அங்கதம், நகைச்சுவை சோவின் திரையுலக வாழ்க்கையின் சிகரமாக அமைந்தது.

 சோவை மறைந்த மூப்பனாரின் செல்ல நண்பர் என்பார்கள் அரசியல் உலகில். குறிப்பாக தொன்னூறுகளில் மூப்பனாரின் அரசியல் நடவடிக்கைகள் பெரும்பாலும் சோவின் ஆலோசனையை ஒட்டியே இருந்தன. 1996-ம் ஆண்டு தேர்தலில் ரஜினி ஆதரவுடன் திமுக -தமாக கூட்டணி உருவானதில் சோவின் பங்கு மகத்தானது. தமாக கட்சியை 48 மணி நேரத்தில் ப சிதம்பரம் உருவாக்கினார் என்பார்கள். ஆனால் உண்மையில் அதற்கு பின்னணியில் இருந்து உழைத்தவர் சோதான்.

அரசியல் மாச்சர்யங்களைத் தாண்டி முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கருணாநிதியுடனும் சோ ராமசாமி நட்பு பாராட்டி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல