சேறு பூசிய ஜீன்ஸ் வேண்டுமா ? 425 டாலர்கள் !
சேறு பூசியுள்ளது போன்ற வடிவமைப்பிற்கு எதிராக பேஸ்புக் விமர்சகர்கள் காட்டமாக விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
ஒரு அமெரிக்க ஆடை நிறுவனம் 'சேறு பூசப்பட்ட' ஒரு ஜீன்ஸ் கால்சட்டையை 425 டாலர்களுக்கு ( சுமார் 27,000 இந்திய ரூபாய்) விற்பதை கேலி செய்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவாகிவருகின்றன.
நார்ட்ஸ்ட்ரோமின் வலைத்தளத்தில் ''கரடுமுரடான, அமெரிக்க அலுவலக வேலைக்கான '' மற்றும் ''கடுமையாக உழைப்பை'' பிரதிபலிக்கும் ஆடை என இந்த உடை வர்ணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடை, கடினமான பணி சூழலுக்கு ஏற்றவிதமாக, சேறு பூசியுள்ளது போன்ற தோற்றத்தை கொண்ட புதிய வடிவமைப்பை கொண்டது என்று அந்த நிறுவனம் விவரிக்கின்றது.
ஆனால் பேஸ்புக் விமர்சகர்கள் இந்த கருத்துக்கு காட்டமாக விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.
''உங்கள் வீட்டுத் தோட்டத்தில் நீங்கள் உருண்டு எழுந்தாலே, ( அதாவது இவ்வளவு காசு கொடுக்காமலே) இந்த ஜீன்ஸ் உடையில் உள்ளது போன்ற தோற்றத்தை பெற முடியும்,'' என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
''நீங்கள் வேலை செய்வதற்காக உங்களை அசுத்தபடுத்திக்கொள்ளவும் பயப்படமாட்டீர்கள்'' என்பதை உணர்த்த, சேறு பூசிய வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது என அந்த நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
நார்ட்ஸ்ட்ரோம் நிறுவனம் 'பாராக்குடா ஸ்ட்ரேயிட் லெக் ஜீன்ஸ்' என்று விவரிக்கும் இந்த ஜீன்ஸ் பற்றி பேஸ்புக் பக்கங்களில் விமர்சிப்பவர்களில் ஒருவர், டிஸ்கவரி தொலைகாட்சியின், 'டர்ட்டி ஜாப்ஸ்' என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மைக் ரோவ் .
மைக் ரோவ், '' அழுக்கான வேலையை செய்த ஒருவர் அணிந்த உடை போல இது தோற்றமளிக்கிறது. ஆனால் அதுபோன்ற வேலை செய்யாதவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது'' என்று பதிவிட்டுள்ளார்.
'' 'பாராகுடா ஸ்ட்ரேயிட் லெக் ஜீன்ஸ்' கால்சட்டை அல்ல'' என்றும் ''வேலை என்பது நகைமுரணான ஒன்று, அது மதிப்பு வாய்ந்தது அல்ல என்று எண்ணும் பணக்காரர்களுக்காக இந்த ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது'' என்றும் பதிவிட்டுள்ளார்.
நார்ட்ஸ்ட்ரோம் நிறுவனத்திற்காக நியூயார்க் சார்ந்த ஆடம்பர டெனிம் பிராண்ட் பிஆர்பிஎஸ்(PRPS) என்ற நிறுவனம் தயாரித்துள்ள ஜீன்ஸ் ஆடையை பேஸ்புக்கில் ரோவ்வை பின்தொடர்பவர்கள் பலரும் காட்டமாக விமர்சித்துள்ளனர்.
'' வெறும் 200 டாலர்கள் என்னிடம் கொடுங்கள். உங்களுக்கு ஏற்றமாதிரி உங்கள் ஜீன்ஸை நான் வடிவமைத்து தருகிறேன். நீங்கள் பல மாதிரிகளில் இருந்து ஒன்றை தேர்வு செய்யலாம். அது குதிரை கொட்டகையில் வேலைசெய்பவர், கோழி பண்ணை கட்டுபவர், டிராக்டர் வண்டியின் கிரீஸ், குயவர்களின் களிமண் என பலவற்றில் ஒன்றை தேர்வு செய்யலாம். 600 டாலர்கள் தந்தால், உங்கள் ஜீன்ஸை ஒரு ஆட்டைக் கடிக்க வைத்து அதில் ஒரு ஓட்டையை ஏற்படுத்தலாம்,'' என்கிறார் ஒருவர்.
ஆனால் எல்லோரும் இந்த புதிய ஜீன்ஸ் ஆடையை நிராகரிக்கவில்லை.
சேறு பூசப்பட்ட ஜீன்சை வாங்குவதில் என்ன பிரச்சனை'' என்று ஒருவர் ட்விட்டர் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ''ஒருவர் 400 டாலர்களை கொண்டு ஒரு அழுக்கான ஜீன்ஸ் உடையை வாங்க முடிந்தால், வாங்கட்டும்'' என்கிறார் அவர்.
கடந்த மாதம் நார்ட்ஸ்ட்ரோம் நிறுவனம் மற்றொரு அசாதாரணமான கால்சட்டை ஜீன்ஸ் உடையை அறிமுகப்படுத்தியது. அதில் கால் முட்டி பகுதியில் 'ஜன்னல்கள்' உள்ளது போன்ற வடிவமைப்பை கொண்டது என்றும் ஆனால் சேறு பூசப்பட்ட மாதிரி ஜீன்சை காட்டிலும் மிகவும் மலிவானது வெறும் 95 டாலர்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டது.
BBC Tamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக