ஞாயிறு, 21 மே, 2017

அதிருமா...

''நான் எப்ப வருவேன் எப்படி வருவேன் எப்போ வரு வேன்னு தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்தில் சரியா வருவேன்...'' என்ற வார்த்தையை நம்பி 20 வருடங்களுக்கு மேலாக தலைவா வா... தலைமை ஏற்க வா, உங்களை தான் நம்புது இந்த பூமி.. எங்களுக்கு இனி நல்ல வழி காமி என காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு இப்போது வார்த்தைகளில் சொல்ல முடியாத மகிழ்ச்சி...ஆம் 9 வருடங்களுக்கு பின்னர் தற்போது தனது ரசிகர்களை சந்தித்து வருகின்ற ரஜினியின் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்... அவரது ரசிகர்களை மட்டுமல்ல .. ஒட்டுமொத்த தமிழர்களையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.



தமிழக அரசியலை பொறுத்தவரையில் சினிமா என்பது பிரிக்க முடியாத ஒன்று. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மற்றும் கலைஞர் கருணாநிதி முதல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வரை சினிமாவை ஆண்டவர்களே தமிழகத்தையும் ஆண்டனர். அதுமட்டும் அல்ல, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், சீமான், நெப்போலியன், ராதாரவி, சரத்குமார், ஆனந்தராஜ், செந்தில், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்களான கருணாஸ் உள்ளிட்ட பலரும் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தவர்களே.. இவர்கள் எத்தனை பேர் இருந்தாலும் தமிழகம் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்து கிடப்பது ரஜினி என்ற ஒருவருக்காகவே.

ரஜினிகாந்த்...அப்படி இவரிடம் என்ன இருக்கிறது? உண்மையிலேயே இந்த பெயரே காந்தம் தான்.. அவரது திரைப்படங்கள் வெளியாகையில் வயது வித்தியாசமின்றி ரசிகர்கள் கொண்டாடும் போது உன்பேருக்குள்ள காந்தம் உண்டு உண்மைதானடா.. என்ற பாட்ஷா பட வரிகள் மெய்யானதே எனத் தோன்றும். சாதாரண பஸ் நடத்துநராக இருந்த சிவாஜிராவ் தனது உழைப்பால் மட்டுமே இன்று உலகம் கொண்டாடும் அளவு உயர்ந்திருக்கிறார். இளைஞர்களை பொறுத்தவரையில் எந்த கடினமான வாழ்க்கை சூழ்நிலையாக இருந்தாலும் நம்மை இறைவனை நம்பி உழைத்தால் வாழ்வில் முன்னேறலாம் என்ற தன்னம்பிக்கைக்கு உதாரணமாக உள்ளவர். ரஜினி ஒரு மந்திரச்சொல். நிறம், தோற்றம் என அனைத்தும் கடந்து திரையுலகில் தன் திறமையால் தனக்கென ஒரு பாணியை அமைத்துக்கொண்டவர். இந்திய சினிமாவே இன்றுவரை வியக்கும் அளவுக்கு உலக ரசிகர்களை ஈர்த்து சூப்பர் ஸ்டார் சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருப்பவர் ரஜினி. உப்பிட்ட தமிழ்மண்ணை நான் மறக்க மட்டேன்... நான் உயிர் வாழ்வதிங்கேதான், ஓடிவிடமாட்டேன் என்றும், என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுண் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா... என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா... என்றும் திரையில் அவ்வப்போது தன் தமிழ்ப் பாசத்தை வெளிப்படுத்தியவர். இதை விசிலடித்து வரவேற்ற ரசிகர்கள்... தலைவா அரசியலுக்கு வா... என அழைக்கும்போதெல்லாம், அது ஆண்டவன் கையில தான் இருக்கு என்று மேலே கையைக் காட்டுவார் ரஜினி. இவ்வளவு மக்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கிறதே? அதை வீணாக்கலாமா என்ற ரசிகர்களின் கேள்விக்கு... கண்டிப்பாக அதை வீணாக்க மாட்டேன் என்றும் பதில் சொல்வார் அவர். இருக்கு ஆனா இல்ல என்ற பாணியில் தன் அரசியல் விருப்பங்களைத் தேவையான நேரத்தில் வெளிப்படுத்தியே வருவார்.

ரஜினியை பொறுத்தவரையில் சினிமாவை தாண்டி தமிழக அரசியலில் ரஜினி என்ற மந்திரச் சொல் 1996 ஆம் ஆண்டு ஒலிக்க ஆரம்பித்தது. 20 வருடங்களுக்கு முன்னர் அவர் உதிர்ந்த ஒரு வார்த்தை தமிழக அரசியலை மாற்றிப்போட்டது.. அந்த காலப்பகுதியில் ரஜினி என்ன சொல்கிறாரோ அந்த வார்த்தையை கேட்பதற்கு முழு தமிழகமே தயாராக இருந்தது. 1996-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது அதிரடியாக ஒலித்தது ரஜினியின் குரல். இந்த ஆட்சி மீண்டும் வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலகூட காப்பாத்த முடியாது என்று ஜெ.ஆட்சியை எதிர்த்து பேட்டியளித்தார் ரஜினி. அந்தத் தேர்தலில் தி.மு.க. –- தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது, படுதோல்வியைச் சந்தித்தார் ஜெயலலிதா. மீண்டும் அரசியல் சூழல்கள் மாற... 2001-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சி அமைத்தார். 2004-ஆம் ஆண்டு நடிகர் சங்கம் நடத்திய “கலைத்தாய்க்கு கலையுலகின் பாராட்டு விழா”வில் ரஜினியின் பேச்சு ஜெ.வுக்கு புகழ் மாலையாக அமைந்தது.

2011-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிரடியாக ஒரு வெடியைக் கொளுத்திப்போட்டார் ரஜினி. ஆம்.. கேமராக்கள் புடைசூழ ஊடக வெளிச்சத்தில் இலைக்கு வாக்களித்தார். ரஜினி வாக்களித்தது பட்டாசாக வெடித்துக்கொண்டிருக்க, அன்று மாலை கலைஞருடன் பொன்னர் சங்கர் திரைப்பட சிறப்புக்காட்சியில் கலந்துகொண்டார். கலைஞரும் ரஜினியும் பொன்னர் சங்கர் படத்தைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டனர்.

ரஜினி அரசியலைவிட அதிகம் விரும்புவது ஆன்மிகத்தைத்தான் என்பது அனைவரும் அறிந்தது. தனிமனித வாழ்வில் ஆன்மிகம் அவருக்கு தன்னிறைவைக் கொடுத்திருந்தாலும் சினிமாவிலும் அரசியலிலும் அது உதவாமலே போனது. ரஜினி நடித்த ஸ்ரீ ராகவேந்திரா, பாபா ஆகிய படங்களின் படுதோல்வியே அதற்கு உதாரணம். ரஜினியின் ஆன்மிக பலத்தை எப்படியாவது வாக்குகளாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இன்று வரை துடித்துக்கொண்டே இருக்கிறது பா.ஜ.க. இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் ஆர்.கே.நகர் பா.ஜ.க. வேட்பாளர் கங்கை அமரன் வரை தேர்தல் நேரங்களில் ரஜினியைச் சந்தித்து வாழ்த்து பெறுவதும் இதற்காகத்தான். ஆனால் இன்றுவரை என்ன தான் பா.ஜ.க.-வினர் கைகொடுத்தும், கட்டியணைத்தும் ரஜினியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தாலும், கடவுள் ஆன்மிகத்தை விட திராவிட முற்போக்கு கருத்துக்கள் நிறைந்த தமிழகத்தில் ரஜினியின் ஆன்மிக செல்வாக்கை பா.ஜ.க.வினரால் வாக்காக மாற்ற முடியவில்லை. ஆயினும் ரஜினி ஆதரவு தெரிவித்தால் தாங்கள் வெற்றிபெற்று விடலாம் என்ற கருத்து தமிழகத்தில் பரவலாக சில அரசியல் தலைமைகளிடம் நிலவுகின்ற நம்பிக்கை. இதற்காகதான் அடிக்கடி ரஜினி வீட்டுக்கு சென்று அவருடன் புகைப்படம் எடுத்து அதனை வைரலாக்கி வருகின்றனர்.

ரஜினி தமிழனாக வாழ்ந்தாலும் அவர் மனைவி தமிழராகவும் அவரது பிள்ளைகள் தமிழர்களை மணம்முடித்து வாழ்ந்தாலும் இன்னும் அவரை சிலர் மராட்டியன், கன்னடன் என்றே ஒதுக்கி தமிழகத்தில் இருந்து பிரித்து வைக்கவே முயல்கின்றனர். காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழர், - கன்னடர் இடையேயான பிரச்சினையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழர்களுக்கு ஆதரவுக்குரல் கொடுக்கத் தமிழ்த் திரையுலகம் நெய்வேலியில் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் பிரமாண்ட கண்டனக் கூட்டத்தை நடத்தியது. அதில் கலந்துகொள்ளாமல் அடுத்த நாள் சென்னையில் தனியாக உண்ணாவிரதப் போராட்டம் என்று அறிவித்து அமர்ந்தார் ரஜினி. முதல்நாள் நெய்வேலிக்குப்போன சினிமா நட்சத்திரங்கள் முதல், அரசியல் தலைவர்கள் வரை பலரும் ரஜினியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தின்போது நதிகள் இணைப்பை வலியுறுத்தினார் ரஜினி. பணம் இல்லை என்று இனியும் காலம் தாழ்த்த வேண்டாம்... முதல் ஆளாக நானே ஒரு கோடி ரூபா தருகிறேன் என்று அறிவித்தார். தென்னிந்தியாவின் முக்கிய நடிகர்களை ஒன்றுதிரட்டி நதிகளை இணைப்பது பற்றி முழுவேகத்தில் செயற்படப்போகிறார் ரஜினி என்று அப்போது பேசப்பட்டது. ஆனால்... காவிரி நதிநீர்ப் பிரச்சினை இன்றும் தீயாக கனன்று கொண்டுதான் இருக்கிறது.

2008- ஆம் ஆண்டு கலைஞர் கொண்டுவந்த ஒகேனக்கல்- கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு கர்நாடக மாநில அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க, அங்கிருக்கும் தமிழர்களும் தாக்கப்பட்டனர். இதைக் கண்டிக்கும் வகையில் தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு கண்டனக் கூட்டத்தை நடத்தியது. அந்த மேடையில் தமிழர் உணர்வு அனல் பறக்க, ரஜினி என்ன பேசப்போகிறார் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருந்தது. தமிழ்நாடு... கர்நாடகா... எதுவா வேண்ணா இருக்கட்டும், சத்தியம் பேசுங்க, உண்மையப் பேசுங்க, நம்ம இடத்துல தண்ணீர் எடுப்பதை அவங்க தடுக்குறாங்கன்னா... அவங்கள ஒதைக்க வேணாமா... என்று பரபரப்பாக பேசினார்.

2008- ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைகளைக் கண்டித்து தென்னிந்திய நடிகர் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது . அதில் கலந்துகொண்ட ரஜினி, இலங்கை அரசை வன்மையாக கண்டித்துப் பேசினார். எந்த நாடாக இருந்தாலும், பாமர மக்களின் வேதனையின் காற்றுப்பட்டாலே அந்த நாடு உருப்படாது... என்று உணர்வுபூர்வமாக இருந்தது அவரது பேச்சு. அண்மையில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கையளிக்கும் நிகழ்வுக்கு ரஜினி வருவதாக இருந்தது. ஆனால் மத்தியில் பா.ஜ.க. அரசு ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் நல்லுறவு இருப்பது போல காட்டி, உலக நாடுகளை ஏமாற்றவே ரஜினியை பா.ஜ.க. அரசு பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது என்று ரஜினியின் இலங்கைப் பயணத்திற்கு தமிழகத்தின் சில அரசியல் தலைவர்கள் எதிர்ப்புக்குரல் எழுப்ப, அதை ஏற்று அந்த நிகழ்வில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருந்தார் ரஜினி. ஆனால் அப்போதும் தான் ஒரு கலைஞன். தன்னை அரசியலாக்க வேண்டாம் என்று ரஜினி கூறியிருந்தார். இதற்கு முன்னர் 2012-ஆம் ஆண்டு ரஜினி உடல்நலனில் பிரச்சினை வந்தபோதும் தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பூரண நலம் பெற்று 12.12.12 பிறந்த நாளன்று ரசிகர்களை நேரில் சந்தித்தார். அந்த ரசிகர்கள் வெள்ளத்தில் உருக்கமாகப் பேசிய ரஜினி நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன். நான் மருத்துவமனையில் இருந்தபோது ரசிகர்களின் பிரார்த்தனைகளை அறிந்தேன். நான் நலம்பெற அதுவே காரணம். இதற்கு நன்றி என்று சொல்ல முடியாது. ஏதாவது செய்யவேண்டும். ஆனால், அது என் கையில் இல்லை என்றார்.

இந்நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்று பல வருடங்களாக புகைந்து கொண்டிருந்த நெருப்பு, நான் அரசியலுக்கு வந்தால்... என்று தற்போது தன் ரசிகர்கள் சந்திப்பில் ரஜினி பேசியதுமே தீயாக பற்றிவிட்டது. அவருக்கு எதிரான கருத்துக்களும் விமர்சனங்களும் பரவலாக வரதொடங்கிவிட்டன. மிகவும் மோசமான விமர்சனங்கள் இந்திய ஊடகங்களில் கூட முன்வைக்கப்படுகின்றன. அவர்களுக்கு ரஜினியின் நேற்றைய பேச்சு சாட்டையாக அமைந்திருக்கும். ரஜினி பேசியது இதுதான்.

நான் பிறந்தது கர்நாடகாவாக இருந்தாலும், 44 ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்வதால் நான் ஒரு பச்சைத் தமிழன். 23 ஆண்டுகள் மட்டுமே தான் கர்நாடகாவில் வாழ்ந்தேன். மீதியுள்ள 44 ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்து வருகிறேன். எனது மூதாதையர்களும் எங்க அப்பாவும் கிருஷ்ணகிரியில் பிறந்தவர்கள் என்று நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். கர்நாடகத்தில் இருந்து மராட்டியராக வந்திருந்தாலும் பேரும் புகழும் அள்ளிக்கொடுத்து என்னை தமிழனாக்கி விட்டீர்கள், அதனால் நான் பச்சைத் தமிழன்.

என்னை எங்கேயாவது போ என்று வெளியே தூக்கிப் போட்டால் இமயமலையில்தான் வீழ்வேனே தவிர வேறு மாநிலத்திற்கு போக மாட்டேன். உயிரோடு இருந்தால் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும். இல்லாவிடில் சிவன் இருக்கும் இமயமலைக்கு செல்ல வேண்டும். என்னை வாழ வைத்து அழகு பார்த்த உங்களை விட்டு நான் ஏன் செல்ல வேண்டும்? அரசியல் குறித்து நான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தும் என நினைக்கவில்லை. எதிர்ப்பு இருந்தால் மட்டுமே நாம் வளர முடியும் என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் அரசியல் முறைமை நன்றாக இல்லை. போர் வரும்போது நாம் பார்த்துக்கொள்வோம். அதுவரை பொறுமை காப்போம் என்றார். ரஜினியின் இந்த பேச்சு அவர் நிச்சயமாக அரசியலுக்கு விரைவில் வருவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரையில் ஜெயலலிதா இருக்கும் வரை அரசியல் ஒரு இரும்பு கோட்டையாகவே இருந்தது. அவரது கண்ணசைவு இல்லாமல் எதுவும் இல்லை. அவரது கடைசி காலகட்ட தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளை சிதறி ஓடவிட்டன. தி.மு.க. கூட தன் எதிர்க்கட்சி அந்தஸ்தை தொலைத்தது. அத்தனை ஆளுமை மிக்க ஜெயலலிதா என்று மறைந்தாரோ அன்றே தமிழக நிர்வாகம் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது. பன்னீர் செல்வம், சசிகலா, எடப்பாடி, தினகரன், தீபா, தீபா கணவர் என்று ஆளுக்கொரு பக்கம் அ.தி.மு.க.வை சுக்குநூறாக்கி விட்டனர். இன்று சிதறிக்கிடக்கும் அ.தி.மு.க.வினால் தமிழக அரச நிர்வாகம் பூகம்பத்தில் சிக்கிக்கொண்டிருக்கும் கட்டடம் போல உள்ளது. இந்த அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றக் கூடிய ஆளுமை தி.மு.க. வுக்கு உள்ளபோதிலும் கருணாநிதி இருந்தும் இல்லாமல் இருப்பதனால் அதனை அக்கட்சியில் சரியாக பயன்படுத்த தெரியவில்லை. அரசியல் சாணக்கியரான கருணாநிதியின் மகன் ஸ்டாலின் தி.மு.க. செயல்தலைவராக பதவியை கையேற்றுள்ள போதிலும் ராஜதந்திரம் இல்லாத ராஜா மகனாகவே உள்ளார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பொது இடங்களில் தனது முன்கோபத்தினால் அரசியல் செல்வாக்கை இழந்துவிட்டார். அவரது கூட்டில் உருவான மக்கள் நலக் கூட்டணி உருவாகிய வேகத்தில் உதிர்ந்து போய்விட்டது. சீமான் கொள்கைகள் வகுத்திருந்தாலும் அரசியலில் ஆட்சிக்குள் இன்னும் அவர் சாதிக்கவில்லை. என்னதான் சூழ்ச்சிகள் செய்தாலும் தலைகீழாக நின்றாலும் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளால் என்றுமே தமிழக ஆட்சிக்குள் தனித்து உருவெடுக்க முடியாது. இவ்வாறான நிலையில் ஆட்சியில் உள்ள எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க.வோ செயற்திறன் இல்லாத அரசாகவும் அதன் அமைச்சர்கள் தினமும் ஊழலினால் வருமான வரி சோதனையில் சிக்கி விழிபிதுங்குவதும்... சிறையில் உள்ள தினகரனையும் சசிகலாவையும் சந்தித்து நாட்களை கடத்தி தமது ஆட்சியை தக்கவைக்கவே முயற்சித்துக் கொண்டிருப்பதுமாகவே உள்ளனர். இதனால் தினமும் ஒரு போராட்டம் தமிழகத்தில் நடப்பதோடு வரட்சி தலைவிரித்தாடுகிறது. மீனவர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை என்று எதற்கும் தீர்வுகள் பெறப்படவில்லை. வைகை அணையை ரெஜிபோமால் மூடி நீர் ஆவியாவதை தடுக்கலாம் என்ற அளவிலேயே அமைச்சர்களின் அறிவு உள்ளது. இதனால் தமிழகம் செயற்தின் அற்றுப்போயுள்ளது. இங்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திரா போன்ற அண்டைய மாநிலங்களுக்கு செல்கின்றது. பல கம்பனிகள் தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன. இவ்வாறான சூழ்நிலையில் தமிழகத்தை மீட்டெடுக்க ஒரு திறனுள்ள அரசியல் தலைமையின் தேவைப்பாடு அத்தியாவசியமானதாக உள்ளது. ஜெயலலிதா, கருணாநிதியால் அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப ஆளுமைமிக்க தலைமை தேவைப்படுகின்றது. அந்த வெற்றிடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கேள்வி சாமானியனையும் விட்டுவைக்கவில்லை. இந்நிலையில் திரையில் பார்த்த தமது கதாநாயகன் நேரில் வரவேண்டும்.மக்கள் குறைகளை திரைப்படத்தில் போல நேரிலும் தீர்க்கவேண்டும் என்ற ஆசையில்.ரஜினி உதிர்த்துள்ள வார்த்தைகள் இன்று நெருப்பாக பற்றி எரிகின்றது. தமிழகத்தில் பிறக்காவிட்டாலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் தான் தமிழகத்தில் தாம் இறக்கும் வரை அரச சிம்மாசனத்தை அலங்கரித்து எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர்.

சினிமாவை போன்று தமிழகத்தை ஆண்ட எம்.ஜி. ஆரை போல இன்று ரஜினி அரசியலுக்கு வந்து அவரால் வெற்றிபெற முடியுமா? அது எந்தளவு சாத்தியமானது என்று கூறமுடியாது. ஆனால் ரஜினி அரசியலுக்கு வந்தால் பணம் சம்பாதிப்பவர்களை நெருங்கவிடமாட்டேன். இப்போதே ஒதுங்கி விடுங்கள்.. என்று கூறியுள்ளமை ...சிவாஜி பட வசனம் போல .. சும்மா.. அதிருதுல்ல ... என்று அவர் அரசியலுக்கு வந்துவிடுவாரா என்று பலரை அதிரவைத்துள்ளது.... பொறுத்திருந்து பார்ப்போம்... ரஜினி வருவாரா... அரசியலை அதிரவிடுவாரா என்று...

குமார் சுகுணா
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல