வில்லாண்ட தமிழினம் வீறுகொண்டு விடுதலைக்காய் களம் கண்ட தருணத்தில் மனிதாபிமானத்திற்கு எதிரான அதியுச்ச வெளிப்பாடுகள் சாட்சியமின்றி அரங்கேற்றப்பட்டு எட்டு ஆண்டுகள் ஆகின்றன. எட்டு ஆண்டுகள் கழிந்தும், அந்த ரணம் ஆறவில்லை. வலிகள் தீரவில்லை. பட்ட காயங்களில் இருந்தும், மனங்களில் விழுந்த கீறல்களில் இருந்தும் இன்னமும் இரத்தம் வழிந்து கொண்டு தான் இருக்கிறது. இது தொடர்ந்தும் இருக்கும்.
முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிவில்லா ஓர் அவலமாக இன்றும் நீடித்துக்கொண்டிருக்கின்றது. கொடூர யுத்தத்தின் விளைவுகள் பலவற்றை ஒன்றன் பின் ஒன்றாக, அனுபவிக்கும் நிலைக்கு தமிழினம் தள்ளப்பட்டு நிற்கிறது. முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிந்தாகிவிட்டது என்று அறிவிக்கப்பட்டாலும் தற்போது முடிவுறா வலியைச் சுமக்கும் மக்களின் வாழ்வதற்கான உரிமைப்போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
சொந்த இடத்தில் வாழமுடியாது நிலத்திற்கான போராட்டம் தொடர்கின்றது. சொந்த பந்தங்களுடன் இணைய முடியாது அவர்களை தேடும் படலமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. ஆட்சியாளர்கள் மாற்றப்பட்டாலும் அடைவு மட்டங்களில் மாற்றமில்லாத நிலைமையால் தற்போதும் வீதியோரங்களிலும் படை முகாம்களிற்கு முன்னாலும் போராடிக்கொண்டிருக்கும் அவலங்கள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.
எட்டு ஆண்டுகளுக்கு முன் சாட்சியமின்றி ஈவு இரக்கமின்றி நிகழ்த்தப்பட்ட குரூரங்களுக்கு, அநீதிகளுக்கு இன்னமும், பொறுப்புக் கூறப்படாத நிலை, குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாத நிலை, நீதியை எதிர்பார்த்து காத்துநிற்கும் மக்களுக்கு மத்தியில் காலத்தை இழுத்தடித்து, கடப்பாட்டைத் தட்டிக்கழிக்கும் ஆட்சியாளர்களின் வழக்கமான தந்திரோபாயங்கள் நாசூக்காக நகர்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
உரிமைகளுக்காக மட்டும் போராடிய தமிழினம் இன்று உயிர்வாழ்வுக்காக போராட வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலைமை. மக்களே மக்களுக்காக குரல்கொடுக்க வேண்டிய ஏதிலிய நிலைமை. மக்கள் பிரதிநிதிகள் ஆட்சியாளர்களிடத்தில் சென்றாலும் குறைகேட்பதற்கு கூட குறைந்தளவு நேரமே ஒதுக்கப்படும் ஏதேச்சாதிகார நிலைமை. ஆட்சியாளர்களை எவ்வாறு அணுகுவது, அதிகாரமளித்த மக்களை எவ்வாறு அணுகுவது என்ற இரண்டும் கெட்டான் நிலையில் ஒட்டுமொத்த தமிழ் தலைமைகள்.
யுத்த காலத்திலும், யுத்தத்தின் பின்னரான எட்டு ஆண்டுகள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டிப் போராடும் மக்களின் மனங்களில் ஆண்டுகள் ஆயிரமானாலும் 2009 மே 18 நினைவுகள் அழியுமா? ஒருபோதும் இல்லை. அந்த நாட்களை மறக்க முடியாது. அன்றைய நாட்கள் ஒவ்வொரு தமிழ் மகனினதும் உள்ளக்கிடக்கைகளில் வடுக்களாய் மாறியிருக்கின்றன.
அந்த வடுக்களின் வெளிப்பாட்டை கொட்டித்தீர்ப்பதற்காக தான் ஒவ்வொரு ஆண்டும் மே 18அன்று தங்களின் இன்னுரை ஈகம் செய்த அத்தனை ஆன்மாக்களின் சாந்திக்கான பிரார்த்தனை நாளாக, நினைவேந்தல் நாளாக தமிழர் தாயகத்தில் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்றது.
அந்த வகையில் இந்த ஆண்டும் வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் மூன்றாவது ஆண்டாக எட்டாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகளாகியிருந்தன. இம்முறை வழமைக்கு மாறாக அனைத்து தமிழ் பேசும் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை இன, மத, மொழிபேதமின்றி இந்நிகழ்வில் பங்கேற்குமாறு ஏற்பாட்டு சபையின் முதல்வர் என்றவகையில் விக்கினேஸ்வரன் அழைப்பு விடுத்திருந்தார்.
அதற்கமைய நேற்று முன்தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடலில் காலை முதலே வடக்கு, கிழக்கு உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் அலையெனத் திரண்டார்கள். மக்கள் பிரதிநிதிகளும் திரண்டார்கள். ஆட்சி மாற்றம் நிகழ்ந்து ஜனநாயக வெளி உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படும் தற்போதைய சமகாலச் சூழலினை உறுதிப்படுத்தும் வகையில் இராணுவம், பொலிஸ் ஆகியோரின் எவ்விதமான பிரசன்னங்களுமற்ற சூழலில் அனைவரும் ஒன்று கூடினார்கள்.
ஆனாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இளைஞர்கள் புதிய தொலைபேசி தாங்கலாக புலனாய்வு வேலையை செவ்வனே நிறைவேற்றிவந்தனர். மக்கள் முதல் மக்கள் பிரதிநிதிகள் வருகை தருவது, கலந்துரையாடுவது என அனைத்தையும் ஒன்றுவிடாமல் பதிவு செய்யும் பணியை செவ்வனே முன்னெடுத்தார்கள். இதில் தமிழ் சமூகத்தைச் சார்ந்த இளைஞர்களும் பங்கெடுத்திருந்தது தான் சாபக்கேடான வேதனையாகின்றது.
இவ்வாறிருக்கையில் எட்டாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் முதற்தடவையாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் பங்கேற்றார். அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாய்க்கட்சியைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் முதற்தடவையாக இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
வழமைபோன்றே அகவணக்கம், முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் அஞ்சலி உரை என்பன நடைபெற்றன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றுவதற்கு எத்தனையோ மக்கள் பிரதிநிதிகள் ஏற்பாட்டுக்குழுவின் முக்கியஸ்தரான வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரனுடன் முட்டிமோதிய நிலையில் மூத்த தலைவரான சம்பந்தன் அஞ்சலி உரையைச் செய்வதற்கு அழைக்கப்பட்டார். இவரைக்கூட வடக்கு முதல்வரிடம் உறுப்பினர் ரவிகரன் அந்த இடத்தில் ஒருவார்த்தை கேட்ட பின்னரே அழைப்பு அறிவிப்பை ஒலிவாங்கியில் செய்திருக்கின்றார்.
அதன்பின்னர் சம்பந்தன் உரையாற்றிக்கொண்டிருக்கும்போதே ஊடகவியலாளர் ஒருவர் இடையீடு செய்து எழுப்பிய வினாவையடுத்து எட்டு ஆண்டுகளுக்கு பிறகு வந்து அரசியல் பேசுகின்றார் என்ற குற்றச்சாட்டுடன் எதிர்ப்பு கோஷங்கள் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டன.
ஈற்றில் ஆத்மாக்களின் ஈடேற்றத்திற்கான சாந்திப்பிரார்த்தனை நிகழ்வில் குழப்பம் என்ற விடயம் மட்டுமே காற்றுத்தீயாக எங்கும் சென்றது. தம்மை ஈகம் செய்த உறவுகளிற்கான அஞ்சலி நிகழ்வின் புனிதத் தன்மை அப்படியே நந்திக்கடல் காற்றில் கரைந்து விட்டிருந்தது.
தமிழ்த் தலைவர் அஞ்சலி உரை நிகழ்த்தியபோது ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியது சரியா தவறா என்பது வாதப்பிரதிவாதத்திற்குரியது. ஆனால், பொறுமையாக அனைத்து விடயங்களையும் கையாளுகின்றார் என்று இந்தியப்பிரதமர் மோடியே பாராட்டுமளவிற்கு இருக்கும் அவர் இந்த விடயத்திலும் பொறுமை காத்திருந்தால் நன்றாகவிருந்திருக்கும்.
ஆகக்குறைந்தது உங்களின் கேள்விக்கு நான் பதிலளிக்கின்றேன். சற்று பொறுங்கள் என்றாவது கூறியிருக்கலாம். அவ்வாறு கூறியிருந்தால் கூட அமைதியான நிலைமையே நீடித்திருக்கும். வீணான அவமானங்களும் எழுந்திருக்காது என்பதொருவிடயம்.
அடுத்ததாக சம்பந்தன் ஏன் எட்டு ஆண்டுகள் கழித்து வந்தார்? அப்படியென்றால் தேர்தல் வரப்போகின்றதா? தமிழரசுக்கட்சியின் சரியும் செல்வாக்கை தூக்கி நிறுத்த வந்தாரா என்ற வினாக்களெல்லாம் பொதுமக்களால் அந்த முள்ளிவாய்க்கால் திடலில் காதுபடக் கேட்ட விடயங்கள். அரசியல்வாதிகள் இந்த கேள்விகளை கேட்டால் அது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று இலகுவாக பதிலளித்து விடமுடியும். ஆனால் ஆணைவழங்கிய பொது மக்கள் இந்தக் கேள்விகளை கேட்கின்றபோது நிச்சயம் முழுமமையான பதிலொன்று வழங்கவேண்டியுள்ளது.
இருப்பினும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு நான் போகத்தீர்மானித்திருக்கின்றேன். ஆனால் அதனை வெளியிட விரும்பவில்லை என்று தயக்கமாகவே தனது பயணத்திற்கான அறிவிப்பை எமது பத்திரிகைக்கு தெரிவித்தவர் சம்பந்தன். அதன்போது வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னை அழைத்துள்ளார்கள். அத்தோடு, தற்போதைய நிலைமையில் தென்னிலங்கை உட்பட கொழும்பு அரசியல் களத்தில் நினைவேந்தல் நிகழ்வுக்கு வேறு அர்த்தம் கற்பிக்கப்படுவதால் தான் அங்கு செல்லும் முடிவை எடுத்திருக்கின்றேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
அதேநேரம் வடக்கு மாகாண முதலமைச்சரும் நினைவேந்தல் நிகழ்விற்கான அழைப்புக்குறிப்பில் அனைவரும் பங்கேற்கவேண்டுமென்றே அழைப்பு விடுத்திருக்கின்றார். ஆகவே எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் அந்த நிகழ்வில் பங்கேற்றதில் எந்தவிதமான தவறுகளும் இல்லை. அவர் இந்த நிகழ்வில் பங்கேற்கக்கூடாது என்று யாரும் கூறவில்லை. ஆனால் நெருக்கடியான சூழலில் 2015 ஆம் ஆண்டும் அதற்குப் பின்னரான நிலைமையிலும் அவர் ஏன் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடும் அவருடையதே.
இதுவொருபுறமிருக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் ஏகோபித்து தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் ஆணை வழங்கியிருக்கின்றார்கள். கூட்டமைப்பின் தீர்மானங்கள் அனைத்தையும் விரும்பியோ விரும்பாமலோ மக்கள் ஆதரிக்கின்றார்கள். ஐ.நா. மனித உரிமைகள் தீர்மானம் முதல் நல்லாட்சி அரசாங்கத்தின் முற்போக்கான செயற்பாடுகளுக்கு ஆதரிக்கும் முடிவு வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்த தீர்மானங்களையும் மக்கள் எதிர்த்து வீதியில் இறங்கவில்லை.
கூட்டமைப்பிற்கும் இந்த விடயங்கள் தொடர்பில் குழப்பங்களும், முரண்பாடுகளும் காணப்படுகின்றதே தவிர தமிழ் மக்கள் அதனை விரும்பாது விட்டாலும் எதிர்த்து நிற்கவில்லை. போராடவில்லை. கூட்டமைப்புடனேயே இருக்கின்றார்கள். அவ்வாறிருக்கையில் அத்தகைய மக்கள் ஏன் இன்று அதன் தலைமையை முக்கிய செயற்பாடுகளில் பங்கேற்றுள்ள சுமந்திரன் போன்றவர்களை நினைவேந்தல் நிகழ்வில் கடிந்தார்கள். குறைபட்டார்கள் என்ற நியாயமான கேள்வியை ஒரு தடவை சிந்தித்துபார்க்க வேண்டியுள்ளது.
2009ஆம் ஆண்டுக்கு பின்னரான காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிப்பீடத்தில் இருக்கும்போது சர்வதேசம் பார்த்துக்கொள்ளும், சர்வதேசம் கைவிடாது என்ற வாக்குறுதிகள் தான் கூட்டமைப்பால் மக்களுக்கு அளிக்கப்பட்டன.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, ஆட்சி மாற்றம் அவசியம், ஆட்சி மாறினால் தான் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என்ற உறுதிமொழி கூட்டமைப்பினாலேயே வழங்கப்பட்டது. ஆக, ஆட்சி மாறினால் அனைத்தும் சரியாகிவிடும் என்ற நிலைப்பாட்டை தமிழ் மக்கள் எடுக்குமளவிற்கு அந்த வாக்குறுதிகள் அமைந்திருந்தன.
ஆனால் ஆட்சிமாறி இரண்டு ஆண்டுகள் கடந்திருக்கின்றபோதும் அந்த வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகளாகவே இருக்கின்றன. அவை எவையுமே நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. விரக்தியின் உச்சத்திற்கு சென்ற மக்கள் வீதியோரங்களில் போராடுகின்றார்கள். படையினருடன் முரண்படுகின்றார்கள். மக்களின் போராட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவதற்கு மக்கள் பிரதிநிதிகள் ஒருபோதும் இடமளித்திருக்கக்கூடாது.
இவ்வாறு மாதக்கணக்காக மக்கள் வீதிகளில் போராடிக்கொண்டிருப்பதற்கு இடமளித்ததன் விளைவு தான் தாம் வாக்களித்தவர்கள் எதுவுமே செய்யவில்லை, வெறுமனே தம்மை பார்வையிட்டு ஊடக விளம்பரம் தேடிச் சென்று விடுகின்றார்கள் என்ற ஆதங்கம் அம்மக்களிடத்தில் வெகுவாக வலுத்திருக்கின்றது என்பதே உண்மை நிலை.
அதுமட்டுமன்றி இந்த முள்ளிவாய்க் கால் நினைவேந்தல் நிகழ்வில் கூட ஒன்றல்ல இரண்டல்ல ஒன்பது பிள்ளைகளை உரிமைப்போராட்டத்திற்காக ஈன்று கொடுத்த தாயார் வறுமையின் கோரத்தால் வாக்குபோட்ட அரசியல்வாதியிடம்சென்றபோது கருத்திலெடுக்காத நிலைமையும் அலைக்கழிக்கின்ற நிலைமையும் தான் தலைமைகளை எதிர்த்து கருத்துபிரயோகம் செய்யும் நிலைமையை உருவாக்கியிருக்கின்றது.
இதனைவிடவும் குறித்த நிகழ்விற்கு வந்த சில காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அஞ்சலி செய்வதா, இல்லையா? என்ன மனநிலையில் இருந்தார்கள். தனது மகன், கணவன், தந்தை, சரணடைந்தபோது அவர்களுடன் சென்ற எவராவது இந்த நிகழ்வுக்கு வருகின்றார்களா? அவர்களிடத்தில் விபரங்களை சேகரிக்க முடியுமா? என்ற எதிர்பார்ப்பிலும் வந்தார்கள். இப்படி கடினமான மனநிலையில் உணர்ச்சிகளால் கட்டுண்ட நிலையிலே உள்ளவர்களாலேயே அந்த திடல் நிறைந்திருந்தது என்பதே யதார்த்தம்.
அவ்வாறிருக்கையில் சம்பந்தனுக்கு ஆதரவு இருக்கின்றதா? இல்லை மாற்றுத்தலைமையாகவிருக்கும் விக்கினேஸ்வரனுக்கு ஆதரவு இருக்கின்றதா என்று மதிப்பீடு செய்யும் களம் அதுவல்ல. மாவை.சேனாதிராஜாவா, சுமந்திரனா? சுரேஷ்பிரேமச்சந்திரனா?, செல்வம் அடைக்கலநாதனா? சித்தார்த்தனா? அதிகளவில் மக்களைக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். என்றெல்லாம் மதிப்பெண்கள் வழங்கும் இடமுமல்ல.
உயிர்நீத்த மக்களின் பால் ஒன்றிணைந்து அவர்களுக்காக அஞ்சலி செலுத்தி எதற்காக அந்த மக்கள் மடிந்தார்கள் என்பதை மீட்டிப்பார்த்து அதற்குரிய நியாயமான பாதையில் செல்வதற்கான திடசங்கற்பத்தை ஒன்றிணைந்து பூணும் நாள். ஆனால் அவ்வாறான நிலைமையொன்றை முள்ளிவாய்க்கால் திடலில் காணமுடிந்திருக்கவில்லை.
விக்கினேஸ்வரனும் அவரது அணியினரும், சம்பந்தனும் அவரது அணியினரும் அதற்கு மேலாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் ஆங்காங்கே குழுக்களாக இருந்தனர். அக்கட்சிகளைச் சார்ந்த மாகாண சபை உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ஆங்காங்கே இருந்தனர். வடமாகாண அமைச்சர்கள் தலைமையில் ஒவ்வொரு குழுவினர். சிவாஜிலிங்கமும், அனந்தி சசிதரனும் அதேதிடலில் சற்று தாமதமாக மற்றொரு நினைவேந்தல் என்றே நிலைமைகள் இருந்தன.
கூட்டமைப்பு என்ற குடைக்குள் இத்தனை பிரிவுகள் ஏன்? சுயகட்சி பலம் தேடும் அரசியலை செய்ய விரும்பினால் கூட்டமைப்பை கலைத்துவிட்டு தனித்தனியாக கட்சி அரசியலை முன்னெடுத்திருக்கவேண்டும். அதிலும் ஒரு அஞ்சலி நிகழ்வில் கூட இந்த நிலைமை என்றால் தமிழ் மக்களின் எதிர்காலம் என்ன? என்ற வினாவே மேலெழுகின்றது.
ஆனால் தமிழ் மக்களின் நேர்மறை அரசியல் கொள்கைகொண்டதாக கருதப்படுகின்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த உறுப்பினரும் வடமாகாண எதிர்க்கட்சித்தலைவருமான தவராஜா இந்நிகழ்வில் கட்சிபேதங்களை துறந்து பங்கேற்றமை ஒரு முன்மாதிரியான விடயம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது.
அதுமட்டுமன்றி தமிழ்த் தேசிய சிந்தனையில் இருக்கின்ற அரசியல் கட்சியான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனியாகவொரு நினைவேந்தல் நிகழ்வை செய்திருக்கின்றது. தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராக விக்கினேஸ்வரனை ஏற்றுக்கொண்டுள்ள அக்கட்சி மாகாண சபைகளை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளவில்லை என்ற காரணத்தால் வடக்கு மாகாணசபை ஏற்பாடு செய்த நிகழ்வில் பங்கேற்கவில்லையாம். இது என்ன நியாயம்?
உயிர்நீத்த எம்மவர்களுக்காக உங்களது தனிப்பட்ட அரசியலைவைத்து இத்தனை பிரிவுகள் அவசியம் தானா?. ஒரு சோகத்தில் கூட அரசியல் கட்சி பேதங்களை மறந்து இணையமுடியாது விட்டால் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு, நீதி என்பவற்றையெல்லாம் எப்படி பெற்றுக்கொடுக்கப்போகின்றீர்கள்? ஏனென்றால் அதனைப்பெற்றுக் கொடுத்து விட்டோம் என்று கூறி அரசியல் ஆதாயத்தை அதிகரிக்கவல்லவா முயல்வீர்கள் என்ற எண்ணத்தையே இந்த நிகழ்வு படிப்பினையாக வழங்குகின்றது.
தமிழினத்தை அழிக்கத்துடித்துக்கொண்டிருக்கும் பெரும்பான்மை இனத்தை ஒருநொடி பாருங்கள். ஆட்சிக்காக முட்டிமோதிக்கொண்டிருந்தவர்கள் ஆட்சியில் பெரும்பான்மைக்காக ஒன்றிணைகின்றார்கள். அரசியல் ரீதியாக வெட்டிக்கொடுத்தால் உண்ணுமளவிற்கு கோபம் இருந்தாலும் சுதந்திர தினத்திலும், யுத்த வெற்றி விழாக்களிலும், சிங்கள, பௌத்த நிகழ்வுகளிலும் ஓரணியில் அதுவும் அருகருகே ஆசனங்களில் கூட அமர்கின்றார்கள். அண்மையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை தூற்றித்தள்ளி ஒதுக்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ சர்வதேச வெசாக் தின வைபவத்தில் அருகருகே அமர்ந்திருக்கின்றார்கள் என்றால் அவர்களின் சிந்தனை எங்கிருக்கின்றது.
ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள். வெற்றி விழாகொண்டாடுபவர்களிடத்தில் நீதி கேட்கின்றார்கள். நியாயம் கேட்கின்றார்கள்.உரிமைகோருகின்றார்கள். அப்படியென்றால் தமிழ்மக்களின் பிரதிநிதிகளாக இருக்கும் உங்களிடம் எத்தனை வலிமையான ஒற்றுமை அவசியம் வேண்டும்? ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளுடன் கொள்கை ரீதியான பிரச்சினைகள் காணப்பட்டாலும் ஆகக்குறைந்தது கூட்டமைப்பினுள் ஒரு கட்டமைப்பு அவசியமாகின்றது.
அவ்வாறு கட்டமைப்பாக அமைக்கப்படாது விட்டால் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் சிதைந்து கிடக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் போன்றும் அதற்கு நேரொத்த அரசியல்செய்தும் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது போய் இருக்கும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிலைமையே நாளை தமிழ் தேசத்திலும் ஏற்படும் என்பதை தற்போது தமிழர்களின் பிரச்சினையை கொண்டு இருவேறு பாதையில் பயணித்துக்கொண்டிருக்கும் சம்பந்தனும், விக்கினேஸ்வரனும் உணர்ந்துகொள்வதே அடுத்த கட்ட சாணக்கியமான நகர்வுக்கு உரமாக அமையும்.
அதேபோன்று அடுத்த நினைவேந்தலுக்கு முன்னராவது உயிர்நீத்தவர்கள் மீது நின்று நன்மை தேடாது உணர்வான நிகழ்வாக அமைவதற்காக தமிழ் பேசும் தலைமைகளிடையே பொதுவான வேலைத்திட்டம் அவசியம். குறிப்பாக அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியல் சாராத ஏற்பாட்டுக்குழு ஸ்தாபிக்கப்படவேண்டும். வருடத்தில் ஒருநாள் வரும் தேர்த்திருவிழாவைப்போன்று போனோம் விளக்கை ஏற்றினோம். புகைப்படம் எடுத்தோம். ஊடக அறிவிப்பைச் செய்தோம். புகைப்படமும் செய்தியும் அடுத்த நாள் நாளிதழில் வந்தது என்பதற்கு அப்பால் நினைவேந்தலுக்கு பொருத்தமான திட்டமிடலும் அவசியம்.
எனவே எட்டாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு பல படிப்பினைகளை கற்றுக்கொடுத்திருக்கின்றது. அதனை மையமாக வைத்து தமிழ் தலைமைகள் அடுத்துவரும் காலப்பகுதியில் நடவடிக்கைகளை எடுப்பார்களா? இல்லை மீண்டும் இதேநிலைமை நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது. காலங்கள் ஓடினாலும் காவுகொடுத்த உயிர்களுக்கான கனத்த நெஞ்சமும் கண்ணீரும் என்றுமே மாறாது.
ஆர்.ராம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக