திங்கள், 4 டிசம்பர், 2017

ஜெயலலிதாவுடன் ஒரு பத்திரிகையாளனின் அனுபவங்கள் (அத்தியாயம் 1)

''காலம்தான் எவ்வளவு வியக்கத்தக்க வேகத்தில் ஓடுகிறது'' என்று ஒரு கட்டுரையில் சொல்லுவார், ரஷ்ய எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி. இந்த உணர்வும், இதனை எழுத்திலும், பேச்சிலும் பதிவு செய்வதும், எல்லா காலகட்டங்களிலும், உலகின் பல மொழிகளின் எழுத்தாளர்களிடமும் பரவலாக காணக் கிடைக்கும் விஷயமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது.



முதலமைச்சர் பதவியில் இருக்கும் போதே ஜெயலலிதா இறந்து போய் வரும் 5ம் தேதி யுடன் ஓராண்டு நிறைவடையப் போகிறது. கண் மூடி, கண் திறப்பதற்குள் ஜெயலலிதா வின் முதலாமாண்டு நினைவாஞ்சலி நிகச்சிகளுக்கான காலமும், நேரமும் வந்து விட்டது. இந்த கட்டுரை முதலமைச்சராக பதவியில் இருக்கும் போதே எம்ஜிஆர் 1987 டிசம்பரில் மறைந்த பின்னர் ஜெயலலிதா வின் அரசியலை, கூர்ந்து கவனித்த ஒரு பத்திரிகையாளனின் நேரடி அனுபவப் பதிவாகும்.

1991 ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மக்களவை மற்றும் தமிழக சட்டசபைக்கான தேர்தல் கால கட்டத்தில் முதன்முறையாக ஜெயலலிதாவை நான் பார்த்தேன். அப்போது ''விடிவெள்ளி''என்ற நாளிதழின் நிருபராக இருந்தேன். காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் பத்திரிகை அது. அதன் உரிமையாளரும், ஆசிரியரும் தெள்ளூர் மு தருமராஜன். அவர் தான் என்னை பத்திரிகை உலகுக்கு அறிமுகம் செய்தார். காங்கிரஸ், அஇஅதிமுக கூட்டணியில் இருந்தது.

ஜெ.வுடன் முதல் சந்திப்பு
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் தேர்தல் பிரச்சாரத்தில்தான் அவரை முதன் முறையாக நேரில் கண்டேன். பின்னர் மே 21, 1991 ல் ராஜீவ் காந்தியின் படுகொலை ஜெ வின் தேர்தல் பிரச்சாரத்தை முற்றிலுமாக முடக்கியது. தேர்தல்கள் ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப் பட்டு, அதில் வென்று ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்றார். சுதந்திர இந்தியாவின் தமிழ் நாட்டு அரசியலில் அது வரையில் இல்லாத அளவுக்கு முதலமைச்சருக்கும், பொது மக்களுக்குமான இடைவெளி மிக அதிகமாக இருந்த காலகட்டம் அது.

மக்களை விட்டு விலகியிருந்த ஜெ.
ஜெயலலிதா வின் உயிருக்கு பாதுகாப்பு என்ற பெயரில் பொது மக்களுக்கு எந்த அளவுக்கு இன்னல்களை, இடையூருகளை ஏற்படுத்த முடியுமோ அந்தளவுக்கு இடையூருகள் ஏற்படுத்தப் பட்டன. ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக மட்டுமே ஸ்பெஷல் ஸெக்யூரிட்டி குரூப், Special security Group (SSG) என்ற சிறப்பு பாதுகாப்பு படை ஏற்படுத்தப் பட்டது. இதன் தலைவராக, பிற்காலத்தில் சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டு கொன்ற கே.விஜயகுமார் இருந்தார். விஜயகுமார் இந்திரா காந்தி கொல்லப்பட்ட பின்னர் மத்திய அரசால் உருவாக்கப் பட்ட, ஸ்பெஷல் ப்ரொடக்ஷன் குரூப், Special Protection Group (SPG) என்ற பாதுகாப்பு படையில் பணியாற்றியவர். SPG யின் பணி பிரதமர்கள் மற்றும் பிரதமரின் குடும்பத்தவர்களையும், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒரு சிறப்பு படை.

வானளாவிய அதிகாரம்
SPG படையானது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட ஒரு சட்டத்தின் மூலம் உருவாக்கப் பட்ட ஒரு படை. ஆங்கிலத்தில் சொன்னால் It has statutory powers அதாவது பிரதமரின் பாதுகாப்புக்காக எதையும் செய்யும், சட்ட அதிகாரம் அவர்களுக்கு உண்டு. பிரதமரின் பாதுகாப்பின் முதல் மற்றும் இரண்டாவது அடுக்குகள் இவர்களது முழு கட்டுப்பாட்டில் இருக்கும். பிரதமர் இந்தியா வின் எந்த மாநிலத்துக்கு சென்றாலும், அந்த மாநில டிஜிபி கூட இந்த இரண்டு அடுக்குகளை தாண்டி செல்ல முடியாது. ஆனால் விஜயகுமார் உருவாக்கிய SSG இது போன்ற எந்த சட்டத்தின் மூலமும் உருவாக்கப் பட்டது கிடையாது. இது தமிழக போலீசில் உள்ள போக்குவரத்து பிரிவு, பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் பிரிவு போன்ற ஒரு பிரிவுதான்.

ஆடிய ஆட்டம் நிகழ்த்திய அட்டூழியங்கள்
ஆனால் இந்த SSG ஐ வைத்துக் கொண்டு விஜயகுமாரும், அவரது சிஷ்ய கோடிகளும் ஆடிய ஆட்டமும், நிகழ்த்திய அட்டுழீயங்களும் சொல்லி மாளாதவை. ஒரு கட்டத்தில் SSG க்கும் தமிழக போலீசுக்கும் பல இடங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டன. SSG யில் ஒரு சப் இன்ஸ்பெக்டர் அந்தஸ்த்தில் உள்ள ஒரு அதிகாரி மாநில போலீசின் எஸ்.பி. அந்தஸ்து உள்ள அதிகாரிக்கு எல்லோர் முன்னிலையிலும் உத்திரவுகளை பிறப்பிப்பார். சில இடங்களில் உள்ளூர் போலீசுக்கும், SSG க்கும் மோதல்களும் கூட ஏற்பட்டன. 1996 ல் ஜெயலலிதா படுதோல்வி அடைந்து, அவரே தோற்றுப் போய், அஇஅதிமுக ஆட்சியை இழந்ததற்கான பல காரணங்களில் முக்கியமான காரணங்களில் ஒன்று SSG யின் அட்டுழியங்களும் நிச்சயமாக ஒன்று என்று உறுதியாக சொல்லலாம்.

மறக்க முடியாத நிகழ்வுகள்
1992 மே மாதம், ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது, 1995 ஏப்ரல் மாதம், முதலமைச்சர் ஜெயலலிதா வுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர, அன்றைய ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி க்கு ஆளுநர் டாக்டர் சென்னாரெட்டி அனுமதி கொடுத்தது, 1995 ல் நடந்த வளர்ப்பு மகன் திருமணம் போன்ற பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஏப்ரல் 26, 1995 ல் சட்டமன்றத்தில் பேசிய ஜெயலலிதா, இப்படி சொன்னார், ‘'நான் ஏன் ஆளுநர் சென்னா ரெட்டியை சந்திப்பது இல்லை என்று எதிர்கட்சிகள் கேட்கின்றார்கள். உங்களிடம் நான் இன்று ஒரு உண்மையை சொல்லுகிறேன். ஆளுநரை ஒரு முறை நான் அவரை சந்தித்த போது, என்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தார். அதனால்தான் நான் ஆளுநரை சந்திப்பது இல்லை'' என்று கூறினார் ஜெயலலிதா. ஊழல் தலைவிரித்து ஆடியது .... ‘'ரசீது கொடுத்து லஞ்சம் வாங்கும் அளவுக்கு'' வெளிப்படையாகவே ஊழல், ஊழிக் கூத்தாடியது'' என்று ஜெயலலிதா வுக்காக ஒரு காலக் கட்டத்தில் வாதாடிய வழக்கறிஞர் என்னிடம் கூறினார்.

காலில் போட்டு மிதித்தவர் ஜெ.
எல்லா ஜனநாயக பண்புகளையும் தன் காலின் கீழ் போட்டு மிதித்து துவம்சம் செய்தார் ஜெயலலிதா. பத்திரிகையாளர்கள் மற்றும் எதிர் கட்சித் தலைவர்கள் மீது 120 க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகள் போடப்பட்டன. அன்றைய சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி, ஏ.ஆர். லட்சுமணனின் மருமகன் மீது கஞ்சா வழக்கு போடப்பட்டது. 69% சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போட்ட வழக்கறிஞர் கே.என். விஜயன் மற்றும், டான்சி வழக்கில் ஜெ வுக்கு எதிராக வாதாடிய வழக்கறிஞர், ஷண்முகசுந்தரம் ஆகியோர் மீது கொலை வெறித் தாக்குதல்கள் நடத்தப் பட்டு, அதிர்ஷ்டவசத்தால் அவர்கள் உயிர் தப்பினர். 1995 ல் அன்றைய தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன், ஜெ வுக்கு எதிராக செயற்பட்டார் என்பதற்காக, டில்லியிலிருந்து ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் அவர் சென்னை வந்த போது, சென்னை விமான நிலையத்தை அஇஅதிமுக வினர் முற்றுகையிட்டனர். கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விமான நிலையத்துக்கு உள்ளேயே டி என் சேஷன் தங்கியிருந்தார். பின்னர் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து வந்த கடுமையான எச்சரிக்கைக்குப் பிறகு, அன்றைய தமிழக டிஜிபி ஸ்ரீபால் நேரடியாக போலீஸ் படையுடன் போய் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்த பின்னர்தான் சேஷனால் வெளியே வர முடிந்தது. சேஷன் தங்கியிருந்த நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஹோட்டல் அடுத்த சில நாட்களில் தாக்கப்பட்டது. இது போன்ற வரம்பற்ற ‘'ஜனநாயக நற்காரியங்கள்'' நடத்தப்பட்டன.

படு தோல்வியைத் தந்த 1996
1996 தேர்தலில் படுதோல்வியை தழுவினார் ஜெயலலிதா. 4 இடங்களில் மட்டுமே அஇஅதிமுக வென்றது. ஜெயலலிதா வே பர்கூரில் சுகவனம் என்ற திமுக வேட்பாளரிடம் தோற்றுப் போனார். 1996 டிசம்பர் 7 ம் தேதி ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜனவரி 3 ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். 1991 - 1996 ஜெ ஆட்சியில் நிகழ்ந்த ஊழல்களை விசாரிப்பதற்காக மூன்று சிறப்பு நீதிமன்றங்கள் அன்றைய மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அமைத்தது. இதில் டான்சி மற்றும் கொடைக் கானல் ப்ளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்குகளில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப் பட்டு, பிப்ரவரி 2ம் நாள், 2000 ம் ஆண்டு அவருக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப் பட்டது.

வாஜ்பாயைக் கவிழ்த்து விட்ட ஜெ.
1996 ல் படு தோல்வியடைந்த அஇஅதிமுக 1998 பிப்ரவரியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 18 இடங்களை கைப்பற்றியது. மத்தியில் வாஜ்பாய் தலைமையில் அமைந்த அரசுக்கு ஜெ தன்னுடைய 18 எம் பி க்களின் ஆதரவை வழங்கினார். ஆனால் ஆதரவு கடிதத்தை கொடுப்பதற்கு முன்னர் ஒரு வார காலம் கால தாமதம் ஆனது. அந்த ஒரு வார காலத்தில் ஜெ வின் ஆதரவு கடிதத்தை பெறுவதற்கு பாஜக ஆலாய் பறந்தது ....அப்போது ஒரு கட்டத்தல் சிவ சேனா தலைவர் பால் தாக்கரே இப்படி கேட்டார்; ‘'அடல்ஜி நீங்கள் ஏன் ஆட்சியமைக்க உரிமை கோரி இன்னமும் குடியரசு தலைவரை அணுகவில்லை? அதற்கு வாஜ்பாய் சொன்ன பதில்; ‘'The love letter from Chennai has not come yet", அதாவது, ‘'சென்னையிலிருந்து வர வேண்டிய காதல் கடிதம் இன்னமும் வரவில்லை'' என்று கூறினார். அப்போது நான் ஏஎன்ஐ தொலைக் காட்சி செய்தி ஏஜன்சியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எனக்கு கொடுத்த அந்த பேட்டியில்தான் அந்த முடிவை, வாஜ்பாய் அரசுக்கு கொடுக்கும் முடிவை ஜெ தெரிவித்தார். என்னுடைய பத்திரிகை அனுபவத்தில் அதுதான் நான் கொடுத்த முதல் Breaking News என்று என்னால் சொல்ல முடியும். ஆனால் ஏஎன்ஐ ஒரு செய்தி ஏஜன்சி என்பதால் தனிப்பட்ட எந்த ஊழியரின் பெயரையும் நாங்கள் போட்டது கிடையாது.

வாஜ்பாய் பட்ட பாடு
பின்னர் அஇஅதிமுக வின் ஆதரவு கடிதத்தை குடியரசு தலைவர் கே.ஆர். நாராணனிடம் கொடுத்தார் ஜெயலலிதா. இது பிப்ரவரி 1998. அதன் பின்னர் வாஜ்பாய் அரசை 14 மாதங்கள் பாடாய் படுத்தி எடுத்தார். அந்த அமைச்சரவையில் அஇஅதிமுக வும் அங்கம் வகித்தது. தம்பிதுரை, குமார் போன்றவர்கள் மத்திய அமைச்சர்களாக பதவி வகித்தனர். ‘'இந்த 14 மாதங்கள் என் அரசியல் வாழ்வின் மிக முக்கியமான மாதங்கள். இந்த 14 மாதங்களில் நான் அனுபவித்த துன்பங்களை, 1975 - 1977 காலகட்டத்தில், பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த அவசர நிலை காலத்தின்போது என்னை சிறையில் அடைத்த போது கூட நான் அனுபவத்தது இல்லை. காலையில் தூங்கி எழும்போது இன்று இரவு நான் பிரதமராக படுக்க செல்லுவேனா அல்லது அரசு கவிழ்ந்து பதவி இழந்து படுக்க செல்லுவேனா என்று எனக்குத் தெரியாது'' என்று செப்டம்பர், 1999 ல் சென்னையில் நடைபெற்ற மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது வாஜ்பாய் குறிப்பிட்டார்.

திமுக பக்கம் பாஜகவை கொண்டு சேர்த்த ஜெ. ஜெயலலிதா வைத்த கோரிக்கைகள், குறிப்பாக அப்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த மு.கருணாநிதியின் திமுக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரி கடும் நிர்ப்பந்தம் கொடுத்தது ஆகியவற்றைத் தான் அப்படி வாஜ்பாய் குறிப்பிட்டார். வாஜ்பாய் அரசை ஜெயலலிதா கவிழ்த்தார். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. அப்போது மக்களவையில் 6 எம் பி க்களை கொண்டிருந்த திமுக ஆதரித்தும் ஆட்சியை இழந்தார் வாஜ்பாய். 1999 செப்டம்பரில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக - பாஜக கூட்டணி மலர்ந்தது.
 -ஆர். மணி


(தொடரும்)
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல