இலங்கையின் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை ஆயுதங்களை, நேற்று (புதன்கிழமை) ராணுவத்தினர் கைப்பற்றினர்.
சம்மாந்துறை போலீஸ் பிரிவிற்குட்பட்ட மல்கம்பிட்டி - விளினையடி பகுதியில் ராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
புதைத்து வைப்பு
நபர் ஒருவருக்கு சொந்தமான உபயோகப்படுத்தாத காணியொன்றின் புதைக்கப்பட்ட நிலையில், இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கையின் முக்கிய தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். அதனைத் தொடர்ந்து இலங்கையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே தேடுதல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
என்னென்ன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன?
- எம்.பி 25 ரக அமெரிக்க தயாரிப்பு மைக்ரோ கைத்துப்பாக்கி - 01
- 9 எம் எம் கைத்துப்பாக்கி - 01
- பென் துப்பாக்கிகள் - 02
- ஷாட்கண் (Shot gun) துப்பாக்கி தோட்டாக்கள் - 08
- ரி 56 ரக துப்பாக்கி ரவை கூடு - 01
- தோட்டாக்கள் - 170
- வயர் தொகுதி - 23
- ஒவ்வொன்றும் 25 கிலோகிராம் எடைகொண்ட அமோனியம் நைட்ரேட் உரப்பைகள் - 04
- ராணுவ மேலங்கி - 01
- கைத்துப்பாக்கி தோட்டாக்கள்
இதேவேளை வீடொன்றிலிருந்து வாள் ஒன்றும், கல்குவாரி ஒன்றில் இருந்து 200 ஜெலட்டின் குச்சிகளும் மீட்கப்பட்டன.
போலீஸ் மோப்ப நாயின் உதவியுடன் இத்தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தற்கொலை குண்டுதாரிகளின் தகவல்கள் வெளியீடு
இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் 9 தற்கொலை குண்டுதாரிகள் தொடர்பான தகவல்களை போலீஸார் நேற்று வெளியிட்டனர்.
கொழும்பு - கொச்சிக்கடை - புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீதே முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது.
கொழும்பு - மட்டக்குளி பகுதியில் வசித்த அலாவூதீன் அஹமட் மூவாத் என்ற நபரால், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, கொழும்பு ஷங்கிரிலா நட்சத்திர விடுதியின் மீது இரண்டு தற்கொலை குண்டுதாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.
இலங்கை போலீஸார் வெளியிட்டுள்ள தற்கொலை குண்டுதாரிகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்ட இடங்கள்.
01. ஷங்கிரிலா நட்சத்திர விடுதி - மொஹமத் ஹாஷிம் மொஹமட் சஹரான்
02. ஷங்கிரிலா நட்சத்திர விடுதி - மொஹமத் இப்ராஹிம் இல்ஹாம் அஹமத்
03. சினமன் கிரான்ட் நட்சத்திர விடுதி - மொஹமத் இப்ராஹிம் இன்ஷாப் அஹமத்
04. கிங்ஸ்பேரி நட்சத்திர விடுதி - மொஹமத் அசாம் மொஹமத் முபாரக்
05. கடுவாபிட்டிய தேவாலயம் - ஆஜ் மொஹமத் முகமது ஹஸ்துன்
06. கொச்சிக்கடை - புனித அந்தோனியார் தேவாலயம் - அலாவூதீன் அஹமத் மூவாத்
பெயர்கள் வரிசைப்படி:
07. மட்டக்களப்பு - சியோன் தேவாலயம் - மொஹமத் நாஷர் மொஹமத் அசாத்
08. தெஹிவளை தாக்குதல் - அப்துல் லதீப் ஜமீல் மொஹமத்
09. தெமட்டகொடை தாக்குதல் - பாதீமா இல்ஹாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக