எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் எஸ் பி சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் கொணடம்பேட்டையில் 1946-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி மகனாக பிறந்தவர். இவரது இயற்பெயர் ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் ஆகும். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ். பி. சைலஜா, கிரிஜா இளைய தங்கைகள் ஆவார். சைலஜா 5000-க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.இவர் சாவித்திரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் மகள் பல்லவி, மகன் எஸ்.பி.பி. சரண். சரண் சிறந்த பின்னணி பாடகர், நடிகர், சின்னத்திரை தொடர் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு வளர்ந்து வருகிறார்.
எஸ்.பி.பி-யின் தந்தை ஒரு ஹரிஹத கலைஞர். இவரது தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் போது அதை கவனித்து, இசைக் கருவிகளையும் வாசிக்க கற்றுக் கொண்டார். இவரது ஆசை பாடகர் ஆக வேண்டும் என்பது. ஆனால் இவரது தந்தைக்கு இவர் ஒரு இன்ஜினியர் ஆக வேண்டும் என்பதற்காக ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால், தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, சென்னையில் உள்ள கல்லூரியில் சேர்ந்து படித்தார். இசையின் மீதுள்ள ஆர்வத்தால், கல்லூரியில் படிக்கும் போது பல இசைப்போட்டிகளில் கலந்து பரிசுகளைப் பெற்றுள்ளார்.
1964-ம் ஆண்டு அமெச்சூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னை மையமாக கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. முதல் பரிசு பெற்றார். ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார். இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா (ஹிட்டார் பிறகு ஹார்மோனியம்), அனிருதா (ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (ஹிட்டார்) ஆகியோராவர்.
இவர்களோடு சேர்ந்து எஸ்.பி.பி. இசை நிகழ்ச்சிகளையும் நாடககச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ்.பி.பி. சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிக்கடி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ்.பி.பி.க்கு முதல் போட்டி பாடல் பி. பி. ஸ்ரீனிவாஸ் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலாகும்.
எஸ்.பி.பி.க்கு முதல் அரங்கேற்ற படம் எஸ்.பி. கோதண்டபாணி இசையமைத்த தெலுங்கு திரைப்படம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாடா ரமண்ணாவுக்காக 1966 டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி ஒரு பின்னணி பாடகராக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் 'ராவே காவ்ய சுமபாலா ஜவராலா' என்ற பாடலை பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸோடு இணைந்து பாடினார்.
அரங்கேற்ற பாடலுக்கு பிறகு வெறும் எட்டு நாட்களில் கன்னடம் மொழிப்பாடலை 1966-ல் நகரே அதே ஸ்வர்க என்ற திரைப்படத்தில், கன்னட நகைச்சுவை நடிகர் டி. ஆர். நரசிம்மராஜுக்கு மாமரவில்லோ கோகிலே ௭ல்லோ பாடலைப் பாடினார்.
முதல் தமிழ் பாடல்
எஸ்.பி.பி அவர்கள் முதன்முதலில் ஹோட்டல் ரம்பா என்னும் திரைப்படத்தில் 'அத்தானோடு இப்படியிருந்து ௭த்தனை நாளாச்சு' ௭ன்ற பாடலைப் பாடினார். ௭திர்பாராத நிலையில் ஹோட்டல் ரம்பா திரைப்படம் வெளியிடப்படவில்லை. அதன் பின், தமிழ் சினிமாவில் அவர் பாடிய முதல் பாடல் 1969 ஆண்டு வெளிவந்த எம்ஜிஆர் படமான ‘அடிமைப்பெண்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல்.
ஆனால், அதே ஆண்டு வெளியான ஜெமினி கணேசன் நடித்த, ‘சாந்திநிலையம்‘ என்ற படத்தில் இடம்பெற்ற ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ என்ற பாடல்தான் முதலில் ரெகார்ட் செய்யப்பட்டது. முதலில் வெளியானது தான் ஆயிரம் நிலவே வா என்ற பாடல்.
எஸ்.பி. பாலசுப்பிரமண்யம் 1979-ல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படப் பாடல்கள் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். சங்கராபரணம் தெலுங்கு திரையுலகில் சிறந்த திரைப்படமாக திகழ்கிறது. இத்திரைப்படம் இயக்குனர் கே. விஸ்வநாத்தால் இயக்கப்பட்டது. கே விஸ்வநாத் எஸ்.பி.பிக்கு பெரியப்பா மகன் ஆவார்.
இத்திரைப்படத்தின் பாடல்கள் திரையிசை திலகம் கே.வி. மகாதேவனால் கர்நாடக சங்கீதத்தை கொண்டு உருவாக்கப்பட்டது. எஸ்.பி.பி முறையாக கர்நாடக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தை வைத்து சங்கராபரணம் படப்பாடல்களை பாடினார்.
இத்திரைப்படத்திற்காக இவர் முதல் தேசிய விருதும் பெற்றார். இவருக்கு கிடைத்த அடுத்த தேசிய விருது ஏக் தூஜே கே லியே (1981) இந்தி மொழி திரைப்படம் இது இவருடைய முதல் இந்தி திரைப்படம். இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரால் எடுக்கப்பட்டது.
இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், டி. இமான், ஜி. வி. பிரகாஷ்குமார், நிவாஸ் கே. பிரசன்னா, அனிருத் ரவிச்சந்திரன், பிரேம்ஜி அமரன் போன்றோரின் இசையமைப்பிலும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார்.
2013-ம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் ஷாருக்கானுக்காக விஷால்-சேகரின் இசையில் நிக்கல் நா சாயி சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தின் டைட்டில் பாடலைப் பாடினார். இந்த பாடல் சிறு குழந்தைகளைக் கூட நடனம் ஆட வைக்கும் ஒரு பாடலாக உள்ளது.
இப்பாடல் பதினைந்து வருடங்களுக்கு பிறகு இவர் இந்தி திரையிசையில் பாடியதாகும். பாலசுப்பிரமணியம் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திரமாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் மதங்களை கடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளார். இதற்காக 2015-ம் ஆண்டுக்கான கேரள அரசின் "ஹரிவராசனம்" விருது பெற்றுள்ளார்.
4 மொழிகளில் 6 தேசிய விருதுகள்
எஸ்.பி.பி அவர்கள் நான்கு மொழிகளில் பாடல் பாடியதற்காக இந்தியாவில் நம்ப முடியாத ஆறு தேசிய விருதுகளை வென்றுள்ளார். அதில் இந்தியில் வெளிவந்த ஏக் தூஜே கே லியே என்னும் திரைப்படத்தில் உள்ள தேரே மேரே பீச் மெய் பாடலுக்காக எஸ்.பி.பி-க்கு தேசிய விருது கிடைத்தது. அதேப் போல் தமிழை எடுத்துக் கொண்டால், மின்சார கனவு திரைப்படத்தில் உள்ள தங்க தாமரை மலரே பாடலை பாடியதற்கு தேசிய விருது கிடைத்தது.
பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருது
பின்னணி பாடகரான எஸ்.பி. பாலசுப்பிரமணியம் 2001 ஆம் ஆண்டு இந்திய குடிமக்களின் கௌரவமாக கருதப்படும் பத்மஸ்ரீ விருதையும், 2011 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் வென்றுள்ளார்.
பல ஆதாரங்கள் மற்றும் அறிக்கைகளின் படி, இந்திய திரைப்பட பின்னணி பாடகரான எஸ்.பி.பி அவர்கள் சுமார் 40,000-த்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அதுவும் 16 மொழிகளில் பாடி, உலக சாதனையும் படைத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாள திரைத்துறையில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமான ஒரு பாடகராக வலம் வந்துள்ளார்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த், சல்மான் கான், மற்றும் அனில்கபூர் போன்ற திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு குரல் கொடுத்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற காந்தியின் தெலுங்கு டப்பிங் படமான பென் கிங்ஸ்லிக்காக டப்பிங் கொடுத்துள்ளார்.
ஒருமுறை கன்னட இசையமைப்பாளரான உபேந்திர குமாருக்கு 12 மணிநேர இடைவெளியில் 21 பாடல்களை பாடி பதிவு செய்துள்ளார். எஸ்.பி.பி-யின் தனது தொழில் வாழ்க்கையில், தொடர்ந்து ஒரு நாளைக்கு 16-17 பாடல்களைப் பல்வேறு மொழிகளில் பதிவு செய்வார். சில நாட்கள் தொடர்ந்து 17 மணிநேரம் பாடுவாராம்.
இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். மற்றும் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் 72 திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுப்போன்று வேறு எந்த பாடகரும் நடித்ததில்லை.
இலங்கை ரசிகரின் வாழ்நாள் கனவை நனவாக்கிய பாடும் நிலா!
இதற்கிடையில், ரசிகர்கள் மீது இவர் கொண்ட அன்பை வெளிப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு பார்வை இழந்த இலங்கை ரசிகர் ஒருவருக்கு பாடும் நிலா வழங்கிய ஆச்சரியமான சந்திப்பு, இன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
எஸ்.பி.பியின் இலங்கை ரகசிகர் திரு. மாரன் ஒரு வெடிப்பு சம்பவத்தில் கண்பார்வை இழந்துள்ள நிலையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், இடம்பெற்ற நேர்காணலில் தனது இருள் நிறைந்த உலகில் எஸ்.பி.பியின் பாடல்கள் தான் அவருக்கு ஆறுதலையும் வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற விருப்பத்தையும் அளித்தாக தெரிவித்திருந்தார்.
அத்துடன் எஸ்.பி.பியை சந்திப்பது தனது வாழ்நாள் கனவு எனவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, எஸ்.பி.பி மாரனுக்கு ஒரு ஆச்சரியமான சந்திப்பை மேற்கொண்டு அவரது கனவை நனவாக்கினார்.
இந்த நெகிழ்ச்சியான தருணம் காண்பவர் கண்களில் கண்ணீரை ஏற்படுத்துவதுடன் எஸ்.பி.பியின் மனித நேயத்தின் பிரதிபளிப்பாக உள்ளது.
பெட்டியில் உறங்காமல் மண்ணுக்குள் புதைந்தார் எஸ்பிபி...
பிரபலங்கள் இறந்தால் அவர்களை பெட்டியில் வைத்து புதைப்பதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், எவ்வளவு புகழின் உச்சியில் இருந்தாலும், மண்ணுக்குத்தான் உடல் என்பதை தனது இறப்பிலும் காட்டி இருக்கிறார். எஸ்பிபி.
அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் என்று இறந்தால் அவர்களது உடலை மரப்பெட்டியில் வைத்து மண்ணில் புதைப்பார்கள் சந்தனப் பெட்டியும் பயன்படுத்துவார்கள். ஆனால். இன்று புதைக்கப்பட்ட எஸ்பிபியின் உடல் மண்ணில் வைத்து மூடப்பட்டது. இந்துக்களின் முறைப்படி அனைத்து வேத மந்திரங்களும் முழங்க இறுதிச் சடங்கு நடந்தது. அவரது மகன் இறுதிச் சடங்கு நடத்தினார்.
தனது பாடலில், ''நடந்தால் இரண்டடி, இருந்தால் நான்கடி, இறந்தால் ஆறடி'' என்று எஸ்பிபி பாடியிருப்பார். இது அவரை இன்று நினைவூட்டுகிறது. அவர் பாடிய ஒவ்வொரு பாடல்களும் இன்று அவருக்கு பொருந்தியது போல் மனம் கனக்கிறது.
பிரபலங்கள் இறந்தால் அவர்களை பெட்டியில் வைத்து புதைப்பதுதான் வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், எவ்வளவு புகழின் உச்சியில் இருந்தாலும், மண்ணுக்குத்தான் உடல் என்பதை தனது இறப்பிலும் காட்டி இருக்கிறார். எஸ்பிபி.
அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள் என்று இறந்தால் அவர்களது உடலை மரப்பெட்டியில் வைத்து மண்ணில் புதைப்பார்கள் சந்தனப் பெட்டியும் பயன்படுத்துவார்கள். ஆனால். இன்று புதைக்கப்பட்ட எஸ்பிபியின் உடல் மண்ணில் வைத்து மூடப்பட்டது. இந்துக்களின் முறைப்படி அனைத்து வேத மந்திரங்களும் முழங்க இறுதிச் சடங்கு நடந்தது. அவரது மகன் இறுதிச் சடங்கு நடத்தினார்.
தனது பாடலில், ''நடந்தால் இரண்டடி, இருந்தால் நான்கடி, இறந்தால் ஆறடி'' என்று எஸ்பிபி பாடியிருப்பார். இது அவரை இன்று நினைவூட்டுகிறது. அவர் பாடிய ஒவ்வொரு பாடல்களும் இன்று அவருக்கு பொருந்தியது போல் மனம் கனக்கிறது.
இவ்வளவு பெருமைமிக்க பாடகரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக