"முதன் முதலில் காதல் கடிதம் எழுதியது நம்ம ருக்மணிதான். அவதான் கிருஷ்ண பரமாத்மாவுக்கு காதல் கடிதம் எழுதினாள். என்ன எழுதினாள் தெரியுமா? கண்ணா! பெண்மைக்கு இலக்கணம் நாணம். ஆனால், நாணத்தைவிட்டு இக்கடிதத்தை எழுதுகிறேன். புருஷர்களில் உத்தமனே(புருஷோத்தமனே)!(நரசிம்ம அவதாரம் எடுத்ததால்)நீ ஒரு சிங்கம். தங்கத்தை அடைய யார் வேண்டுமானாலும் விரும்பலாம். அதுபோல நானும் உன்னை அடைய விரும்புகிறேன். உன் வீரம் உலகறிந்தது; நானும் அறிவேன். உன்னைத்தான் விவரம் அறிந்த நாளிலிருந்தே காதலிக்கிறேன். ஆயினும், இதுவரை நான் உன்னைக் கண்டதில்லை. நீயாக வந்து என்னை மணமுடிப்பாய் என்று உன்னை நினைத்துப் பல பூசைகள் செய்து வருகிறேன். நீயோ மாயன்; மாமாயன். எங்கோ மறைந்துகொண்டு என்னை ஆட்கொள்ள மறுக்கிறாய். இப்போது என்னை வேறொருவனுக்கு மணமுடிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்நிலையில், என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. நீயே கதி. எனவேதான் நாணத்தைவிட்டு இம்மடல் விடுக்கிறேன்."
"உன்னை அடைய விரும்புகிறேன். நீயே கெதி" என்று சொன்னதுதான் தாமதம். உடனே கண்ணன் விரைந்து சென்று ருக்மணியைத் தூக்கிவந்து திருமணம் செய்துகொண்டான்.
"இதிலிருந்து என்ன தெரிந்துகொண்டீர்கள்?" என்று பெரியவர் என்னிடம் கேட்டார். அதற்கு நான் சொன்னேன், "ருக்மணிக்கு காதல் கடிதம் எழுத தெரியவில்லை பெரியவரே. கண்ணா! இன்றிரவு 12மணிக்கு வந்துவிடு. ஓடிப்போயிடலாம்" அப்பிடி சுருக்கமா எழுதியிருக்கணும்" என்றேன். "ஏண்டா! இந்தக்காலத்துப் பயல்களுக்குப் புத்தி இப்பிடிப் போகுது?" என்று கேட்டுவிட்டு பெரியவர் என்னோடு தொடர்ந்து கதைப்பதையே நிறுத்திக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக