வாக்குப் போட்டு வாக்குப் போட்டு
வலுவிழந்து போன எம்
இறந்த காலத்தை ஒரு முறை
மீட்டிப் பாருங்கள்
ஒவ்வொரு வருடமும்
வருகின்ற போதும்
நாட்காட்டிகளைப்
பார்க்கா விட்டாலும் கூட
நீங்கள் வாக்குச் சீட்டுக்களைப்
பார்த்திருப்பீர்கள்
உங்கள் வாக்குகளைச்
சுவீகரிக்கும் வகையில்
ஒவ்வொரு தேர்தலின் போதும்
எத்தனை எத்தனை
வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன........
மேடைப் பேச்சுக்களில் மட்டுமல்ல
மீடியாக்களில் கூட
அரசியல் இலாபம் தேடுவதில்
அவர்கள் சூராதி சூரர்கள்
வீராதி வீரர்கள்
அற்ப சொற்ப சலுகைகளுக்காக
எத்தனை எத்தனை
அடைமானங்கள் ..........
அரசியல் கட்சிகளிடையே
எத்தனை எத்தனை
ஆதாயம் தேடும் முயற்சிகள்
கண்துடைக்கும் வகையிலே
அவர்களுக்குள் தொடர்கின்றன
சின்ன சின்ன காட்டிக் கொடுப்புகள்....
இவையெல்லாம் எதனால்?
மாற்றானை வஞ்சனை புரிந்தாவது
வரும் தேர்தலில் நாம்
சிம்மாசனம் ஏறும் நோக்கோடு
வாக்காளர்களே! நீங்கள்
வாக்குறுதிகளை மட்டுமே
நம்பி சோரம் போவது
இன்னும் எவ்வளவு காலம்........?
வரும் தேர்தலிலாவது
வரலாற்றைத் திருத்தியெழுத
வாக்குச் சீட்டுக்களை உங்கள்
துருப்புச் சீட்டாகப்
பயன் படுத்தத் தவறாதீர்கள்
குறிஞ்சிக் கவி வீரமனை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக