“அதான் சொல்லுறேனே... கல்யாண மண்டபத்தோட பேர மறந்துட்டேனன்னு”
“கையில கல்யாண கார்ட் இருக்கும்தானே....”
“அதையுந்தான் வூட்டுலேயே வச்சிட்டு வந்திட்டேனே... இதுக்குள்ளத்தான் ஏதாவது மண்டபமா இருக்கலாம்”என்ற சுப்ரமணி பித்தா பித்தாவென்று விழித்தான்.
“யோவ்... இங்க என்னா ஒண்ணுரெண்டு கல்யாண மண்டபமா இருக்கு, பெருசா எது தெரியுதோ அதெல்லாம் இங்க கல்யாண மண்டபம்தான்....” என்றவன் பஸ் ஸ்டேண்ட் பக்கத்தில ஒரு மண்டபம் இருக்கு. சனிக்கிழமை வந்திட்டா அதுல ஏதாவது ஒரு கூட்டம் நடக்கும் இன்னிக்கு அதுல ஒரு புத்தக வெளியீடு, சிறப்பு பிரதி வாங்குபவர் பட்டியலில் என்பேரும் இருக்கு. இப்ப அங்கத்தான் போறேன். அடுத்து மல்லியப்பு சந்தியில பழைய பிரின்ஸஸ் தியேட்டர் இருந்திச்சே அதுவும் இப்ப ஒரு மண்டபம்தான். ஆனால் இந்நிக்கி அங்க எந்தக் கல்யாணமுமில்ல காங்கிரஸ் கட்சியோட மாதர் அணியின் கூட்டமும் கட்சியின் தோட்டத் தலைவர்களோட ஒன்றுக்கூடலும் நடக்கிது.
அடுத்து... இந்திரா மண்டபத்தில ஒரு குறுந்திரைப் படத்தோட ஆரம்ப விழா பத்து மணிக்கு நடக்கப்போவுது. அடுத்து மாணிக்கப்பிள்ளையார் இந்து மாமன்றத்தில மத்திய மாகாண இன்னிசைப் பாடல் போட்டியை ஒரு டி.வி. நிறுவனம் நடத்திக்கிட்டு இருக்கு. இன்னிக்கும் நாளைக்கும் அது அங்க நடக்கும். இந்த மண்டபத்துக் கெல்லாம் நான் தொங்கு தொங்கின்னு ஓடணும்... ஏன்னா நான் ஒரு பத்திரிகையோட ரிப்போட்டர். ஏதாவது செய்தி அனுப்பினால்தான் ஏம்பொழப்பு நடக்கும்” என்ற ரிப்போடர்.
“நீங்க பேசமா.... டன்பார் ரோட்டுல நடந்து போங்க. அங்கத்தான் ஏராளமான கல்யாண மண்டபங்கள் இருக்கு. ஏதாவது ஒரு மண்டபத்தில நீங்க தேடுர கல்யாணம் நடக்கும். போய் கண்டு பிடிங்க... நான் போறேன்....” என்று கிளம்ப தயாரானார் ரிப்போட்டர்.
“நீங்க எனக்கு இந்த வெபரங்களை சொன்னதற்கு ரொம்ப நன்றிங்க....” என்றான் சுப்ரமணி.
“எதுக்கையா இதுக்கெல்லாம் நன்றி.... வழித் தெரியாதவனுக்கு வழிகாட்டினேன்” என்றவாறு நடந்தார். அவரை சற்று நேரம் நின்றுப் பார்த்த சுப்ர மணிக்கு பக்கத்து ஹோட்டலில் ஒரு டீ குடிக்க வேண்டும் போலத் தோன்றியது.
ஹோட்டல் உள்ளே போன சுப்ரமணி எதிர் மேசையில் அமர்ந்து டீக் குடித்துக் கொண்டிருந்த ஒருவனைப் பார்த்ததும் “ஏய் பரமா... இங்கேயா இருக்க....!” என்று சத்தமிட்டவாறு அவனின் பக்கலுள்ள கதிரையில் போய் அமர்ந்தான் அவன்.
அவனை நிமிர்ந்து பார்த்த பரமானந்தன் “மணியண்ணே... கல்யாணத்துக்குதானே...” “பின்ன... கல்யாணத்துக்கு தான். வூடுதேடி வந்து கல்யாண கார்ட்டு வைச்சவனுக்கு போயி ஆகணும். அப்படி போவாட்டி அது மரியாதையேயில்லை.” என்ற சுப்ரமணி கல்யாணம் முடிஞ்சதும் என் மச்சினன் வூட்டுக்கும் போய் வரணும். பக்கத்தில அட்டனுக்கும் டிக்கோயாவுக்குமிடையே இருக்கிற கொலணியிலத்தான் வூடு” என்றான்.
“ஏன்... முன்ன வனராஜா தோட்டத்திலத்தானே இருந்தாங்க....?” பரமுகேட்டான்.
“அது முன்ன... இப்ப பென்ஷன் காசெல்லாம் எடுத்துக்கிட்டு கொலனியில வூடு கட்ட நெலம் வாங்கி வூடும் கட்டிட்டாங்க. பயிலுங்க ரெண்டு பேரும் துபாயில இருக்கானுங்க. கடைசிப்பய கொழும்புல வேல. அவனுக்கு மூத்தது பொண்ணு அம்மாவோட வூட்டுலேயே இருக்கு. நானும் ரொம்ப நாளா மச்சினன் வூட்டுக்கு போகல்ல. காலையில நான் கல்யாணத்து கிளம்புரப்ப என் சம்சாரம் சொன்னா....
அட்டனுக்கு போaங்கத்தானே, அப்படியே எங்க அண்ணா வூட்டுக்குப் போய் அவரப் பாத்திட்டு வாங்க. பேச்சு வாக்கிலயேதும்....
ஓங்க தங்கச்சி.... சுகமில்லாம ஆஸ்பத்திரியிலயெல்லாம் இருந்தான்னு சொல்லிப்புடாதுங்க. எனக்கு சொகமில்லேன்னு சொன்னாவே எங்க அண்ணன் உயிர வுட்டுடும்...ன்னு சொன்னாள். நாமட்டும் இப்ப மச்சினன் வூட்டுக்குப் போனா அவ்வளவுதான. எந்தவேல இருந்தாலும்... அதை எல்லாம் அப்படியே வுட்டுட்டு கதையிலப் பிடிச்சிடுவாரு. வூட்டு நெலம எப்படி, தோட்டத்தில வேல வெட்டியெல்லாம் ஒழுங்கா நடக்குதா தொர எப்படி.... ஆளுங்களுக்கு ஒழுங்கா வேலக்கொடுக்குறானா? தோட்டத்தில இன்னும் அதே பழைய கட்சியா... இல்லாட்டி புது கட்சியேதும் வந்திருக்கா... ஈந்தியாவுல இருந்து ஒங்க அண்ணன் கடுதாசிப் போட்டாரா?....” இப்படி சகல சம்பூத்தும் அவரு கேக்க நான் சொல்லியாகணும்” என்று சுப்பரமணி சொல்லிக் கொண்டிருக்கும்போதே.... டீயை கொண்டு வைத்தான் சர்வர். அதை எடுத்து இரண்டொரு மிடல் குடித்தவன்...
“பரமா.... ஒன்ன நான் இங்க பார்த்தது எவ்வளவே நல்லா போச்சு.... எந்த மண்டபத்தில கல்யாணம் நடக்குதின்னே தெரியாம திண்டாடிட்டேன்...” என்று சொல்ல....
“எடந் தெரியாதாக்கும்... ஹைலன்ஸிக்கு பக்கத்திலத்தான்...” என்றான் பரமு.
“கல்யாணம் முடிஞ்சதும் நா... நேர மச்சான் வூட்டுக்குப் போயி அவரைப் பாத்திட்டு அடுத்த நிமிஷமே பஸ் ஏறி வூடுபோய் சேரனும்.”
“ஒங்க மச்சான் ஒன்னபோகவிடாம தடுத்திட்டா....”
“ஆமா மச்சனுக்கு ரொம்ப பிடிவாதம்... நான் தங்காம விட்டுட்டா அவரு ரொம்பக் கோபப்படுவாரு. ஏதாவது சொல்லித்தான் விடுபட்டு வரணும். ஆனா... என் சம்சாரம் சொகமில்லாம இருப்பதை மட்டும் அவருக்கிட்ட சொல்லவே கூடாது. பாவம் மனுஷனோட மனசு தாங்காது” என்றுசுப்ரமணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே.
“இந்தாய்யா.... டீயை குடிச்சிட்டு எடத்தக் காலிப் பண்ணுங்க. என்னமோ ஒக்காந்திக்கிட்டு மீட்டிங்கே நடத்துaங்க. பாருங்க கூட்டம் வருது தானே....?” என்று சர்வர் சொல்லவும் இருவரும் கதிரைவிட்டு எழுந்தனர். அடுத்து சர்வர் நீட்டிய தட்டின் கணக்கு தொகை துண்டை எடுத்துப் பார்த்த பரமுகாசை அதில் வைத்துவிட்டு... மீதி மூணே நாலோ... வச்சிக்க” என்று சொல்லிவிட்டு சுப்ரமணியோட வெளியேறினான்.
ஹைலன்ஸ¤க்கு அருகில் உள்ள மண்டபம் கல்யாணம் முடிந்தது. விருந்து மொய் பணம். வீடியோ... எல்லாம் முடிந்தபின்...
சுப்ரமணி டிக்கோயா கொலனியில் உள்ள தன் மச்சினன் வீட்டிற்கு பயணமானான்.
அவன் அங்கு போனப் போது அவனின் மச்சான் அழக முத்துவின் வீடு சாத்தியிருந்தது. டி.வி.யின் ஓசை மட்டும் வெளியில் வந்து கொண்டிருந்தது. சுப்ரமணி கதவைத்தட்ட.... ஒரு பையன் கதவைத் திறந்தான்.
“மச்சான் இருக்கா.....?” என கேட்டப்படி உள்ளே நுழைந்த சுப்ரமணி, ரிமோட்டும் கையுமாக அமர்ந்திருந்த அழக முத்துவின் அருகிலுள்ள குசைன் கதிரையில் பொத்தென்று உட்கார்ந்தான்.
“பாத்து.... பாத்து உக்காரு....” என்ற அழக முத்து.
“என்னா சுப்பு ரொம்நாளா ஆளையேக் காணேம்...?” என்று திரும்பிப் பார்த்து கேட்டவர். மீண்டும் சின்னத்திரைப் பக்கம் தன் பார்வையை செலுத்தினார்.
“எங்க... மச்சான் நேரங்கெடைக்கல்ல. இப்ப மட்டுமென்னா... எனக்கு பழக்கமான ஒரு பொடியனுக்கு கல்யாணம் கல்யாணக் கார்ட்ட வூடுதேடி வந்தே கொடுத்தான். அட்டன் பன்மூர்... தான் சொந்த எடம்... ஹைலன்ஸ் பக்கத்து மண்டபத்திலதான் கல்யாணம். கல்யாணம் முடிஞ்சதும் நேர இங்கத்தான் வர்ரேன்.” என்றவன் எப்படி மச்சான் வெளியிலப்போன பிள்ளைகளெல்லாம் நல்லா இருக்காங்களா ‘போன்’ பண்ணுவாங்களா? பொம்பளப் புள்ளையை எங்கக் கணேம்...” என்று பேச்சுக்கொடுத்த சுப்ரமணியை ஒருதரம் திரும்பிப் பார்த்த அழக முத்து.
“அது அவுங்க அம்மாவோட டவுனுக்குத்தான் பொயிருக்கு. “ என்று மீண்டும் பார்வையை டி.வி. பக்கம் திருப்பியவர்.
“பாரு மச்சான்... அந்த புது பொடியன் எப்படி பைட் பண்ணுரானுன்னு. நம்ம எம்.ஜி.ஆர்.... பைட்டை விட இப்ப வர்ர சண்டையெல்லாம் படுபாஸ்ட்... எல்லாரும் நல்லவே சண்டை செய்யுறாங்க. அதோட நம்பவூட்டுக்கு செட்லைட் போட்டதில இருந்து... இந்தியா செனல் எல்லாமே வேலை செய்யுது. எலங்க டி.வியைவிட அதுல நல்ல நல்ல படமாப் போடுறான். பாரே இதுவும் ஒரு புதுபடம்தான். டெலி டாமாவும் அப்படிதான். நமக்கு வேண்டிய செனலில் வேண்டிய படம் பார்க்கலாம்....” என்றவரின் முகத்தை நன்றாகவே பார்க்க சுப்ரமணிக்கு ஆசை, ஆனால் அவர்தான் டி.வி.மீது வைத்தக் கண்ணை திருப்பாமல் இருக்கிறாரே....
“மச்சான் நானும் பஸ்புடிச்சு வூட்டுக்கு போவணும் போடேஸ் வழியாப் போற பஸ்சிலப் போனா சுருக்கா மன்றாசி பொயிறலாம்...” என்றான் சுப்பு “அது என்னா வந்ததும் போறேன்னு அடம் பிடிக்கிறே.... ரவைக்கி கலைஞர் டி.வியில நல்ல நல்ல நிகழ்ச்சியெல்லாம் இருக்கு... பார்த்திட்டு காலையிலப் போக வேண்டியதுதானே... அது பார்க்க விரும்பமில்லேனா சொல்லு... இப்பவே இந்தப் பயல அனுப்பி புதுபட சி.டி. ஏதாவது கொண்டுவரச் சொல்லுறேன்...” என்ற மனுஷன் இப்பவாவது தன் முகம்பார்த்து சொல்லுவாரா... என்ற சுப்ரமணிக்கு ஏமாற்றமாகவே இருந்தது. ‘என்னா இது வூட்டுக்க வந்த சொந்த மச்சானக் கூட... ஏறெடுத்துப் பார்க்காத அளவுக்கு இந்த டி.வி. இந்த மனுஷனை சிறைப் பிடிச்சி வச்சிருக்கா....’ என எண்ணிக் கொண்ட சுப்ரமணி....
“இல்ல மச்சான் எனக்கு இதெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்க நேரமில்ல... நான் வூட்டுக்கு போவணும். ஒங்க தங்கச்சி என்ன பார்த்துக்கிட்டு இருக்கும்....” என்றான்.
“ஆமா.... நாக்கூட கேக்க மறந்திட்டேன்... தங்கச்சி... சொகமில்லாம ஆஸ்பத்தியிலயெல்லாம் இருந்திருச்சாமே போனக் கெழும... அட்டன்ல வச்சி ஓங்கத் தோட்ட மாரி முத்துவ.... எட்டுலத் தப்புல கண்டபோது.... அவன் தான் சொன்னான்.” டி.வி.யைப் பார்த்த படியே சொன்ன அழக முத்து.
“எங்க மச்சான் முன்னமாதிரி எதுக்கும் ஓடி ஓடியார இருக்கா. துவாயில இருக்கிற மகன்மாரு... வூட்ட திருத்திக் கட்டுங்கன்னு பணம் அனுப்பியிருந்தாங்க.
அதுக்கு ஆள்பிடிச்சு சாமன்களை வாங்கி வேலை செய்யவே நேரம் சரியாப் போச்சு. அதோட முன்ன வச்சிருந்த டி.வி.யைக் கொடுத்திட்டு இப்ப பெரிய டி.வியாக் கொண்டாந்திட்டோம். இதுலப் பார்த்தாத் தான் எதுவும் பார்த்த மாதிரி இருக்கு. பாருங்களே... ஒரு சின்னப் பொறிக்கூட விழுவல்ல. அதோட... செட்லைட் வேறப் போட்டுட்டோம். இந்திய செனல் எல்லாம் ரொம்ப துள்ளியமா பச்சத் தண்ணி மாதிரி வருது. ரிமோட்ட கையில வச்சி இப்படி அமுத்தினா... நமக்கு வேண்டிய செனல்ல எதையும் பார்க்கலாம்....” என்ற அழக முத்து இரண்டு மூன்று செனல்களை டக்கு டக்னென மாற்றிக் காட்டினார்.
‘இதுவெல்லாம் வூட்டுக்குள் காட்டும் வித்தையா... அல்லது வூடு தேடிவந்த சொந்தப் பந்தத்திலிருந்து விடுபட்டு தூரம்... ரொம்ப தூரம்... ஓடிவிடும் முயற்சியா....?’ சுப்ரமணிக்கு யோசனையாக இருந்தது.
‘சேச்சே... பைத்தியக் கார மனுஷன். டி.வியும், மகன்மார் அனுப்புற பணமும் இவனுக்கு பெருசா பொயிருச்சி ஓவியமான மயிரு. டீ.வி. அதேவேற நான் ஒக்காந்து பாக்கணுமாக்கும். எனக்கு சொகமில்லேன்னு கேள்விப் பட்டாளே எங்கண்ணே உயிர விட்டுருன்னு ரத்த பாசத்த நெஞ்சில சொமந்துக்கிட்டு ஏம் பொம்பள சொன்னாளே.... ஆனா இங்க... போலியான வாழ்க்கை வீண் பகட்டு அந்த மனுஷன் முகத்தில் காறித் துப்பணும் போல இருந்தது சுப்ரமணிக்கு.
“மச்சான்... இந்த புதுக்குட்டி பேரென்னாத் தெரியுமா....?”
‘மயிறு வாய முடுடா.... படுவா...’ வாய் விட்டுக் கத்த வேண்டும் போல இருந்தது. சுப்ரமணிக்கு அவன் அதை அடிப்படியே அடக்கிக் கொண்டு.
‘மச்சான்.... என் சம்சாரமும் சொகமில்லாத ஆளு நான் வெல்லனா வெடுக்கனா வூடு போய் சேரணும் போடேஸ் வழியாடயகம போற பஸ்சிலப்போனா சுருக்காவே மன்றாசு போயிடலாம்” என்ற சுப்ரமணி அந்த வீட்டை விட்டு வேகமாக வெளியேறினான்.
மல்லிகை சி. குமார்
(கற்பனையும் உண்டு)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக