ஏதோ விரக்தியில் வைக்கப்பட்ட தாடி வளர்ந்து சடைத்து முகத்தைமறைக்க, நீண்ட சட்டை கோடு போட்டிருந்த சாரன், தலைப்பாகை இவையெல்லாம் அவனின் கோலத்துக்கு மெருகூட்டியிருந்தன.
சேமித்த பணங்கள் தெரியாதபடி முன்பின் அறியாத வீட்டின் எங்கோயோ ஒரு பாழடை ந்த மண்டபத்தை துப்புரவு செய்து அதற்குள் ஒரு வாழ்க்கை. அன்றாட வணக்கம், அடங்கி ஒடுங்கிய உறக்கம் எல்லாம் அதற்குள்.
வீட்டின் சொந்தக்காரன் அவனிடம் எதையுமே எதிர்பார்க்காமல் எப்படியாவது இருந்து போகட்டும் என்ற மன இரக்கத்தில் இடம்கொடுத்திருந்தான்.
மழைக்காலமும், வெயிற் காலமும் பழக்கப்பட்டதால் இரண்டுக்குமே குடை பொருத்தமாக இருந்தது. அதனால் அது கையை விட்டுஇறங்கியபாடில்லை.
என்ன பெரியவரே இன்றைக்கு கடும் மழை யாக இருக்கிறதே எப்படி வெளியே போவீங்க’
‘கையில் குடை இருக்குதானே மெல்ல மெல்ல நடந்து போய்விடலாம்’
பெரியவரின் பதிலால் வேறு எதுவும் பேசாமல் இருந்தான் வீட்டுக்காரன்.
ஊருவிட்டு ஊருபோய் வாழ்ந்தாலும் சொந்த ஊரின் சுகந்தம் மெல்ல மெல்ல மறந்து போய் விட்டதால் பின்புலத்தை எண்ணி பெருமூச்சு விடுவதைவிட வேறு வழி தெரியவில்லை. மனைவி, மக்கள் இவர்களைக் கூட இனம் கண்டு கொள்ளவும் இயலாத விரக்தி. அவர்களுடைய நிறைவு வரும் போதெல்லாம் அழுத்தமான மனோநிலை தளரவிடாமல் பிடித்துக் கொண்டதால் இன்னும் ஒரு தெம்பு.
கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட மனக் கசப்பு நாளடைவில் முற்றி அவனின் வெளியேற்றத்துக்கு கொடிகாட்டியது. பலமுறை இணைந்தாலும், விதியோ, சதியோ வாழ்வில் விளையாடிவிட்டது. வெளியேறுவதை விட வேறு வழியில்லை. பக்கத்தில் நின்ற பால கனை ஒருமுறை அள்ளி அணைத்து நீயாவது என்றைக்கோ என்னைத் தேடிவருவாய் என்று சொல்லி வீட்டை விட்டு வெளியேறினான். பாலகனின் பார்வை எட்டிய தூரம் மட்டும்.
பெரியவர் நீண்ட காலமாகத் தங்கி இருந்த வீட்டுக்காரனின் மனம் இரக்கப்பட்டு பல வருடங்களாக தன்னோடு வைத்திருந்தான். அதற்காக ஒரு சதம் கூட வாடகையாகப் பெற்றுக்கொள்ளாத உள்ளம் படைத்தவன். எப்படியாவது இருந்து போகட்டும் என்று தன்னுடைய மனைவிடமும் சொல்லி வைத்திருந்தான். பெரியவரும் பெரும் பிரச்சினை ஏற்படுத்தாமல் ஒரு தகப்பனைப் போல இருந்துகொண்டார்.
தம்பி எனக்கு வயசாகிவிட்டது. இனிமேலும் உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. உங்க மகளுக்கு காலா காலத்தில் திருமணம் செய்யிற நிலைமை வந்தா நான் இடைஞ்சலாகத்தானே இருக்கும்.
அப்படியெல்லாம் இடை போட்டுப் பாக்காதீ ங்க பெரியவர். நீங்க எங்கட வீட்டுக்கு ஒரு தகப்பன்மாதிரி. உங்கட குணம், நடத்தை எல் லாம் எங்களுக்கு பொருத்தமாக இருந்ததால் தான் இவ்ளவு காலமும் எங்களோட வெச்சுக்கிட்டு இருந்தம் இன்னும் சொஞ்ச காலம் எங்களோடு வாழ்ந்துவிட்டுப் போங்க.
பெரியவரின் உள்ளம் பூரிப்படைந்தது. இழந்துபோன உறவுகள் கூட இப்படி இருக்கவில்லையே என்று வேதனைப் பட்டார்.
‘தம்பி நம்மட பிள்ளைக்கு எப்ப கலியாணம் வெக்கப் போaங்க’
‘உங்கட ஊரிலதான் பாக்க வேணும். எங் கட ஊரில கைக்கூலி, சீதனம் என்று பழகிப்போச்சி அப்படி எல்லாம் கொடுக்க நமக்கிட்ட ஏது. ஒரு பிள்ளையென்றாலும் பரவாயில்லையே’
பெரியவர் வீட்டுக்காரனின் பேச்சைக் கேட்டு ஒருகணம் தன்னுடைய மகளின் நிலை என்னவாகி இருக்குமோ என்று யோசித்தான். அப்போது அவனுடைய கண்களிலிருந்து நீர் மல்கிற்று. உடனே தன் தோளில் கிடந்த துவா யினால் மெல்லத் துடைத்துக் கொண்டான்.
‘தம்பி நம்ம பிள்ளைக்கு மாப்பிள்ளையாக வருகின்றவர் நல்ல பிள்ளையா, ஒழுக்கம் உள்ளவரா இருக்க வேணும் அப்படியான ஒருவர் கிடைச்சுட்டா நம்ம எல்லாருக்கும் நல்லது’
பெரியவரின் வேண்டுதலில் நியாயம் இருக்கத்தான் செய்தது. என்று தனக்குள் பேசிக்கொண்டான்.
‘தூரத்து உறவுகள் நல்லதுதான் அதையெல்லாம் பார்த்துக்காவிட்டால் எல்லாம் கஷ்டம்தானே பெரியவர்’
தன்னுடைய மனைவி மக்களோடு சேர்ந்து வாழவேண்டிய வயதில் தன்னந் தனியாக இருந்து காலத்தைப் போக்கியது பெரும் சாதனை ஒன்றுதான் சொல்ல வேண்டும். குடும்பங்கள் தான் மட்டும் வாழ்ந்து பார்க்க வேணும் என்பதில் முனைப்பாக இருந்து செயல்படும்போது உறவுகளில் விரிசல் ஏற்படுவதை அவன் வெறுத்தான்.
எத்தனையோ மனிதர்களைப் பார்த்த அந்த வீட்டுக்காரனுக்கு பெரியவரின் ஆறுதல் வார்த்தைகள் பெரும் உதவியாக இருந்தது.
தம்பி எப்படியாவது நீங்கள அந்த ஊருக்கு போங்க அந்த மாப்பிள்ளையைப் பார்த்து பேசுங்க என்று முடிவு கொடுத்தார்.
தன்னுடைய பிள்ளைக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்கு பெரியவரின் ஊருக்குச் செல்வதற்கு ஆயத்தமானார்கள். வீட்டில் பெரியவரை மட்டும் விட்டுச் சென்றார்கள்.
மாப்பிள்ளையின் தாயோடு திருமணப் பேச்சை ஆரம்பித்து உள்ளது. உரியது எல்லாவற்றையும் பேசி முடித்து விட்டு மாப்பிள்ளையின் தகப்பனைக் கேட்ட போது அவர் வீட்டை விட்டு வெளிஏறி பல வருடங்களாகிவிட்டன. எங்கு போனார் என்ன ஆனார் என்றே தெரியவில்லை’ என்று அவர்கள் சொன்னார்கள்.
‘உங்கட மாப்பிள்ளையை நாங்க பார்த்துக்கொண்டோம். ஒரு சம்பிரதாயத்துக்கு எங்கட மாப்பிள்ளையைப் பார்க்க நீங்க எப்போ வரப்போaங்க’
‘நாங்க அடுத்த நாளைக்கே வருகிறோம் ஆயத்தமாக இருங்க’
‘சரி காலத்தை நீடிக்காமல் எல்லாவற்றையும் செய்து விட்டால் நலம்தானே’
திருப்தியாக இருந்த நிலையில் அவர்கள் வீடு திரும்பும் போதே மாப்பிள்ளை இளமையிலேயே தகப்பனை விட்டுப் பிரிந்தாலும் தாய் எல்லாவற்றையும் சிறப்பாக்கி விட்டிருப்பதைப் பார்த்து சந்தோசப்பட்டார்கள்.
போனவர்கள் வந்தவுடன் அவர்களோடு சேர்ந்து நடந்து போன விடயங்களையும், மாப்பிள்ளையையும் பற்றிக் கேட்டு நன்றாக விளங்கிக்கொண்டு எல்லாம் நல்லபடி நடக்க வேண்டும் என்று ஆசீர்வாதம் பண்ணினார்.
வீட்டின் முற்றத்தில் வந்து நின்ற வாகனத்தைக் கண்டு விரைந்து போனான் வீட்டுக்காரன். தன்னுடைய பிள்ளையையும், மகனையும் பார்வையிட்டு திருமண நாளை நிச்சயப்படுத்த அந்த வெளியூர் சம்பந்தங்கள் வந்திருந்ததைக் கண்டு சந்தோசப்பட்டான்.
‘வாங்க உள்ளே வாங்க என்று வந்தவர்களை வரவேற்றான். அவர்களுக்கு அவசர அவசரமாக உபசாரங்கள் செய்யப்பட்டன. எல்லாவற்றையும் அறிந்து புரிந்துகொண்டதும் கல்யாண ஏற்பாட்டுக்கு முக்கியமானவராக இருந்தவரை அழைத்து அறிமுகம் செய்து வைத்தான் வீட்டுக்காரன்.
ரத்தில் இருந்து வந்த மாப்பிள்ளையின் தாய் அந்தப் பெரியவரைக் கண்டதும்
ஆச்சரியப்பட்டாள். அவருடைய அருகில் சென்று அடையாளத்தைக் கண்டாள். தன்னை அறியாமலே பலமாக அழுதுவிட்டாள். எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு காலமும் அவர்களை எல்லாம் விட்டுப் பிரிந்த அந்த உள்ளம் இன்னும் உயிரோடு இருக்கிறதே என்று அவள் தாரை தாரையாக அழுதாள். பக்கத்தில் நின்று கொண்டிருந்த மகனும் தன்னுடைய தகப்பன்தான் என்பதை உணர்ந்து கொண்டான். அங்கு கூடியிருந்தவர்களுக்கு ஒன்றுமே புரியாததுபோல் இருந்தது.
தன்னுடைய மகனுக்கும் மகளுக்கும் திருமணம் நடைபெறவேண்டி அவன் செய்த பிரார்த்தனை நிறைவேறிய வேளையில்தான் தன்னுடைய மனைவி மன்னிப்புக் கேட்டாள். இத்தனை வருடங்கள் அவன் வேறு திருமணம் செய்யாமல் மனதைக் கல்லாக்கி ஆசைகளையெல்லாம் அடக்கி இருந்தான்.
கணவனை வீட்டை விட்டு விரட்டிய பாவத்துக்காக அவள் வருந்தினாள். பிள்ளைகள் எப்படியோ நன்றாக இருக்க வேண்டும். பிள்ளைகளுக்கு அவப்பெயர் ஏற்படக் கூடாது. என்பதற்காக அவன் மன்னிப்பு வழங்கினான். கணவன் மனைவி பாசம் இல்லாமற் போனதால் அதனை மீட்டுப் பார்த்து புது யுகம் தேட அவன் விருப்பம் இல்லாமல் இருந்தான். பிள்ளைகள் இவற்றுக்கும் அப்பால் நின்று குடும்பம், மனிதம், பாசம் என்பவற்றை எல்லாம் இணைந்து வெற்றிகண்டார்கள்.
மருதமுனை
ஏ. எம். எம். பாறூக்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக