ஆந்திர மாநிலம் நெகமத்தில் கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் கோவில் உள்ளது. விஜயகுமார் என்ற எல்.ஐ.சி. ஏஜெண்டு சாமியாராக மாறி இந்த ஆசிரமத்தை அமைத்தார். தனது பெயரை கல்கி பகவான் என்று மாற்றிக் கொண்ட அவர் ஆசிரமத்துக்கும் கல்கி ஆசிரமம் என்று பெயர் சூட்டினார்.
தமிழ்நாடு, கர்நாடகா, உள்பட பல்வேறு மாநிலங்களிலும் கல்கி பகவானுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.
பிரபல தொழில் அதிபர்கள், உயர் பதவிகளில் இருப்பவர்கள், கம்ப்யூட்டர் என் ஜினீயர்கள் என உயர் அந்தஸ்துகளில் இருப்பவர்கள் இதில் பக்தர்களாக இருக்கின்றனர்.
இவர்களில் பலர் ஆசிரமத்திலேயே தொடர்ந்து தங்கி இருக்கின்றனர்.
இந்த நிலையில் கல்கி ஆசிரமம் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஆந்திராவில் ஒளிபரப்பாகும் டி.வி.-9 செய்தி சானல் ஆசிரமத்தில் விசாரணைகளை மேற் கொண்டு சில வீடியோ காட்சிகளை ஒளிபரப்பியது.
அதில் ஆசிரமத்தில் கல்கி பகவான் முன்னிலையில் ஏராளமான ஆண்-பெண் பக்தர்கள் அரைகுறை மயக்கத்தில் இருப்பது போல உட்கார்ந்து இருக்கிறார்கள்.
-
ஆண்-பெண் பக்தர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தமிட்டு கொள்கின்றனர். இத்தனைக்கும் அவர்களில் பலர் இளம் ஆண்-பெண்கள். இவர்களில் சிலர் அரை குறை உடையுடன் இருக்கிறார்கள்.
-
இந்த காட்சிகளை ஒளி பரப்பிய டி.வி.சானல் இதற்கு மேலும் ஒளிபரப்ப முடியாத ஆபாச காட்சிகள் தங்களிடம் சிக்கி இருப்பதாகவும், அங்கு செக்ஸ் லீலைகள் நடப்பதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளது.
-
தனது நிருபர்கள் குழு 6 மாதமாக கஷ்டப்பட்டு இந்த படங்களை எடுத்ததாகவும் அந்த செய்தி சானல் தெரிவிக்கிறது.
-
ஆசிரமத்தில் கொடுக்கும் பிரசாதத்தில் பக்தர்களுக்கு போதை மருந்து கலந்து கொடுப்பதாகவும், இதை சாப்பிடும் பக்தர்கள் கிறக்கம் ஏற்பட்டு இப்படி ஆபாச செயல்களில் ஈடுபடுவ தாகவும் பக்தர்கள் சிலர் கூறி இருக்கின்றனர்.
-
இந்த ஆசிரமத்தில் ஏராளமான பணக்கார இளம் பெண்களும் சேர்ந்து உள்ளனர். அவர்களின் பெற்றோர்கள் அவர்களை அழைத்த போது அங்கிருந்து வரமறுத்த சம்பவங்கள் பல ஏற்கனவே நடந்தன.
இப்போது வெளியாகி இருக்கும் டி.வி. காட்சியை பார்க்கும் போது அவர்கள் ஏதோ ஒரு விவகாரத்தில் அடிமையாகி இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.
-
இந்த காட்சி ஒளிபரப்பானதும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கல்கி பகவான் ஆசிரமத்தை தாக்கினார்கள். டி.வி. காட்சி தொடர்பாக கல்கி ஆசிரமத்தில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை.
கல்கி ஆசிரம நிலத்தை ஆக்ரமித்த கிராம மக்கள்: போலீஸ் தடியடி-பதட்டம்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்ய பாளையத்தில் கல்கி ஆசிரமம் உள்ளது. இங்கு கல்கி பகவானும் அவரது மனைவி அம்மா பகவானும் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார்கள். கல்கி பகவானின் உண்மையான பெயர் விஜயகுமார். இவர் எல்.ஐ.சி,. ஏஜெண்டாக இருந்தவர்.
அம்மா பகவானின் பெயர் புஜ்ஜம்மா இவர் தன்னை அம்மா பகவான் என்று மாற்றிய பிறகு தன்னை பத்மாவதி தாயார் என்று பக்தர்களிடம் கூறி ஆசி வழங்கினார். அங்குள்ள கல்கி தீட்சை பீடத்தில் அம்மா பகவானும், கோல்டன் சிட்டி கட்டிடத்தில் கல்கி பகவானும் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் அங்கு பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தில் மயக்க நிலையை ஏற்படுத்தும் போதைப்பொருள் கலந்திருப்பதாக விஜயவாடாவை சேர்ந்த நாராயணா என்ற பக்தர் புகார் கூறினார். மேலும் போதை பிரசாதம் கொடுத்து ஆசிரமத்தில் செக்ஸ் லீலை நடப்பதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து கல்கி ஆசிரமம் அருகே உள்ள காம்பாக்கம், தாண்டூர் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் கும்பலாக சென்று ஆசிரமத்தை அடித்து நொறுக்கினார்கள். இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் காம்பாக்கம் கிராம மக்கள் கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 50 ஏக்கர் நிலத்தை திடீரென ஆக்ரமித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து கிராம மக்களை தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
காம்பாக்கம் கிராம மக்கள் கூறும்போது, கல்கி ஆசிரம நிர்வாகி விஜயகுமார் (கல்கி பகவான்) சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர அரசு எங்களுக்கு தந்த நிலத்தை ஏமாற்றி வாங்கிவிட்டார்.
அப்போது அவர் எங்களுக்கு ரூ.5 ஆயிரம்தான் தந்தார். இப்போது இந்த நிலத்தின் மதிப்பு லட்சக்கணக்காக மாறிவிட்டது எங்களுக்கு அவர் உரிய நஷ்ட ஈடை தராவிட்டால் எங்கள் நிலத்தை தரமாட்டோம்.
எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருந்த இவர் தன்னை கடவுள் என்று கூறி பக்தர்களை ஏமாற்றி வருகிறார்.
தொடக்கத்தில் எங்களிடம் உள்ள நிலத்தை அடியாட்கள் மூலம் மிரட்டித்தான் வாங்கினார். நாங்கள் அவரது மோசடி பற்றி பல தடவை போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றனர். கல்கி ஆசிரமம் மீது பல்வேறு மோசடி புகார்கள் எழுந்ததை தொடர்ந்து பக்தர்கள் வருகை வெகுவாக குறைந்துவிட்டது. ஆசிரமத்திற்கு வந்திருந்த ஒரு சில பக்தர்களும் பிரசாதத்தை வாங்க மறுத்துவிட்டனர். பக்தர்கள் வருகை குறைந்ததால் வருமானம் கணிசமாக குறைந்தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக