பெங்களூர்: என் மீதும், எனது ஆசிரமம் மீதும் சுமத்தப்பட்ட, சுமத்தப்பட்டு வரும் புகார் கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.
ரஞ்சிதா வீடியோ சர்ச்சைக்குப் பின்னர் தலைமறைவாகி விட்டார் நித்தியானந்தா. அவர் தற்போது கும்பமேளாவில் கலந்து கொண்டிருப்பதாக அவரது பிடுதி தியான பீட ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில், கும்பமேளாவுக்குக் கலந்து கொள்ள வந்த அமெரிக்காவைச் சேர்ந்த பக்தரும், ஆய்வாளருமான ராஜீவ் மல்ஹோத்ரா என்பவருக்குப் பேட்டி அளித்துள்ளார் நித்தியானந்தா.
அதில் நித்தியானந்தா கூறியிருப்பதாவது:
பெங்களூர் அருகே பிடாதியில் உள்ள தியான பீட ஆசிரமம் அமைந்துள்ள இடம், பெங்களூரைச் சேர்ந்த புகழ் பெற்ற சஜ்ஜன் ராவ் குடும்ப வாரிசுகளான வினாயக் ராவ், பிரதாப் ராவ், ஜீவன் ராவ் ஆகியோரால் எனக்கு தானமாக வழங்கப்பட்டது.
இந்தச் சகோதரர்கள் என் மீது அன்பு கொண்டவர்கள், எனது போதனைகளால் பலன் பெற்றவர்கள், இறை பக்தி நிரம்பியவர்கள். என் மீது கொண்ட அன்பாலும், எனது இறைப் பணிக்காகவும் எனக்கு நிலத்தைத் தானமாக கொடுத்தனர்.
2003ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு பகுதியையும், பின்னர் இன்னொரு பகுதியையும் தானமாக அளித்தனர். அங்கு எனது இறை மையத்தையும், இறைப் பணியையும் மேற்கொள்ள தானமாக அளித்தனர்.
அங்குள்ள மிகப் பழமையான ஆலமரம் மற்றும் சிவன் கோவிலை அவர்கள் நீண்ட காலமாக வழிபட்டு வணங்கி வந்தனர். அவற்றையும் எனக்கே அளித்தனர்.
இவை அனைத்தும் முறைப்படி, சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முறையான, சட்டப்பூர்வ ஆவணங்கள் எங்களிடம் உள்ளது.
இதை அனைவரும் அறியும் வகையில் அதை இணையதளத்தில் வெளியிடுவோம். உடனடியாக அதைச் செய்வோம்.
கனடா சீடர் மர்ம மரணம்..?
கனடா நாட்டைச் சேர்ந்த சீடர் ஒருவர் எங்களது ஆசிரமத்தில் தங்கியிருந்து போதனைகளைக் கேட்டு வந்தார். அவர் எப்போதும் மாடி சுற்றுச் சுவரில் காலை கீழே தொங்க விட்டபடிதான் அமர்ந்திருப்பார். இதை பலரும் பார்த்துள்ளனர்.
ஆனால் அப்படி அமரக் கூடாது என்று ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் அவரை எச்சரித்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் அப்படி அவர் அமர்ந்திருந்தபோது கீழே விழுந்து விட்டார்.
இதைப் பார்த்த அனைவரும் ஓடி வந்து அவரைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் கொண்டு வரப்பட்டபோதே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸாருக்கு உரிய முறையில் தகவல் தெரிவித்தோம். அவர்களும் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் குடும்ப நண்பர் ஒருவரை கனடாவிலிருந்து அனுப்பி வைத்தனர். இங்கேய இந்து முறைப்படி இறுதிச் சடங்குகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.
அதன்படி பெங்களூரில் இறுதிச் சடங்குகள் நடந்தன. இந்து முறைப்படி காரியங்களையும் நாங்களே செய்தோம். அனைத்தும் சட்டப்பூர்வமாக செய்யப்பட்டது.
போலீஸார் முறைப்படி விசாரணை நடத்தினர். பிரேதப் பரிசோதனையை ஆய்வு செய்தனர். இறுதியாக, இதில் குற்றச் செயல் எதுவும் இல்லை என்று தெரிவித்து விட்டனர்.
இதுகுறித்து அப்போதே பத்திரிகைகளுக்கும் அனைத்துத் தகவல்களையும் தெரிவித்தோம். இதுகுறித்த ஆவணங்களையும் கூட இணையதளத்தில் வெளியிட தயாராக இருக்கிறோம். பொதுமக்களே இதைப் பார்த்துத் தெரிந்து கொள்ளட்டும்.
ஆசிரமத்தில் இளைஞர்கள் அடைத்து வைப்பா..?
இது முற்றிலும் பொய். இங்குள்ள அனைவருமே சுய விருப்பத்துடன் தான் தங்கியுள்ளனர். யாரும் விருப்பத்திற்கு மாறாக இங்கு இருக்க அனுமதிக்கப்படுவதில்லை. விருப்பம் இல்லாதவர்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கிருந்து போகலாம். அதில் எந்தத் தடையும் இல்லை.
இங்கு சேர விரும்பி வருபவர்களிடம் முறைப்படி விசாரணை நடத்தி, அவர்களுக்கு முழு விருப்பம் இருந்தால் மட்டுமே சேர்த்துக் கொள்கிறோம். அத்தோடு இல்லாமல், அவர்களின் பெற்றோரின் ஒப்புதலையும் பெற்ற பின்னரே அனுமதிக்கிறோம்.
அனைவரும் கையெழுத்திட்டு விருப்பத்தை முறைப்படி தெரிவித்து விட்டுத்தான் தங்கியுள்ளனர். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், நாட்டம் குறைந்தால் எப்போது வேண்டுமானாலும் இங்கிருந்து வெளியேற முடியும். இது ஒளிவுமறைவில்லாத ஒரு ஆசிரமம். இங்கு எந்த ரகசியமும் இல்லை.
தமிழகத்தில் பெண் கற்பழிப்பா... ?
இதுவும் முற்றிலும் பொய். யாரும் இப்படி ஒரு புகாரை இதுவரை சொன்னதில்லை. தேவையில்லாமல் கதைகளைப் புனைந்து, திரும்பத் திரும்ப அதை தெரிவித்து, மக்களுக்குத்தான் இடையூறு கொடுக்கிறார்கள்.
மீண்டும் மீண்டும் வதந்திகளையே பரப்புகிறார்கள். இது நிச்சயம் மக்களை குழப்பும் செயலே. மீடியாக்கள் இதுபோன்ற அவதூறான புகார்களைப் பறப்புவது துரதிர்ஷ்டவசமானது.
சந்தனக் கட்டைகள் பதுக்கல்...?
பிடுதி ஆசிரமம் அமைந்துள்ள இடத்தில் ஏராளமான சந்தன மரங்கள் இயற்கையாகவே வளர்ந்து நிற்கின்றன. அங்கு வந்த சில திருடர்கள், சந்தன மரங்களை வெட்டி முக்கியப் பகுதிகளை எடுத்துச் சென்று விடுகிறார்கள். அதில் சிலவற்றை அங்குள்ள கோவில் பகுதியில் போட்டு விட்டுச் சென்று விட்டனர்.
இதுகுறித்து நாங்கள் முன்பே வனத்துறைக்கு எங்களது பி.ஆர்.ஓ. மூலம் புகார் கொடுத்தோம். போலீஸிலும் புகார் கொடுத்தோம். வனத்துறையினர் இதுகுறித்து எங்களிடம் கூறுகையில், இது பெரிய பிரச்சினையில்லை, கவலைப்படாதீர்கள் என்று தெரிவித்தனர்.
திருடர்கள் விட்டுச் சென்ற சில சந்தனக் கட்டைகள்தான் ஆசிரம வளாகத்தில் கிடைத்துள்ளதே தவிர வேறு பதுக்கல் எதுவும் நடக்கவில்லை. இதில் வேறு ஒன்றும் இல்லை.
சட்டவிரோதமாக சொத்துக் குவிப்பு..?
இதுவும் முற்றிலும் பொய். சட்டப்பூர்வமாக, முறைப்படி பதிவு செய்யப்பட்ட அமைப்பு எங்களது தியான பீடம். மனோஜ் செளத்ரிதான் எங்களது ஆடிட்டர். அவர் இந்திய ஆடிட்டர்கள் சங்கத் தலைவராக 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர். இங்கு அனைத்தும் முறையாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. வருமான வரித்துறைக்கு முறைப்படி கணக்குகளை சமர்ப்பித்து வருகிறோம்.
தொடர் புகார்கள் ஏன்...?
ஏன் மீடியாக்களில் எங்களைப் பற்றி இப்படி தொடர்ந்து அவதூறு பரப்புகிறார்கள் என்பது தெரியவில்லை. இதன் பின்னணியில் யார் உள்ளனர் எனபதும் தெரியவில்லை. எதுவும் தெரியாமல் நாங்கள் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. எதைச் சொல்வதாக இருந்தாலும் உரிய ஆதாரத்துடன் சொல்ல வேண்டும் என்பதால் நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ளார் நித்தியானந்தா.
இந்தப் பேட்டியின்போது நித்தியானந்தா- ரஞ்சிதா குறித்து ராஜீவ் மல்ஹோத்ரா எந்தக் கேள்வியையும் கேட்கவில்லை. அதேபோல அதுகுறித்து நித்தியானந்தாவும் அதுகுறித்து எதுவும் விளக்கவில்லை.
நன்றி: Thatstamil
வியாழன், 11 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக