சென்னை: ஒருவர் மீதுள்ள குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபணம் ஆகாத வரையில் அவர் குற்றமற்றவர் என்று நினைப்பதுதான் மரபும், பண்பாடும் ஆகும். இதற்காக சாமியார் என்று சொல்லி ஒட்டு மொத்த துறவிகள் சமுதாயத்தையே ஏளனம் செய்து கொச்சைப்படுத்துவதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது என்று கூறியுள்ளார் இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சுவாமி நித்யானந்தா விவகாரத்தில் சில பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் நடந்து கொள்ளும் விதம் ஆரோக்கியமற்றது. ஒருவர் மீதுள்ள குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபணம் ஆகாத வரையில் அவர் குற்றமற்றவர் என்று நினைப்பதுதான் மரபும், பண்பாடும் ஆகும்.
சுவாமி நித்யானந்தா தன்நிலை விளக்கமளிக்க அவருக்குப் போதிய கால அவகாசமும் வழங்கப்பட வேண்டும். அவருடைய பக்தர்களையும், சீடர்களையும் காவல்துறை தேடுவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தி மற்றவர்களை மிரட்டுவதாக அமைகிறது.
இதற்காக 'சாமியார், சாமியார்' என்று சொல்லி ஒட்டு மொத்த துறவிகள் சமுதாயத்தையே ஏளனம் செய்து கொச்சைப்படுத்துவதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
இதுவரை எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்படி அவர் குற்றமற்றவர் என்றே நம்புகிறோம். ஆசிரமத்துக்குச் சொத்து இருப்பது பாவமல்ல. அந்த சொத்து தவறான முறையில் சேர்க்கப்பட்டிருந்தால் அது தண்டனைக்குரிய குற்றம் . வழக்கு தொடுப்பதன் மூலம் அது குறித்து விசாரிக்க முடியும்.
வருமான வரித்துறையினர் இது குறித்து ஆய்வு நடத்த முடியும். இதை எல்லாம் விட்டுவிட்டு ஊடகங்களே நீதிபதிகளாகவும், சாட்சிகளாகவும் தண்டிக்கும் அதிகாரிகளாகவும் இருப்பது ஜனநாயகத்திற்குப் பெரும் கேட்டினை ஏற்படுத்தும்.
அரசியல் ஆசாபாசங்களால் உந்தப்பட்டும், பிடிவாதம் மற்றும் பழிவாங்கும் எண்ணத்துடனும் அவரை நடத்துவதும் துறவிகளையே இழிபடுத்துவதாகும். இதை இந்து சமுதாயம் ஒருநாளும் ஏற்காது.
சுவாமிக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களைப்பற்றி ஒளிபரப்பப்பட்ட காட்சிகளைப் பார்க்கும்போது ஒரு சிறு கும்பல் மட்டுமே இதைச் செய்வதும் சாதாரண மனிதன் இதில் ஈடுபடவில்லை என்பதும் தெளிவாகிறது.
அவர் பற்றிய அனைத்து விவரங்களையும் அவர் வெளியிடும் வரை காவல்துறையும், அரசும், ஊடகங்களும், மக்களும் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது என்று தெரிவித்துள்ளார்.
நன்றி: Thatstamil
வியாழன், 11 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக