`படிக்காததால் நடிக்க வந்தேன்...' நடிகை கே.ஆர். விஜயா
1960களில் இருந்து 80 வரை இருபது வருடங்கள், தமிழ் சினிமாவில் புகழ்க் கொடி பறக்க விட்டவர், கே.ஆர்.விஜயா. எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இரண்டு இமயங்களுக்கும் ஜோடியாக நடித்தவர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் 450 படங்களுக்கும் மேல் நடித்த கே.ஆர்.விஜயா, இன்னமும் அதே `புன்னகை அரசி'யாக `பளிச்' சிரிப்புடன்... சென்னை தியாகராயநகர் ராமன் தெருவில் உள்ள அவருடைய வீட்டில் அவரை சந்தித்தபோது...
``1963-ல் நான் சினிமாவுக்கு வந்தபோது, நடிகர்-நடிகைகளை `நட்சத்திரங்கள்' என்றுதான் சொல்வார்கள். நடிகைகளை, சினிமா தாரகைகளாக மதித்தார்கள்.
சவுகார் ஜானகி, கே.ஆர். விஜயா, சரோஜாதேவி
`கற்பகம்' படத்தில், நான் பாதி படம் வரைதான் வருவேன். என்றாலும், அந்த படம் பார்த்தவர்கள் அத்தனை பேர் மனதிலும், `கற்பகம்' கதாபாத்திரம் பதிந்து விட்டது. எனக்கு, ரசிகைகள் நிறைய பேர் உருவானார்கள். நிறைய ரசிகர்-ரசிகைகளை நான் சந்தித்து இருந்தாலும், ஒரே ஒரு ரசிகையை இன்று வரை என்னால் மறக்க முடியவில்லை.
`கற்பகம்' படம் பார்த்துவிட்டு, எங்கள் வீட்டுக்கு வந்து என்னை சந்தித்த அந்த ரசிகை, தனது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலி, காதில் கிடந்த கம்மல், கைகளில் அணிந்திருந்த வளையல்கள் அத்தனையையும் கழற்றி கையில் வைத்துக்கொண்டு, ``எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றார்.
அவருடைய அன்பை பார்த்து நெகிழ்ந்துபோன நான், ``இதெல்லாம் வேண்டாம். உங்க அன்பு போதும்'' என்று அந்த பெண்ணின் நகைகளை மீண்டும் அவருக்கே அணிவித்தேன். ``நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்...'' என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தார்.
பிறகு ஒருநாள், ஒரு பட்டுப்புடவையுடன் என் வீட்டுக்கு வந்தார். இதையாவது நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். வேண்டாம் என்று சொன்னால், அவர் மனம் புண்படும் என்பதற்காக, அந்த பட்டுப்புடவையை வாங்கிக்கொண்டேன்.
எனக்கு நிறைய ரசிகைகளை உருவாக்கிக் கொடுத்த இன்னொரு படம், `நம்ம வீட்டு தெய்வம்.' அந்த படம் பார்த்துவிட்டு என்னை சந்தித்த பெண்கள் எல்லோரும், ``பூஜை ரூமுக்கு போனால், உங்க முகம்தான் தெரியுது'' என்றார்கள்.
`மிருதங்க சக்ரவர்த்தி' படம் வந்த நேரத்தில், சுசீந்திரம் போய் அங்குள்ள ஒரு கோவிலில் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்தேன். யாரோ என் முதுகில் தட்டினார்கள். சாமி கூட கும்பிட விடாமல் இடைïறு செய்வது யார்? என்று திரும்பி பார்த்தபோது, ஒரு அழகான பெண் நின்று கொண்டிருந்தார்.
``மிருதங்க சக்ரவர்த்தி படம், என் வாழ்க்கையை போலவே இருக்கிறது. எங்க வீட்டுக்காரர் ஒரு மிருதங்க கலைஞர். நான் பாடகி. எங்கள் வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்கள் படத்தில் உள்ளன'' என்றார். அதைக்கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன்.
எனக்கு பாராட்டு வாங்கி கொடுத்த இன்னொரு படம், `இதயக்கமலம்.' அந்த படம் பார்த்துவிட்டு, ``எங்கள் வீட்டுக்கு உங்களைப்போல் ஒரு மருமகள் வரவேண்டும்'' என்று பல வயதான பெண்கள் பாராட்டினார்கள்.
அந்த காலகட்டத்தில், நடிகர்-நடிகைகள் `நட்சத்திரங்களாக' மதிக்கப்பட்டதற்கு எம்.ஜிஆரும், சிவாஜியும்தான் காரணம். எம்.ஜி.ஆருடன் நான் சுமார் பத்து படங்களிலும், சிவாஜியுடன் சுமார் பதினைந்து படங்களிலும் நடித்து இருக்கிறேன்.
பொதுமக்கள் மத்தியில் நடிகர்-நடிகை கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்று எம்.ஜி.ஆர். சொல்லித்தருவார். யாரைப்பார்த்தாலும், இரண்டு கையெடுத்து கும்பிட வேண்டும் என்று சொல்வார்.
ஒருநாள் எம்.ஜி.ஆர். என்னிடம், ``நீ காலையில் எழுந்ததும் என்ன செய்வே?'' என்று கேட்டார். ``டீ குடிப்பேன்'' என்றேன். ``பல் துலக்குவதற்கு முன், கொஞ்சம் அரிசியை எடுத்து வாயில் போட்டு பிறகு துப்பினால், அந்த அரிசியை சாப்பிடுகிற கோழி செத்துப்போயிடும். அந்த அளவுக்கு அதில் விஷம் இருக்கிறது. அதனால், பல் துலக்குவதற்கு முன் எதையும் சாப்பிடக்கூடாது'' என்று சொன்னார்.
அன்று முதல் நான் பல் துலக்கிவிட்டுத் தான் டீ-காபி சாப்பிடுவேன்.
சிவாஜியிடம் இருந்து நிறைய ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன். அவர் சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்துவிடுவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல்.
என் மகள் திருமணத்தன்று, ``விஜயா பொண்ணுக்கு இன்று திருமணம்'' என்று தன்னுடன் குடும்பத்தினரையும் அதிகாலையிலேயே எழ வைத்து, முதல் ஆளாக திருமண மண்டபத்துக்கு வந்துவிட்டார்.
எம்.ஜி.ஆர்-சிவாஜி வந்த பிறகுதான் நடிகர்-நடிகைகளுக்கு சமூகத்தில் மரியாதையும், அந்தஸ்தும் கிடைத்தது. வெறும் நடிகர்களாக மட்டுமல்லாமல், அரசியலிலும் நடிகர்-நடிகைகள் பிரகாசிப்பதற்கு அவர்கள் இருவரும்தான் காரணம்.
என் கணவர் வேலாயுதம் அந்த காலத்தில், சொந்தமாக விமானமும், கப்பலும் வைத்திருந்தார். மொத்தம் 4 பேர் அமரக்கூடிய அந்த விமானத்தை என் கணவரே ஓட்டுவார். ஒருமுறை கோவையில் இருந்து சென்னை திரும்பும்போது, அந்த விமானத்தின் ஒரு டயர் கீழே இறங்கவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த சம்பவத்துக்குப்பின், விமானத்தை விற்று விட்டோம்.
அதேபோல், கப்பலையும் ஒரு சூழ்நிலையில் கொடுத்து விட்டோம்.
எங்க குடும்பத்தில் நான் ஒருத்திதான் படிக்காதவள். படிக்காத காரணத்தால்தான் நான் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன். 16 வயதில் சினிமாவுக்கு வந்துவிட்டேன். அப்போது எனக்கு தமிழ் சரியாக பேச வராது. `டியூஷன்' வைத்து தமிழ் கற்றுக்கொண்டேன்.
என் முதல் படமே (கற்பகம்) வெற்றிபெற்றதால், நிறைய பட வாய்ப்புகள் வந்தன. வருடத்துக்கு, பத்து படங்கள் வரை நடித்தேன். பத்து வருடங்கள் ரொம்ப பிசியாக இருந்தேன். 1963-ல் திரையுலகுக்கு வந்த நான், 73-ல் நூறு படங்களில் நடித்து முடித்து விட்டேன்.
என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர், டைரக்டர் கே.எஸ்.கோபால கிருஷ்ணன். `கற்பகம்' படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, ஒருநாள் மாலையில், ``சார், நான் நாடகத்தில் நடிக்க போகணும்'' என்று டைரக்டரிடம் கேட்டேன்.
``உனக்கு சினிமா வேண்டுமா, நாடகம் வேண்டுமா? இரண்டில் ஒன்றை முடிவு செய்துகொள்'' என்று டைரக்டர் கூறிவிட்டார். அன்று முதல், படப்பிடிப்பு நடக்கும்போது, வேறு எதை பற்றியும் சிந்திக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தேன்.
நான் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், பத்து நாட்கள் அல்லது பதிமூன்று நாட்களில் எல்லாம் ஒரு படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்கள். `பலேபாண்டியா,' 13 நாட்களில் எடுக்கப்பட்ட படம். 20 நாட்களுக்குள் பெரும்பாலும் படத்தை எடுத்து முடித்து விடுவார்கள். அதிகபட்சம், மூன்று மாதங்கள் படம் எடுத்தால், அது மிக பிரமாண்டமான படம் என்று அர்த்தம்.
450 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், இன்று வரை சில படங்கள் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை. அந்த படங்கள்: கற்பகம், செல்வம், கந்தன் கருணை, சரஸ்வதி சபதம்,
இதயக்கமலம், நம்ம வீட்டு தெய்வம், தங்கப்பதக்கம், திரிசூலம், கல்தூண், மிருதங்க சக்ரவர்த்தி, வாயாடி, திருடி, ரோஷக்காரி.
இப்போதும் நான் படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். தமிழில், `சரித்திரம்' என்ற படத்தில் நடிக்கிறேன். தெலுங்கு, மலையாள பட வாய்ப்புகளும் வருகின்றன.
இறைவன் என் படிப்புக்கும், தகுதிக்கும் மீறி எனக்கு செல்வமும், செல்வாக்கும் கொடுத்து இருக்கிறார். கணவர், மகள், மருமகன், 2 பேரன்களுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக