கொழுகொழு குழந்தை அழகுதான். ஆனால் சிறுவர், சிறுமியர் அளவுக்கு அதிகமான எடையோடு இருப்பது ஆரோக்கியக் குறைவு. உங்கள் குழந்தை குண்டாயிருக்கிறதா? பின்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுங்கள்...
* குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து என்பது பெரியவர்களுக்கான ஊட்டச்சத்தின் அடிப்படையில்தான் அமைய வேண்டும். குழந்தைகளுக்கும் பெரியவர்களைப் போன்று வைட்டமின்கள், தாது உப்புகள், மாவுச்சத்து, புரதம் மற்றும் கொழுப்பு அவசியம்.
* குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தில் ஒரே வித்தியாசம், பல்வேறு வயதுகளில் தேவைப்படும் ஊட்டச்சத்துகளின் அளவு மாறுபடும் என்பதுதான். ஆனால் தற்போது குழந்தைகளுக்கான ஊட்டச்சத்தில் அதிகம் கவனம் செலுத்தப்படுவதில்லை. குழந்தைகள் `நன்றாக' சாப்பிட்டால் போதும் என்று பெற்றோர் நினைக்க, குழந்தைகள் குண்டாகவும், ஆரோக்கியக்குறைவாகவும் ஆகி வருகிறார்கள்.
* குழந்தைகளின் தினசரி வழக்கத்தில் மெதுவான மாற்றங்களை ஏற்படுத்தி, அவற்றை நீண்டகாலப் பழக்கமாக்கலாம். உதாரணத்துக்கு, சாப்பிடும்போது டிவியை அணைப்பது, குளிர்பானங்களுக்குப் பதிலாக பால் அல்லது தண்ணீர் குடிக்கப் பழக்குவது, `டின்னருக்கு' பிறகு குடும்பத்தோடு ஒரு `வாக்கிங்' போவது போன்றவை.
* அதிக உப்பு சேர்த்த `துரித உணவுகளை' குழந்தைகள் அதிகம் சாப்பிட விடாதீர்கள். எந்த அளவு உணவு சரியாக இருக்கும் என்றும், அதிக `கலோரி' நொறுக்குத்தீனிகளை முக்கியமான விசேஷங்களின்போதுதான் சாப்பிட வேண்டும் என்றும் குழந்தைகளைப் பழக்குங்கள்.
* குழந்தைகளுக்கு முழுத் தானிய நொறுக்குத்தீனிகள், தானிய வகைகளைக் கொடுங்கள். முழுத் தானியங்களின் நார்ச்சத்து திருப்தியான உணர்வையும், தானியங்கள் உங்கள் குழந்தைக்குச் சக்தியையும் அளிக்கும்.
* இளம் கேரட், பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை கொழுப்பில்லாத `யோகர்ட்' போன்றவற்றுடன் கலந்து கொடுக்கலாம். ஆரஞ்சு, வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களும் நல்லது. ஊட்டச்சத்துகள் செறிந்த நிலக்கடலை, வெண்ணை `சான்ட்விச்'களும் நல்ல நொறுக்குத்தீனியாக அமையும்.
* இனிப்பை விரும்பும் உங்கள் குழந்தைகளுக்கு கொழுப்பில்லாத இனிப்பு வகைகள், உறைந்த யோகர்ட், கொழுப்பில்லாத யோகர்ட்டுடன் பழங்கள் கொடுக்கலாம்.
* ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகள் தயாரிப்பதற்கு உங்கள் குழந்தையையே பழக்குங்கள். குறைந்த கொழுப்பு பாலாடைக்கட்டியை வெட்டி கோதுமை நொறுக்குத்தீனிகளை அலங்கரிப்பதற்குப் பழக்குங்கள். குழந்தைகளுக்கு ஆர்வமூட்டும் வகையில் வெவ்வேறு வடிவில் வெட்டும் `கட்டர்களை' கொண்டு முழுத்தானிய `பிரெட்'டை வெட்டி குழந்தைகளுக்கு அளிக்கலாம். பல்வேறு வகையான பழங்களைக் கொண்டு வேடிக்கையான முகங்களை உருவாக்கி அளியுங்கள். `புரூட் கெபாப்'பும் அவர்களுக்குப் பிடிக்கும். இது ஆரோக்கியத்திற்கும் நல்லது.
* பச்சையாக உண்ணுவதற்கு ஏற்ற காய்கறிகளை குழந்தைகள் எடுத்து உண்ணும் வகையில் எப்போதும் பிரிஜ்ஜில் வைத்திருங்கள்.
* வெளியே செல்லும்போது குழந்தைகள் சாப்பிடுவதற்கு யோகர்ட், சுவையான காய்கறிகள், பழங்கள், தானிய கேக்குகளை கொடுத்து விடுங்கள்.
* குழந்தைகளை சுறுசுறுப்பாக இருக்கச் செய்வது ஆரோக்கியமான எடை அதிகரிப்புக்கு வழி வகுக்கும். அவர்களை விளையாட்டு, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் அல்லது அவர்களுக்குப் பிடித்தமான செயலில் ஈடுபடுத்துங்கள்.
சனி, 13 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக