"ஐயா. என் பாட்டிக்காக உங்க குழு பிரார்த்தனை செய்யணும். முடியுங்களா?"
"நிச்சயமா முடியும். விவரங்களைச் சொல்லுங்க" வெள்ளை தாடியும் வெற்றிலை சிரிப்புமாக என்னை வரவேற்று தனக்கு முன் இருந்த நாற்காலியை காட்டினார் அந்த பிரார்த்தனை கிளப்பின் தலைவர். நான் யோசனையோடு மெதுவாக ஆரம்பித்தேன்.
"என் அம்மா வழி பாட்டி பேரு சித்ர பானுங்க. பேருக்கு ஏத்த மாதிரி எழுதி வெச்ச சித்திரம் மாதிரி இருப்பாங்க. யார் கொள்ளிக் கண் பட்டுச்சோ இருவது வயசுல அவங்க விதவையானது மகா கொடுமைங்க. நண்டும் சிண்டுமா ரெண்டு குழந்தைங்க. உறவுக்காரங்க ஒருத்தர் கூட உதவிக்கு வர்ல. ஆனா பாட்டி மொட்டையடிச்சுக்கிட்டு வெள்ளைப் புடவை கட்டிக்கணும்கிறதுல எல்லோரும் ஒத்துமையா இருந்தாங்க. பாட்டிக்கு நெஞ்சுரம் ஜாஸ்திங்க. எல்லா சடங்குகளும் முடிஞ்சதும் ரெண்டு குழந்தைகளோட தனியாக சென்னைக்கு வந்துட்டாங்க. திருவல்லிக்கேணி ஒரு ஒண்டு குடித்தனத்தில ரூம் புடிச்சாங்க. வீடுவீடா சமைக்கப் போனாங்க. தான் செஞ்ச பட்சணங்களையும் அப்பளங்களையும் எடுத்துக் கிட்டு கால் வலிக்க வலிக்க வீடு விடா போய் வித்தாங்க. எல்லா அவமானங்களையும் தனக்குள்ள மென்னு முழுங்கினாங்க."
சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மீண்டும் தொடர்ந்தேன்...
"கொஞ்சம் தலை நிமிர்ந்தவங்களுக்கு என் அம்மாவால கஷ்டம் வந்திச்சு. வரதட்சனை கொடுமையை எதிர்த்து போராடாம கோழைத்தனமா எங்க அம்மா தற்கொலை செஞ்சுக்கிட்டாங்க. அந்த கொடுமைகாரங்களை சும்மா விடக்கூடாதுன்னு பாட்டி வக்கீல் வீட்டுக்கும் கோர்டுக்கும் நாயா பேயா அலைஞ்சாங்க. இதுக்கு மத்தில என் மாமா, தானே ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு 'இனிமே உனக்கும் எனக்கும் ஒட்டோ உறவோ இல்லை'ன்னு ஒதுங்கிக்கிட்டாரு. ஆனா பாட்டி அதுக்கும் அசரல. 'டேய் சங்கர். நீ ஜெயிக்கனும்டா! அதை நான் பார்க்கணும்டா!' ன்னு அடிக்கடி சொல்லுவாங்க. என்னை நல்லா படிக்க வைச்சாங்க. 'உன் தரித்திரம் உன் பேரனையும் பாதிக்கும்டி சனியனே' என்ற அக்கம் பக்க ஏச்சு பேச்சையெல்லாம் தூக்கி எறிஞ்சு என்னை ஆசை ஆசையா வளர்த்தாங்க. ஆனா விதிவசத்தால நானும் என் பாட்டிக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்தேங்க. நானும் தற்கொலைக்கு முயற்சி பண்ணேங்க"
என் குரல் கம்மவும் அந்த பெரியவர் ரெடியாக இருந்த ஒரு க்ளாஸ் தண்ணீரை நீட்டினார். முழு கிளாஸையும் ஒரே மூச்சில் மடக் மடக்கென குடித்தேன். நெஞ்சை நீவிவிட்டுக் கொண்டு விட்டதில் தொடர்ந்தேன்.
"பருவ வயசு காதல் என்னை பாடாய் படுத்திச்சு. அது திடீர்னு தோத்துப் போனதுல எனக்கு உலகமே முடிஞ்ச மாதிரி தோணிச்சு. என் தற்கொலை முயற்சிய பாட்டி பார்த்துட்டாங்க. அவ்வளவுதான்! காளி அவதாரமே எடுத்தாங்க. என்னை நார்நாரா கிழிச்செறிஞ்சாங்க. அப்போதான் தன் முழு கதையையும் சொன்னாங்க. என் வெற்றிலதான் அவங்க வாழ்வோட அர்த்தம் இருக்குதுன்னு புரிய வைச்சாங்க. நான் அப்போ எழுந்தவன்தாங்க. படிச்சேன். பட்டம் வாங்கினேன். இன்னிக்கு ரொம்ப வசதியா இருக்கேன். அதுவும் தெய்வத்துக்கு பொறுக்கலங்க. பாட்டிக்கு கேன்சர் நோய் வந்திச்சு. முதலில் கர்பப் பையை எடுத்தாங்க. அப்பறம் மார்ல கத்தி வச்சாங்க. இப்ப எலும்புல இருக்குதாம். வலி வேதனையில அவங்க கத்தறத என்னால தாங்க முடியலங்க. நேத்து என் பாட்டி சொன்னதை கேட்டு துடிச்சு போயிட்டேங்க."
"டேய் சங்கர். போறும்டா. நான் பார்க்கவேண்டியதெல்லாம் பார்த்தாச்சு. இனிமே இந்த வலிய என்னால தாங்கமுடியாதுடா. ஒரு பாட்டில் விஷம் இருந்தா கொடு. பேயிடறேன்னாங்க. சாகறது கோழைத்தனம்னு சொன்னவங்களே செத்துப் போகணும்னு சொல்லறாங்கன்னா எவ்வளவு வேதனை அவங்களுகுள்ள இருக்கும்? அதுனால நான் உங்களை கெஞ்சி கேட்டுக்கறேன் அவங்க சீக்கிரம் செத்துப் போகணும்னு பிரார்த்தனை பண்ணுவீங்களா?"
புதன், 10 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக