புதன், 10 மார்ச், 2010

நரகமும் சொர்க்கம்தான்

காபியை ரசித்துக் குடித்தாள் ரங்கம்மா.

மருமகளுக்கு நல்ல கைமணம் தான். சரியான பக்குவத்தில், அருமையாக காபி தயாரிக்கக் கற்றுக்கொண்டு விட்டாளே, செவ்வயல் கிராமத்தை விட்டு வந்தவள்...

ரத்தினம், சைக்கிளைத் துடைத்துவிட்டு உள்ளே வந்தபடியே சொன்னான்...

""இன்னிக்கு சாயங்காலம் ஒரு மீட்டிங் இருக்குதும்மா... கேட் மீட்டிங்ன்னு பேரு... வர லேட்டானாலும் ஆகும்... புள்ளய காணமேன்னு நீ கவலைப்பட்டுகிட்டு இருக்காத... சாப்பிட்டுட்டுப் படு...'' என்று, சட்டை மாட்டி கிளம்பினான்.

சரிப்பா... பத்திரமா போயிட்டு வா...'' என்று அவனை, அனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்தாள் ரங்கம்மா.

சமையலறையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் மருமகள். புது வாசனை. மசாலாவுடன் ஏதோ ஒரு புதிய காய் இணைந்து நல்ல நறுமணத்தை வீடு முழுக்க பரப்பிக்கொண்டிருக்கிறது. இப்போதே சுவைத்துப் பார்க்க வேண்டும் போல நாவில் உமிழ்நீர் சுரந்தது. பட்டணத்து பதார்த்தங்களை இங்கு வந்த ஒரு வாரமாக சாப்பிட்டுக் கொண்டிருப்பதில், நாக்கு வித்தியாசமான சுவைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இன்றைய மசாலா, சாதத்திற்கா அல்லது சப்பாத்திக்கா தெரியவில்லை; ஆனால், வெறுமனே சாப்பிட்டால் கூட பிரமாதமாக இருக்கும் என்று மட்டும் தெரிகிறது.

அத்தே...'' என்று ஈரக்கையால் முகம், கழுத்து என்று, துடைத்தபடி வந்தாள் சாந்தி.


சொல்லும்மா...''

""அவரு கிளம்பிட்டாராத்தே?'' என்று மர அலமாரியிலிருந்து சேலையை எடுத்தாள்.

""இப்பத்தாம்மா கிளம்பினான்... சாப்பிட்டியாம்மா?''

""இல்லத்தே... கைல எடுத்துக்கிட்டேன்... வேலைக்குப் போனதும் சாப்பிட்டுக்குவேன்...''

""முடியுமா... வேலைக்கு நடுவுல?''

""ஏன், அத்தே?''

""மொதலாளி விடுவாரா?''

""விட்டுத்தான் ஆவணும்...'' என்று சிரித்தாள் சாந்தி.

""நான் ஒரு முக்கியமான தொழிலாளி அத்தே... எக்ஸ்போர்ட் கம்பெனியில என் உழைப்பு பெரிய பங்கு... அது முதலாளிக்கு நல்லா தெரியும்... சாப்பிடத்தான் போயிருக்கேன்னு சொன்னா, அவரு ஒண்ணும் சொல்ல மாட்டார்... சரி, அத்தே, பகலெல்லாம் தனியா இருக்கறீங்க... பத்திரமா இருந்துக்குங்க அத்தே... உங்க பேத்தி ராணி காலேஜுக்குப் போயிடுவா, பேரன் பிரபுவும் ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் ரிகர்சல்ன்னு கிளம்பிடுவான்...''

"கவலைப்படாதம்மா... நான் பாத்துக்கறேன்...''

""ராத்திரிக்கு வேணும்ன்னு எதையும் மீதி வெக்காதீங்க... வயிறார சாப்பிடுங்க... அப்புறம், முக்கியமான விஷயம்... கதவை மறக்காம தாழ்பாள் போட்டுக்குங்க அத்தை... கண் அசருவதற்கு முன்னால ரெண்டு முறை செக் பண்ணிட்டு படுத்துக்குங்க... பயங்கரமான நகரம் அத்தே... வன்முறை என்கிறது இங்கே டீ குடிக்கிற மாதிரி... கூலிப்படை, என்கவுன்ட்டர்ன்னு என்னென்னவோ பேரு சொல்வாங்க...

"கால் சவரன் மோதிரத்துக்காக ஆளையே வெட்டிக் கொல்ற கொலைக்காரனுக உலவுற ஊர் அத்தே இது... பத்திரமா இருந்துக்குங்க... வரட்டுமா...''

"சரிம்மா... நீ கவனமா போயிட்டு வா...'' என்று, உள்ளே வந்த போது, ரங்கம்மாவுக்கு செவ்வயல் கிராமத்தின் ஓட்டு வீடு நினைவுக்கு வந்தது.

பஞ்சாரத்தைத் திறந்து மூடி பார்த்துக் கொள்கிறேன் என்றாளே பொன்னக்கா, சொன்னபடி செய்திருப்பாளா? கால் நடைகள் எல்லாம் தீவனம் குறையாமல் வயிறு நிறைய வாழ்ந்து கொண்டிருக்குமா?

""என்ன ஆயா யோசன? உன் கிராமத்து வயல், வரப்புல மயில் வந்து ஆடுறாப்புல கனவா?'' என்றபடி வந்து பாட்டியை அணைத்துக் கொண்டாள் ராணி.

"அட, என் கண்ணு! வயல்ல வந்து ஆடுற மயிலை நீ பார்த்திருக்கியா?''

""சின்ன வயசுல பார்த்தது ஆயா... தம்பி தான் பார்த்திருக்க மாட்டான்... அப்புறம், ஆயா, வரப்பு முழுக்க மருதாணிச்செடி வெச்சிருப்ப தானே! மருதாணி பூக்குறப்ப ரொம்ப வாசனையா இருக்குமில்ல...'' ராணியின் கண்கள் விரிந்தன.

"ஆமாண்டி, கண்ணு... அதுவும் மாசி மாசம் பாத்தின்னா, இலை தெரியாம பூவா நெறைஞ்சு கிடக்கும்... ஆமா, நீ படிக்குறியே... அது என்னடா படிப்பு?''

"ப்ளைட் காட்டரிங் ஆயா...''

"அப்படின்னா?''

"விமானத்து சமையல்...''

"என்னாது? ஏரோப்ளான்ல சமையலா?'' வாயைப் பிளந்தாள் ரங்கம்.

"ஆமா, ஆயா... அது ஒரு ஸ்பெஷல் படிப்பு... வகுப்புல நான் முதல் ராங்க்... அரசுப் பள்ளியில முதல் ராங்க் வாங்கின பத்து மாணவிகளுக்கு ஒரு ப்ரைவேட் ஏர்வேஸ் கோச்சிங் கொடுக்குது... அதுக்குத்தான் நான் போயிகிட்டிருக்கேன்... ஆமா, நேத்து சாயங்காலம் நீ தனியா எங்க போன?''

""மார்க்கெட்டுக்குடா கண்ணு... உங்க அப்பாவுக்கு வாய்ல புண்ணுன்னு சொன்னான்... மணத்தக்காளி கீரை வாங்கிட்டு வந்தேன்... ஏண்டா?''

"வழி தெரியாம எங்கயாச்சும் போயிடப் போற... மோசமான நகரம் இது... நம்ம கிராமம் மாதிரி இல்ல... தண்டட்டி போட்டிருக்க இல்ல... அதுக்காக உன்னைய கடத்திகிட்டுப் போனாலும் போவாங்க...''

"சரிம்மா... நீயும் கவனமா போயிட்டு வா...''

"பிரபு... வாடா... என்னடா பண்ணுற...''

""இதோ வந்திட்டேன்க்கா...'' ஓடி வந்தான் பிரபு... புத்தகப்பையை முதுகில் மாட்டிக்கொண்டு, பாட்டியின் கன்னத்தில் முத்தமிட்டான்.
"கடலைமிட்டாய் பண்ணி வை ஆயா... வந்து சாப்பிடுறேன்...'' என்று ஓடினான்.

இரவு சாப்பாட்டு நேரம்...

சபை கூடியிருந்தது. பாட்டி தான் சமைத்திருந்தாள்.

ரசத்தைப் பிசைந்துகொண்டே சொன்னான் ரத்னம்...

""இன்னைக்கு எங்க பேக்டரில போர்மன் ஒருத்தருக்கு மயக்கம், மூச்சடைப்புன்னு வந்துடுச்சு... மரம் விழுற மாதிரி பொத்துன்னு விழுந்துட்டாரு... உடனடியா மருத்துவமனையில சேர்த்துட்டாலும், இன்னும் டேஞ்சர் தானாம்... தினந்தோறும் இரும்புத்தூள் உள்ள போகுதாம் சுவாசத்து கூடவே... அதுல வர்ற பிரச்னையாம்... ம்... பட்டணம், பட்டணம்ன்னு வந்து நல்லா அனுபவிக்கிறோம்...''

"ஆமாங்க...'' என்றாள் சாந்தி தலையாட்டி.

"எங்க கம்பெனியில வேற மாதிரி பிரச்னை... ரெடிமேட் கார்மென்ட் செக்ஷன்ல இருந்தாளே வசுமதி, திடுதிப்புன்னு அசிஸ்டென்ட் மானேஜர் நாடிமுத்துவை கல்யாணம் பண்ணிகிட்டாளாம்... பாவம், நாடிமுத்து பொண்டாட்டி வந்து கதறி தீத்துட்டா...

""சிறுக்கி... இவ வாழறதுக்கு அடுத்தவளோட புருஷன் தான் கெடச்சானா? வயசுப் பையனா, அறியாதவனா பாத்து கட்டிக்கிட்டுப் போக வேண்டியது தானே! என்ன ஊருங்க இது... அடுத்த குடும்பத்து மேல கொள்ளி போடுற ஊரு!''
"ஆமாம்மா... ப்ளேன் யூனிபார்ம் தைக்க அளவெடுக்கிறேன்னு ஒரு டெய்லர் வந்தான்... மூஞ்சே சரியில்லே... பொம்பளை டெய்லர் வந்தாத்தான் ஆச்சுன்னு ஒத்தைக் கால்ல நின்னோம்... சீச்சி... மோசமான ஊருப்பா இந்த சிட்டி...'' என்றாள் ராணி அருவருப்புடன். ரங்கம்மா மவுனமாக சாப்பிடுவதை அவர்கள் வியப்புடன் பார்த்தனர். ரத்னம் கேட்டான்...

""என்னம்மா, நீ ஒண்ணுமே சொல்லலே? கிராமத்துக்கு எப்படா கிளம்புவோம்ன்னு தானே இருக்கு உனக்கு?''

"இல்லப்பா... அப்படி யெல்லாம் இல்லே...' நிமிர்ந்தனர்; திகைப்புடன் பார்த்தனர்.

அவள் நிதானமாகச் சொன்னாள்...

"எல்லாம் ஊர் தான், எல்லாம் மக்கள் தான்... கிராமத்துல குற்றங்களே இல்லையா? ராமாக்கா பத்து வருசம் மின்னாடியே ருக்மணியோட புருஷனோட ஊரை விட்டு ஓடினா... காரை வீட்டு தருமன், கோவிந்தனோட காளைமாட்டையும், பசுவையும் திருடி வந்தான்...

'ஏன், பாண்டிம்மாவோட பேரன் நந்து, பெருமாள் கோவில் உண்டியலை ஒடைச்சு பணம், நகைன்னு எடுத்துகிட்டு ஓடலே? சாயப்பட்டறை தண்ணி கலந்து பொன்னிநதி அங்கயும் சுற்றுச்சூழல்ல பாதிப்பு ஏற்படுத்துதுப்பா, உன் போர்மன் சுவாசத்துல இரும்புத்தூள் கலந்த மாதிரி...

"கேட் மீட்டிங்ன்னு சொன்னே, சாந்தி வேலை நேரத்துல சாப்பிட்டுட்டு வந்து வேலை செய்வேன்னு சொன்னா... கிராமத்துல இதெல்லாம் நடக்குமா? வயல்ல நடவும், அறுப்பும் நடக்கும் போது ஒரு கூலியாள் நிமிர்ந்து பார்க்க முடியுமா? முதலாளி தான் விடுவாரா?

"யூனியன் வெச்சு மீட்டிங் போடுறதெல்லாம் எந்த மில்லுலயும் நடக்காது அங்க... சாதிச் சண்டைலயும், உஞ்சாமி, எஞ்சாமின்னு ஊளையிடுறதுலயும், தேரோட்டம், திருவிழான்னு முதல்மரியாதை கேட்டு கத்திய தூக்குறதுலயும் வன்முறை இல்லையா?

"இது, நாம தேடி வந்த பூமி... வாழ வைக்குற மண்... கிராமத்துல இல்லாத வேலைவாய்ப்பு, கல்வி வசதி, மருத்துவம், மேல் படிப்புன்னு பிழைக்கிற வழிகள் ஆயிரம் காட்டி நம்மை வாழ வைக்கிற பூமி இது... இனிமேலும் நகரத்தைக் குத்தம் சொல்லாதீங்கப்பா... குறையுள்ள மனிதர்களை குத்தம் சொல்லுங்க...'' என்ற பாட்டியை, மற்றவர்கள் வியப்புடன் பார்த்தனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல