சிவாஜியை ஞாபகப்படுத்தும் சின்னையா
“முறுத்தலாவை குருகமை தோட்ட பாடசாலையில் தான் என் ஆரம்ப கல்வியை கற்றேன். நான் வாழ்ந்த அந்த லயத்தில் இருந்து ஐந்து நிமிடம் நடந்தால் பாடசாலை வந்துவிடும். எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வாழ்ந்த கிட்ணன் தான் என் பள்ளி நண்பர். அவனோடுதான் எங்கு சென்றாலும் கூடவே செல்வேன். வகுப்பிலும் அவன் என் பக்கத்து சீட்டில்தான் அமர்ந்திருப்பான். அந்த பாடசாலையில் பொன்னுத்துரை என்ற வாத்தியார்தான் எங்களுக்கு படிப்பித்தார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அந்த வாத்தியார் எங்களுக்கு முறையாகவே படித்துக்கொடுக்கவில்லை.
காலையில் வகுப்பிற்கு வரும் அவர் என்னைக் கூப்பிட்டு எங்காவது போய் மாட்டு சாணத்தை அள்ளிக்கொண்டு வந்து அவர் வீட்டை மெழுகும்படிச் சொல்வார். அப்படி அவர் சொன்னாலும் எனக்குள் மகிழ்ச்சி பொங்கிவிடும். துள்ளிக் குதித்து வகுப்பை விட்டு வெளியே ஓடிவிடுவேன். அன்று முழுவதும் வாத்தியார் வீட்டை கூட்டிப் பெருக்குவதும் மெழுகுவதுதான் என் வேலையாக இருக்கும். இப்படி வாத்தியார் தினமும் ஒரு வேலை தரமாட்டாரா என்று என்னோடு படிக்கும் மற்ற மாணவர்களும் ஏங்குவார்கள். அவர்களுக்கும் சமையல் செய்வது, வீட்டுப் பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளையும் வாத்தியார் தருவார். இப்போது படிக்கும் பிள்ளைகள் ரொம்பவும் கொடுத்து வைத்தவர்கள்.
காலை கூட்டத்தில் மாணவர்களின் ஆக்கத் திறனுக்கு ஊக்கமளிக்கும் விடயங்களைப் பற்றி அதிபர் இப்போது பேசுகிறார். ஆனால் எங்கள் வாத்தியாரோ காலையில் வகுப்பிற்குள் நுழைந்ததும் இன்றைக்கு எங்கள் வீட்டிற்கு விறகு கொண்டு வருபவர்கள் கை தூக்குங்கள் என்று சொல்வார். நானும் மற்ற மாணவர்களும் போட்டிப் போட்டுக்கொண்டு கை தூக்குவோம். எங்களில் ஒரு ஐந்து பேரை தேர்வு செய்து விறகு பொறுக்கி வர அனுப்புவார். தேயிலை செடிகளில் கவ்வாத்து வெட்டப்பட்டு கிடக்கும் சுள்ளிகளை பொறுக்கி ஒரு பெரிய கட்டமாக கட்டி தலையில் வைத்து தூக்கி கொண்டு வந்து வாத்தியார் வீட்டில் போடுவோம்.
நான் தூக்கி வந்த விறகு கட்டு பெரிதாக இருக்கும். அதைப் பார்க்கும் வாத்தியார். சின்னய்யா நீ நல்ல கெட்டிக்காரன்டா என்று பாராட்டுவார். வாத்தியாருக்கு வேலை செய்து கொடுத்தால்தான் கெட்டிக்காரன் பட்டம் அன்று கிடைத்தது. பாடசாலைக்கு சென்று படிக்காமல் வாத்தியார் வீட்டில் வேலை செய்வதால் எனக்கு படிப்பே வரவில்லை. ஆனாலும் வருட இறுதியில் நடக்கும் தேர்வில் என்னையும் மற்ற மாணவர்களையும் சித்தியடைய செய்துவிடுவார் வாத்தியார். செய் நன்றி மறக்காதவர்.
இதேபோல தேர்வு என்பது இப்போது நடப்பது போலல்ல. கண்டியிலிருந்து வரும் கல்வி அதிகாரி கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் சொன்னால் போதும். அதற்காக வாத்தியார் போடும் திட்டத்துக்கு அவரின் மனைவி உதவியாக இருப்பார். வகுப்பிற்குள் கல்வி அதிகாரி வந்ததும் ஆசனத்தில் அமர்வார் அவருக்கு பின்னால் இருக்கும் ஜன்னலுக்கு வெளியே வாத்தியாரின் மனைவி வந்து நின்று கொள்வார். அவர் அப்படி நிற்பது கல்வி அதிகாரிக்குத் தெரியாது. வகுப்பில் அமர்ந்திருக்கும் மாணவர்களை வரிசைகிரமாக எழுப்பி கேள்விகளை கேட்பார். ஐந்தில் ஒன்று போனால் எவ்வளவு என்று கேள்வி கேட்பார் கல்வி அதிகாரி. உடனே நாங்கள் ஜன்னலுக்கு வெளியே நிற்கும் வாத்தியாரின் மனைவியைப் பார்ப்போம். அவர் கை விரல்களில் நான்கு என்று காண்பிக்க நாங்கள் சரியான விடையை சொல்லி விடுவோம். இப்படி எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லி அந்த தேர்வில் வெற்றிப்பெற்று அடுத்த வகுப்பிற்கு சென்று விடுவோம்...” சுவையான முன்னுரையுடன் பேச்சை ஆரம்பித்தார் சிலோன் சின்னையா. தனது பெற்றோர் பற்றி இப்படி சொல்கிறார் இவர்.
“எனது அப்பா பெயர் சின்னக் கண்ணு சிதம்பரம், அம்மா காவேரியம்மாள் அப்பா குருகமை தோட்டத்தில் பெரிய கங்காணியாக இருந்திருக்கிறாரு. அந்தக் காலத்தில் இராமானுஜம் கப்பலில் இலங்கைக்கு தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் நிறைய பேரை அழைத்து வந்ததாக பெருமையாக சொல்வார். எனது அப்பா முறுத்தலாவை சந்தியில் சிறிய சில்லறை கடை வைத்திருந்தார். எங்கள் வீட்டில் மாடு வளர்த்தோம். மாட்டுக்கு புல் அறுப்பது நான் தான். பாடசாலையை விட்டு திரும்பி வரும்போது புல்கட்டோடுதான் வீட்டுக்கு வரவேண்டும் என்பது தான் என் அப்பாவின் கட்டளை. அதன் படியே புல்லு கட்டை தலையில் வைத்துக்கொண்டு புத்தகப் பையை தோளில் மாட்டிக்கொண்டு வீட்டுக்கு வருவேன். ஐந்தாவது படித்து முடிய தோட்டப் பாடசாலையில் இருந்து விலகி தெஹியங்க மகா வித்தியாலயத்திற்கு சென்றேன்.
காலையில் எழுந்து பால் கறக்க வேண்டும். அதை கேனில் ஊற்றி எடுத்துக்கொண்டு கம்பியடி என்ற இடத்தில் இருந்த பால் கடையில் கொடுத்துவிட்டு பாடசாலைக்கு செல்லவேண்டும். அது எனக்கு சிரமமாக இருக்க அப்பாவிடம் ஒரு சைக்கிள் வாங்கித் தரும்படி கேட்டேன். அப்பா முடியாது என்று மறுக்க அப்பாவிடம் கோபித்துக்கொண்டு வீட்டிற்கு செல்லாமல் நானும் நண்பர் கிட்டிணனும் பஸ் ஏறி மாத்தளைக்கு ஓடி விட்டோம். அங்கே ‘கோல்டன் கபே’ என்ற ஹோட்டலில் மேசை துடைக்கும் வேலை செய்தோம். நான் காணாமல் போனதால் துடித்துப்போன என் அம்மா என்னைத் தேடிக் கண்டுபிடித்து வரும்படி என் அப்பாவை விரட்டிவிட்டிருக்கிறார். அடுத்த வாரமே அப்பா மாத்தளை டவுணுக்கு வந்து என்னை கண்டுபிடித்து சைக்கிள் வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து என்னை ஊருக்கு அழைத்துப் போனார்.
அதன்படி சைக்கிளும் வாங்கித் தந்தார். அப்பாவிடம் கண்டிப்பும், கருணையும் இருந்தது. அப்பா, அம்மா, நாங்கள் பிரியமாக வளர்த்த பசுமாடு, துள்ளித் திரிந்த அந்த தேயிலைத் தோட்டம், புல்லுக்கட்டு சுமந்து நடந்த அந்த ஒற்றையடிப்பாதை என எல்லாவற்றையும் இன்று நினைத்து பார்த்தால் அது ஒரு சுகமான அனுபவமாவே இருக்கிறது. அந்த சுகத்தை இப்போது என் லண்டன் வாழ்க்கை தந்ததாக எனக்குத் தெரியவில்லை” என்று பெருமூச்சு விடுகிறார் சிலோன் சின்னய்யா.
அவரிடம், கலையுலகத்துக்கு எப்படி வந்தீர்கள்? என்று கேட்டோம்.
தெஹியங்க பாடசாலையில் நான் படித்தபோது அங்கே மேடையேறிய நாடகங்களில் நடித்திருக்கிறேன். அதனைத் தொடர்ந்து கண்டி மகாத்மா காந்தி கல்லூரியில் படித்தபோது நான் நிறைய கலை விழாக்களில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது. சோக்ரடீஸ், சேரன் செங்குட்டுவன் நாடகங்களில் நடித்ததற்காக எனக்கு பரிசுகள் கிடைத்தன. கண்டி மகாத்மா காந்தி கொலஜ், தற்போது இந்து சீனியர் பாடசாலையாக இயங்கி வருகிறது. நான் நாடக உலகுக்கு வர எங்கள் ஊர் சுப்ரமணியரும் ஒரு காரணம். அவர்தான் எங்கள் ஊர் குல தெய்வ சாமி. அந்த கோயிலில் வருடந்தோறும் நடக்கும் திருவிழாவில் நாடகம் போடுவார்கள்.
அந்த நாடகத்தில் நானும் நடித்துவிட வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருந்தேன். நாடக குழுவினருடன் ‘எனக்கு ஒரு வாய்ப்பு தாங்க!’ என்று கேட்க ‘நீ சின்னப் பையன் உனக்கு எப்படி வாய்ப்பு தருவது’ என்று மறுத்துவிட்டார். நான் கதறி அழுதேன். பிறகு என்னைப் பார்த்து பரிதாபப்பட்ட அவர்கள் அன்று மேடையேற்றவிருந்த நாடகத்தில் பராசக்தி சிலையாக நடிக்க சந்தர்ப்பம் தந்தார்கள். சூலத்தை கையால் பிடித்து வைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தேன். அதுதான் என் முதல் நடிப்பு.
அதற்குப் பிறகு நான், லயத்தில் கிட்ணன் ஆகியோரும் வீட்டில் இருக்கும் பெட்சீட், சேலை போன்றவற்றை வைத்து நான்கு தடிகளை நாட்டி அதைச் சுற்றி இந்தத் துணிகளை கட்டி மேடை போடுவோம். அதில் நாடகம் நடிப்போம். கோதுமை மாவை முகத்தில் அப்பிக்கொண்டு, கரித்துண்டில் மீசை வரைந்து நாங்கள் போடும் நாடகத்தை எங்கள் லயத்தில் வசித்தவர்கள் வந்து பார்த்து சிரிப்பார்கள். அதுவே எனக்கு கிடைத்த முதல் பாராட்டாக இருந்தது” என்று தமது கலையுலகிற்கு வித்திட்ட முதல் அனுபவத்தை மெய்சிலிர்க்க கூறிய அவரிடம், பாடசாலைக்கு கட் அடித்து சினிமா பார்த்த அனுபவம் உண்டா என்று கொக்கி போட்டோம்.
“அப்படி சினிமா பாக்கிற வசதி எங்களுக்கு இல்லை. ஆனாலும் சினிமா பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது. நான் முதல் முதலாக படம் பார்த்த அனுபவத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.
எங்கள் தோட்டத்திற்கு பக்கத்தில் சிங்காசன காடு என்று ஒரு இடம். அங்கே நிறைய வாழை மரங்கள் இருக்கும். நாங்கள் பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்த பிறகு சிங்காசன காட்டுக்கு சென்று அங்குள்ள காய் கணிகளை பறித்துக்கொள்வோம். ஒருமுறை கண்டி வெம்பிளி தியேட்டரில் சிவாஜி நடித்த பாசமலர் திரைப்படம் திரையிடப்பட்டிருந்தது. அதை பார்த்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்ட நான் என் நண்பனிடம் விடயத்தை கூற அவன் வா சிங்காசன காட்டுக்கு போய் வழை இலையை வெட்டிக்கொண்டு வந்து சைவ கடைகளில் கொடுத்தால் பணம் தருவார்கள்.
அதை எடுத்து படம் பார்ப்போம் என்று அவன் சொன்ன யோசனப்படியே நானும் அவனுடன் போய் வாழை இலைகளை சேகரித்தேன். அவற்றை அடுக்கி தூக்கிகொண்டு நடந்தோம். எங்கள் ஊரிலிருந்து கண்டிக்கு பத்து கிலோ மீட்டர் நடந்தே சென்றோம். வெம்பிலி பட மாளிகைக்கு பக்கத்திலிருந்த ஐயர் கடை ஹோட்டலில் வாழை இலையை கொடுத்தோம்.
இருநூறு வாழை இலைக்கு இரண்டு ரூபா தந்தார்கள். நாங்கள் வாழை இலை விற்ற அந்த ஐயர் கடை தான் இன்று பிராமணர் ஹோட்டலாக இருக்கிறது. கிடைத்த பணத்தை எடுத்துக்கொண்டு வெம்பிலி தியேட்டருக்குள் நுழைய அங்கே ஹவுஸ்புல் போர்ட் மாட்டியிருந்தது. டிக்கட் இல்லை என்றதும் எனக்கு பகீர் என்றது. ‘நாங்கள் ரொம்ப தூரத்தில் இருந்து வந்திருக்கோம் ஐயா.. எப்படியாவது எங்களை பார்க்க அனுமதி கொடுங்க’ என்று கெஞ்சி கேட்டோம். அவர்களும் சரி படம் தொடங்கிய பிறகு நீங்கள் உள்ளே வரலாம் சீட் கிடையாது தரையில் அமர்ந்துதான் பார்க்க வேண்டும் என்றார்கள். படம் பார்க்க கிடைத்ததே பெரிய விசயம் என்று நினைத்தபடியே சரி என்றோம் சிறிது நேரத்தில் தியேட்டருக்குள் நுழைந்தோம். திரைக்கு முன்னால் அமர்ந்திருந்தோம். திரையில் தோன்றிய நடிகர்கள் எல்லோரும் பெரிய பெரிய உருவங்களாக தெரிந்தார்கள். சினிமா நடிகர்கள் என்றால் பெரிய ஆட்களாகத்தான் இருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு நான் நடித்த நிர்மலா படத்தை திரையில் பார்த்த போதுதான் எனக்குப் புரிந்தது, திரையில் சினிமா நடவடிக்கைகள் பெரிதாக தோன்றுவது மெகரா தொழில்நுட்பத்தினால் என்பது. தனது சினிமா பிரவேசம் பற்றி?
சிலோன் சின்னையா இப்படிச் சொல்கிறார்.
கண்டியில் நானும் நண்பர் ரகுநாதனும் நிறைய நாடகங்கள் போட்டோம். அதன் பிறகு கொழும்பில் எங்களின் ‘தேன்’ நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதில் என் நடிப்பை பார்த்த பலர் பாராட்டினார்கள். அதன் பிறகு நான் நிர்மலா படத்தில் நடித்தேன். அதனைத் தொடர்ந்து அம்பாள்கபே நாராயணசாமி தயாரித்த மஞ்சள் குங்குமம்’ நான் உங்கள் தோழன், புதிய காற்று போன்ற படங்களில் நடித்த பிறகு எனக்கு இந்தியப் படங்களில் நடித்து விட வேண்டும் என்ற ஆசை வர ராமானுஜம் கப்பலில் ஏறி தமிழகத்திற்கு சென்றுவிட்டேன். அங்கே இலங்கையிலிருந்து வரும், பிரமுகர்களுக்கு கை கொடுக்கும் மணவைத் தம்பியை பற்றி கேள்விப்பட்டு அவரின் இல்லம் சென்றேன்.
என் ஆசையை அவரிடம் சொன்னேன். சரி உனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்றார். அன்று அவர் வீட்டிலேயே தங்கினேன். அடுத்த நாள் மணவைத் தம்பி என்னை இயக்குனர் திருலோகச் சந்தரிடம் அழைத்து சென்று அறிமுகப்படுத்தினார். மணவைத் தம்பியின் வேண்டுதலுக்காக ‘நீயின்றி நானில்லை’ படத்தில் எனக்கு வக்கீல் வேடம் கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினேன். அதன் பிறகு எனக்கு திரையுலகில் சில நண்பர்களின் நட்பு கிடைக்க தொடர்ந்து படங்களில் நடித்தேன். எனவே தமிழ் திரையுலக பிரவேசத்திற்கு வித்திட்ட மணவைத் தம்பியை என்னால் மறக்க முடியாது” என்று சொல்லும் சின்னய்யாவிடம் காதல் அனுபவம் பற்றி கேட்டோம்.
“நான் படித்து முடித்த பிறகு ஹேவாஹெட்ட, அம்பிட்டிய போன்ற பாடசாலைகளில் வாத்தியாராக பணியாற்றினேன். அங்கே ஒரு பெண்ணை சந்தித்தேன். பார்த்ததும் காதல். ஆனால் எங்கள் காதலை கல்யாணம் வரை கொண்டு செல்ல முடியவில்லை. குடும்பத்தினரின் எதிர்ப்பை என்னால் சமாளிக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகு குடும்பத்தினர் பார்த்த பெண்ணையே திருமணம் செய்துகொண்டேன். கண்டியில் எனது இல்லத்தில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு மூத்த பத்திரிகையாளர் க. ப. சிவம், கண்டி கலா ரசிகர் மன்றத் தலைவர் சுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். கண்டி மல்லிகா ஸ்டூடியோவில் திருமண படம் பிடித்தோம்” என்றார் சின்னையா.
‘ம்.... அது ஒரு காலம்..’ என்று ஏங்கச் செய்யும் ஒரு சம்பவத்தை இங்கே எம்முடன் பகிர்ந்து கொண்டார் சின்னையா.
“நான் ஹேவாஹெட்டையில் வாத்தியாராக பணிபுரிந்தபோது வெள்ளிக்கிழமை நாளில் கொழும்புக்கு வந்து விடுவேன். கொழும்பில் நடக்கும் நாடகத்தில் நடித்து விட்டு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கண்டிக்குச் சென்றுவிடுவேன். அங்கு செல்லும் போது நள்ளிரவாகி விடும். கண்டியிலிருந்து ராகலைக்கு காலை நாலரை மணிக்குத்தான் பஸ் வரும். அதுவரை கண்டி மணிக்கூண்டு கட்டைச் சுவரில் பேப்பரை விரித்து படுத்துவிடுவேன். சரியாக நாளரை மணிக்கு எழும்பி பஸ் ஏறி ராகலையில் இறங்கி அங்கிருந்து ஹேவாஹெட்டையில் இறங்க காலை ஏழு மணியாகிவிடும். அங்குள்ள ஒரு கடையில் பான் அரை இறாத்தல் வாங்கி கொண்டு இஸ்கொலாகந்த தோட்டத்தின் செங்குத்தான மலையின் ஒற்றையடிப் பாதையில் பானை சாப்பிட்டு கொண்டே நடப்பேன். அது ஒரு காலம்...” என்றவரிடம் மறக்க முடியாத ஒரு சம்பவம் பற்றி கேட்டோம்.
‘திருச்சி பட்டாவத்தலை, முற்கம்பி போன்ற பகுதிகளில் கரைகடந்த ஒருத்தி படத்தின் படபிடிப்பு நடைபெற்றது. நான் அதில் குறவர்களின் தலைவனாக நடித்தேன். என்னோடு நடித்த ஏனைய குறவர்கள் அனைவருமே அசல் குறவர்கள். படிப்பிடிப்பு இடைவேளையில் அங்கிருந்த ஒரு விடுதியில் சாப்பாடு ஏற்பாடு கெய்திருந்தார்கள். நான் உள்ளே போக ‘ஏய் நீ எங்கே இங்கே வருகிறாய் வெளியே நில் சாப்பாடு தருகிறேன்’ என்றார்கள் ஹோட்டல்காரர்கள். அதிர்ச்சியடைந்த நான் ‘சென்னையிலிருந்து இந்தப் படத்தில் நடிக்க வந்திருக்கிறேன்’ என்றேன். அதற்கு அவர்கள் என்னை நம்பாது சரி வெளியே நில் என்று சொல்லி ஒரு தட்டில் சாப்பாட்டை போட்டு கீழே வைத்தார்கள். அப்போது அங்கு வந்த படத் தயாரிப்பாளர் மியான்பாய், ‘ஏய் இவரு இலங்கையில சிவாஜி மாதிரி ஒரு பெரிய நடிகர். அவரை உள்ளே அழைத்து சாப்பாடு கொடுங்கள்’ என்றார். அதன் பிறகுதான் என்னை உள்ளே அழைத்து வாழை இலையில் சாப்பாடு தந்தார்கள்’ என்று மறக்க முடியாத சம்பவத்தை சொல்லி சிரிக்கும் சின்னய்யாவிடம் வாழ்க்கையை பற்றி உங்கள் புரிதல் என்ன என்று கேட்டோம்.
“வாழ்க்கையில் நான் பெரிதாக சாதித்தேன் என்று சொல்வதற்கில்லை. இருப்பதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் என் ஆசை. மிச்சமாக இருக்கும் என் வாழ்க்கையின் இந்தக் கொஞ்ச காலத்தையும் பிரயோசனமாக்க வேண்டும் என்பதில் வெறியாக இருக்கிறேன். நான் வாழும் காலத்தில் எதையாவது செய்துவிட்டு போனால் தான் என் பெயர் பேசப்படும். அது என் பிள்ளைகளுக்கு பெருமைதானே!” என்று கூறி முடித்தார் லண்டனில் வாழும் சிலோன் சின்னையா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக