"சடக் சாந்தினி'. அருணாவைப் பார்க்கும் போதெல்லாம் தனக்கு இந்த வார்த்தைகளே ஞாபகத்துக்கு வந்ததாக மும்பை மருத்துவமனையில் அவருடன் பணியாற்றிய மூத்த செவிலி துர்கா மேத்தா குறிப்பிடு கிறார். "சடக் சாந்தினி' என்பது குஜராத்தி பிரயோகம். "தனது கிரகணங்களால் மின் அதிர்ச் சியை தரவல்ல சிறிய நிலா என்பதுதான்' அதன் அர்த்தம்.
உண்மையிலியே அருணாவுக்கு அந்த பிரயோகம் மிகப் பொருந்தும்.
இந்தியாவின் கொங்கன் பிரதேசத்தைச் சார்ந்தவர் அருணா ஷன்பாக் (Aruna Shanbaug). கொடுமையான அந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது 25 வயது நிரம்பிய அழகிய பெண். அவர் பணி யாற்றிய மும்பை மாநகராட்சியால் நடத்தப் பட்ட மருத்துவமனையில் அருணா மிகப் பிரபலம். அவரது பிரபலத்துக்கு அவரது அழகு மற்றும் திறமை மட்டுமன்றி விதிகளை கடைபிடிப்பதில் அவர் காட்டிய உறுதியும் எதையும் துணிச்சலாக எதிர்கொள்ளும் சுபாவமுமே காரணமாக இருந்தது. படபடப் பாக அவர் பேசும் வார்த்தைகள் சிலரால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் அதே மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிய சுந்தீப் சர்தேசாயை (Dr. Sundeep Sardesai) கவர்ந்ததில் அதிக ஆச்சர்யம் இல்லை. அருணா சுந்தீப் காதல் அந்த மருத்துவமனை முழுவதும் அறியப்பட்டு, திருமணத்திற்கான நாளை இருவரும் தேடிக்கொண்டு இருந்தார்கள்.
"அருணா வுக்கு என்ன கவலை? அதிஷ்டசாலி அவள்' என்றுதான் அவளுடன் பணியாற்றிய அனைத்து செவிலிகளும் நினைத்துக் கொண்டிருந்தனர்.
அருணா பணியாற்றி வந்தது நாய்கள் அறுவை மற்றும் ஆராய்ச்சிப் பிரிவில். சில நாட்களாக அடிக்கடி நாய்களுக்கான இறைச்சி காணாமல் போனது. அருணாவின் சந்தேகம் அந்தப் பிரிவில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றிக்கொண்டிருந்த சோகன்லால் மீதுதான். ஏற்கனவே ஆராய்ச் சிக்கான நாய்களை இரக்கமில்லாமல் கொடுமையான முறையில் கையாண்டதற்காக அருணா சோகன்லாலை கண்டித்திருக்கிறார்.
காணாமல் போன நாய் உணவுகளைப் பற்றி கேட்டதற்கு, "சிஸ்டர், எப்படியும் மருத்துவர்கள் கையால் சாகப் போகிற நாய்களைப் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? அவற்றிற்கு வலித்தால் என்ன? பட்டினி கிடந்தால் என்ன?' என்று திமிராக பதிலளித்தான். அதற்காக அருணா அவனை கடுமையான சொற்களால் கண்டிக்க நேர்ந்தது, "இன்னொரு தடவை இவ்வாறு நடந்து கொண்டால், உன் வேலை போய்விடும்' என்று எச்சரித்தார்.
"அருணா இப்படித்தான். படபடவெனப் பொரிந்து தள்ளி விடுவாள். மற்றபடி அவள் இதயம் தங்கம்' என்கின்றனர் அருணாவின் சக தாதியர். "அவன் ரொம்ப முரடன். நான் அவனை கவனித்துக்கொண்டு இருக்கிறேன்.
அடுத்த முறை இப்படி ஏதாவது நடந்தால், அவனைப் பற்றி கண்டிப்பாக முறையிடப் போகிறேன்' என்று அருணா சோகன்லாலைப் பற்றித் தனது தோழிகளிடம் சொல்லிக் கொண்டிருக்க அங்கே அவனோ, "அருணாவை மானபங்கப்படுத்தி பழிதீர்க்கப் போகிறேன்' என்று அவனது நண்பர்களிடம் கறுவிக்கொண்டு இருந்தான்.
அருணாவின் தோழிகள் பயந்த மாதிரியே ஒரு நாள் நடந்தது. அருணா இரவுப் பணியில் இருக்கும் போது ஒரு தனியறையில் சோகன்லால் "சின்ன நிலா' என்று அழைக்கப்பட்ட அருணாவை பலாத்காரப் படுத்திவிட்டான். அருணாவின் வாழ்க்கையையே ஒரு முடிவுக்கு கொண்டு வந்த அந்த சம்பவம் நடைபெற்றது நவம்பர் மாதம் 1973 ஆம் ஆண்டு.
சம்பவம் உடனடியாக வெளியே தெரிய வர, நடந்தது என்ன என்று விவரிக்கும் சக்தி அருணாவிடம் இல்லை. அருணா கத்தி யாரையும் உதவிக்குக் கூப்பிட்டு விடக் கூடாது என்பதற்காக, சோகன்லால் நாய்களைக் கட்டிப்போடும் சங்கிலியால் அவளது கழுத்தை நெரித்ததில் அவரது மூளைக்குப் போகும் ஒக்ஸிஜன் தட்டுப்பட்டு மூளையின் பல பாகங்கள் செயலிழந்து அருணா ஏறக் குறைய கோமா நிலையிலிருந்தார். பேசும் திறன் முற்றிலும் இல்லை.
முதலில் மறைக்க முயற்சிக்கப்பட்ட சம்பவம், "தங்களுக்குப் பணியிடத்தில் பாதுகாப்பு வேண்டி' மருத்துவமனை செவிலியர்கள் நடத்திய மூன்று நாள் வேலை நிறுத்தத்தால் பரபரப்பு அடைந்தது. அருணா மீதான தாக்குதலுக்காக 1973ஆம் வருடம் நவம்பர் மாதம் நடை பெற்ற வேலை நிறுத்தம்தான் இந்தியாவின் செவிலியர்கள் நடத்திய முதல் வேலை நிறுத்தம். விஷயம் முதல்வர் வரை சென்று சோகன்லால் கைதுசெய்யப்பட்டு 7 ஆண்டு சிறைத் தண்டனைக்கு ஆளானான். ஆனால் பாலியல் பலாத்காரத்திற்காக அல்லாமல் தாக்குதல் மற்றும் வன்திருட்டு ஆகிய குற்றங்களுக்காகத்தான் தண்டனை வழங்கப்பட்டது. ஏனெனில் அருணாவோ எந்தவித உணர்வும் செயற்றிறனும் இன்றி நீதிமன்றம் செல்லவோ அல்லது சாட்சி சொல்லவோ முடியாத நிலையில் இருந்தார். தொடர்ந்த சிகிச்சைகளினாலும், மழிக்கப்பட்ட தலையினாலும் "சின்ன நிலா' என்று வர்க்கப்பட்ட அருணா கசக்கி எறியப்பட்ட குப்பைக் காகிதம் போல உருக்குலைந்து போனார்.
அருணா தாக்கப்பட்டு 30 வருடங்கள் கடந்துவிட்டன. இப்போதும் மும்பை மருத்துவமனைக்குச் சென்றால் அதே வார்டில் அருணாவின் கதறல்களை நீங்கள் கேட்கலாம். அருணா இன்றும் உயி ரோடு இருக்கிறார். எந்தவித உணர்வும் இன்றி பற்கள் உட்பட அவயவங்களில் எவ்விதப் பயனுமின்றி! அவருக்கு கண்பார்வை கிடையாது. நினைவு கிடையாது. பேச முடியாது. ஆனால் 30 வருடங்களுக்கு முன்பு நடந்த அந்தக் கொடூரம் அவர் மனதின் ஆழத்திலிருந்து சகிக்க முடியாத அலறல்களாகவும் கதறல்களாவும் சில சமயங்களில் இதயத்தை சில்லிட வைக்கும் சிரிப்பாகவும் வெளிவருகிறது. அவர் மனதின் ஆழத்தில் உணர்வுகள் மிஞ்சியிருக்கின்றனவா?
இல்லை, ஆழ்மௌனம்தானா? என்பது யாருக்கும் தெரியாது.
அருணாவின் கணவராக வேண்டிய சுந்தீப் சர்தேசாய் அருணாவுக்காக நான்கு வருடங்கள் காத்திருந்து நம்பிக்கை இழந்த நிலை யில் இன்று வேறு எங்கோ மனைவி மக்களுடன் இருக்கிறார். சோகன்லால் தண்டனைக் காலம் முடித்து தில்லியில் தனது குடும்பத்துடன் வசிக்கிறார். அருணாவின் உறவினர்க ளும் நண்பிகளும் கொஞ்சங்கொஞ்சமாக களைத்துப் போய் இன்று சொந்தம் என்று சொல்லிக்கொள்பவர்கள் மும்பை மருத்து வமனையில் வேலைக்கு வந்து சேரும் மருத்துவர்களும், செவிலிகளும், பணியாளர்களும்தான். அவர்கள்தாள் இன்று அருணாவை தத்தெடுத்துக் கொண்டுள்ளனர்.
மும்பை மருத்துவமனையில் பணி யாற்றும் அனைத்து செவிலியர்களுக்கும் அருணா ஒரு காவல் தெய்வம் போல. செவிலியர்களின் தன்னலமற்ற சேவையின் அடையாளமாக அருணா ஷன்பாக் இந்த 53 வயதில், தாய் வயிற்றில் இருக்கும் கருவினைப் போல சுருங்கி இன்றும் மும்பை மருத்துவமனை வார்டில் படுத்திருக்கிறார்....
அருணாவுக்கு வேண்டியது வாழ்வா???

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக