உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் மங்கர் பகுதியில் 6 ஹெக்டேர் நிலப்பரப்பில் கிரிபாலு மகாராஜ் ஆசிரமம் உள்ளது. அந்த ஆசிரம சாமியார் கிரிபாலு மகாராஜ், தனது மனைவி இறந்த நாளில் ஆண்டுதோறும் ஏழைகளுக்கு விருந்து அளித்து உதவிப்பொருட்கள் வழங்குவது வழக்கம்.
விருந்துடன், 10 ரூபாய் பணம், சாப்பாடு தட்டு, லட்டு, கைக்குட்டை ஆகியவை வழங்கப்பட்டன. இவற்றை பெறுவதற்காக, பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் திரண்டு இருந்தனர். ஆண்களும், பெண்களும் தனித்தனி வரிசையில் நின்றிருந்தனர்.
இதை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் கூடியபோது நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதில், 39 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 100க்கும் மேற்பட்டவர்களில் 40 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்த நிலையில், அலட்சியத்தால் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக ஆசிரமத்தின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ஆசிரமத்தை மக்கள் தாக்கக் கூடும் என்பதால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நெரிசலில் இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்குவதாக ஆசிரமம் அறிவித்துள்ளது. ஆனால், மாநில அரசு சார்பில் இதுவரை நிவாரணத் தொகை அறிவிக்கப்படவில்லை. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று மாநில அரசை பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
சாமியார் தலைமறைவு:
நெரிசல் சம்பவம் ஏற்பட்ட 2 மணி நேரம் வரை ஆசிரமத்தில் சாமியார் கிரிபாலு மகாராஜ் இருந்துள்ளார். பின்னர், பலி எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கவே பயந்து போன அவர், ஆசிரமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
50 பேர் காணவில்லை?
01.03.10 ஆசிரமத்துக்கு வந்த பலரை காணவில்லை. அவர்களை தேடி 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆசிரமத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ஆசிரமம் நேற்று வெறிச்சோடி கிடந்தது.
நிதியுதவி:
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கபிரதமர் மன்மோகன் சிங் நேற்று உத்தரவிட்டார்.
மோசடி, பாலியல் வழக்குகள்
ஆசிரமத்தின் தலைவர் கிரிபாலு மகாராஜுக்கு 88 வயது. ராதா மகாதேவ் சொசைட்டி என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். இதற்கு வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. இவர் மீது பாலியல் பலாத்காரம், நிலம் அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. நாக்பூரில் 1997ல் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் 2007ம் ஆண்டு, டிரினிடாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இவர் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறினார். மதுரா அருகே பர்சானா என்ற இடத்தில் இவருடைய ஆசிரமம் உள்ளது. இதன் அருகே உள்ள விவசாயி நிலத்தை அபகரிக்க முயன்றதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்த வழக்குகள் நிரூபிக்கப்படவில்லை.
3/6/2010

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக