பக்குவமாய் திரும்புகின்றேன்
பகர்கிறது எலாம் என்னோடு
அதிகாலை நேரம் நான்கை
கச்சிதமாய் எழும்புகின்றேன்
கட்டிலில் கிடக்கும்
கணவருக்கும் சின்ன மகனுக்கும்
தெரியாமல்
அழுக்கடைந்த உடைகளும்
பாவித்த பாத்திரங்களும்
வரவேற்கின்றன எனை
சமையலறையில்
சத்தமில்லாமல் சகல வேலைகளையும்
சக்கரம்பூட்டிய வண்டிபோல்
சங்கடத்துடன் செய்து டிக்கின்றேன்.
சில நாட்களாய் நான் மடிக்காமல்
சிதறப் போட்ட ஆடைகள்
சிரிக்கின்றன எனைப் பார்த்து
சீக்கிரமாய் மடிக்கின்றேன்
சிரித்த ஆடைகளை
காலை உணவு ஒன்று
மதிய உணவு இன்னொன்று
செல்ல மகனுக்கு செப்பமான உணவு
வேறொன்று
செய்தும் டிக்க
செயலிழக்கிறது என் கைகளும்
அன்று அணியவென்று
அயன்போட்டு ஆயத்தப் படுத்துகிறேன்
எனக்கும் கணவருக்கும்
ஆடைகள் ஒவ்வொன்று
அண்ணாந்து பார்க்கிறேன் நேரத்தை
ஆதங்கப் படுகிறது என் மனம்
கடந்து போகும் ஒவ்வொரு
நிமிடத்துக்காய்
சங்கடம் எனை ஆட் கொள்ள
சத்தமில்லாமல் நுழைகின்றேன்
குளியலறையில்
சில்லென்ற தண்ணீர் என்
சிற்றுடலை என் தேகம் ழுவதும்
நீர் வடியும் கூந்தலை
நேர்த்தியாக முடிந்து கொண்டு
ஆவி பறக்கும் தேனீர் கோப்பையுடன்
ஆவலுடன் விரைகிறேன்
படுக்கை அறை நோக்கி
ஏமாற்றம் எனை வரவேற்கிறது
ஏக்கம் எனை வதைக்கிறது
காரணம் காலைப் பொழுதைப் புரியாமல்
கவலை இன்றி தூங்குகின்றனர் இருவரும்
சோர்ந்து போன என் கரங்களால்
சுரனையற்று தட்டுகிறேன்
சுருண்டு கிடக்கும் என் கணவரை
கண்கள் இரண்டும் விரியவில்லை
விரிகிறது அவர் இதழ் மட்டும்
அவதானிக்கின்றேன் நான் அவரை
அசைகிறது காலை வணக்கம் சொல்லி
அவர் அதரங்கள்
சோர்ந்து போன என் உள்ளம்
துள்ளிக் குதிக்கிறது
சாய்கிறேன் நான் சங்கடமின்றி
அவர் மார்பினில்
சாய்ந்த என் உணர்வுகளை
சமாதானப் படுத்த சமர்ப்பிக்கின்றார்
என் உச்சந்தலையில் ஓர் முத்தமொன்றை
விலகிச் செல்ல மனமின்றி
விரைகிறேன் அவ்விடத்தை விட்டு
ஆயத்தப் படுகிறேன் ஆபிசுக்கு
பையினுள் பங்கடைகிறது என்
இரண்டு வேளை உணவுகளும்
விரைவாக உடுத்திக்கொண்டு
வெளியேறுகிறேன் அறையை விட்டு
விரைகிறார் என் கணவரும்
வேலைத்தளம் நோக்கி
கட்டிலில் கிடக்கும் என்
கைக்குழந்தையை கைப்பற்றிக்
கொள்கிறார்
கருணை மிக்க என் மாமியார்
பொடி நடைபோட்டு
போய்க் கொண்டிருக்கும்
பேரூந்தைப் பிடித்துக் கொள்கிறேன்
நாலா பக்கமும் நாடித் திரும்புகிறது
என் நர்த்தன விழிகள்
புதினப் பத்திகைகளில் புதைந்துள்ள
சிலர்
வாய்கிழிய வம்பளந்து கொண்டு சிலர்
கலியாணம் ஆகாமல் கட்டிப்பிடித்துக்
கொண்டு சிலர்
சோர்ந்து சோபையிழந்து சிலர்
அமைதியாக இருக்கும் என் அலுவலக
அறைக்குள் அடங்கிப் போகிறேன் நான்
சில நாட்களாய் சேமித்து வைத்த
சில பைல்கள் எனைப் பார்த்து
சிரித்து என் சிந்தனையை சிதறடிக்கிறது.
சிதறிய சிந்தனையை
சீரமைத்து செய்கிறேன்
சேமித்த வேலைகளை
வேலையில் மூழ்கி இருக்கும் எனை
வேர்க்க வைக்கிறது. அருகில்
இருந்தவரின்
வாய் மூலச் செய்தி
ஆரவாரமிக்க அரசடிச் சந்தியில்
ஆவேசமாய் வந்த பேரூந்தால் விபத்தாம்
ஆபிசுக்கு சென்ற ஒருவர்
ஸ்தலத்திலே மரணமாம்
செய்தி கேட்டதும்
என் செவிகள் செயலிழக்கின்றன.
செல்லினூடாக செல்கிறேன்
என் கணவரிடம்
செப்பமாக இருக்கிறார் அவர் வேலைத்தளத்தில்
செயலிழந்த என் கைகள்
மீண்டும் செயலாற்றுகின்றன.
ஒவ்வொன்றாய் முடித்து ஓரத்தில்
அமரும் போது ஒலிக்கிறது
முதலாளியின் அழைப்போசை
விரைகிறேன் விக்கினங்கள் வராமல்
வேண்டுதல் செய்தபடி
விரைந்து வரும் என்னை வரவேற்கிறது
அவர் அக்கினிக் கண்கள்
கழுகுப் பார்வை பார்த்து
கண்டுபிடித்த சிறு பிழைக்காய்
கத்துகிறார் காட்டுமிராண்டியாய்
அறிவுரை கூறுவது போல்
அதட்டலால் அறைகிறார் என்னை
முடியாவிட்டால் போய்விடுங்கள்
வேலையை விட்டு கூறுவது அவர்
குறுகி நிற்பது நான்
அறைக்குச் சென்ற நான்
அழுகிறேன் மௌனமாக
அவமானத்தால் வலிக்கிறது என்
மனம் மட்டுமல்ல மார்பும் கூட
பால் கொடுக்கும் தாய் நான்
வேலை முடிந்ததும் விரைகிறேன்
வீடு நோக்கி என் செல்ல மகனின்
சின்ன முகம் காண
சிறியதாய் சொக்லட் ஒன்று
சிறைப்படுகிறது என் கைகளில்
புளித்துப் போன புட்டிப்பாலை
புறம்தள்ளி புரண்டபடி தூங்கி விட்டான்.
புலம்புவது என் மாமி
புழுங்குவது என் ஆவி.
வேலைக் களைப்பால் வியர்த்து
வந்த கணவனை
வியக்க வைக்கிறது
என் இரவுச் சாப்பாடு
அனைத்து வேலைகளையும்
அவசரமாய் முடித்துக் கொண்டு
அடக்கமாய் நுழைகிறேன் அறைக்குள்
பாதி வாய் திறந்து மகனும்
பாதி விழி திறந்து அவரும்
பரவசமாய் தூங்குகின்றனர்
தூக்கம் எனை ஆட் கொள்ள
துவழுகிறேன் அவர் மார்புக்கடியில்
அயர்ந்த தூக்கத்திலும்
ஆறுதலாய் அணைக்கிறது அவர் கரம்
அன்றும் அயர்ந்து தூங்க நான்
ஆயத்தப்படும் போது
அலாரம் எனை நிச்சயம் எழுப்பும்
திருமலை தீபா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக