ஆயிஷாவுக்கும், தனக்கும் திருமண ஒப்பந்தப் பத்திரம் ஏற்படுத்தப்பட்டது உண்மை, தான் அதில் கையெழுத்துப் போட்டது உண்மை என்று சோயப் மாலிக் நேற்று முதல் முறையாக ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஆயிஷாவின் தந்தை ஹைதராபாத் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார்.
பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஆயிஷாவின் தந்தை இந்தப் புகாரைக் கொடுத்துள்ளார். இதையடுத்து சோயப் மாலிக் மீது மோசடி, வரதட்சணைக் கொடுமை, கிரிமினல் சதிச் செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சோயப் மட்டுமல்லாமல் அவரது மைத்துனர் இம்ரான் மீதும் புகார் தரப்பட்டுள்ளது.
வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து சானியா மிர்ஸா வீட்டில் தங்கியிருக்கும் சோயப் மாலிக்கை போலீஸார் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், தற்போது சோயப் மாலிக்கிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆயிஷா கூறிய புகார்கள் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டு வருகிறது. விசாரணை முடியும் வரை சோயப் மாலிக் ஹைதராபாத்தை விட்டுச் செல்லக் கூடாது என்றும் போலீஸ் உத்தரவிட்டுள்ளது.
சோயப்புக்கு உதவுவோம் – பாகிஸ்தான்
இதற்கிடையே, சோயப் மாலிக் பாகிஸ்தானியர் என்பதால், அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையிலிருந்து மீள சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் பாகிஸ்தான் அரசு மேற்கொள்ளும் என்று அந்த நாட்டு அரசு கூறியுள்ளது.
ரூ. 5 கோடி பேரம் பேசினார் சோயப் – அகமது சித்திக்கி....
இதற்கிடையே, புகாரை வாபஸ் பெறுமாறும், ரூ. 5 கோடி பணம் தருவதாகவும் சோயப் தன்னுடன் பேரம் பேசியதாக ஆயிஷாவின் தந்தை அகமது சித்திக்கி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ரூ. 5 கோடி தருகிறோம், புகாரை வாபஸ் பெறுங்கள் என்று சோயப் மாலிக் பேரம் பேசினார். ஆனால் நான் மறுத்து விட்டேன்.
எனது மகளுக்கு விவாகரத்து தர வேண்டும், ஆயிஷாவுடன் நடந்த திருமணத்தை சோயப் மாலிக் ஒத்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை.
சோயப்பின் முதல் மனைவி எனது மகள் ஆயிஷாதான். சானியாவைத் திருமணம் செய்து கொண்டால் அவர் 2வது மனைவி ஆவார்.
பாகிஸ்தான் சட்டப்படி முதல் மனைவியின் சம்மதம் இல்லாமலோ அல்லது விவாகரத்து செய்யாமலோ ஒருவர் இன்னொரு திருமணம் செய்தால் ஒரு வருட சிறைத் தண்டனை, ரூ. 50 ஆயிரம் அபாரதம் விதிக்க சட்டத்தில் இடமுண்டு என்றார் அகமது சித்திக்கி.
சமரச முயற்சியில் ஆந்திர கிரிக்கெட் நிர்வாகி
இதற்கிடையே, சோயப் மாலிக், ஆயிஷா இடையே, சமரசத்தை ஏற்படுத்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் நிர்வாகி வெங்கண்ண சாமுண்டேஸ்வரநாத் களம் இறக்கப்பட்டுள்ளார்.
இவர் இந்திய கிரிக்கெட் அணியில் மேலாளராக இருந்தவர். நேற்று சானியாவின் வீட்டுக்கு இவர் சென்றார். அங்கு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
பின்னர் வெளியில் வந்த அவரிடம், செய்தியாளர்கள் வருகை குறித்துக் கேட்டபோது, எனக்கு சானியாவை சிறு வயது முதலே தெரியும். எனவே அவரை வாழ்த்தவே வந்தேன் என்றார்.
ஆனால் சோயப் மாலிக் மற்றும் சானியா தரப்பு செய்தியை ஆயிஷா தரப்பிடம் தெரிவித்து சமரசம் செய்யவே சாமுண்டேஸ்வர நாத் அழைக்கப்பட்டுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது.
20 அறைகள் புக்கிங்
இதற்கிடையே, ஹைதராபாத்தில் உள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் சோயப் – சானியா கல்யாணத்தையொட்டி 20 அறைகள் புக் செய்யப்பட்டுள்ளனவாம்.
மேலும் மாப்பிள்ளை, பெண்ணுக்கான டிரஸ் வடிவமைப்புக்காக டெல்லியிலிருந்து ஒரு டிசைனர் வரவுள்ளாராம்.
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக