கொஞ்சங்கூட பெருமையே இல்லாம இந்த ஊத்தை பிடித்த குசினிக்குள்ளே வந்து இந்தப் பிள்ள கேட்ட கேள்வியிலேய உச்சி குளிர்ந்து பரவசமாகியது.
‘நா நல்லந்தான் மன. பாழாப்போன கால் கடுப்பும் இருமலுந்தான் என்னப் போட்டுப் படாத பாடு படுத்துது.’
மேலமேல எதுவும் பேச எனக்கு வாய் வரல்ல. சிரிச்சு மழுப்புறன். பக்கத்தில கறிச் சட்டியத் துறந்து மோந்து பாத்திட்டு அந்தப் புள்ளைக்கு நாக்குல வாயூறுது. பாராட்டும் கிடைக்குது. எனக்கு பெருமையாவும் இரிக்கி.
நா அவசரமா கேத்தல்ல தண்ணிய வெச்சி தேத்தண்ணிய ஊத்துறன். போன கிழம வருத்தமா கிடந்த அவுகள பாக்க வந்தாக்கள் கொண்டு வந்த உப்பு பிஸ்கத்தையும் கூட வெச்சுக் குடுக்கன். கட்டில்லயும், மெத்தையிலும் படுத்து, புரியாணி சாப்பிட்டு வளந்தது, என்ட ஊட்டுச் சாக்குக் கட்டில்ல இருந்திட்டு தேத் தண்ணி குடிக்கிறத்த என்னால நம்பயேலாம இருக்கு.
நா முக்காட்ட ஒழுங்காப் போட்டுட்டு வெங்காயம் உரிச்சிட்டு இருந்தப்போ, ஒரு வெங்காயத்த எடுத்து அந்தப் புள்ளையும் உரிக்குது.
‘மூத்தம்மா… நா இந்த முற எலக்ஷன்ல வெல்ல நீங்க ஓட்டுப் போடுங்க..’என்றதும் எனக்கு சரியான சந்தோஷம்.
‘யாரென்ன சொன்னாலும் சரி மன, நா உனக்குத்தான் ஓட்டுப் போடுவன்.’
அந்தப் புள்ளட முகத்துல எவளவு சந்தோஷம் பாருங்கோ, பெரியவகள மதிக்காத இந்தக் காலத்துல இப்படியும் ஒரு மகனா? இவரப்போலதான் எல்லாப் பிள்ளயளயும் வளக்கணும். இந்த மண் இப்படி ஒரு பிள்ளையப் பெத்திருக்கிறது எவளவு பெருமையான விஷயம்… ரெண்டு மூணு நாள் இந்த விஷயம் மனசுக்குள்ள இனிச்சிக்கிட்டே இரிந்திச்சி.
என்ட பக்கத்து வீட்டுக்காரணுக்கு அந்தப்பிள்ள.. அதுதான் ஸாலிஹ் ஹாஜியார் என்டா சரியான கோவம். ஆனா ஸாலிஹ் ஹாஜியாருக்கு முன்னால அதக் காட்டிக்கிறதில்ல. ஸாலிஹ் ஹாஜியாருக்கு கைகால் புடிச்சுடாத குறையா நடந்துக்கிறது. ஆனா நா இப்படி நயவஞ்சகத்தனம் வெச்சிக்கிறது இல்ல. எல்லாரோடையும் நல்லா இரிப்பன். ஆனா மனமுட்டா சொத்தயப் பாக்கயும் மாட்டன்.
ஸாலிஹ் ஹாஜியார் பேசுறதயெல்லாம் கேப்பன். அவர யாராச்சும் ஏசிப் பேசினா என்னால தாங்கயேலா. அவுக எல்லாரையும் திட்டிட்டே இரிப்பன். இலக்ஷன்ல ஸாலிஹ் ஹாஜியார் வெண்டாத்தான் எனக்கு சோறும் இறங்கும். தோத்துட்டாரென்டா மையத்து ஊடுதான். ஒவ்வொரு முறையும் நடக்கிறது இதுதான்.
இன்டக்கி எல்லாம் சரியான வேல எனக்கு. வாற மனிசர கவனிக்கிறத்திலேயே நேரம் போயிட்டு. அவரு சும்மாதான் நல்லா இருந்தவரு. இந்த வயசிலையும் கண்ணாடி போடாம பேப்பர் வாசிப்பாரு. ரெண்டு தரம் நெஞ்சு நோவென்டு நெஞ்சப் பிடிச்சிட்டு கீழே உழுந் துட்டாரு. வாட்டுல வச்சி பிறகு கொழும்புக்கு ஏத்தி…. மிஞ்சியிருந்த என்ட ரெண்டு சோடிக் காப்பையும் வித்துச் செலவழிச்சன். அப்பயும் காசி காணாமத்தான் கிடக்கு. ஊடு வளக ஈட்டுக்கு வைப்பம் என்டாலும் மனம் வருகுது இல்ல. கடைசி காலத்தில நானுங் கெடக்க ஒரு குடிலெண்டாலும் வேணுமே…
எங்கெயோ இருந்து திடீரென்டு ஸாலிஹ் ஹாஜியார்ர ஞாபகம் வந்திச்சி. எதயும் யோசிக்கல்ல. ஓடிப்போன கால் அமைதியாகி அடங்கினது அவர்ர ஒப்பீசுக்குள்ள போனத்துக்குப் பொறவுதான். ஒவ்வொருத்தராத்தான் அவர பாக்கலாமாம் என்டாங்க. நானும் லைன்ல நின்டன். என்ட முறயும் வந்திச்சி. உள்ள போய் அவர்ர வருத்தத்தயும் என்ட நிலமயயும் சென்னன்.
எனக்குத் தெரிஞ்ச ஸாலிஹ் ஹாஜியார் அமைதியானவர், நல்லவர், ஏழ பாழக்கி உதவி செய்யிறவரு. எல்லாத்தயும் அமைதியாக் கேட்டிட்டு ஒரு சின்னக் கூடு ஒண்ட என்ட கைக்க வெச்சாரு. எனக்கு சரியான சந்தோஷம்.
ஊட்ட வந்து ஸாலிஹ் ஹாஜியார் தந்ததா அவரிட்ட கொடுத்தன். கூட்ட அவரே விரிச்சி காச எடுக்கயும் எனக்கு சப்பென்டு பெய்த்து. குறஞ்சது ஒரு மயில் (ஆயிரம் ரூபா) என்டாலும் இரிக்கும் என்டு பாத்தன். ஆனா இருந்தது வெறும் நூத்தியம்பது ரூபாதான். ஏதோ அரசியல்வாதி என்டா அப்படித்தான்டு விளங்கிட்டன். நான் வேகா வெயிலுக்க லைன்ல நின்டது எல்லாம் அநியாயம்.
என்ட நிலமயப் பார்க்கயேலாம யாரோ ஒரு ஆளுவந்து அவர படம் புடிச்சி, அவர்ர படத்த பேப்பர்ல போட்டு பேங்கில கணக்கும் துறந்து குடுத்துட்டுப் போனாரு. பேப்பர்ல பாத்தவங்க எல்லாரும் காசி போட்டிருந் தாங்க. அரவாசி சேந்திட்டு. மிச்சக் காச நான் வளகில பாதிய வித்து அதே பேங்கிலேயே போட்டன். ஒப்ரேஷ னுக்கு ரெண்டு மாசத்துக்கு முன்னால தான் அது நடந்தது
அவருக்கு வருத்தம் உரம். ஒப்ரேஷன் பண்ண காசு எடுக்க பேங்குக்குப் போனா காசி எடுக்கயேலாது என்டாங்க. புறகுதான் தெரிஞ்சது. நாசமாப்போன பேங்க மூடிட்டாங்களாம். இதுக்குக் காரணம் ஸாலிஹ் ஹாஜியாரும் இன்னும் யரோவெல்லாமாம். எல்லாரிட்டயும் போய் கெஞ்சினன். யாரும் உதவி செய்ய முன்னாகல்ல. நாள் போனதால அவருக்கு வருத்தம் கூடிட்டு. என்ட கண்ணுக்கு முன்னாலயே அவரு வருத்தத்தில துடிதுடிச்சி மூச்சிடயேலாம மௌத்தாப் போயிட்டாரு.
நாலு மாசமும் பத்து நாளும் ஒரு வேளச் சாப்பாட்டோட போயிட்டு. இப்ப நான் தனி மரம். என்னதான் கிழவியும் கிழவனுமென்டாலும் நாங்க புருஷன் பொண்டாட்டி இல்லயா..? இந்நேரம் அவரு மண்ணோட மண்ணாப் போயிருக்கலாம். ஆனா என்ட மனசில முதல் முதலாக் கண்ட மாப்பிள்ள கோலத்திலேயே அவரு இரிக்காரு. மௌத்துட நாட்டம் அள்ளாட தான். ஆனா அவர்ர மௌத்துக்கு காரணம் ஸாலிஹ் ஹாஜியார் என்னும்போது மனம் விரக்தியாகுது
எங்கேயோ தூரத்தில ஸாலிஹ் ஹாஜியார் அவர்ர அடியாட்களோட வந்துக்கிட்டு இருக்கிற சத்தம் கேக்குது. காதக் குடுத்துக் கேட்டுப் பாக்கன். பக்கத்து வாசல்ல குந்திக்கிட்டு இருந்து மீனறுத்துக் கழுவிக்கிட்டு இருக்கிற என்னய மாதிரி ஒரு கிணத்துத் தவளைக்கு உதவியா சுத்தி இருக்கிற காகங்களை எல்லாம் அவர்ர கையால விரசி உர்ராரு ஸாலிஹ் ஹாஜியார்.
‘ஏழக்கி உதவி செய்யிற என்டு காட்டுறான். ஓட்டு வேணுமென்டா கைகாலும் புடிச்சி உடுவானுகள்’
எனக்குள்ளேயே திட்டிக் கொண்டேன். கொஞ்ச நேரமா ஒன்னுமெ விளங்கல்ல. என்ட ஊட்டுப் பக்கமா வாறது விளங்குது. அவசரமா குசினிக்குள்ள ஓடினன்.
‘என்ன மூத்தம்மா.. பாத்து ஊத்துறல்லயா..?’ கடமைக்கான மரியாதை அவன்ட குரல்ல தெரியுது.
எனக்குள்ள இருந்த ஆவேசம் கொஞ்சம் அடங்குது. அப்பதான் மீன் கழுவி மடு வெட்டிப் புதைக்க இருந்த தண்ணிக் கோப்பயப் பாக்கன். கொஞ்சம் நிம்மதியாகவும் இருந்திச்சி. என்னக் கேக்காமலேயே கிணத்தடிப் பக்கம் போய் கழுவுற சத்தங் கேக்குது. நா ஒன்டும் பேசல்ல.
இஷ்டம்போல உள்ள வரப்போனவனப் பாத்து ‘யாரு நீங்க?’ என்டு கேட்டன். அவளவுதான். ‘மூத்தவாப்பா மௌத்தானதுக்கும் வரக் கிடைக்கல்ல… சரியான வேல..’ என்டான். இன்னும் ஏதேதோ பேசிக் கொண்டே போனான் அவன்.
என்னால கோவத்த அடக்க ஏலாமப் போயிட்டு. ‘ஓ.. ஓ..! நீங்க தந்த நூத்திச் சொச்சம் போதுமே அவரோட ஒப்பரேஷனுக்கு. போதததுக்கு பேங்கில கிடந்த அவருட காசயுமெலவா நீங்க எடுத்துக்கிட்டு அவர அள்ளாகிட்ட அனுப்பிட்டீங்க. கொலகாரன்.. கொள்ளக்காரன்.. பிச்சக்காரன்.. என்ட கண்ணுக்கு முன்னால நிக்காம கெதியாப் பேத்திடு நீ..’ என்டவாறு ரெண்டு கையாலயும் வாசல்ல கிடந்த மண்ண அள்ளி வீசுறன்.
ஸாலிஹ் ஹாஜியார் ஒன்டுமே பேசல்ல. குனிஞ்சிக் கிட்டே போறது தெரியுது. பக்கத்தில போன ஒருத்தனுக்கிட்ட ‘கிழவிக்கு பைத்தியம் புடிச்சிட்டு’ என்டு ஏசிக்கிட்டுப் போறது என்ட காதிலயும் கேட்டிச்சி.
எனக்கு நல்லாவே விளங்குது.. இவனுங்க எல்லாம் ஓட்டைப் பாத்திரம் என்டு. ஏனென்டா.. என்னையே உருக்கி ஊத்தினாலும் அவன் நன்றியால் நிறையப் போவது இல்லையே!!!
(யாவும் கற்பனையல்ல)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக