மனிதன், முத்து, வைரம் உட்பட கடலுக்கு அடியில் உள்ள பெறுமதியான படைப்புகளைத் தேடி காலா காலமாகவே கடலின் அடிப்பரப்பு வரை செல்லும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளான். இதற்காக நீரினுள் இயங்கும் சாதனமொன்றை உருவாக்கும் எண்ணத்தையும் அவன் வளர்த்து வந்துள்ளான்.
ஹாலந்து நாட்டைச் சேர்ந்த கார்னேலியஸ் வால்டிரப் என்பவர் 1620ம் ஆண்டிலே நீரில் மூழ்கும் படகொன்றினை அமைப்பதில் ஈடுபட்டு வெற்றி கண்டார்.
மரத்தால் செய்யப்பட்டு தோலால் நீர் புகாது போர்த்தப்பட்ட இந்த படகைத் தொடர்ந்து பல்வேறு மூலப் பொருட்களின் உதவி கொண்டு பல்வேறு முறைகளில் நீர் மூழ்கிக் கப்பல் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1727ம் ஆண்டு ஆகும் போது இங்கிலாந்தில் மாத்திரம் 14 வகையான நீர் மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்பட்டன.
18ம் நூற்றாண்டின் இறுதிக்குள் உலகில் விதவிதமான பல தரப்பட்ட நீர் மூழ்கிக் கப்பல்கள் ஏட்டிக்குப் போட்டியாக உருவாக்கப்பட்டன.
1880ம் ஆண்டிலே நீராவி இயந்திரத்தால் இயங்கக் கூடிய நீர் மூழ்கி கப்பல் உருவானது. அதைத் தொடர்ந்து பெற்றோல், மின்சக்தி என்பவற்றின் மூலம் இயங்கும் கப்பல்கள் உருவாகின.
மனிதனின் பொருளாதார விருத்தியை குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள், யுத்தங்களுக்கு உதவியாக பிற்காலத்தில் பயன்படலாகின. முதலாம் இரண்டாம் உலக யுத்தங்களின் போது அவை வெற்றிகரமாக இயக்கப்பட்டன. எதிரிகளின் படையெடுப்பைக் கண்காணிப்பதிலும் எதிரிகளின் யுத்தக் கப்பல்களை நிர்மூலமாக்குவதிலும் அவை சிறந்த சேவையை ஆற்றின.
உருக்கு, இரும்புத் தகடு, கடினமான உலோகங்கள் பலவற்றாலும் ஆக்கப்பட்ட நீர்மூழ்கிகள் பல்வேறு நவீன தற்காப்புக் கருவிகள் பொருத்தப்பட்டவைகளாகவும் திகழ்ந்தன.
நீரின் அடியில் இருந்த வண்ணமே நீரின் மேற்புறத்தில் நிலவும் நிலைமைகளை ஆராயும் பெரிஸ் கோப் எனும் கருவிகளும் எதிரிகளின் நீர் மூழ்கிக் கப்பல்கள் மற்றும் தாக்குதல்களுக்குப் பயன்படும் கருவிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும், சோனார் கருவிகள் என்பனவும் நீர் மூழ்கிக் கப்பல்களில் பொருத்தப்படுகின்றன.
அணு சக்தியால் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்களுக்கு எரிபொருள் புகை என்பவற்றால், வாயுக்களால் எதுவித சிக்கலும் இன்றி இயங்க முடியும். நீர் மூழ்கிக் கப்பல்கள் பல வகைகளாக உருவாக்கப்பட்டு பல்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கடல் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் அதனுள் அமிழ்ந்துள்ள அற்புதமான விளைச்சல் பொருட்கள் என்பன பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இவை மிகவும் பயன்படுகின்றன.
கடலின் அடியில் இடம்பெறும் புவியியல் மாற்றங்கள் தொடர்பிலான ஆராய்ச்சிகளுக்கும் இவை உறுதுணை ஆகின்றன.
நாடுகளின் பாதுகாப்புக்கும் நீர் மூழ்கிக் கப்பல்கள் இன்று பயன்படுத்தப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக