பார்த்திபன் கதாநாயகனாக நடித்து முதன்முதலாக டைரக்டு செய்த `புதிய பாதை' படத்தில், சீதா கதாநாயகியாக நடித்தார். அப்போது சீதாவுக்கும், பார்த்திபனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்த காதலுக்கு சீதா குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
அதனால் சீதா வீட்டைவிட்டு வெளியேறினார். சீதாவும், பார்த்திபனும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். 20 வருடங்களுக்கு முன்பு இந்த திருமணம் நடைபெற்றது. சீதா-பார்த்திபன் தம்பதிக்கு அபிநயா, கீர்த்தனா என்ற இரண்டு மகள்களும், ராதாகிருஷ்ணன் என்ற வளர்ப்பு மகனும் இருக்கிறார்கள். திருமணம் ஆகி குழந்தைகள் பிறந்த சில வருடங்களிலேயே சீதாவுக்கும், பார்த்திபனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இருவரும் குடும்ப நல கோர்ட்டு மூலம் விவாகரத்து செய்து கொண்டார்கள். விவாகரத்துக்குப்பின், சீதா பெற்றோர்களுடன் வாழ்ந்தார். அவருடன் மூத்த மகள் அபிநயா மட்டும் இருக்கிறார். இளைய மகள் கீர்த்தனாவும், வளர்ப்பு மகன் ராதாகிருஷ்ணனும் பார்த்திபனிடம் இருக்கிறார்கள். கதாநாயகி வாய்ப்பு போன பின் சீதா டி.வி. தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். திரைப்படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சீதாவுக்கும், டி.வி. நடிகர் சதீசுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினார்கள். கணவன்- மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்த அவர்கள், முறைப்படி திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள்.
அதன்படி சீதாவும், சதீசும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். சென்னை சாலிகிராமத்தில் உள்ள சீதா வீட்டில், அவருடைய பெற்றோர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடந்தது. இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பற்றி நடிகை சீதா, `தினத்தந்தி' நிருபரிடம் கூறியதாவது:- ``எனக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காகவே இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன். சதீஷ் என் வாழ்க்கையில் வந்தது பற்றி சந்தோஷப்படுகிறேன்.
அவரையே திருமணம் செய்து கொண்டதை பெருமையாக கருதுகிறேன். வயதான காலத்தில் ஒரு பெண், ஆண் துணை இல்லாமல் வாழ முடியாது. அதற்காகவே சதீசை திருமணம் செய்து கொண்டேன். எனக்கு ஏற்கனவே இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்வதில் உடன்பாடு இல்லை.'' இவ்வாறு சீதா கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக