இருந்தபோதிலும் ஆங்காங்கே நிகழும் ஓரிரு சம்பவங்கள் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதுடன் இனங்களிடையே குரோத உணர்வுகளையும் விரிசல்களையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இவ்வாறான சம்பவங்களை முளையிலேயே கிள்ளியெறியாதுபோனால் முறுகல் நிலையே அதிகரிக்க வழிவகுப்பதுடன் மக்கள் மத்தியில் அநாவசியமான பதற்றத்துக் கும் வழிசெய்வதாக அமையும்.
குறிப்பாக நிவித்திகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேல தோட்டத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் இரு வீடுகள் இனந்தெயாதோரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் 10க் கும் மேற்பட்ட வீடுகளின் பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன. குடி யிருப்புக்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேல குக்குலகல பிரிவு தோட்டத்திலேயே இந்த விபரீத சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது. இதற்கான பின்னணி என்ன என்று பார்க்கையில், கடந்த சனிக்கிழமை இப்பகுதியில் உள்ள தோட்ட பெரும்பான்மையின காவற்காரர் ஒருவர் காணாமல் போயுள்ளார். அதனைத் தொடர்ந்து திங்களன்று சடலமாக அவர் கரவிட்ட திம்மியாவ எனுமிடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்தே குக்குலகல பகுதியிலுள்ள சில வீடுகள் மீது இனந்தெயாதோர்கள் தாக்குதல் நடத்தி பொருட்களை சூறையாடி யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை அன்றைய தினம் இடம்பெற்ற மற்றுமொரு சம்பவத்தில் தேல மேற்பிரிவு தோட்டத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தோட்டத்தில் இருவேறு பிரிவுகளில் கடந்த திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இத்தகைய விரும்பத்தகாத சம்பவங்களைத் தொடர்ந்து சுமார் 100 குடும்பங்கள் அச்சம் காரணமாக இப்பகுதியிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தால் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக நிவித்திகலை பகுதியில் அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு செல்லும் தமிழ் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் மக்கள் ஒருவித அச்சமான சூழ்நிலையில் இருந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பொலிஸார், சடலமாக மீட்கப் பட்ட தோட்டக் காவல்காரர் உண்மையில் படுகொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்துகொண்டாரா? என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எந்தவொரு சம்பவம் இடம்பெற்றாலும் அதன் எதிரொலியாக வீடுகள் மீது தாக்குதல் தொடுக்கப்படுவதும் குடியிருப்பாளர்கள் விரட்டியடிக்கப்படுவதும் தொடர்கதையா கவே இருந்துவருகின்றது. விசேடமாக தமிழ் மக்கள் செறிந்துவாழும் தோட்டப்புறங்களி
லேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன. உண்மையில் யார் இதனைச் செய்கின்றார்கள்? என்று ஆராய்ந்து பார்க்காத நிலையில் வெறுமனே அப்பாவி தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதும் அவர்களின் உடைமைகள் சூறையாடப்படுவதும் மிகவும் கண்டனத்துக்கும் விசனத்துக்கும் உரியதாகும்.
பொதுவாக தோட்டப்பிரதேசங்களை சேர்ந்த மக்கள் தமக்கு கிடைக்கும் குறுகிய வருமானத்தில் சிறிது சிறிதாக சேமித்தே பொருட்களை கொள்வனவு செய்தும் தமது வசதிக்கேற்ப குடி மனைகளை அமைத்தும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களின் வீடுகள் சேதமாக்கப்பட்டு பொருட்கள் சூறையாடப்பட்டு வீடுகளை விட்டு விரட்டும் நிலை ஏற்படுமானால் மீண்டும் அவர்கள் முன்னைய நிலைக்கு திரும்பக்கூடிய சக்தியற்றவர்களாகவே போய்விடுவார்கள்.
வெறுமனே ஏதேனும் சம்பவங்களின் பின்னணியில் தோட்டத் தொழிலாளர்களை தாக்குவது அவர்களின் குடியிருப்புக்களுக்கு சேதம் விளைவிப்பது போன்ற சம்பவங்கள் அடிக்கடி தொடரவே செய்கின்றன. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து தோட்டத் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் வாழும் சூழ் நிலையை ஏற்படுத்த வேண்டியது பாதுகாப்புக்கு பொறுப்பானவர்களின் கடப்பாடாகும். மாறாக இத்தகைய சம்பவங்கள் தொடரும் பட்சத்தில் அது அநாவசியமான இன முறுகல்களை தோற்றுவிக்கவே வழி செய்வதாக இருக்கும்.
இந்த நாடு கடந்த காலங்களில் இன ரீதியான முறுகல்கள், வன்முறைகள் காரணமாக பாரிய இழப்புக்களை சந்தித்ததுடன் சர்வ தேசரீதியில் அவப்பெயருக்கும் உள்ளானது. இதிலிருந்தும் மீண்டு மக்கள் சற்று அமைதிச் சூழலை அடைந்துள்ள நிலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இவ்வாறான சம்பவங்கள் தலை தூக்குவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இவை நாட்டை மீண்டும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்வதாகவே அமையும். எனவே இவற்றை முற்றாக ஒடுக்கி மக்களிடையே இன ஐக்கியத்தை பேண நடவடிக்கை எடுப்பது இன்றியமையாததாகும்.
இதேவேளை நாட்டின் அமைதிச் சூழலைத் தொடர்ந்து பேணும் வகையிலும் இனங்களுக்கு இடையே புந்துணர்வை கட்டிவளர்க்கும் வகையிலும் சகல தரப்பினரும் செயற்படுவதுடன் எந்தவிதமான ஏற்றத்தாழ்வுமின்றி சட்டம், ஒழுங்கை சரியான முறையில் நிலைநாட்டுவதும் குற்றவாளிகளை இனம் கண்டு அவர்களுக்கு உரிய தண்டனைகளையும் கூட வழங்குவதும் அத்தியாவசியமானது என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக