ஆரீயவதி
அண்மையில் ஆரீயவதி என்ற பணிப்பெண் சவூதி அரேபியாவில் வேலை வழங்குநர்களால் மிக மோசமான இம்சைகளுக்கு ஆளாகியிருந்தார். அவரது உடம்பிலிருந்தும் 18 ஆணிகள் மீட்கப்பட்டன. இந்நிலையில், அந்தக் குற்றச்சாட்டை குறிப்பிட்ட வேலை வழங்குநர்கள் மறுத்திருந்ததுடன், அவ்வாறு தண்டனை எதனையும் வழங்கவில்லையெனவும் அதற்கான ஆதாரங்கள் இல்லையெனவும் கூறி தட்டிக் கழித்திருந்தனர்.இச்சம்பவத்திற்கு இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் கண்டனக் கணைகள் எழுந்திருந்தன. எனினும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்துகொண்டிருப்பது மக்களை மேலும் அதிர்ச்சிக்கும் ஒருவித வெறுப்புணர்வுக்கும் ஆளாக்கியுள்ளது.
வீரய்யா லெட்சுமி
இதனிடையே, குவைத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து விட்டு நாடு திரும்பியிருந்த வீரய்யா லெட்சுமி என்ற பெண்ணின் உடலிலிருந்து பதினான்கு ஊசிகள் அகற்றப்பட்டுள்ளன.குருணாகல் இப்பாகவ பகுதியைச் சேர்ந்த இப்பெண் நாடுதிரும்பியதையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தாம் குவைத்தில் பணிபுரிந்த சமயம் தமது எஜமானர்களால் மோசமாக நடத்தப்பட்டதாகவும், உடலில் ஊசிகளை ஏற்றி சித்திரவதை செய்ததாகவும் கூறியிருந்தார். இதனையடுத்து, அவரது உடலில் செலுத்தப்பட்டிருந்த ஊசிகள் எக்ஸ்ரே கதிர் படம் மூலம் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன. அந்தவகையில், ஆரியவதியைத் தொடர்ந்து லெட்சுமி அதேவகையான சித்திரவதைக்கு ஆளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனிடையே, ஜோர்தானில் பணிப்பெண்ணாகப் பணிபுந்த டி.எம். சந்திமா என்ற பெண்ணொருவரும் இவ்வாறான சித்திரவதைக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது. ஜோர்தான் தலைநகர் அம்மானிலுள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாக இருந்த இவருக்கு வீட்டு எஜமானர்கள் ஆறு ஆணிகளை விழுங்குமாறு நிர்ப்பந்தித்ததாகவும், அத்துடன் வீட்டு எஜமானர்கள் தன்னை சித்திரவதை செய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தனது மனைவியை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிகள் ஊடாக அவரது கணவர் கோரியுள்ளதாகத் தெரியவருகிறது.
இவை ஒரு புறமிருக்க, குவைத்துக்கு பணிப்பெண்ணாகச் சென்ற குசுமா ரஞ்சனி என்ற பணிப்பெண்ணை கடந்த ஆறு மாதங்களாகக் காணவில்லையெனவும், அவருக்கு என்ன நடந்தது என்று தனக்குத் தெரியா தெனவும் இறுதியாக தன்னைக் காப்பாற்றுமாறு அவர் தொலைபேசியில் கூறியதாகவும் அவரது கணவர் தெரிவித்திருக்கிறார்.
கொடகாவெல என்ற பகுதியைச் சேர்ந்த 47 வயதான குசுமா ரஞ்சனி என்ற பெண்ணே குவைத்துக்கு வேலைவாய்ப்புத் தேடிச் சென்றுள்ளார். இந்நிலையில், அவரிடமிருந்து இரு தொலைபேசி அழைப்புக்கள் மாத்திரமே வந்ததாகவும் அதற்குப் பின்னர் எவ்வித தொடர்பும் அவர் கொள்ளவில்லை யெனவும் தெரிவித்துள்ள அவரது கணவர் விமலசிறி, அச்சந்தர்ப்பத்தில் வீட்டு எஜமானர்கள் தன்னை மோசமாகத் தண்டிப்பதாகவும் தனக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள வேண்டாமெனவும் அது தெரியவரின் தண்டனைக்கு ஆளாகவேண்டி ஏற்படுமெனவும் அவர் கூறியதாகத் தெரிவித் துள்ளார்.
இது சம்பந்தமாக மிகுந்த மனவிரக்திக்கு ஆளாகியுள்ள குசுமா ரஞ்சனியின் கணவரான விமலசிறி, இவ்விவகாரம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு தாம் பதினைந்திற்கும் மேற்பட்ட தடவைகள் சென்று விசாரித்ததாகவும், எனினும் எவ்வித பயனையும் காணவில்லை யென்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இறுதியாக, எனது மனைவிக்கு என்ன நடந்தது என்பதை அறியவேண்டும். குறைந்த பட்சம் அவரது குரலையாவது கேட்க வழிசெய்ய வேண்டுமென அவர் மன்றாட்டமாகக் கேட்டுள்ளார்.
இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புத் தேடிச் செல்லும் பணிப்பெண்களின் மறுபக்கம் மிகவும் சோகமாகவும் வேதனை நிறைந்ததாகவும் அமைந்துள்ளதை சதா அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
இருந்தபோதிலும், தமது குடும்ப வறுமையைப் போக்கும் முகமாக கடன்பட்டும் இருக்கும் சொத்துக்களை விற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்வோர் இன்று நரக வேதனைகளையே சுமப்பதைக் காணமுடிகின்றது. முன்னர் ஒரு போதும் கேள்விப்பட்டிருக்காத வகையில் பணிப்பெண்களை அடிமைகளாக நடத்துவது மாத்திரமன்றி அவர்களது உடலில் ஆணி, ஊசி என்பவற்றை ஏற்றும் மனிதாபிமானமற்ற செயல்கள் மிகவும் கண்டிக்கப்பட வேண்டியவையாகும்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்வோருக்கு அவர்கள் செய்யும் தொழில் தொடக்கம் எந்தவித உத்தரவாதமும் இல்லாதிருப்பதே இவ்வாறான அநியாயங்கள் தொடரக் காரணமாக அமைகின்றன. அதேவேளை, வேலை வழங்குநர்களும் பணிப்பெண்களை அடிமைகளாக நடத்தும் மனப்போக்குடையவர்களாகவே காணப்படுகின்றனர். இவற்றை கருத்திற்கொண்டு, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வோர் ஒரு தட வைக்கு இரு தடவை சிந்திக்கவேண்டியது அவசியமாகின்றது.
இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலை யங்களும் சரி, வேலைவாய்ப்புப் பணியகம் சரி, மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுச்செல்வோர் விடயத்தில் உரிய கரிசனை காட்டுவதுடன், சம்பந்தப்பட்ட நாடுகளில் பணிப் பெண்களாக பணிபுவோர் நெருக்கடிகளை எதிர்நோக்கும் சமயம் அதுகுறித்து சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதேவேளை, உழைப்புக்காகச் செல்லும் அப்பாவிகளின் உயிரை துச்சமென மதித்து அவர்களின் உயிரோடு விளையாடும் இத்தகைய செயல்களை இனிமேலும் அனுமதிக்கக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறவிரும்புகின்றோம்.






































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக