அந்த வகையில் 2010ஆம் ஆண்டு குண்டுகள் வெடிக்காத ஆண்டாக, சடலங்கள் குவிந்த ஆண்டாக இல்லாமல் யுத்தம் நின்று போன ஆண்டு என்ற பெயரோடு விடைபெறுவதற்காக நன்றி கூறிக் கொள்கின்றோம்.
இருந்தும் 2009ஆம் ஆண்டு தந்த சோகங்கள், இழப்புகள், சொத்தழிவுகள், இடப்பெயர்வுகள் என்ற மிக நீண்ட பெரும் துயருக்கு முடிபு கட்டாமல் விடை பெற்றுச் செல்வதில் எமக்கு உடன்பாடு இல்லை.
அதே நேரம் 2010ஆம் ஆண்டின் முகிழ்ப்பும் - முடிபும் என்ற எல்லைக்குள் எங்கள் பணிகள் எவ்வாறு அமைந்தன என்ற பார்வை அவசியப்படுமாயின், பார்வையின் முடிபில் கன்னங்களின் ஓரங்கள் நனைந்து போவது தவிர்க்க முடியாதது ஆகும்.
ஆம், யுத்தம் இல்லையயன்ற பெருமை 2010ஆம் ஆண்டிற்கு இருந்ததாயினும் தமிழர்கள் தங்கள் பண்பாட்டு விழுமியங்களை, ஒழுக்கக் கட்டுப்பாடுகளை, கலாசார இறுக்கங்களை பெருமளவில் தொலைத்து விட்ட ஆண்டு என்ற வேதனையைத் தந்த ஆண்டு இது என்பது மறுக்க முடியாததாகும்.
அதிலும் குறிப்பாக எங்கள் இளம் சமூகம் பெற் றோர்களின் பிடியிலிருந்து வலுக் கட்டாயமாகத் தங்களை விடுவித்துக் கொண்டமை கொடுமையிலும் கொடுமை.
ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பக் கலாசாரத்தில் இருந்த எங்கள் பண்பாட்டுப் பெறுமானங்களை யுத்தம் அடித்து நொருக்கியது. யுத்தத்தின் வெடியில் கூட்டுக் குடும்பத்தின் அடை யாளமான நாற்சார வீடுகள் மட்டுமே உடைந்தன என்ற எங்கள் நினைப்பு முற்றாகத் தவறு என்பதை இடப் பெயர்வுகளின் சிதறல்கள் நிரூபித்து விட்டன.
ஆம், எங்கள் சொந்த ஊரை இழந்தோம். பெரியப்பா, சித்தப்பா, மாமா என்ற ஒரு பெரும் பரம்பரையின் கண்கா ணிப்பைத் தவற விட்டோம்.
புதுப்புது உறவுகள், பழக்கங்கள், கூடவே நவீன தகவல் தொழினுட்பங்களின் பாழாய்ப் போன பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும் பழக்கங்களுக்கு அடிமையானோம். அதன் விளைவு மிஞ்சிக் கிடக்க நீ மட்டும் 2011ஆம் ஆண்டிற்கு இடங்கொடுத்து விடைபெறுகிறாய். பரவாயில்லை. ஆண்டுகளில் இருக்கும் வரன்முறைகள் கூட எங்கள் அரசியலில் இல்லை. ஏன்? பதவிகளிலும் இல்லை. அந்த வகையில் உனக்குப் பேராசை இல்லை என்பது தெரிகிறது. ஆகையால் விடை தந்தோம். சென்று வா! உன்னை இறைவன் ஆசீர்வதிப்பான்.
வலம்புரி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக