மூன்று நாட்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து சூட்சமமாகக் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் வெட்டுக் காயங்களோடு சடலமாக நேற்று மீட்கப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சிதரும் சம்பவம் தென்மராட்சி சரசாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மீசாலை, புத்தூர் சந்தியைச் சேர்ந்த செல்வன் என அழைக்கப்படும் 21 வயதுடைய மகேந்திரசெல்வம் திருவருட்செல்வன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக அடுத்தடுத்து நிகழ்ந்துவரும் படுகொலைச் சம்பவங்களால் குடாநாட்டு மக்கள் பயத்தால் ஆடிப்போயுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
வாகனங்களைக் கொள்வனவு செய்து பின்னர் அவற்றை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுவந்த செல்வனின் வீட்டுக்குக் கடந்த திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் மோட்டார் சைக்கிளில் இரு நபர்கள் வந்துள்ளனர்.
கனகம்புளியடிச் சந்தியில் ஒரு வாகனம் விற்பனைக்காக உள்ளது. வந்து பார்க்க முடியுமா? என்று கூறி மிகவும் சூட்சமமாக செல்வனை அழைத்துச் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களோடு சென்ற செல்வனைக் காணாது இரவு முழுதும் குடும்பத்தினர் தேடி அழைந்துள்ளனர்.
இந்தச் சமயத்தில் வீட்டாரின் தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்ததுள்ளது. அதில் பேசிய மர்ம நபர்கள் பெருந்தொகைப் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த தொகைப் பணத்தைத் தராவிட்டின் செல்வனைக் கொலை செய்து விடுவோம் என அந்த மர்ம நபர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
அடுத்த நாள் காலை செல்வனின் குடும்பத்தினர் சாவகச்சேரிப் பொலிஸில் அதுகுறித்து முறைப்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை மூன்று மணியளவில் சரசாலை, வேம்பிராய் வீதியில் இயற்கைத்திடல் காளிகோயிலுக்கு அண்மையாக உள்ள கல்குவாரி ஒன்றின் அருகே வெட்டுக் காயங்களோடு உடைகள் களையப்பட்டு உள்ளாடையுடன் மாத்திரம் செல்வனின் சடலம் வீசப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.
இதுபற்றி அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். படுகொலை செய்யப்பட்ட செல்வன் நீண்டகாலமாக வன்னிப் பகுதியிலும் வசித்துவந்ததாகவும், ஒரு வருடத்துக்கு முன்னரே நலன்புரி நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டு மீள்குடியேறினார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
செல்வன் கொண்டுசென்ற மோட்டார் சைக்கிளையும் ஆவணங்களையும் கொலையாளிகள் எடுத்துச் சென்றிருப்பதாகவும், சடலத்தின் நிலையைப் பார்க்கும்போது செல்வன் இரு நாள்களுக்கு முன்னரே கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் எனவும் சடலத்தை நேரில் பார்த்த அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக